Ad

வியாழன், 26 ஆகஸ்ட், 2021

கொரோனா: `கேரள மக்களை பினராயி அரசு கொலை செய்கிறது!' - கொதித்த பாஜக தலைவர் சுரேந்திரன்

கேரள மாநிலத்தில் கொரோனா இரண்டாவது அலை தொடர்ந்து நீடித்து வருகிறது. கடந்த சில வாரங்களாக தினசரி இருபதாயிரம் புதிய கொரோனா பாதிப்புகள் ரிப்போர்ட் ஆகிவந்தது. இந்த நிலையில் நேற்று முன் தினம் 31,445 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. நேற்றைய நிலவரப்படி 30,007 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டது. கேரளத்தில் மொத்தம் 1,81,209 பேர் கொரோனா பாதித்து சிகிச்சையில் உள்ளனர். புதிய கொரோனா பாதிப்பு இருபது ஆயிரம் என்ற நிலையில் இருந்து சராசரியாக முப்பதாயிரம் என்ற நிலையை அடைந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டுமல்லாது முதல் அலையை விட இரண்டாவது அலையில் மரண எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. நேற்றைய கணக்குப்படி இரண்டாம் அலையில் மரண எண்ணிக்கை 20,134 ஆகியுள்ளது.

கொரோனா பரிசோதனை

2020 மார்ச் 28-ம் தேதி கேரளத்தில் முதல் கொரோனா மரணம் ஏற்பட்டது. முதல் அலையில் 2021 மார்ச் மாதம் இடையில் 4406 மரணம் ஏற்பட்டது. இரண்டாம் அலையில் கடந்த ஜூன் மாதம் மரண எண்ணிக்கை பத்தாயிரம் கடந்தது. இப்போது கொரோனா மரணம் இருபதாயிரத்தை கடந்துள்ளது. கேரளத்தில் இரண்டாம் அலை தொடர்ந்து நீடிப்பதும், பாதிப்பு மற்றும் மரண எண்ணிக்கை அதிகரித்து வருவதும் கவலையை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில் முதல்வர் பினராயி விஜயன் கொரோனாவில் கேரளத்தில் நம்பர் ஒன் ஆக்கியுள்ளதாக அம்மாநில பா.ஜ.க தலைவர் கே.சுரேந்திரன் விமர்ச்சித்துள்ளார். இதுகுறித்து கே.சுரேந்திரன் கூறுகையில், "தேசம் போராடி கொரோனாவை தோல்வியடையச் செய்யும் நிலையில், கேரள மக்களை பினராயி அரசு கொலை செய்கிறது. கடந்த 25-ம் தேதி இந்தியாவில் ரிப்போர்ட் ஆன கொரோனா பாதிப்புகளில் 68 சதவீதம் கேரளத்தில் பதிவாகியுள்ளது. தேசிய விதிமுறைகளை கடைபிடிக்காததால் கேரளம் பேரழிவுக்கு தள்ளப்பட்டுள்ளது.

கேரள பா.ஜ.க தலைவர் கே.சுரேந்திரன்

கேரளத்தில் 31,445 கொரோனா பாஸிட்டிவ் ரிப்போர்ட் ஆன அன்று, கொரோனா பாதிப்பில் நாட்டில் இரண்டாம் இடத்தில் உள்ள மகாராஷ்டிராவில் வெறும் 5,031 பாஸிட்டிவ் கேஸ்கள் மட்டுமே ரிப்போர்ட் ஆனது. கேரளாவை விட எட்டு மடங்கு பெரிய மாநிலமான உத்தரபிரதேசத்தில் 19 பாஸிட்டிவ் கேஸ்கள் மட்டுமே ரிப்போர்ட் ஆகியுள்ளது. கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் கேரளம் நம்பர் ஒன் என கோடிகளை செலவுசெய்து விளம்பரம் செய்கிறது கேரள அரசு. ஆனால், பினராயி விஜயன் கொரோனாவில் கேரளத்தை நம்பர் ஒன் ஆக்கிவிட்டார்" என்றார்.

Also Read: Tamil News Today: `இந்தியாவில் ஒரே நாளில் 46,164 பேருக்கு பாதிப்பு; கேரளாவில் மட்டும் 31,455!’ - கொரோனா நிலவரம்



source https://www.vikatan.com/government-and-politics/politics/kerala-bjp-leader-slams-pinarayi-vijayan-in-corona-issue

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக