Ad

திங்கள், 2 ஆகஸ்ட், 2021

ஒலிம்பிக் ஹீரோக்கள் - ஹஸிபா பவுல்மெர்கா: வென்றது தங்கம் மட்டுமல்ல, பழைமைவாத ஒடுக்குமுறையையும்தான்!

நவீன ஒலிம்பிக்ஸ் ஆரம்பித்து கிட்டத்தட்ட நூறு வருஷங்கள் வரை பதக்கமே வாங்காத நாட்டிலிருந்து ஒருத்தர் போய், எடுத்த எடுப்பிலேயே தங்கப்பதக்கத்தை அள்ளிவந்தால் வரவேற்பு எப்படி கிடைக்க வேண்டும்? ஏழு குதிரைகள் பூட்டிய சாரட் வண்டியில் ஊர்வலமாக அழைத்துப் போய், வாண வேடிக்கைகள் முழங்க வாழ்த்தி, தேசிய ஹீரோவாகக் கொண்டாடி மகிழ்ந்திருப்பார்கள் என்றுதானே நினைக்கிறீர்கள்? ஆனால், அல்ஜீரியாவில் ஹஸிபா பவுல்மெர்காவுக்குக் கிடைத்தது கொலை மிரட்டலும், தீவிரவாதிகளின் கடுமையான எதிர்ப்பும்தான். காரணம், அவர் ஓர் இஸ்லாமியப் பெண். ஆப்பிரிக்கக் கண்டத்தில் இருந்து போய், முதலில் ஒலிம்பிக் தங்கம் வென்ற பெண் அவர்தான்.

அல்ஜீரியாவில் பழைமைவாத முஸ்லிம்களின் ஆதிக்கம் கொடிகட்டிப் பறந்தது. 'ஆண்கள் எதிரே பெண்கள் போகவே கூடாது. அப்படியிருக்க, அரைக்கால் சட்டையும், பனியனும் அணிந்து ஒட்டுமொத்த உலகமும் பார்க்க, நிர்வாணக் காட்சி நடத்தினார்... ஆபாசமாக ஓடினார்' என்று ஹஸிபாவைக் கண்டித்தனர். அவரைச் சுட்டுக் கொல்லப் போவதாகவும் ஒரு பழைமைவாத அமைப்பு அறிவிப்புக் கொடுத்தது.

ஹஸிபா பவுல்மெர்கா

அல்ஜீரியாவின் கான்ஸ்டன்டைன் நகரில், 1968-ம் ஆண்டு ஹஸிபா பிறந்தபோது நாடு அமைதியாகத்தான் இருந்தது. இஸ்லாம் வேகமாகப் பரவிய வட ஆப்பிரிக்க நாடுகளில் அல்ஜீரியாவும் ஒன்று. ஆப்பிரிக்கர்களின் முரட்டுத்தனமும், இறைத்தத்துவம் பற்றிய தவறான புரிதலும் சேர்ந்து கொள்ள, பழைமைவாதம் அங்கே வேர்விட்டிருந்தது.

முகம்மது பவுடியாஃப் என்ற ஜனாபாதிபதி வந்த பிறகுதான், 'நாடு உருப்படியாக முன்னேற பெண்களுக்கு சம உரிமை கொடுக்கவேண்டியது அவசியம்' என்பதைப் புரிந்துகொண்டார். பெண்கல்வி, வேலைவாய்ப்பு, எல்லாத் துறைகளிலும் பெண்களுக்குத் தனி முன்னுரிமை எனப் பல சீர்திருத்தங்களைக் கொண்டுவந்தார் அவர். இதனால், பழைமைவாதிகளுக்கு அவரைப் பிடிக்காமல் போய்விட, விரைவிலேயே கொல்லப்பட்டார் அவர்.

ஆனாலும், அவர் தொடங்கிவைத்த சீர்திருத்தங்களை யாராலும் நிறுத்த முடியவில்லை. அவரது சீர்திருத்தங்களின் விளைவாக பள்ளிக்கூடம் போய், அப்படியே மைதானத்திலும் காலடிவைத்த முதல் தலைமுறைப் பெண்களில் ஹஸிபாவும் ஒருவர்.

அப்போதைய ஆப்பிரிக்க நாடுகளில், முஸ்லிம் நாடுகள் என்றில்லை... எல்லா நாடுகளிலுமே பெண்கள் இரண்டாம் பட்சம்தான்! அதனால்தானோ என்னவோ, எந்த நாடும் பெண் சாதனையாளர்களை உருவாக்கி இருக்கவில்லை.

அல்ஜீரியாவின் பிரபல தடகள வீராங்கனையாக 15 வயதிலேயே பிரபலமான ஹஸிபா, சீக்கிரமே ஆப்பிரிக்க சாம்பியன் ஆனார். என்றாலும் சர்வதேச தரத்தில் அவர் இல்லை. 1988-ல் சியோல் ஒலிம்பிக்ஸில் பங்கேற்றபோது கிடைத்தது பரிதாபத் தோல்விதான். நொந்து போய் நாடு திரும்பினார் ஹஸிபா.

ஹஸிபா பவுல்மெர்கா

உள்நாட்டுப் போரால் உடைந்து போயிருந்த நாட்டில் பயிற்சியாளரை எங்கே தேடுவது? பழையபடி சொந்த முயற்சியோடு ஓடினார். தினமும் ஓடிப்பார்த்து, தன் தனிப்பட்ட சாதனை நேரத்தைக் குறைத்தபடி இருந்தார். 91-ம் ஆண்டு டோக்கியோவில் நடந்த உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் 1,500 மீட்டர் ஓட்டத்தில் ஹஸிபா தங்கம் வென்ற போதுதான், உலகின் கவனம் அவர் மீது திரும்பியது.

'தடைகளைத் தாண்டி கனவுச் சிறகுகளை விரித்த ஆப்பிரிக்க பெண்களின் ரோல் மாடல்' என சீர்திருத்தவாதிகள் அவரை வரவேற்க, தீவிரவாதிகள் அவரைக் கடுமையாக விமர்சித்தார்கள். கொலை மிரட்டல் விடுத்தார்கள். வேறு வழியின்றி, இந்தத் தீவிரவாதிகளின் கண்காணிப்பு வளையத்திலிருந்து தப்பி, பயிற்சி பெறுவதற்காக இத்தாலிக்கு ஓடினார் அவர். இத்தாலி ஒலிம்பிக் கழகம் அவருக்கு எல்லா உதவிகளையும் செய்தது.

Also Read: ஒலிம்பிக் ஹீரோக்கள் - பாவோ நுர்மி: 9 தங்கம், 3 வெள்ளி - பின்லாந்துக்கு முகவரி கொடுத்த `Flying Finn'!

1992 பார்ஸிலோனா ஒலிம்பிக்ஸில் தனது 1,500 மீட்டர் ஓட்டத்தை புதிய சாதனையோடு நிகழ்த்தி தங்கம் வென்றபோது, ஒரு கனவு நிறைவேறிய ஆனந்தத்தில் அழுதார் அவர். தான் வென்ற பதக்கத்தை, பெண் விடுதலைக்காகப் பாடுபட்டு, அதற்காகக் கொல்லப்பட்ட முன்னாள் ஜனாதிபதி முகம்மது பவுடியாஃபுக்கு அர்ப்பணித்தார் அவர்.

ஒலிம்பிக் புகழ் கிடைத்த பிறகு, அதுவரை அடங்கிக்கிடந்த ஹஸிபா சீறியெழ ஆரம்பித்தார். பழைமைவாதிகளைக் காய்ச்சி எடுத்தார். “மத நம்பிக்கை உங்களைவிட எனக்கு அதிகமாக இருக்கிறது. இஸ்லாமிய மதிப்பீடுகளை நான் மதிக்கிறேன். பெண்கள் முன்னேறுவதையும் சாதிப்பதையும் எந்த மதமும் தடுக்கவில்லை" என்றார் அவர்.

1995-ம் ஆண்டு அல்ஜீரியாவில் ஜனாதிபதி தேர்தல் நடந்தபோது, 'விளையாட்டு வீரர்களுக்கு அரசியல் எதற்கு' என ஒதுங்கி இருக்காமல், சீர்திருத்தவாதியான லியாமின் ஜெராலை ஆதரித்தார்.

Hassiba Boulmerka

96-ம் ஆண்டு ஒலிம்பிக்ஸ் அட்லாண்டாவில் நடந்தது. இஸ்லாமிய உடை விதிகளைக் காரணம் காட்டி, 26 நாடுகள் தங்கள் அணியில் பெண்களை அனுப்பவில்லை. இதைக் கடுமையாக விமர்சித்தபடி போட்டியில் பங்கேற்ற ஹஸிபா, மீண்டும் தங்கம் வெல்வார் என எல்லோரும் எதிர்பார்த்தனர். ஆனால், 1,500 மீட்டர் அரையிறுதிக்கான ஓட்டத்தில் காலில் தசைப்பிடிப்பு ஏற்பட்டு அழுதபடி வெளியேறினார். அதுவே அவரது கடைசி ஓட்டம். அடுத்த வருடம் ஓய்வை அறிவித்தார் அவர்.

ஒலிம்பிக் கமிட்டிகளில் பதவிகளைப் பெற பயங்கர அடிதடியே நடக்கும். ஆனால், எந்தப் போட்டியும் இல்லாமல் ஒலிம்பிக் அத்லெடிக் கமிட்டி உறுப்பினர் பதவி அவரைத் தேடி வந்தது. ஆப்பிரிக்க மற்றும் இஸ்லாமியப் பெண்கள் தடகளத்தில் தடம் பதிக்க இன்றுவரை போராடும் ஹஸிபா, ஒரு பிசினஸ் பெண்மணியாகவும் அவதாரம் எடுத்திருக்கிறார்.


source https://sports.vikatan.com/olympics/hassiba-boulmerka-from-algeria-became-the-first-african-woman-to-win-gold-at-the-olympics

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக