மயிலாடுதுறை ஊராட்சி ஒன்றியத்தில், அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் கூட்டணி போட்டுக்கொண்டு, செய்யாத பணிகளுக்குப் பொய்க்கணக்கு எழுதி, 1.38 கோடி ரூபாய் கொள்ளையடித்ததாகச் சர்ச்சை எழுந்துள்ளது. இது குறித்து, ஊரக வளர்ச்சித்துறையின் உயர் அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டு, முறைகேடுகள் நடந்திருப்பது உறுதி செய்யப்பட்டதால், ஊராட்சி ஒன்றிய ஆணையர், பொறியாளர்கள், பணி மேற்பார்வையாளர்கள் உட்பட ஏழு பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்கள். ஆனால் இதற்குத் தூண்டுதலாக இருந்த திமுக-வைச் சேர்ந்த ஒன்றியக்குழுத் தலைவர், அதிமுக-வைச் சேர்ந்த ஒன்றிய துணைத் தலைவர் ஆகியோர்மீது எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என மயிலாடுதுறை ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்கள் சிலர் கொந்தளிக்கிறார்கள்.
இது குறித்து நம்மிடம் பேசிய திமுக கவுன்சிலர் முருகமணி, ``உள்ளாட்சித் தேர்தலின்போது திமுக சார்பில் நிறுத்தப்பட்ட அதிகாரபூர்வ வேட்பாளரை எதிர்த்து நின்று, அதிமுக ஆதரவோடு வென்று, ஒன்றியக்குழுத் தலைவர் பதவியைப் பிடிச்சவர்தான் காமாட்சி மூர்த்தி. காமாட்சியோட கணவர் மூர்த்தி, திமுக ஒன்றியச் செயலாளராக இருந்தவர். கடந்த அதிமுக ஆட்சியில் காமாட்சி மூர்த்திக்கு செல்வாக்கு அதிகம். ஒன்றியக்குழு துணைத் தலைவராக, அதிமுக-வைச் சேர்ந்த மகேஷ்வரி முருகவேல் இருக்காங்க. அதிமுக ஆட்சியின்போதுதான், முறைகேடு நடந்திருக்கிறது. முறைகேடுகளுக்கு தலைவர், துணைத் தலைவர், ஆணையர் மூன்று பேர்தான் பொறுப்பேற்க வேண்டும். இவர்கள் மூன்று பேருக்கும் தெரியாமல் தவறு நடக்க வாய்ப்பில்லை. ஊராட்சி ஒன்றிய பொதுநிதியில் எந்த ஒரு பணி செய்வதாக இருந்தாலும், ஒன்றியக்குழுக் கூட்டத்தில் அதைப் பற்றி விவாதித்து, கவுன்சிலர்களின் ஒப்புதலோடு தீர்மானம் நிறைவேற்றி, அதைத் தீர்மானப் புத்தகத்தில் பதிவுசெய்து கவுன்சிலர்களிடம் கையெழுத்து பெற வேண்டும். அதன் பிறகுதான் மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி பெற்று, டெண்டர்விட்டு பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பது விதிமுறை. கொரோனாவால் எந்தப் பணியும் நடைபெறாத காலத்தில், ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், ஒப்பந்ததாரர்களின் புரோக்கர்களின் நடமாட்டம் அதிகமாக இருந்தது.
ஒன்றியக்குழுக் கூட்டங்களில் மினிட் புத்தகத்தில் கவுன்சிலர்களிடம் கையெழுத்தும் வாங்காததால், ஏதோ சில முறைகேடுகள் நடக்கிறதென எங்களுக்குச் சந்தேகம் ஏற்பட்டது. மினிட் புத்தகம், பணப் பரிமாற்றப் பதிவேடு உள்ளிட்ட ஆவணங்களைப் பார்வையிடவும், நகல் பெறுவதற்கும் அனுமதிக்க வேண்டுமென, திமுக ஆட்சி அமைந்த பிறகு, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் அனுமதி கேட்டேன். இந்த ஆவணங்களைப் பார்த்ததும் அதிர்ச்சியடைந்தேன். 1.04.2020- லிருந்து 31.12.2020 தேதி வரை ஒன்பது மாதங்களில் ஊராட்சி ஒன்றிய பொதுநிதியிலிருந்து, 10 ஊராட்சிகளில் குடிநீர்க் குழாய், சாலை அமைக்கும் பணிகளுக்கு மொத்தம் 1.38 கோடி ரூபாய் நிதி ஒதுக்க, தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக தீர்மானப் புத்தகத்தில் இடைச்செருகலாகச் சேர்க்கப்பட்டுள்ளது.
Also Read: `எடப்பாடியின் அரசு பங்களா’ முதல் ‘கொடநாடு எஸ்டேட் நிர்வாகத்துக்குப் பொறி’ வரை! கழுகார் அப்டேட்ஸ்
10 லட்சம் ரூபாய்க்குக் குறைவான பணிகளாக இருந்தால் மாவட்ட கலெக்டரின் அனுமதி தேவையில்லை என்பதால், வெவ்வேறு ஊராட்சிகளில் தனித்தனி பணிகளாக சிறு சிறு நிதி ஒதுக்கீடாகக் குறிப்பிட்டுள்ளனர். ஆனால் எந்த ஒரு பணியுமே நடைபெறவில்லை. இந்த முறைகேடுகள் குறித்து தலைமைச் செயலாளர் இறையன்பு, ஊரக வளர்ச்சித்துறை செயலாளர், லஞ்ச ஒழிப்புத்துறை உயர் அலுவலர்களை நேரில் சந்தித்து மனு கொடுத்தோம். கடந்த ஆகஸ்ட் மாதம், ஊரக வளர்ச்சித்துறை உயர் அலுவலர்கள், இங்கு நேரில வந்து இரண்டு நாள்கள் ஆய்வு நடத்தி, மோசடி நடந்திருப்பதை உறுதி செய்தனர். ஊராட்சி ஒன்றிய ஆணையர் சரவணன், பொறியாளர்கள், மேற்பார்வையாளர்கள் உட்பட ஏழு அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்காங்க. இந்த முறைகேடுகளுக்கு மூல காரணமாகவும், தூண்டுதலாகவும் இருந்த ஒன்றியக்குழுத் தலைவர், துணைத் தலைவர் மேலயும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.
காங்கிரஸைச் சேர்ந்த ஒன்றிய கவுன்சிலர் வீரபாண்டியன், ``வேறு சில நிதியில் ஏற்கெனவே செய்யப்பட்ட பணிகளை, பொதுநிதியில் செய்ததாகப் பொய்க் கணக்கு காட்டியுள்ளனர். இதேபோல இன்னும் பல முறைகேடுகள் நடந்துள்ளன. அதிகாரிகள் மட்டுமே தண்டிக்கப்பட்டுள்ளனர். தலைவர், துணைத் தலைவர் சம்மதம் இல்லாமல் இந்த முறைகேடுகள் நடக்க வாய்ப்பில்லை. அவர்கள்மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.
இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்துப் பேசிய காமாட்சி மூர்த்தி ‘``இங்கு எந்த ஒரு முறைகேடும் நடக்கவில்லை. என்மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டு பொய்யானது. ஆணையர் என்ன சொல்கிறாரோ, அதைத்தான் நான் செய்தேன். தீர்மானப் புத்தகத்தில் கையெழுத்து வாங்க வேண்டுமென்பது விதிமுறை அல்ல’’ என்றார்.
துணைத் தலைவர் மகேஷ்வரியின் கணவர் முருகவேல், ``துணைத் தலைவருக்கு எந்த ஓர் அதிகாரமும் கிடையாது. தலைவரும் ஆணையரும்தான் முடிவெடுப்பார்கள். அதேசமயம் இங்கு எந்த ஒரு தவறுமே நடக்கவில்லை. உள்ளாட்சித் தேர்தலுக்கு முன்பு டெண்டர்விடப்பட்டு நடைபெற்ற பணிகள், உள்ளாட்சித் தேர்தலுக்குப் பிறகு நிறைவடைந்து பணம் வழங்கப்பட்டிருக்கிறது. சில கவுன்சிலர்கள் தவறாகப் புரிந்துகொண்டு பிரச்னை செய்கிறார்கள். இங்கு திமுக-வுல இரண்டு கோஷ்டிகள் உள்ளன. அவர்களுக்குள் நடக்கும் மோதலால் வளர்ச்சிப் பணிகள் முடங்கியுள்ளன’’ என்றார். சஸ்பெண்ட் செய்யப்பட்ட பொறியாளர்களில் ஒருவரான தெய்வானை ``நான் எந்தத் தவறுமே செய்யவில்லை. ஆனால் தண்டிக்கப்பட்டிருக்கிறேன்’’ என்றார்.
Also Read: வக்பு வாரியத்தில் ரூ.2,000 கோடி ஊழல்? - விளக்கம் கேட்கும் உயர் நீதிமன்றம்!
ஆணையர் சரவணன் ``இங்கு எந்த ஒரு முறைகேடும் நடக்கவில்லை. எல்லாத் தீர்மானங்களையுமே, ஒன்றிய கவுன்சில் கூட்டத்தில் விவாதிக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை. சில கவுன்சிலர்கள் அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு எல்லாத் தீர்மானங்களையுமே எதிர்த்து பிரச்னை செய்கிறார்கள். தலைவருக்குப் பெரும்பான்மை கவுன்சிலர்களின் ஆதரவு இருப்பதால், சில தீர்மானங்கள் விவாதிக்காமலேயே நிறைவேற்றப்பட்டன. தலைவரின் வழிகாட்டுதல்படிதான் நான் செயல்படுகிறேன். என்மீதான குற்றச்சாட்டு பொய்யானது. நிர்வாகரீதியாக எந்தத் தவறும் நடக்கவில்லை’’ என்றார். மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் லலிதா ``முதற்கட்ட விசாரணையில், இங்கு முறைகேடு நடந்திருப்பது கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. அடுத்தகட்ட விரிவான விசாரணை நடைபெறவிருக்கிறது. இதில் சம்பந்தப்பட்டவர்கள் யாராக இருந்தாலும் கண்டிப்பாகச் சட்டப்படி தண்டிக்கப்படுவார்கள்’’ என்றார்.
தீர்மானப் புத்தகத்தில் கவுன்சிலர்களிடம் கையெழுத்து வாங்க வேண்டும் என்பது விதிமுறையா? பஞ்சாயத்து ராஜ் சட்டத்தின்படி உள்ளாட்சி அமைப்புகளை வலுப்படுத்துவதற்காக செயல்படக்கூடிய தன்னாட்சி அமைப்பின் பொதுச்செயலாளர் நந்தகுமார் ``கூட்டத்தில் கலந்துகொண்ட அனைத்து கவுன்சிலர்களிடமும் தீர்மானப் புத்தகத்தில் கையெழுத்து வாங்க வேண்டும் என்பது விதிமுறை. கூட்டம் நடைபெற்றால் நிச்சயமாக ஏதேனும் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்படும். தீர்மானத்தை ஏற்காத கவுன்சிலர்களாக இருந்தால், ஏற்க மறுக்கிறேன் என கையெழுத்து வாங்க வேண்டும்’’ எனத் தெளிவுபடுத்தினார்.
source https://www.vikatan.com/news/politics/rs-138-crore-corruption-in-mayiladuthurai-panchayat-union
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக