ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 2020 ஒலிம்பிக் தொடர் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இதில் வில்வித்தை போட்டிகளும் அடக்கம். பல நாட்டு வீரர்கள் கலந்துகொள்வதாலும், நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறைதான் இந்தப் போட்டிகளை பார்ப்பதாலும், யார் எந்த நாட்டு வீரர் என பலருக்கும் தெரிந்திருக்காது. அதனால், ஒரு பாடகியின் வீடியோ, வில்வித்தை வீராங்கனை என வைரலாகிக்கொண்டிருக்கிறது.
பிரபல பாப் பாடகி சூயூ, தைவானைச் சேர்ந்தவர். கொரியாவில் TWICE என்ற இசைக்குழுவில் பாடகியாக இருக்கிறார். இன்றைய இளைஞர்கள் மத்தியில் தென் கொரிய பாப் பாடல்களுக்கு மிகப்பெரிய வரவேற்பு உள்ளது. இதை சுருக்கமாக கே-பாப் (K-POP) என அழைக்கிறார்கள். இந்த கே-பாப் குழுவில் ஒன்றுதான் TWICE. இந்த TWICE குழுவில் இருக்கும் பெண் பாடகர்களில் சூயூ மிகவும் பிரபலம். அவரது குரலுக்காகவும் அழகிற்காகவும் பெரும் ரசிகர் பட்டாளமே உள்ளது. ஒருமுறை கொரிய பிரபலங்கள் பங்குபெறும் ஒரு ரியாலிட்டி ஷோவில் அவர் பங்கேற்றிருக்கிறார். கொரியாவில் வில்வித்தை மிகவும் பிரபலம் என்பதால், அந்த ஷோவிலும் அது இடம்பெற்றிருக்கிறது. அப்போது சூயு அம்பெய்தும் வீடியோக்கள்தான் இவை.
— மாங்க் (@monktwitz) August 1, 2021
அதை இணையத்தில் பார்த்த பிரேசில் நபர் ஒருவர், ஒலிம்பிக் போட்டி என நினைத்து, “தைவான் நாட்டு ஒலிம்பிக் வில்வித்தை அணியில் இவ்வுளவு அழகான வீரரா” என சூயூவை பாராட்டி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். சூயூ யாரென்றே தெரியாத பலரும், இந்த ட்விட்டர் பதிவை பார்த்து தொடர்ந்து ஷேர் செய்ய, பலரும் அவரைப் பார்த்து வியந்துவிட்டனர். பலரும் சூயூ பற்றி இணையத்தில் தேடவும், அவரது வீடியோவை பகிரவும் தொடங்கினர்.
சொல்லப்போனால், அவர் வைரல் ஆவது ஒன்றும் புதிதல்ல. ஏற்கெனவே ஒருமுறை வில்வித்தை வீரர் என்று வைரல் ஆனார். இந்தமுறை ஒலிம்பிக் வில்வித்தை வீரர் என்று கூடுதல் புகழுடன் வைரலாகியிருக்கிறார்! இதைப் பார்த்த TWICE ரசிகர்கள், “இது பிரபல பாப் பாடகி சூயூ என்றும் அவருக்கும் ஒலிம்பிக் போட்டிக்கும் எந்த சம்மந்தமும் இல்லை” என எல்லா பதிவுகளிலும் போய் கருத்து தெரிவித்தாலும், யாரும் அவர்களை கண்டுகொள்வதாக இல்லை. இதை எழுதிக் கொண்டிருக்கும் சமயத்தில் சூயூ வில்வித்தையில் கலந்து கொண்ட வீடியோ 4.3 மில்லியன் பார்வையாளர்களை எட்டியுள்ளது.
source https://sports.vikatan.com/olympics/fact-check-on-korean-archer-viral-video
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக