2019 டிசம்பர் 27, 30 ஆகிய இரு தேதிகளில், இரு கட்டங்களாக 28 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. 4 மாவட்டங்களைப் பிரித்து 9 மாவட்டங்கள் உருவாக்கப்பட்டதால் அதற்கு மட்டும் அப்போது தேர்தல் நடத்தப்படவில்லை. தற்போது வரும் அக்டோபர் 6, 9 ஆகிய இரு தேதிகளில், மீண்டும் இரு கட்டங்களாக 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற இருக்கிறது.
தேர்தலின்போது பொதுவாக கட்சிகள் கூட்டணியாக ஒன்று சேரும். ஆனால் இந்தத் தேர்தலில் கூட்டணிகள் உடைகின்றன. அதிமுக கூட்டணியில் இருந்து பாமக தற்காலிகமாக வெளியேறியுள்ளது. அமமுக கூட்டணியில் இருந்து தேமுதிக வெளிவந்துவிட்டது. `ராமதாஸுடன் துரைமுருகன் போனில் பேசியது; வன்னியர் அறக்கட்டளையை அரசுடைமை ஆக்குவோம் என திமுக சொன்னது; 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கு கூட்டணியில் சேர்த்துக் கொள்கிறோம், இப்போது அதிமுக கூட்டணியில் இருந்து வெளிவந்து தனியே போட்டியிடுங்கள் எனக் கூறியது’ என்று பாமக வெளியேறியதற்கு திமுக-வுடனான உடன்பாடு தான் காரணம் என தகவல்.
பாமக வெளியேறியதால் அதிமுக-வும், பாஜக-வும் அதிர்ச்சியில் உள்ளன. நாம் தமிழர், மநீம., தேமுதிக ஆகிய கட்சிகள் தனித்துப் போட்டியிட உள்ளன. அமமுக-வின் கதைதான் இன்னும் தெளிவில்லாமல் இருக்கிறது. இப்படி ஒவ்வொறு கட்சிகளும் பிரச்னையில் இருக்க, ஆளும் திமுக மட்டும் ரிலாக்ஸாக இருக்கிறது.
தி.மு.க மூத்த நிர்வாகி ஒருவர் நம்மிடம், "ஆளுங்கட்சி என்கிற ஆயுதம் ஒருபக்கம் இருந்தாலும், தேர்தலை சந்திக்கவிருக்கும் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில், மொத்தமுள்ள 35 சட்டமன்றத் தொகுதிகளில் 28 தொகுதிகளை திமுக கூட்டணிதான் கைப்பற்றியிருக்கிறது. அதேபோல, திருநெல்வேலி, தென்காசியிலுள்ள 10 தொகுதிகளில், ஆறு தொகுதிகள் திமுக வசமுள்ளன. வன்னியர் இட ஒதுக்கீட்டை நடைமுறைக்குக் கொண்டுவந்தது, இட ஒதுக்கீட்டுப் போராட்டத்தில் இறந்தவர்களுக்கு மணிமண்டபம், அயோத்திதாச பண்டிதருக்கு மணிமண்டபம் உள்ளிட்ட விஷயங்கள் வட தமிழகத்தில் திமுக-வின் செல்வாக்கை கணிசமாக உயர்த்தும். தவிர, அதிமுக-விலிருந்து பாமக வெளியேறியிருப்பதால், இப்போதே வெற்றிபெற்றுவிட்டது போல உணருகிறோம்.
Also Read: பாமக தனித்துப் போட்டி: தற்காலிகமா, ‘தற்காலிக' நிரந்தரமா?!
எனினும், 2019 நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணி கட்சிகளுக்கு வாரிக் கொடுத்தது போல இந்தமுறை தாராள மனதுடன் திமுக இல்லை. அதேநேரம், 2021 சட்டமன்றத் தேர்தலில் கூட்டணிக் கட்சிகளை கதறவிட்டது போலவே இம்முறையும் தலைமை நடந்து கொள்ளும் என்று தான் தெரிகிறது. கூட்டணியில் பெரிய கட்சியான காங்கிரஸ் 20 சதவிகித இடங்களை கேட்கிறது. கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர், கிராம ஊராட்சிக் தலைவர், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர், மாவட்ட ஊராட்சி வார்டு கவுன்சிலர் ஆகிய 4 வகையான சுமார் 27,000 பதவியிடங்களில் 20 சதவிகிதம் எதிர்பார்க்கிறது.
செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் விசிக-வுக்கு ஆதரவு இருப்பதால் பொது மற்றும் ரிசர்வ் இடங்களை சேர்த்து அக்கட்சி 10 சதவிகிதத்துக்கும் குறைவில்லாமல் எதிர்பார்கிறது. மதிமுக., கம்யூனிஸ்ட் கட்சிகளும் தலா 5 சதவிகிதத்துக்கும் அதிகமான இடங்களை எதிர்பார்க்கிறது. ஆனால் திமுக மொத்தமாகவே கூட்டணி கட்சிகள் அனைத்திற்கும் சேர்த்து 20 சதவிகித இடங்களை மட்டுமே ஒதுக்க முடியும் என கறாராகச் சொல்லிவிட்டோம்" என்றனர். ஆளும் கட்சி என்பதால், கூட்டணியில் இருந்து விலகும் எண்ணம் திமுக கூட்டணி கட்சிகளுக்கு இருக்காது. எனினும் கட்சியில் கீழ் மட்டத்தில் வலுவான அடித்தளத்துக்காக அனைத்துக் கட்சிகளும் கடுமையாக போராடும் களம் உள்ளாட்சி தேர்தல் என்பதால் களத்தில் பல ட்விஸ்ட்களை எதிர்பார்க்கலாம் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.
source https://www.vikatan.com/news/politics/dmks-local-body-election-plan-for-upcoming-election
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக