Ad

வெள்ளி, 24 செப்டம்பர், 2021

சென்னை: 16-வது மாடியிலிருந்து குதித்து பள்ளி மாணவி தற்கொலை! - போலீஸ் தீவிர விசாரணை

சென்னை கொரட்டூர் வாட்டர் கேனால் சாலையில் பிரமாண்ட அடுக்குமாடிக் குடியிருப்புகள் அமைந்துள்ளன. நேற்று முந்தினம், பல்லாயிரக்கணக்கான மக்கள் வசித்து வரும் இந்த குடியிருப்பு பகுதியின் 16-வது மாடியிலிருந்து அடையாளம் தெரியாத சிறுமி ஒருவர் யாரும் கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார். அதைக் கண்டு அதிர்ச்சியடைந்த குடியிருப்பு வாசிகள் உடனடியாக கொரட்டூர் காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு உடனடியாக விரைந்த கொரட்டூர் போலீஸார், ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்த சிறுமியின் உடலைக் கைப்பற்றி கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்குப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விட்டு, தற்கொலை தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். முதற்கட்டமாக, அடுக்குமாடிக் குடியிருப்பில் வசிப்போரிடம் உயிரிழந்த சிறுமி குறித்து விசாரித்ததில் அவரை யாரும் தெரியவில்லை என்று கூறவே, தற்கொலை செய்து கொண்ட சிறுமியின் கைப்பையிலிருந்த புத்தகங்கள் மற்றும் அடையாள அட்டைகளை ஆய்வு செய்து அவர் பள்ளி மாணவி என்பதை உறுதி செய்தனர்.

தற்கொலை செய்து கொண்ட மாணவி

அதே போல், கைப்பையிலிருந்தவற்றை ஆய்வு செய்ததில், உயிரிழந்த மாணவி சென்னை, கொளத்தூரை அடுத்த ஜி.கே.எம் காலனி, எம்.ஜி.ஆர் தெருவைச் சேர்ந்த பாஸ்கரன் (38) என்பவரது மகள் வைஜெயந்தி (16) என்பதும், அம்பத்தூரை அடுத்த சூரபட்டு பகுதியில் உள்ள பிரபல தனியார்ப் பள்ளி ஒன்றில் 11-ம் வகுப்பு படித்து வந்தார் என்பதும் தெரியவந்தது. அதையடுத்து, மாணவியின் பெற்றோரை நேரில் அழைத்து கொரட்டூர் போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், "பள்ளிக்கூடத்தில் ஒழுங்காகப் பாடங்கள் கவனிப்பதில்லை என்றும், வீட்டுப்பாடங்களை முறையாக முடிப்பதில்லை என்றும் ஆசிரியர்கள் புகார் அளித்ததாகவும், அதனால் பயத்தில் மாணவி வைஜெயந்தி தற்கொலை செய்து கொண்டதாகவும்" பெற்றோர் கூறியிருக்கின்றனர்.

மாணவியின் தற்கொலை தொடர்பாக கொரட்டூர் போலீஸார் கூறுகையில், "தற்கொலை செய்து கொண்ட மாணவி கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடப் பிரிவில் 11-ம் வகுப்பு படித்து வந்துள்ளார். பள்ளி ஆசிரியர்கள் படிப்பில் மிகவும் மோசமாக இருப்பதாக வைஜெயந்தியை பள்ளியில் திட்டியதோடு மட்டுமல்லாமல், மாணவியின் பெற்றோரிடத்திலும் போனில் புகார் அளித்திருக்கின்றனர். படிப்பு விஷயத்தில் கண்டிப்புடன் இருக்கும் பெற்றோர் தன்னை திட்டி, அடித்து விடுவார்களோ என்ற அச்சத்தில் மாணவி விபரீத முடிவினை கையிலெடுத்திருப்பதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்திருக்கிறது.

கொரட்டூர் காவல்நிலையம்

அதன்படி, நேற்று காலை வீட்டிலிருந்து வெளியேறிய மாணவி, தற்கொலை செய்து கொள்வதற்காக மதிய வாக்கில் கொரட்டூரிலுள்ள அடுக்குமாடிக் குடியிருப்புக்குச் சென்றிருக்கிறார். அவர் அந்த குடியிருப்பின் 16-வது மாடிக்கு லிஃப்டில் சென்றது முதல், அங்கிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டது வரை அனைத்தும் சிசிடிவி கேமராவில் பதிவாகி இருக்கிறது. ஆனால், சிறுமி தற்கொலை செய்து கொள்ள அந்த அடுக்குமாடிக் குடியிருப்பைத் தேர்வு செய்ததற்கான காரணம் தான் தெரியவில்லை. அங்கு அவருக்குத் தெரிந்தவர்கள் யாராவது இருக்கிறார்களா என்று விசாரித்து வருகிறோம்" என்றனர்.

பள்ளி மாணவியின் தற்கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.



source https://www.vikatan.com/news/crime/school-girl-ends-her-life-after-school-teachers-complained-about-her-to-parents

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக