Ad

வெள்ளி, 13 ஆகஸ்ட், 2021

ஒரு விஷயத்தில் ஆடுகளத்தை மிஞ்சிய சார்பட்டா! - வைரல் டெம்ப்ளேட் பின்னணி

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை, வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

"சார்பட்டா" படத்தில் கபிலன், ரங்கன் வாத்தியாரை தன் சைக்கிள் பின்னால் உட்கார வைத்து பயிற்சிக்கு வராத ராமன் வீட்டுக்கு கூட்டிச் செல்வான். அந்த சைக்கிள் காட்சி தான் இப்போது சமூக வலைதளங்களில் வைரல் டெம்ப்ளேட். எவ்வளவு மீம் போட முடியுமோ அவ்வளவு மீம்கள் சலிக்க சலிக்க போட்டு வருகின்றனர் நம் மீம் கிரியேட்டர்கள். அந்த அளவுக்கு நம்மை கவர்ந்திருக்கிறார்கள் கபிலனும் ரங்கன் வாத்தியாரும்!

சார்பட்டா பரம்பரை

கடந்த சில வருடங்களுக்கு முன் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் மாநில அளவில் மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகள் பெரும்பாலும், "என் வெற்றிக்கு என் ஆசிரியர்கள் தான் காரணம்..." என்பதை எல்லா பேட்டிகளிலும் மறக்காமல் சொல்வார்கள்.

அப்போதெல்லாம் எனக்குள் "நாமளும் இந்த மாதிரி பெரிய அளவுல ஜெயிச்சு நம்ம குருநாதருக்கு பெரும தேடி தரனும்" என்ற எண்ணம் பிறக்கும்... ஆனால் நான் சரியான மாணவனாக இருக்கவில்லையா அல்லது எனக்கு சரியான வாத்தியார் அமையவில்லையா என்பது எனக்கு தெரியவில்லை. கடுமையாக முயற்சித்தும் அப்படியொரு வாய்ப்பு அமையவில்லை. "சார்பட்டா" படத்தின் கிளைமேக்ஸில் வேம்புலியை அடித்து கெலித்ததும் "ரங்கன் வாத்தியார் சிஷ்யன்டா..." என்று கபிலன் சொன்னதும் மாநில அளவில் மதிப்பெண் பெற்று மைக்கை பிடித்து பத்திரிக்கைகாரர்களுக்கு பேட்டியளித்த அந்த மாணவ மாணவிகள் தான் நினைவுக்கு வந்தனர்.

Also Read: ஆல் இன் ஆல் ஆறுமுகம்! - கிராமத்தானின் பயணம் - 5

தமிழ் சினிமாவில் இதற்குமுன் நிறைய படங்கள் மாணவனுக்கும் வாத்தியாருக்குமான உறவை பற்றி பேசியிருக்கின்றன. குறிப்பாக "ஆடுகளம்" படத்தில் குருவுக்கும் சிஷ்யனுக்குமான உறவை மிக அழுத்தமாக தனித்துவமாக பதிவு செய்திருப்பார்கள். அதை மிஞ்சிய குரு-சிஷ்யன் படம் தமிழ் சினிமாவில் இல்லை என்றிருந்தது. ஆனால் இப்போது "சார்பட்டா" கபிலனும் ரங்கன் வாத்தியாரும் குரு சிஷ்யன் உறவு என்றால் இனி நாங்கள் தான் என்று நம்மை பேச வைத்துள்ளனர்.

ஆடுகளம்

கபிலனுக்கு ரங்கன் வாத்தியார் என்றால் உயிர். அவரை தன் ஹீரோவாக பார்க்கிறான். அப்பாவை காட்டிலும் உயர்ந்ததொரு ஸ்தானத்தில் வைத்திருக்கிறான்.

தன்னுடைய வாத்தியாரை, அவரின் மகனாகவே இருந்தாலும் பொதுவெளியில் பழித்துப் பேசுவதை அவன் விரும்பவில்லை. அடுத்ததாக ரங்கன் வாத்தியாரை பற்றி தவறாக பேசியவரை மேடையிலேறி கன்னத்தில் அறைகிறான் கபிலன். அப்போது கபிலனை கண்டித்து "அப்பன் புத்தி அப்படியே இருக்கு..." என்று கண்டிப்பார்.

தன் மாணவன் எந்தவொரு சூழலிலும் அடிதடியில் இறங்கிவிட கூடாது என்பதில் ஆரம்பத்தில் இருந்தே கவனமாக இருக்கிறார் ரங்கன் வாத்தியார்.

'சார்பட்டா' டான்ஸிங் ரோஸ்

இதுதான் சார்பட்டா பரம்பரையின் கடைசி ஆட்டம்... வேம்புலியுடன் மோத வேண்டிய அந்த ஆட்டத்திற்கு சார்பட்டா பரம்பரையிலிருந்து ரங்கன் வாத்தியாரால் ராமன் தேர்ந்தெடுக்கப்படுகிறான். ஆனால் ரங்கன் வாத்தியாரின் பயிற்சி சரியில்லை என்று ராமன் தன் வாத்தியாரை புறக்கணித்து பயிற்சிக்கு வரவில்லை. தன்னுடைய திருமண பத்திரிக்கை வைத்துவிட்டு "நீ தான் வாத்தியாரே எனக்கு தாலியெடுத்து கொடுக்கனும்..." என்று சொன்ன கபிலன், பயிற்சிக்கு வராத ராமன் வீட்டிற்கு தன் சைக்கிளில் ரங்கன் வாத்தியாரை அமர வைத்து அழைத்து செல்கிறான். அப்போது வாத்தியாரிடம் மனம் விட்டுப் பேசுகிறான். வாத்தியாரின் மனிதாபிமானம் குறித்து புகழ்கிறான். முன்பு சொன்னதுபோல் அந்தக் காட்சி தான் இப்போது இணையதளங்களில் பேசுபொருள்.

ரங்கன் வாத்தியாரின் பயிற்சி சரியில்லை என்று தன் வாத்தியாரை இளக்காரம் செய்த ராமனை தன்னுடன் மோத சொல்கிறான் கபிலன். அம்மா கண்டிப்பார் என்பதெல்லாம் அவனுக்கு அப்போது தோன்றவில்லை. தன் வாத்தியார் அசிங்கப்பட்டுவிட்டார் என்பது மட்டுமே மனதை உறுத்துகிறது. சவால்விட்டு வாத்தியாரை பழித்த ராமனை அடித்து வீழ்த்துகிறான்.

சார்பட்டா பரம்பரை

தன்னுடைய வாத்தியார் எந்த இடத்திலும் தலைகுனியக் கூடாது என்பதற்காக டான்ஸிங் ரோஸிடம் சவால் விட்டதைப் போல இரண்டே ரவுண்டில் வீழ்த்துகிறான். அப்போது ஸ்டேஜ் நடுவே வந்து தன் கை சட்டையை மடித்து தன்னுடைய பெயர் சொல்ல சரியான சிஷ்யன் கிடைத்துவிட்டான் என்று பெருமிதம் கொள்கிறார் ரங்கன் வாத்தியார்.

ரங்கன் வாத்தியார் பொறுப்பில் இருக்கும் வரை சரியான பாதையில் பயணித்த கபிலன் வாத்தியார் சிறையிலடைக்கப்பட்ட காலத்தில் ரவுடியாக உருவெடுக்கிறான். விடுதலையான ரங்கன் வாத்தியார் கையில் கத்தி எடுத்த கபிலனை தன் சிஷ்யன் இல்லை என்கிறார். தான் ரங்கன் வாத்தியாரின் சிஷ்யன் என்பதை நிரூபிப்பதற்காக பட்டா கத்தியை பிடிக்கும் தொழிலை... சாராயம் காய்ச்சும் தொழிலை... விட்டொழித்து பீடி ராயப்பனிடம் சென்று பயிற்சியெடுத்து உடம்பை தயார்படுத்துகிறான் கபிலன். (ரங்கன் வாத்தியாரும் தன் சிஷ்யன் வாழ்க்கையை கெடுத்த தன் மகனை கடுமையாக கண்டிக்கிறார்)

'சார்பட்டா' டான்ஸிங் ரோஸ்

வேம்புலியுடன் ஆட்டம் நடக்கிறது. தன் அருகில் ரங்கன் வாத்தியார் இல்லாததை கபிலன் எதையோ இழந்ததை போல உணர்கிறான். பெரும் தவறு செய்யப்பட்டு தண்டனை அனுபவிப்பனை போல உணர்கிறான். மொத்த பலத்தையும் இழந்து சருகாக வீழ்கிறான் கபிலன். அப்போது யாரோ போல கூட்டத்தின் நடுவே நின்று வேடிக்கை பார்த்த ரங்கன் வாத்தியார் ஸ்டேஜ் அருகே வந்து, "அடிங்கு எந்திரிடா மேல... வந்தனா வச்சுக்கு... மேல எந்திரிடாங்கறன்... " என்று மண்ணில் விழுந்த குழந்தையை எழுப்புவது போல மிரட்டுகிறார்.

ரங்கன் வாத்தியாரின் குரலை கேட்டதும் புதுசக்தி பிறந்ததை போன்றுணந்த கபிலன் எழுந்து வேம்புலியை வீழ்த்துகிறான். அதன் பின்னரும் தோற்பது போன்ற சூழல் வர, ரங்கன் வாத்தியார் கபிலனின் கன்னத்தில் ஒரு அறை விட்டு தயார்படுத்தி முன்னே கொண்டுவந்த தேரை பின்னாடி விட்டுவிடாதே என்று ஊக்கப்படுத்துகிறார். அடுத்த ரவுண்டில் கபிலன் வேம்புலியை வீழ்த்துகிறான்.

நிஜ வாழ்க்கையில் கபிலனுக்கு கிடைத்ததை போன்ற ஒரு ரங்கன் வாத்தியார் நமக்கு கிடைப்பது அரிதினும் அரிது. ரங்கன் வாத்தியாரை போன்று, நம் வாழ்க்கை மீது அக்கறை மிகுந்த ஒரு வாத்தியாரை நம் சைக்கிளில் உட்கார வைத்து ஓட்டும் பாக்கியம் எல்லோருக்கும் கிடைப்பதில்லை. கபிலன் திருமணத்திற்கு வந்து தாலி எடுத்துக் கொடுப்பார் ரங்கன் வாத்தியார். அந்த மாதிரியான ஒரு தருணம் நம் வாழ்க்கையில் அமைந்திருக்கிறதா? அவ்வளவு ஏன் நம்ம திருமணத்திற்கு எத்தனை ஆசிரியர்கள் வந்திருக்கிறார்கள்? அல்லது நாம் தான் நம் திருமணத்திற்கு ஆசிரியர்களை நினைவு வைத்து அழைக்க தயாராக இருக்கிறோமா?

சார்பட்டா பரம்பரை

என்னை பத்தாம் வகுப்பில் நல்ல மதிப்பெண்கள் பெற வைத்த என் ஆசிரியர் விஜய்கிருஷ்ணன் சாரை ஒருமுறையாவது என் சைக்கிளில் உட்கார வைத்து அவருடன் பேசியபடியே சில தூரம் பயணிக்க வேண்டுமென்பது என் ஆசை. உங்களுடைய வாழ்க்கையிலும் எதோவொரு தருணத்தில் ஏதோவொரு ஆசிரியர் உங்கள் மனம் கவர்ந்திருப்பார். வாய்ப்பு கிடைத்தால் கபிலனை போல உங்கள் வாத்தியாரை சைக்கிளில் உட்கார வைத்து மனம் விட்டுப் பேசி பயணியுங்கள்...!

- மா. யுவராஜ்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/



source https://www.vikatan.com/oddities/miscellaneous/my-vikatan-article-about-sarpatta-rangan-vaathiyar-viral-photo

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக