Ad

ஞாயிறு, 22 ஆகஸ்ட், 2021

Covid Questions: தொற்றிலிருந்து மீண்டு 3 மாதங்களாகின்றன; படி ஏறி, இறங்க கடினமாக இருக்கிறது; ஏன்?

கோவிட் தொற்றிலிருந்து மீண்டு மூன்று மாதங்களாகின்றன. இன்னும்கூட படிகளில் ஏறி, இறங்குவது மிகவும் கடினமாக இருக்கிறது. இதயத்தில் ஒரு வெற்றிடம் உள்ளதுபோல் அவ்வப்போது உணர்கிறேன். ஐந்து நிமிடங்கள் நின்றால் இரண்டு தொடைப்பகுதிகளில் எரிச்சல் உண்டாகிறது. என்ன காரணம்?

- சுகுமார் (விகடன் இணையத்திலிருந்து)

மருத்துவர் விஜயலட்சுமி

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த தொற்றுநோய் சிகிச்சை சிறப்பு மருத்துவர் விஜயலட்சுமி.

``நீங்கள் குறிப்பிடும் பிரச்னை, மருத்துவமொழியில் 'லாங் கோவிட்' (Long Covid) எனப்படும். நீங்கள் குறிப்பிட்டுள்ளதுபோல கோவிட் தொற்றிலிருந்து முழுமையாகக் குணமான பிறகும், நுரையீரல் பாதிப்பில்லாமல் மீண்டுவிட்டபோதும், சிலருக்கு இப்படிப்பட்ட அறிகுறிகள் மூன்று மாதங்கள் வரை தொடர்வதுண்டு. அதாவது, திடீரென இதயத்துடிப்பு வேகமாவது, மயக்கம், தலை லேசானதுபோல உணர்வது, மனக் குழப்பம், நடக்கும்போது கால்களில் வலி, தூக்கமின்மை, தலைவலி, எப்போதும் ஒருவித பதற்றநிலை போன்ற அறிகுறிகள் தொடரலாம்.

முதலில் மருத்துவரை அணுகி உங்களுக்கு வேறு ஏதேனும் பிரச்னை இருக்கிறதா என்பதை உறுதிபடுத்திக்கொள்ளுங்கள். அப்படி எதுவும் இல்லாத பட்சத்தில் மருத்துவர் பரிந்துரைக்கும் சில மருந்துகளும் உடல் இயக்கங்களுமே உங்களுக்குப் போதுமானவையாக இருக்கும். கோவிட் தொற்றிலிருந்து குணமானதாக நினைத்து நிம்மதியடைந்த நிலையில் திடீரென இப்படிப்பட்ட பிரச்னைகள் தலைதூக்குவதை நினைத்துப் பலரும் பயப்படுகிறார்கள். அந்த பயம் தேவையற்றது. லாங் கோவிட் பாதிப்பானது நிரந்தரமானதல்ல. பாதிக்கப்பட்டவர்கள் சீக்கிரமே அதிலிருந்து குணமடைந்துவிடுவார்கள்."

என் வயது 37. எனக்கு L4 L5 டிஸ்க் பிரச்னை உள்ளது. பிசியோதெரபிஸ்ட் சொன்னமாதிரி பயிற்சிகளைச் செய்து வருவதால் பெல்ட் இல்லாமல் சமாளிக்க முடிகிறது. சமீபத்தில் கோவாக்சின் தடுப்பூசி எடுத்துக்கொண்டேன். அதையடுத்து அன்று மதியமே அடி முதுகில் வலி ஏற்பட்டது. இது நான் தவறான பாஸ்ச்சரில் (Posture) உட்கார்ந்து வேலை செய்வதால் ஏற்பட்டதாக இருக்குமா அல்லது தடுப்பூசி போட்டதன் பக்கவிளைவாக இருக்குமா? இரண்டு வருடங்களுக்கு முன்பு முதுகுவலிக்காக மருத்துவரை அணுகியபோது அவர் எனக்குப் பரிந்துரைத்த வலி நிவாரணிகளை இப்போது எடுத்துக்கொள்ளலாமா?

- அஜித் (விகடன் இணையத்திலிருந்து)

COVID-19 vaccine

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த தொற்றுநோய் சிகிச்சை சிறப்பு மருத்துவர் விஜயலட்சுமி.

``தடுப்பூசி போட்டுக்கொண்ட பிறகு, ஏற்படும் காய்ச்சல் மற்றும் வலிக்கு பாராசிட்டமால் அல்லது NSAID மருந்து போதும். அவை எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாது. ஆனால், ஒரு விஷயத்தில் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். தடுப்பூசியால் ஏற்படும் காய்ச்சலோ, உடல்வலியோ அதிகபட்சம் 2 - 3 நாள்களுக்கு மேல் நீடிக்காது. அதைத் தாண்டியும் அவை தொடர்ந்தால் தாமதிக்காமல் மருத்துவரை அணுகவும்."

கொரோனா தொடர்பாகவும், அது ஏற்படுத்தும் பிற உடல், மனநல பாதிப்புகள் தொடர்பாகவும் அனைவர் மனதிலும் பல்வேறு கேள்விகள் எழுகின்றன. அவற்றுக்கு விடைசொல்லவே இந்த `Covid Questions' பகுதி. இந்தப் பகுதியில் தினம்தோறும் கொரோனா தொடர்பான ஒரு கேள்விக்கு விடையளிக்கப்படும். இதேபோல உங்களுக்கும் கொரோனா தொடர்பான சந்தேகங்கள் இருப்பின் அவற்றைக் கீழே கமென்ட் செய்யுங்கள். வரும் நாள்களில் அவற்றுக்கு விடையளிக்கிறோம். விகடனுடன் இணைந்திருங்கள்!

விகடன் தயாரிப்பில் வெளிவர இருக்கும் ஆதலினால் காதல் செய்வீர் தொடரின் Promo



source https://www.vikatan.com/health/healthy/recovered-from-covid-3-months-ago-still-i-feel-breathing-suffocation-why

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக