Ad

வியாழன், 26 ஆகஸ்ட், 2021

சண்டிகேஸ்வரர் சந்நிதியில் கைதட்டி வழிபடலாமா? #Video

சிவ பக்தியால் தெய்வப் பதவி அடைந்தவர் சண்டிகேஸ்வரர். பக்தியின் மேன்மை யால் எம்பெருமானின் அருளைப் பெற்ற 63 நாயன்மார்களுள் ஒருவராகப் போற்றப்படும் இவர், சிவாலயங்கள் அனைத்திலும் அதன் தனத்துக்கு அதிபதியாக இருக்கிறார்.

சிவபெருமானின் அடியார் கூட்டத் தலைவனாக இருப்பவர்; மகேஸ்வரனுக்கு சூட்டிய மலர்கள், அணிகள், படைத்த உணவு அனைத்துக்கும் உரிமையானவர் இவர். சிவன் கோயிலில் உட்பகுதியில் வடக்குப் பிராகாரத்தில் தனிச் சந்நிதியில் சிவ தியானத்தில், கோஷ்ட துர்கைக்கு எதிரே இவர் அமர்ந்திருப்பார்.

எம்பெருமானுடன், பஞ்ச மூர்த்திகளுள் ஒருவராக விழாக் காலங்களில் பவனி வருபவர். சிவனாரின் ரிஷப வாகனமே இவருக்கும் வாகனம். தனது மானையும், மழுவையும் ஏந்தும் அதிகாரத்தை இவருக்கு இறைவன் அருளியுள்ளார். இனி, இவரது பக்தியையும், இவர் சண்டீஸ்வரப் பதவி பெற்ற வரலாறையும் அறிந்து கொள்வோம்.

முருகப் பெருமான் சிவலிங்கப் பிரதிஷ்டை செய்து, பூஜித்த தலம் திருச்சேய்ஞலூர். இவரது இயற்பெயர் விசாரசர்மன். முற்பிறப்பில் வேதாகமங்களில் இவர் பெற்றிருந்த திறனால், இந்தப் பிறப்பிலும் வேதாகமங்களின் மீது இவருக்கு மிகுந்த ஈடுபாடு உண்டானது.

மெய்யில் திருநீறு. வாயில் திருவைந்தெழுத்து. நினைவில் சிவ வடிவம். நெஞ்சில் சிவ நேசம். உணர் வில் சிவ பக்தி. சிந்தனையெல்லாம் சிவ மயம் என்று இருந்தவர் இவர்.

ஒரு நாள் தனது நண்பர்களுடன் விசாரசர்மன் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது பசு மாடுகளைப் பராமரிக்க வேண்டியவன், அவற்றை அடிப்பதைக் கண்டு மிகவும் கவலை கொண்ட விசாரசர்மன், முப்பத்து முக்கோடி தேவர்களும் வாசம் செய்யும் கோமாதாக்களை மேய்க்கும் பணியைத் தானே மேற்கொண்டார். இதனால் பசுக்கள் புஷ்டியாக வளர்ந்து, அன்பின் மிகுதியால் விசாரசர்மனைக் கண்டவுடன் தானாக பாலைச் சொரிய ஆரம்பித்தன.

ஞானத்தில் திளைத்த அவரும் அந்தப் பாலை, அபிஷேகப் பிரியரான சிவபெருமானின் வடிவமான சிவலிங்கத்தை மண்ணால் அமைத்து அபிஷேகம் செய்து நியமத்துடன் அங்குள்ள மலர்களால் பூஜை செய்து வந்தார். மறுநாள் அவர் பசுக்களை மேய்க்கச் சென்றபோது, அவர் அறியாமல் பின்னே சென்ற அவரின் தந்தை, அங்கு நடப்பதைக் கவனித்தார். அப்போது தந்தை அழைத்தும் சிவபூஜையைத் தொடர்ந்தார். தந்தை, அவரை பிரம்பால் அடித்தும் கூட பூஜையைத் தொடர்ந்தார். இதனால் கோபம் அடைந்த தந்தை, பால் வைத்திருந்த குடத்தை காலால் எட்டி உதைத்தார்.

அபிஷேகத்துக்கு வைத்திருந்த பால் கொட்டியதால், அந்தக் காலை நோக்கி, தன் கையில் இருந்த மாடு மேய்க்கும் கோலை எறிந்தார் விசாரசர்மன். சிவபெருமான் அருளால் அந்தக் கோலே, மழுவாக மாறி, தந்தையின் காலை வெட்டியது. அப்போது வானில் ஒரு பேரொளி தோன்றியது. நீலகண்டர், உமையம்மையுடன் வெள்ளை இடப வாகனத்தில் விசாரசர்மனுக்குக் காட்சி தந்தார். அம்மையப்பரைக் கண்ட ஆனந்தத்தில் விசாரசர்மன், ''இந்த எளியேனின் பூஜையையும் ஏற்றுக் கொண்டு எனக்காகத் தாங்கள் காட்சி கொடுத்தீர்களே!'' என்று வணங்கி நின்றார்.

சண்டிகேஸ்வரர்

உடனே எம்பெருமான், ''சிவ பூஜைக்கு இடையூறு ஏற்பட்டதால், தந்தை என்றும் பாராமல் அவரைத் தண்டித்த மகனே விசாரசர்மா! இனி, உனக்கு நானே தந்தையும் தாயும். மகனே! உனது தூய பக்திக்காக உன்னை நம் அடியார்களுக் கெல்லாம் தலைவனாக்குகிறேன். நாம் சூடுவன, உடுப்பன, உண்ணும் பாத்திரம் ஆகியவற்றை உனக்கே உரிமையாகும்படி செய்தோம். உனக்கு சண்டீச பதம் அளிக்கிறேன்!'' என்று தனது விரிசடையில் இருந்த கொன்றை மாலையை எடுத்து சண்டிகேஸ்வரருக்கு அணிவித்தார். எம்பெருமான், உமாதேவியார், விநாயகர், முருகவேள், சூரியன் ஆகியோருக்கெல்லாம் தனித்தனியே சண்டீச பதம் உண்டு. எனவேதான் பஞ்ச மூர்த்திகளில் ஒருவராக கூப்பிய கரங் களுடன் நின்ற கோலத்தில் சண்டீஸ்வரரும், இறைவனுடன் பிரம்மோற்சவக் காலங்களில் உலா வருகிறார்.

இத்தகைய சிறப்புகள் கொண்ட சண்டிகேஸ்வரர் சந்நிதியில் கைதட்டி வழிபடும் வழக்கம் ஏன் வந்தது? அவ்வாறு வழிபடலாமா என்பதை அறிந்துகொள்ள கீழே உள்ள வீடியோவைப் பாருங்கள்.



source https://www.vikatan.com/spiritual/gods/can-we-clap-and-pray-at-chandekeswara-sannithi

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக