Ad

புதன், 22 செப்டம்பர், 2021

ஊசிப் புட்டான் - சங்குத்துறைக் கடல் - அத்தியாயம் - 1

சென்ற நூற்றாண்டின் அத்திமக் காலத்தில், அதாவது தொண்ணூறுகளின் தொடக்கத்தில் கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் ரௌடிகளின் சாம்ராஜ்யமாகவும், அதன் பிற்பகுதி காலகட்டம் என்பது அவர்களில் ஒவ்வொருவராக அழிந்த காலகட்டமாக இருந்தது. ஒரு திருநெல்வேலி மாவட்டம்போலவோ, தூத்துகுடி மாவட்டம்போலவோ அல்லது மதுரை மாவட்டம் போலவோ சட்டத்துக்கு அடங்கா மக்கள் சிலர் வாழ்ந்த மாவட்டமாக கன்னியாகுமரி மாவட்டம் எந்தவோர் இடத்திலும் குறிப்பிடப்படவில்லை. அதற்குக் காரணம் நூறு சதவிகித படிப்பறிவு நிறைந்த மாவட்டம் எனப் பெயர் பெற்றிருந்ததாகவும் இருக்கலாம். என்னதான் படிப்பறிவு மிகையாக இருந்தாலும், மனிதனின் அடிமனக் குரூரத்துக்கும் குருதி வேட்கைக்கும் இங்கும் பஞ்சமிருந்ததில்லை.

ஊசிப் புட்டான்

நீதிமன்றத்தினுள் புகுந்து நீதிபதியின் கண்முன்னே ஒருவனை வெட்டிச் சாய்த்தது தொடங்கி கிளைச் சிறைச்சாலையினுள் இறங்கி தண்டனைக் குற்றவாளியின் தலையை அறுத்து, பலரும் கூடும் டவுன் பேருந்து நிலையத்தின் சாக்கடைக் கால்வாயில் வீசியெறிந்தது வரையிலும் நிகழ்ந்திருக்கின்றன.

அந்த இருண்ட காலகட்டம், ஏதேனும் சாகசம் செய்துவிட ஏங்கும் பதின்ம வயது சிறுவனின், அதிலும் உடலளவில் பலவீனமான அந்தச் சிறுவனின் வாழ்க்கையில் எந்த மாதிரியான விளைவுகளை ஏற்படுத்துகிறது என்பதை புனைவாக்கியிருக்கிறேன். இந்தப் புனைவு இதுவரையிலும் எவராலும் சொல்லப்படாத கதை இல்லைதான் என்றபோதும், நூறாண்டுக்கால பாரம்பர்யமிக்க ஊடகத்தின் வழியாக எங்கள் மாவட்டத்தின் வாழ்க்கையையும், வன்முறை மட்டுமே சாகசமல்ல என்பதையும் சொல்ல முடிவதில் மகிழ்ச்சியடைகிறேன்.

- வாஸ்தோ, ஆசிரியர்

வாஸ்தோ நாகர்கோவிலைச் சேர்ந்தவர். இவரது முதல் படைப்பான `அஞ்சலையும் நானும்’ என்ற கவிதைத் தொகுப்பின் மூலம் பரவலாக அறியப்பட்டார். சர்ரியலிசத்தின் சாராம்சத்தோடு புனைவு கலந்து இவர் எழுதிய `சர்ரியலிசமும் சாம்பார் ரசமும்’ என்ற படைப்பும், தன் பயண அனுபவங்களைத் தொகுத்து `நூறு சதவிகித கோபத்தைக் கண்களில் காட்டிய பெண்’ என்ற நாவலும் இலக்கிய வாசகர்களால் பெரிதும் கொண்டாடப்பட்டவை.

வாஸ்தோ

நாடோடி வாழ்க்கையில் பற்றுக்கொண்டவர் வாஸ்தோ. திரைக்கதை எழுத்தாளராகவும், `மஞ்ச சட்ட பச்ச சட்ட’ என்ற படத்தில் நடிகராகவும் பரிணமித்திருக்கிறார். தன் பயணங்களையும், அவை தரும் அனுபவங்களையும் கதைகளாகத் தரும் கதைசொல்லியாக விளங்குகிறார் வாஸ்தோ.

சங்குத்துறைக் கடல்

`ஆண் கடல்’ என்று வர்ணிக்கப்படும் சங்குத்துறைக் கடல் வழக்கத்துக்கு மாறாக ஆளரவமின்றி அமைதியாக இருந்தது. கடலிலும் பெரிதாக அலையென்று எதுவும் இல்லை. எனினும், கரையில் பெரிதாக நிறுவப்பட்டிருந்த சங்கின் திண்டில் அமர்ந்திருந்த ரவியின் காதுகளில் அலையின் ஆர்ப்பரிப்பு கேட்டுக்கொண்டிருந்தது. ரவி தன்முன் பரந்து விரிந்திருந்த கடலைப் பார்த்தான். அது புத்தேரிக் குளத்தைப்போல அவனுக்குத் தோன்றியது. `புத்தேரிக் குளம் ஒரு குட்டிக் கடல் மாதிரி இருக்கும் மக்களே... கண்ணுக்கெட்டின தூரம் வரைக்கும் தண்ணிதான் தெரியும். கடல்ல வர்ற மாதிரி வெள்ளையா, நுரை நுரையா வர்ற அலை இல்லேன்னாலும் அங்க வீசுற காத்துக்கு தண்ணி மேல அலை அலையா தளும்பிட்டு இருக்கும்.’ புத்தேரியிலிருந்து வரும் அவனுடைய மாமா பையனான நாகராஜன் சொல்லக் கேட்டிருக்கிறான். இன்று வரையிலும் அவன் புத்தேரிக் குளத்தைக் கண்களால் கண்டதில்லை.

ஒருவேளை இந்தச் சங்குத்துறைக் கடலைப்போலத்தான் புத்தேரிக் குளமும் இருக்குமோ என்று தன்னுள் நினைத்துக்கொண்டான்.

நாகராஜன், ரவியைவிடவும் ஆறு வயது மூத்தவன். ரவியைப்போல் அல்லாமல், நிறைய ஊர்சுற்றுபவன். ரவியிடம் சொல்வதற்காகவே அவனுடைய சட்டை, டிரௌசர் பைகள் நிறைய கதைகளை வைத்திருப்பான். அவனிடமிருக்கும் கதைகளைக் கேட்பதற்காகவே அவன் எப்போது வருவான் என்று ரவி காத்திருப்பான். அவன்தான் சொல்வான்... `டே இந்த சங்குத்துறைக் கடல் இருக்குல்லா, அது ஆண் கடலாக்கும். கன்னியாகுமரி கடல் பெண் கடலாக்கும். கன்னியாகுமரி போயிருக்கேல்ல... அந்த கடக்கரையைப் பாத்திருக்கியா... அப்படியே சரிவாத்தான் இறங்கிப் போவும். ஆனா இந்தச் சங்குத்துறையப் பாரு, அப்படியே நட்டக்குத்தன இறங்கியிருக்கும். இப்படி நட்டக்குத்தன இறங்கினா அது ஆணு. சரிவா எறங்கிச்சின்னா அது பெண்ணு.’

சங்குத்துறைக் கடல்

ரவி இதுவரையிலும் புத்தேரிக் குளத்தைக் கண்டதில்லை. நாகராஜனின் வார்த்தைகளின் வழியேதான் புத்தேரிக் குளத்தைப் பார்த்திருக்கிறான். நாகராஜனோடு புத்தேரி ரயில்வே கேட்டருகில் அமர்ந்து, அந்தத் தண்டவாளத்தில் எப்பொழுதேனும் கடக்கும் சரக்கு ரயிலின் தடதடக்கும் ஓசையைக் கேட்டபடியே, இரவின் இருளில் மூழ்கியிருக்கும் அந்தக் குளத்தில் பிரதிபலிக்கும் நிலவைப் பார்த்தபடியே, அங்கே வீசும் குளிர்ந்த காற்றினால் உடல் சிலிர்க்க நாகராஜன் சொல்லும் கதைகளைக் கேட்க வேண்டுமென அலாதி விருப்பமுண்டு. ஆனால் அம்மா மட்டும் ஏனோ நாகராஜனைப் பார்த்ததுமே வேண்டாத விருந்தாளியைப் பார்த்ததைப்போல முகம் திருப்பிக்கொள்வாள். ஒருநாள் அவளிடம் ரவி தன்னுடைய ஆசையைக் கூறினான். அவளோ ரவிக்கு சம்மதம், மறுப்பு என்று எதுவும் சொல்லவில்லை. ஆனால் அன்றைய நாள் முழுக்க ஏதும் சாப்பிடாமல் அவனிடம் பேசாமல் முகத்தைத் திருப்பி வைத்துக்கொண்டாள். அப்படி நாகராஜன் மேல் அவளுக்கு என்ன கோபமென்று ரவிக்குப் புரியவில்லை. இருப்பினும் அதை அவளிடம் கேட்டுத் தெளிவுபடுத்திக்கொள்ள அவனுக்கு தைரியமும் வரவில்லை.

நினைவுகள் அலைமோத, அலைகளற்ற சங்குத்துறைக் கடலை ரவி வெறித்துப் பார்த்தான். ஒருவேளை புத்தேரிக் குளமும் இப்படியேதான் இருக்குமோ..? கண்ணுக்கு எட்டிய தூரம் வரையிலும் நீர். அலைகளற்ற நீர். அலை ததும்பும் நீர். `வா வந்து என்னைத் தழுவிக்கொள்’ எனக் கடல் அவனை அழைத்ததைப்போல அவனுக்குத் தோன்றியது. அவன் அமர்ந்திருந்த திண்டிலிருந்து குதித்து இறங்கி, கடலை நோக்கி நடக்க ஆரம்பித்தான். கடல் மண்ணில் கால் புதைந்தது. தனது ஒவ்வோர் அடியையும் சகதியில் நடப்பதைப் போன்ற பாங்கில் கால் அழுந்த எடுத்துவைத்து நடந்தான்.

பாதிக் கடலின் தூரத்தில் வெண்மையாக ஒரு கோடு உருவாகி, அது கரையை நோக்கி நகர்ந்து வர ஆரம்பித்தது. கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த வெண்ணிறக் கோடு பிரமாண்ட சுவராக எழும்பி, அலையாக உருமாறி, கரைக்கு வந்து கடல் மணலில் பாதம் அழுந்த நின்ற ரவியின் காலைத் தொட்டுத் தழுவி, மீண்டும் கடலோடு தன்னை இணைத்துக்கொண்டது. திரும்பிப் பார்த்தான். ரவி அமர்ந்திருந்த திண்டில் நாகராஜன் அமர்ந்திருப்பது தெரிந்தது. சந்தோஷம் மேலிட அந்தத் திண்டை நோக்கி ஓடலானான்.

திண்டை நெருங்கியபோது அங்கே எவருமில்லை. மீண்டும் அந்தத் திண்டில் கைவைத்து உந்தி, ஏறி அமர்ந்துகொண்டான்.

அப்பா ஒன்றும் அத்தனை சிறிய உருவமில்லை. குறைந்தபட்சம் ஐந்தே முக்கால் அடி உயரமாவது இருப்பார். அம்மாதான் குள்ளம். அப்பாவைப்போல் நான் பிறந்திருக்க வேண்டும். அம்மாவைப்போல் பிறந்ததால்தான், வகுப்பில் உடன் படிக்கும் மாணவர்கள் தொடங்கி வாத்தியார்கள் வரையிலும் கேலி செய்யும் நிலைக்கு ஆளாகியிருக்கிறோம். அப்பாவைப்போல இருந்திருந்தால், யாரேனும் ஒருவராவது விரல் சுண்டிப் பேசியிருக்க முடியுமா? அவனது மனம் அன்றைய தினம் வகுப்பில் தனக்கு நிகழ்ந்த அவமானத்தை நினைத்துக்கொண்டது.

பீ.டி பிரியடில் எல்லா மாணவர்களைப்போலவும் இவனும் விளையாட மைதானத்துக்குச் சென்றான். வகுப்பு மாணவர்கள் தனித்தனிக் கூட்டமாகப் பிரிந்து, ஒரு கூட்டம் ஃபுட்பாலை எடுத்துக்கொண்டு ஃபுட்பால் விளையாடவும், மற்றொரு கூட்டம் ரப்பர் பந்தை எடுத்துக்கொண்டு கிரிக்கெட் விளையாடவும் சென்றது. ரவி கிரிக்கெட் விளையாடச் சென்ற கூட்டத்தோடு போய்ச் சேர்ந்துகொண்டான். டீம் கேப்டனான அகிலன்தான் முதலில், ``லேய், பத்தநாபா... நமக்கு ஸ்டம்ப் இல்லைன்னு சொன்னேல்ல, இந்தா பாரு நம்ம ஊசி வந்துட்டான். அவனை ஸ்டம்ப்பா நிப்பாட்டிக்கோ” என்று கேலியைத் தொடங்கிவைத்தான். அகிலன் என்ன சொன்னாலும் அதற்கு ஒத்து ஊதும் பத்மநாபன் உடனே,

பத்மநாபன் அப்படிச் சொன்னதுதான் தாமதம். மொத்தக் கூட்டமும் விழுந்து விழுந்து சிரிக்க ஆரம்பித்துவிட்டது.

`அகிலனாவது பரவால்லை. இந்த பத்தநாபந்தான், என்ன ரொம்ப தரக்குறவா நடத்துறான். கைல மாட்டாமலா போவான்... அப்ப வச்சுக்கறேன்’ என மனதினுள் கருவிய ரவிக்கு வாட்டமாக மாட்டினான் பத்மநாபன். ரவியிடம் பந்தை அடித்துவிட்டு ரன் ஓடினான். உள்ளுக்குள் இருந்த கோபத்தையெல்லாம் ஒன்று திரட்டி, ஸ்டம்ப்புக்கு எறிய வேண்டிய பந்தை பத்மநாபனின் முதுக்கு எறிந்தான். அவன் வைத்த குறி தப்பாமல், பந்து சரியாக பத்மநாபனின் நடுமுதுகைப் பதம் பார்த்தது.

நடுமுதுகில் விழுந்த பந்தால், நிலை தடுமாறி விழுந்த பத்மநாபனைப் பார்த்து, ரவி அவனையும் அறியாமல் சிரித்துவிட, ``போயும் போயும் இந்த ஊசி எறிஞ்ச பந்துல விழுந்துட்டியே பத்தநாபா” என்று சொல்லி அகிலனும் கிண்டலாகச் சிரிக்க, உடன் விளையாடிக்கொண்டிருந்த ஏனைய மாணவர்களும் சிரிக்க ஆரம்பித்துவிட்டார்கள். கீழே விழுந்ததைவிட, உடன் விளையாடிக்கொண்டிருக்கும் அனைவரும் சிரித்ததைவிட, ரவி எறிந்த பந்தில் விழுந்துவிட்டோமே என்கிற அவமானம் பத்மநாபனின் தலைக்கு ஏறியது. எழுந்த வேகத்தில் ஓடிச் சென்று ரவியைத் தாக்க ஆரம்பித்துவிட்டான்.

ரவியும் பத்மநாபனும் கட்டிப்பிடித்து மண் தரையில் உருள, பீ.டி வாத்தியார் வந்து இருவரையும் பிரித்துவிட்டு, அவர் கையிலிருந்த பிரம்பால், பத்மநாபனுக்கு ஒரு அடியும், ரவிக்கு நாலைந்து அடிகளும் கொடுத்தார். அடியை வாங்கியபடியே, ``சார், சார்... நான் எதுமே பண்ணலை சார். இந்த பத்தநாபந்தான் சார் என்னய அடிச்சான்” என்று ரவி கதறினான்.

``மனசுல என்னல பெரிய ரெளடின்னு நெனப்பாலே” உரக்கக் கத்தியபடியே ரவியின் கையைப் பற்றியபடி பிட்டத்திலும், பின் தொடையிலும் அடித்தார்.

ஊசிப் புட்டான்

``சார், நான் விழுந்ததைப் பார்த்து சிரிச்சான் சார்” பத்மநாபன் வாத்தியாரின் கோபத் தீக்கு எண்ணெய் ஊற்றினான்.

``ஒருத்தன் கீழ விழுந்தா சிரிக்கவால செய்வ” கோபத்தோடு கேட்டு மீண்டும் அடிக்க ஆரம்பித்தார்.

``சார் நான் மட்டுமில்ல சார். எல்லாருமே சிரிச்சாங்க சார். சார் வலிக்குது சார். அடிக்காதீங்க சார்” அழ ஆரம்பித்திருந்தான் ரவி.

``என்னல அழுது நடிக்கிறியா நீ..? உங்கொப்பனை மாதிரி வரலாம்னு பாக்குறியா..? என் சர்வீஸ்ல உன்ன மாதிரி எத்தன பயலுகளப் பாத்திருப்பேன். இனி ஒரு தடவ இந்த மாதிரி எவங்கிட்டயாச்சும் சண்ட போட்டு எங்கிட்ட மாட்டுன... ஒந்தோல உரிச்சு உப்புக்கண்டம் போட்ருவேன். பாத்துக்க” கோபமாகத் திட்டிவிட்டு அவர் நகர்ந்து செல்லவும், ரவி கன்னத்தில் வழிந்த நீரைத் துடைத்தபடியே பத்மநாபனைப் பார்த்தான். அவனோ இவனைப் பார்த்து நமுட்டுச் சிரிப்பு சிரித்தபடியிருந்தான்.

``சரி வாங்க, வாங்க. வெளயாட்ட ஆரம்பிப்போம்” அகிலன் குரல் கொடுக்க, அனைவரும் விளையாடத் தயாரானார்கள். ரவி மட்டும் கண்ணீரைத் துடைத்தபடியே மைதானத்தைவிட்டு வெளியேறினான்.

``லேய் ஊசி, வெளையாட்டுக்கு வரலியா நீ?” அகிலனின் குரல் ரவியின் பின்புறத்திலிருந்து கேட்டது. ரவி அவனைத் திரும்பிப் பார்க்காமல் நடந்தான். ``அவம் போறாம் விடு. மக்களே நாம வெளாடுவோம்” பத்மநாபனின் குரலைத் தொடர்ந்து, விளையாட்டின் ஆரவாரக் குரல் கேட்டது.

`ஏய் கடல் மாதா, இதுல பந்தை எறிஞ்சதைத் தவிர என்னோட தப்பு என்ன இருக்கு சொல்லு..? கூட விளையாடிட்டு இருந்தவனுக சிரிக்கக் காரணமா இருந்தது அகிலந்தான..! ஆனா இந்த பத்தநாபன் அகிலனை ஒண்ணும் செய்யலை. விழுந்த வேகத்துல எந்திச்சு ஓடி வந்து என்னை மொத்த ஆரம்பிச்சுட்டான். போதாததுக்கு இந்த வாத்தியான் வேற என்ன அடி அடின்னு அடிச்சு தொவச்சிட்டான்.

``உண்மை தான்” அவனுடைய அப்பா தங்கசாமியின் குரல் அவன் காதருகில் கேட்டது. திரும்பிப் பார்த்தான். அவர் அவனருகில் தும்பைப்பூ போன்ற வெண்மையான வேட்டி சட்டையோடு அமர்ந்திருந்தார். ``ஏம்ப்பா என்னை உன்னை மாதிரி இல்லாம அம்மா மாதிரி பெத்த..?’’ என்று அழுதபடியே கேட்ட ரவியை, இயலாமையோடு பார்த்த தங்கசாமியைப் பார்த்து மீண்டும், ``ஊர்ல இருக்குற எல்லாவனுங்களும் என்னைக் கேவலமா நடத்துறானுங்கப்பா.’’

அவன் பேசப் பேச தங்கசாமியின் முகம் வெளிறி, காதருகிலிருந்து கோடு ஒன்று உருவாகி, புருவத்தைக் கிழித்தபடி மூக்கு வரை நீண்டது. அந்தக் கோட்டிலிருந்து ரத்தம் வழிந்து அவரது வெண்ணிற சட்டையைச் செந்நிறமாக மாற்றியது. ரவி அவரைத் தொட முயன்றான். கைக்கெட்டும் தூரத்தில் அவர் அமர்ந்திருந்தாலும், அவன் கைக்கெட்டா தொலைவில் அவர் இருந்தார்.

கண்விழித்துப் பார்த்த ரவி வீட்டிலிருந்தான். அவனருகில் அவனைவிடவும் ஒரு வயது சிறியவனாக இருந்தாலும் உடலளவில் அவனைவிட மூத்தவனைப்போலத் தோற்றமளித்த அவனுடைய தம்பி சந்திரன் படுத்திருந்தான். எழுந்து அமர்ந்தான். அவன் கண்ணெதிரே கண்ணாடிச் சட்டத்தில் அடைபட்டிருந்த தங்கசாமியின் தலைக்கு மேலே போடப்பட்டிருந்த சிவப்பு நிற ஜீரோ வாட்ஸ் விளக்கின் ஒளியில், அவனுடைய அம்மா அந்தப் புகைப்படத்தின் கீழே தலைவைத்து படுத்திருப்பது அவனுக்கு மங்கலாகத் தெரிந்தது.

(திமிறுவான்...)



source https://www.vikatan.com/arts/literature/story-of-a-boy-nicknamed-as-oosipputtan-part-1

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக