குழந்தைப்பேறின்மை சிகிச்சைக்காக, அந்தப் பெண்ணுக்கு லேப்ராஸ்கோப்பி மூலமாக கருப்பைக் கட்டிகளை நீக்கிய அந்த நீண்ட இரண்டு மணிநேர அறுவைசிகிச்சை வெற்றிகரமாக முடிந்தவுடன்,
நிமிர்ந்து இடுப்பை ஒருமுறை பின்புறமாய் வளைத்துக் கொண்டேன். கழுத்தை நீவி விட்டுக்கொண்டே, லேப்ராஸ்கோப்பி கருவிகளைப் பிடித்த விரல்களை லேசாய் அழுத்திப் பிடித்துவிட்டபடி, "ரொம்ப டஃப் ஆயிடுச்சுல்ல இன்னிக்கு..!" என்றேன் அருகிலிருந்த மயக்கவியல் மருத்துவரைப் பார்த்து.
"நிஜம் தான்!" என்று புன்னகைத்தவர், "எர்கனாமிக்ஸ் மெஷின்ஸ் இருக்கற இந்த காலத்துலயே இவ்வளவு கஷ்டமா இருக்குன்னா, இதுக்கு முன்ன எல்லாம் பழைய டாக்டர்ஸ் எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பாங்க இல்ல சசி..?” என்று கேட்டார்.
அவர் சொன்னபிறகு அறுவைசிகிச்சை அரங்கின் மானிட்டர்களையும், ஆபரேஷன் டேபிளையும், சுற்றியிருக்கும் மற்ற பொருட்களையும் கவனித்துப் பார்த்தால், அவர் சொல்வது நியாயம் என்றே தோன்றியது.
அது என்ன எர்கனாமிக்ஸ், எதுவும் புதிதான கண்டுபிடிப்பா, மருத்துவத் துறை சம்பந்தப்பட்டதா? நிச்சயமாக இல்லை. இது நமது அன்றாட வாழ்வை சுலபமாக்கும் வழி என்பதால் அதைப்பற்றித் தெரிந்து கொள்வது அவசியமாகிறது.
உண்மையில் கிரேக்க மொழியிலிருந்து பெறப்பட்டது இந்த ergonomics. ergon என்றால் பணி, normoi என்றால் இயற்கை விதிகளின்படி எனும் இந்த அறிவியல் சொல், மனிதர்களின் பணிச்சூழலியலைக் குறிக்கும் முக்கியமான ஒன்றாகும். சுலபமாகச் சொல்ல வேண்டுமென்றால், நீங்கள் வேலை செய்யும் பணியிடத்தை உங்களுக்குச் சௌகரியமாக உருவாக்கித் தரும் அறிவியல்தான் எர்கனாமிக்ஸ்!
இன்றைய சூழ்நிலையில் ஒரு மனிதன் ஒருநாளின் பத்திலிருந்து பனிரெண்டு மணி நேரத்தை அலுவலகத்தில்தான் செலவிடுகிறான். சமயத்தில், வீட்டில் இருக்கும் நேரத்தைவிட வேலையில் இருக்கும் நேரம்தான் மனிதனுக்கு அதிகமாக உள்ளது. இதுவே மாதக்கணக்கில், வருடக்கணக்கில் என்று தொடரும்போது, வேலையின் தன்மைகளும், சூழ்நிலைகளும், நெருக்கடிகளும், அவனை உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் பாதிக்கின்றன. ஆனாலும், தேவைகளின் காரணமாக அதே வேலையை அவன் தொடர்ந்து செய்யவும் நேரிடுகிறது. அப்படி செய்வதால் அவனுக்கு, 'Occupational Diseases' என்ற தொழில் சார்ந்த நோய்கள் ஏற்படுகின்றன.
கிட்டத்தட்ட தனது வாழ்நாளின் மூன்றில் ஒரு பாகத்தை வேலையில் செலவிடும் ஒரு மனிதனுக்கு, அவனது பணி, மன அழுத்தத்தையும், வாழ்க்கைமுறை நோய்களையும் அளிக்கலாம் என்பதுடன், தொடர்ந்து செய்யும் ஒரே மாதிரியான வேலைகள், தசைச் சிதைவு, எலும்புத் தேய்மானம், மூட்டு வலி போன்ற சில musculoskeletal disorder-களையும் சேர்த்தே அளிக்கின்றன.
ஒரு உதாரணத்துக்கு கணினியின் முன் தொடர்ந்து பணிபுரியும் பொறியாளர்களை நாம் எடுத்துக் கொள்வோம். "உட்கார்ந்திருப்பதே எங்கள் வாழ்க்கைமுறை" என்று மாறிப்போன துறை அது. உடல் உழைப்பு சிறிதும் இல்லாத அவர்களுக்கு இந்த வேலை கொடுக்கும் உடனடிப் பரிசு உடற்பருமன்தான்.
அத்துடன் நீண்ட நேரம் அமர்ந்திருப்பதால் ஏற்படும் தண்டுவடம் சார்ந்த கழுத்து மற்றும் கை வலி (brachial neuralgia), முழங்கை வீக்கம் (tennis elbow), மணிக்கட்டு மற்றும் விரல்கள் வீக்கம் (carpal tunnel syndrome), இடுப்பு வலி, பாத மூட்டுகளில் வீக்கம், உடற்சோர்வு போன்ற musculoskeletal பாதிப்புகளில் ஏதாவது ஒன்று அல்லது சில பிரச்னைகள் இவர்களிடம் பெரும்பாலும் காணப்படுகின்றன.
அதுமட்டுமல்லாமல், ஒளித்திரையின் முன் தொடர்ந்து பணிபுரிவதால் இலவச இணைப்பாக வரும் கண் பார்வை குறைபாடுகள், தலைவலி, தூக்கமின்மை, அதனால் ஏற்படும் மன அழுத்தம், பதற்றம், ஹார்மோன்கள் மாற்றங்கள் என தொடர்ந்து அமர்கின்ற நீண்ட பணிநேரங்கள் இவர்களைப் பொறுத்தவரையில் ஒரு வகையில் சாபம் என்றே சொல்லலாம். இதன் காரணமாகவே, மருத்துவர்கள், 'Sitting is new Smoking' என்று தொடர்ந்து அமர்வதை புகைப்பிடித்தலுக்கு சமமாக கூறுகிறோம்.
நம் நாட்டில் மட்டுமே ஏறத்தாழ 50 லட்சம் ஐ.டி. பொறியாளர்கள், எல்லோரும் இளைஞர்கள் என்றிருக்க, இதுபோல ஒவ்வொரு தொழில்துறையிலும், ஒவ்வொரு பணியிலும், எத்தனை விதமான பணியிடப் பிணிகள் ஏற்படக்கூடும் என்பது உண்மையில் அச்சத்தையே தருகிறது.
ஆம்...
நமது நாட்டில் மட்டும் ஒவ்வொரு வருடமும், கிட்டத்தட்ட இரண்டு கோடி பேர், இந்த பணிசார்ந்த நோய்களால் பாதிப்படைகின்றனர் என்று சமீபத்திய புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. அதனால் எர்கனாமிக்ஸ் எனும் இந்த பணிச்சூழலியல் அறிவியல் மிகவும் முக்கியம்.
உண்மையில் மனிதன் வேலையிடத்தில் தொடர்ந்து உபயோகிக்கும் பொருட்களை அவன் உடல்வாகிற்கு ஏற்றாற்போல மாற்றி, தொழில்நுட்பத்துடன் இணைத்து, அதை எளிதாக அவன் உபயோகிக்க மாற்றித் தருவதுதான் எர்கனாமிக்ஸ்.
தட்டையாய் இல்லாமல் உள்ளங்கைக்குள் அடங்கும் மவுஸ், தண்டுவடத்திற்கு ஏற்றாற்போல சேர், கண் பார்க்க ஏதுவாய் மானிட்டர் ஸ்க்ரீன் என மனிதனது வசதிக்கும், பயன்பாட்டிற்கும் ஏற்றவாறு மாற்றியமைத்து தருவதால், பணியிட நோய்கள் குறைகிறது. மேலும் அலுப்பில்லாமல் மனிதனால் அதிக நேரம் வேலை செய்ய முடியும் என்பதால், உற்பத்தி பெருகி எர்கனாமிக்ஸின் மூலமாக எக்கனாமிக்ஸும் உயர்கிறது என்கிறார்கள் பொருளாதார வல்லுநர்கள்.
இந்த எர்கனாமிக்ஸ் என்ற சொல்லும் அதன் அறிவியலும் ஏதோ புதிய வார்த்தை போலத் தோன்றினாலும், உண்மையில் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக நடைமுறையில் இருந்து வரும் அறிவியல்தான் என்கிறது வரலாறு.
ஆம்… கருப்பை கட்டிகளை அகற்ற எங்களுக்கு அறுவை அரங்கில் உதவிய எர்கனாமிக்ஸைப் பற்றி, கி.மு. 400ம் நூற்றாண்டிலேயே, கிரேக்க மருத்துவர் ஹிப்போக்ரேடிஸ் குறிப்பிட்டு, மருத்துவப் பணியிடங்களின் அமைப்பைப் பற்றியும் எடுத்துரைத்துள்ளார்.
ஹிப்போக்ரேடிஸைத் தொடர்ந்து, இத்தாலிய மருத்துவரான பெர்னார்டினோ, அமெரிக்கப் பொறியாளரான ஃப்ரெட்ரிக் வின்ஸ்லோ, போலந்து விஞ்ஞானி வாஜ்சியஸ் என ஒவ்வொருவரும் தங்களது ஆராய்ச்சிகளில் பணிச்சூழலியலின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியுள்ளனர் என்றாலும் எர்கனாமிக்ஸின் தேவை அதிகம் உணரப்பட்டது உலகப்போர்களின்போதுதான்.
முதலாம் உலகப்போரின் போது போர் விமானங்களை முதன்முறையாக பிரிட்டனும், ஜெர்மனியும் பயன்படுத்தியதைத் தொடர்ந்து, இரண்டாம் உலகப்போரில் அமெரிக்கா புதுவிதமான, ஆற்றல்மிக்க போர் விமானங்களை செலுத்தியது. அவற்றைப் பயன்படுத்திய பைலட்களும், மிகவும் தேர்ந்த வீரர்கள் என்றபோதிலும், போர்விமானங்கள் விபத்துக்குள்ளானதை அவர்களால் தடுக்க முடியவில்லை. பின்னர் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில், அதற்கு முக்கியக் காரணமாக இருந்தது, அந்த போர் விமானங்களின் சிக்கலான காக்பிட்கள் என்பது கண்டுபிடிக்கப்படுகிறது. அப்போதைய அமெரிக்கப் படையின் தளபதியான லெப்டினன்ட் அல்போன்ஸ் சேப்பனிஸ் எடுத்துரைத்த மாற்றங்களுடன், விமானிகளுக்குத் தகுந்த காக்பிட்டை அமெரிக்கா உருவாக்கியதில் கவனம் பெற்றது எர்கானமிக்ஸ்.
தொடர்ந்து, ‘பணியிட அறிவியல் என்பது இயற்கை அறிவியலோடும், மனித உடல் இயங்கியலோடும் ஒன்றிணைந்து செயல்படுவதே’ என்ற புரிதல்கள் ஏற்பட, மற்ற துறைகளுக்கும் பரவியது எர்கனாமிக்ஸ். விவசாயத் தொழில் முதல், விண்வெளி நிலையம் வரை, சுரங்கத் தொழிற்சாலை முதல் ரோபாட்டிக்ஸ் வரை, என அனைத்து தொழில்களிலும் எர்கனாமிக்ஸைப் புகுத்தி, பணியிடப் பிணிகள் பெரிதும் ஏற்படாமல் பாதுகாத்து வருகிறது இந்த பணிச்சூழலியல் அறிவியல். அத்துடன் ‘’Ergonomics: Keep It Simple Stupid’’ என்று கூறும் அறிவியலாளர்கள், "எப்போதும் உங்கள் பணிச்சூழலியலை முத்தமிடுங்கள்" என்றும் வலியுறுத்துகின்றனர்.
இதுவரை பணியிடத்தில் மட்டுமே பார்க்கப்பட்ட இந்த சூழலியல், இப்போது domestic ergonomics என வீட்டிற்குள் நுழைந்து சுலபமான சமையலறை, பிடித்தமான ஹோம் தியேட்டர் என்று ஆரம்பித்து, இப்போது sleep ergonomics என படுக்கையரை வரை வந்து நமது நிம்மதியான தூக்கத்திற்கும் வழிவகுக்கிறது.
யார் கண்டார்கள்? எதிர்காலத்தில சீக்கிரமே யாராவது, “நான் போட்டிருப்பது எர்கானமிக்ஸ் டிரெஸ் தெரியுமா?” என்று சொல்வதை நீங்கள் கேட்க வேண்டி வரலாம். அப்போது நீங்கள் இந்தக் கட்டுரையை நினைத்துக் கொள்ளுங்கள்.
source https://www.vikatan.com/news/healthy/how-ergonomics-plays-important-role-in-long-working-hours
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக