Ad

ஞாயிறு, 26 செப்டம்பர், 2021

20-வது பிறந்தநாள்; அரிவாளால் கேக் வெட்டிய இளைஞர்; வைரலான வீடியோவால் கைது!

தமிழகம் முழுவதும் குற்றச்செயல்களை ஒழிக்கவும், சட்டம்- ஒழுங்கினைப் பாதுகாக்கும் வகையிலும் கடந்த சில நாள்களாக சுமார் 5,000 போலீஸார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இதில், பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய 400 ரவுடிகள் உட்பட மொத்தம் 870 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடமிருந்து அரிவாள், கத்தி உள்ளிட்ட 250 ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் இந்தச்சோதனை தொடரும் எனவும் தமிழக போலீஸ் டி.ஜி.பி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார்.

அரிவாளால் கேக் வெட்டிய கலைச்செல்வன்

இந்த நிலையில், தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்களை கைது செய்யும் படலம் தொடர்ந்து வருகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 2 நாள்களில் 75 பேர் கைது செய்யப்பட்டு அவர்களிடமிருந்து 53 பயங்கர ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில், பைக் மீது கேக் வைத்து அரிவாளால், கேக்கை வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலானது.

குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்களைக் கைது செய்யும் நடவடிக்கையில் போலீஸார் ஈடுபட்டு வந்ததற்கு இடையில் இந்த வீடியோவும் வைரலான நிலையில், அந்த வீடியோவை வெளியிட்டவரை கைது செய்திட மாவட்ட எஸ்.பி ஜெயக்குமார் உத்தரவிட்டார். 45 நொடிகள் உள்ள அந்த வீடியோவில் பிறந்தநாள் கொண்டாடுபவர், நிறுத்தப்பட்டிருந்த பைக் மீது வைக்கப்பட்டிருந்த கேக்கை, அரிவாளால் வெட்டும் போது, அவரைச் சுற்றி நின்ற அவரது நண்பர்கள் 6 பேர் அவர் மீது ஸ்ப்ரே அடித்தும், கேக்கின் கிரீமை முகத்தில் தடவியும் விசில் அடித்தும் ஆரவாரம் எழுப்பவது போன்ற காட்சிகள் இடம் பெற்றிருந்தன.

ஓட்டப்பிடாரம் காவல் நிலையம்

அந்த வீடியோவில் இடம் பெறும் இரண்டு பைக்குகளின் பதிவெண்ணை வைத்து அதன் உரிமையாளர் முகவரியைக் கண்டுபிடித்து நடத்திய விசாரணையில் ஒட்டப்பிடாரம் அருகிலுள்ள கச்சேரி தளவாய்புரத்தைச் சேர்ந்த கலைச்செல்வன் என்பவர்தான் அரிவாளால் கேக் வெட்டி பிறந்தநாளைக் கொண்டாடினார் என்பது தெரியவந்தது.

கடந்த 19-ம் தேதி தன்னுடைய பிறந்த நாளை, தனது நண்பர்களுடன் சேர்ந்து இருசக்கர வாகனத்தின் சீட்டின் மீது கேக் வைத்து அரிவாளால் வெட்டி கொண்டாடியுள்ளார். அரிவாளால் கேக் வெட்டும் காட்சியை நண்பர்களில் ஒருவர் செல்போனில் வீடியோவாக எடுத்து வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோதான் வைரலானது.

அரிவாளால் கேக் வெட்டிய கலைச்செல்வன்

இந்த வைரல் வீடியோவைப் பதிவிட்டவர், அதில் கேக் வெட்டுபவர் யார் என, ஒட்டப்பிடாரம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் எபனேசர் தலையிலான போலீஸார் கலைச்செல்வனை கைது செய்தனர். மேலும், அவரிடமிருந்து 5 அரிவாள் மற்றும் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்குப் பயன்படுத்திய பைக்கையும் பறிமுதல் செய்தனர். ``சும்மா ஜாலிக்காகத்தான் அரிவாளால் கேக் வெட்டி பர்த்டேவை செலபிரேட் பண்ணினோம். வீடியோவும் விளையாட்டாகத்தான் எடுத்தோம்.

என் ப்ரண்ட்ஸ் யாரோ ஒருத்தர் சோஷியல் மீடியாக்கள்ல ஷேர் பண்ணிருக்காங்க. இனிமேல் இந்த மாதிரியெல்லாம் விளையாட மாட்டோம்” என போலீஸாரிடம் கெஞ்சியிருக்கிறார் அப்பாவியாக. ``இளைஞர்கள் தங்களது எதிர்காலம் பாதிக்கப்படும் என்பதுகூட தெரியாமல் இதுபோன்று விளையாட்டில் ஈடுபடுகிறார்கள். இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவது சட்ட விரோதமானது. இது, பொது அமைதிக்கு பங்கத்தை ஏற்படுத்தும்.

Also Read: அரிவாளால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டம்.. - விசாரணை நடத்தும் நெல்லை காவல்துறை!

பிறந்தநாள் கொண்டாட்டம்

இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு கைதாகும் இளைஞர்களின் எதிர்காலமும் பாதிக்கப்படும். எனவே தூத்துக்குடி மாவட்டத்தில் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீதும், ஜாதி, மத மோதல்களை தூண்டும் வகையிலோ அல்லது உண்மைக்கு புறம்பான செய்திகளை ஆடியோ மற்றும் வீடியோக்களை சமூக வலைதளங்களில் பரப்புவோர் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்” என்று மாவட்ட எஸ்.பி., ஜெயக்குமார் எச்சரித்துள்ளார்.



source https://www.vikatan.com/news/crime/police-arrested-the-young-man-who-cut-his-birthday-cake-by-scythe

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக