Ad

வியாழன், 2 செப்டம்பர், 2021

`15 தென்னை, 10 வாழை, நிறைய அமைதி!' - நடிகர் வேல ராமமூர்த்தியின் வீட்டுத்தோட்ட அனுபவங்கள் - 5

நம் வீடுகளில் மட்டுமல்ல; சினிமா, அரசியல் பிரபலங்கள் மத்தியிலும் வீட்டில் மாடித்தோட்டம் அமைக்கும் வழக்கம் இப்போது வளர்ந்து வருகிறது. அவர்களின் மாடித்தோட்டம் குறித்த தகவல்களைத் தருவதற்காகவும், அவர்களின் தோட்டத்துக்கே உங்களை அழைத்துச் செல்லவும்தான் இந்த நட்சத்திரத் தோட்டம் தொடர். இந்த முறை நடிகரும் எழுத்தாளருமான வேல ராமமூர்த்தியின் வீட்டுத்தோட்டம் பற்றிப் பார்க்கலாம்.

வேல ராமமூர்த்தி

Also Read: `தக்காளி முதல் டிராகன் ஃப்ரூட் வரை!' - நடிகை சீதாவின் மாடித்தோட்ட அனுபவம் - நட்சத்திரத் தோட்டம் - 4

சினிமா கலைஞர்கள் பலரும் இயற்கை விவசாயத்திலும் மாடித்தோட்டம் அமைப்பதிலும் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளனர். இந்தப் பட்டியலில் இடம்பிடித்திருக்கும் நடிகர் வேல ராமமூர்த்தி இயற்கை விவசாயத்தின்மீது அதிக ஆர்வம் கொண்டவர். மதுரையில் உள்ள தனது வீட்டில் வீட்டுத்தோட்டம் அமைத்து ஓய்வு நேரங்களில் அதைப் பராமரித்தும் வருகிறார்.

ராமநாதபுரம் மாவட்டம் பெருநாழி இவரது சொந்த ஊர். ராமநாதபுரம் மாவட்டத்தைச் சுற்றியிருந்த கிராமங்கள் வறண்டபோதும் இவரது கிராமம் மட்டும் வறண்டு போகாமல் இருந்திருக்கிறது. அந்தக் கிராமத்தில் விவசாயமும் செழிப்பாக நடந்திருக்கிறது. பிறந்து வளர்ந்த காலகட்டத்தில் முழுக்க முழுக்க விவசாயம் சார்ந்தே இவரது வாழ்க்கை அமைந்திருக்கிறது. அவரது பாணியில் சொல்ல வேண்டுமானால் பயிர்களோடு பயிர்கள்போல அவரும் வளர்ந்திருக்கிறார். கிராமத்தில் வாழ்ந்த காலகட்டத்தில் எடுத்துக்கொண்ட உணவுதான் இன்று வரை இவரது ஆரோக்கியத்துக்குக் காரணமாக இருந்திருக்கிறது. இப்போதிருக்கும் சல்பேட், யூரியா மாதிரியான உரங்கள் எல்லாம் அப்போது இல்லை. அப்போதெல்லாம் வீட்டுக்கு வீடு மாடுகள் இருந்திருக்கின்றன. கண்மாய் ஒட்டிக் குப்பைக் கிடங்குகள் இருந்தன. பயிர் விதைப்புக் காலகட்டத்தில் வண்டி வண்டியாக மாட்டு எருவைக் கொண்டு போய் நிலத்தில் கொட்டி விவசாயம் செய்திருக்கிறார்கள். இப்போது மூட்டை மூட்டையாக ரசாயன உரங்களைக் கொட்டி விவசாயம் செய்வதைக் கண்டு மனம் கவலை கொள்வதாக ஒருமுறை விகடனுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்திருந்தார்.

வேலராமமூர்த்தி

Also Read: ``என் திடகாத்திரமான உடம்புக்கு வெள்ளாட்டுக்கறியும் மீனும்தான் காரணம்'' - ஃபிட்னஸ் ரகசியம் பகிரும் நடிகர் வேல ராமமூர்த்தி

மதுரையில் உள்ள தனது வீட்டைச் சுற்றி தென்னை, வாழை, தேக்கு, வேப்ப மரம், முருங்கை, நெல்லி, அத்தி, பப்பாளி, துளசி, ஓமம், மலர்கள், காய்கறிகள் என ஒரு பசுமை சோலையாக வைத்திருக்கிறார். தனது வீட்டுத்தோட்டத்தில் பறவைகள் வந்து அமர்ந்து சாப்பிட்டது போக மீதம் இருக்கும் காய்கறிகள், பழங்கள்தான் நமக்கு என்பதை உறுதியாக வைத்திருக்கிறார். காலையில் எழுந்தால் தனது தோட்டத்தைச் சுற்றி வலம் வந்து அவற்றைப் பராமரிப்பதைத் தனது வாடிக்கையாக வைத்திருக்கிறார். ஆரம்பத்தில் இவர் நடவு செய்த வாழை மரம் தென்னை மரத்துடன் போட்டிப் போட்டுக்கொண்டு வளர்ந்திருக்கிறது. தனது வீட்டுத்தோட்டத்தில் காய்க்கும் தேங்காய்களைத்தான் மகன், மகள் வீடுகளுக்குக் கொடுத்தனுப்புகிறார்.

வீட்டுத்தோட்டம் அமைக்க வேண்டும் என்ற முடிவெடுத்தவுடன் அதற்குப் பெரிய அளவில் இடம் வேண்டும், அதிக செலவாகும் என்பதெல்லாம் மக்களின் எண்ணம். இவர் கொட்டாங்கச்சியில் கூட செடி வளர்த்து வருகிறார். தோட்டத்துக்காக அதிக செலவு செய்யவில்லை. உரம் தொடங்கி, பூச்சிக்கொல்லிகள், இயற்கை ஊக்கிகள் எல்லாவற்றையும் நாம் அன்றாடம் பயன்படுத்தும் பொருள்களிலிருந்தே உருவாக்கிக்கொள்கிறார். அதே போன்று வீட்டிலிருக்கும் இடத்தில் ஒரு குடும்பத்துக்குத் தேவையான ஊட்டச்சத்துள்ள பெரும்பாலான காய்கறிகளையும் கீரைகளையும் வீட்டிலேயே உற்பத்தி செய்துகொள்கிறார்.

வேல ராமமூர்த்தி

Also Read: `4 செடில ஆரம்பிச்சது; இப்ப 40 செடிகள்!' - மனோபாலாவின் மாடித்தோட்ட ரவுண்டப் - நட்சத்திரத் தோட்டம் - 1

செடியை வளர்க்கும்போது செம்மண், மாட்டு எரு, உயிர் உரங்களை அடியுரமாகப் பயன்படுத்திக்கொள்கிறார். அவ்வப்போது பயிர்களுக்கு நோய்த்தாக்குதல் ஏற்படாமல் இருக்க வேப்பம் பிண்ணாக்கு, பூச்சிவிரட்டிகளைப் பயன்படுத்துகிறார். அரிசி கழுவிய தண்ணீர், காய்கறிக் கழிவுகளைத் தனது தோட்ட செடிகளுக்கு உரமாக்கிக் கொள்கிறார். செடிகள் வறண்டுபோகும் நேரத்தில்தான் தண்ணீர் கொடுக்கிறார்.

ஒருமுறை விகடனுக்கு அளித்த பேட்டியில், ``ஒரு எழுத்தாளனுக்குத் தேவை அமைதியும், அது கொடுக்கும் சிந்தனையும்தான். அதை எனது வீட்டுத்தோட்டம் தருகிறது. ஜூனியர் விகடனில் வெளியாகிப் பெரும் வரவேற்பைப் பெற்ற `பட்டத்து யானை' தொடர் இந்த வீட்டுத்தோட்டத்தில் அமர்ந்து எழுதியதுதான். இயற்கை ஒருவனை முழுமையான மனிதனாக்கும். இந்த லாக்டௌன் காலத்தில் வீட்டுத்தோட்டத்தை பசுமையாக விரிவாக்கிவிட்டேன். இனி இதை முழுமையான வனமாக உருவாக்காமல் விடமாட்டேன். மொத்தமாக 15 தென்னை மரங்கள், 8 தேக்கு மரங்கள், 10 வாழை மரங்கள் உள்ளிட்ட பல மரங்களும் செடிகளும் வைத்திருக்கிறேன். இவற்றைப் பராமரிக்கும்போது மனதுக்கு மகிழ்ச்சி கிடைக்கிறது" என்று சொல்லியிருந்தார்.

இவரது கடைசிக்காலத்தில் மரங்களையும் பயிர்களையும் வைத்துக்கொண்டு ஒரு விவசாயியாக வாழவே விரும்புகிறாராம்.



source https://www.vikatan.com/news/agriculture/actor-vela-ramamoorthy-s-home-gardening-experience-natchathira-thottam-5

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக