ஜூலை 19-ஆம் தேதி தொடங்கிய நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் முதல் நாளே பெகாசஸ், விவசாயிகள் மசோதாவை விவாதிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டதால் இரு அவைகளையும் தொடர்ந்து முடக்கப்பட்டன. இதனால், கூட்டத்தொடர் நிறைவடைவதற்கு 2 தினங்களுக்கு முன்னதாகவே தேதி குறிப்பிடப்படாமல் மக்களவை ஒத்திவைக்கப்பட்டது. அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய மக்களவை சபா நாயகர் ஓம்பிர்லா, “96 மணி நேரம் அவை செயல்படத் தீர்மானிக்கப்பட்டு இருந்தது. ஆனால் 74 மணி நேரம் 46 நிமிடங்கள் அவை செயல்பட முடியவில்லை. கிட்டத்தட்ட 21 மணி நேரம் மட்டுமே செயல்பட்டது” என வேதனை தெரிவித்தார். இதனால் 22 சதவீதம் என்ற குறைந்த அளவுக்கே மக்களவையில் அலுவல் நடைபெற்றிருப்பதாகவும் ஓ.பி.சி. மசோதா உள்பட 20 மசோதாக்கள் மட்டுமே நிறைவேற்றப்பட்டதாகவும் தெரிவித்தார். மழைக்காலக் கூட்டத்தொடர் குறித்துப் பேசிய மாநிலங்களவைத் தலைவர் வெங்கைய நாயுடு, “மேஜை மீது ஏறி நின்றது, ஆவணங்களை வீசிய என உறுப்பினர்கள் நாடாளுமன்ற நடந்து கொண்டதால் மாநிலங்களவையின் புனிதம் சிதைக்கப்பட்டுள்ளது. இந்த செயலை கண்டிக்கவோ, தனது அதிருப்தியை வெளிப்படுத்தவோ வார்த்தைகளே இல்லை” எனக் கண்கலங்கிப் பேசினார்.
அவையில் வெங்கைய நாயுடு கண்ணீர் மல்கப் பேசிக்கொண்டிருந்தபோதே எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சிலர் மீண்டும் முழக்கம் எழுப்பினர். அவை நடவடிக்கை குறித்து காங்கிரஸ் முன்னாள் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல்காந்தி கூறும்போது “எதிர்க்கட்சிகளை நாடாளுமன்றத்தில் பேச அனுமதிக்காததால்தான் நாங்கள் அமளியில் ஈடுபட வேண்டியிருந்தது. இது ஜனநாயக படுகொலை” எனக் கூறியிருக்கிறார்.
Also Read: நாடாளுமன்ற தேர்தலில் மோடிக்கு எதிராக மம்தா?! காங்கிரஸ், கம்யூனிஸ்ட் ஆதரிக்குமா?
மழைக்காலக் கூட்டத்தொடர் எப்படி நடந்து முடிந்தது. பா.ஜ.க அரசின் செயல்பாடுகள் எப்படி இருந்தது என காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் கோபண்ணாவிடம் கேட்டோம் “மழைக்காலக் கூட்டத்தொடரில் ஜனநாயகம் படுகொலை செய்யப்பட்டிருக்கிறது. எதிர்க்கட்சிகள் மீது வன்மத்துடன் நடந்துகொண்டதுடன் வன்முறை வெறியாட்டத்தையும் நிகழ்த்தியிருக்கிறது பா.ஜ.க அரசு. காலம் காலமாக வளர்த்தெடுக்கப்பட்ட ஜனநாயக நெறிமுறைகள் மிகப்பெரிய அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறது. பாராளுமன்றம் முடக்கப்படுவது ஜனநாயகத்தின் ஓர் அங்கம்தான் என அருண் ஜெட்லி, சுஸ்வமா சுவராஜ் உள்ளிட்ட பா.ஜ.க தலைவர்கள் பேசியிருக்கிறார்கள். பெகசாஸ், விவசாயிகள் மசோதா குறித்து விவாதிக்க வேண்டும் என்ற மக்கள் நலன் சார்ந்து விவாதிக்க வேண்டும் என்ற எங்கள் கோரிக்கையை ஏற்காமல் ஆளும் அரசு மறுப்பு தெரிவிக்கும்போது விவாதம் செய்ய வேண்டும் எனக் ஜனநாயக முறையில் கோஷமிட்டால் நாடாளுமன்ற மாண்மை நாங்கள் மீறி விட்டதாகக் கண்ணீர்விட்டு நாடகமாடுகிறார்கள். விவாதம் என்றாலே பா.ஜ.க-வும் பிரதமர் மோடியும் ஏன் அஞ்சுகிறார்கள் என்பதுதான் விடை தெரியாத கேள்வியாக இருக்கிறது. எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு எதிராக நின்று மறுக்கலாம் அல்லது பதில் சொல்லாம். இதுதானே நாம் கேட்பது. பா.ஜ.க ஆட்சி அமைத்தது முதல் எந்த மசோதா மீதும் விவாதம் நடத்தப்பட்டது இல்லை. இந்த கூட்டத்தொடரில் கூட கிட்டத்தட்ட 19 மசோதாக்களை விவாதமே செய்யாமல் நிறைவேற்றியிருக்கிறார்கள்.
வரலாற்றில் பாராளுமன்ற ஜனநாயகம் பா.ஜ.க எவ்வளவு மோசமாக நடந்தது என்றுதான் எழுதப்படும். அது அவர்களுக்குத்தான் அவப்பெயர். ஆனால், அதைப்பற்றியெல்லாம் அவர்களுக்குக் கவலையில்லை. தங்களுக்கு இருக்கும் மிருக பலத்தை வைத்துக்கொண்டு நினைத்ததைச் சட்டமாக நிறைவேற்றிக் கொண்டே போவார்கள். அதையெல்லாம் வெற்றி எனச் சொல்ல முடியாது. அதற்கான பதிலடியை விரைவிலேயே மக்கள் அவர்களுக்குக் கொடுப்பார்கள்” எனத் தனது கருத்தைப் பகிர்ந்து கொண்டார்.
தொடர் அமளியில் ஈடுபட்ட எதிர்க்கட்சிகளின் செயல்பாடுகள் குறித்து பா.ஜ.க மாநிலப் பொதுச்செயலாளர் கரு.நாகராஜனிடம் பேசினோம் “எதிர்க்கட்சிகள் தொடர் அமளியால் மழைக்காலக் கூட்டத்தொடர் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டது ஜனநாயகப் படுகொலை. ஜனநாயகத்தில் மக்களின் தேவைகளை, குறைகளை அரசிடம் தெரிவிக்க வாய்ப்பளிக்கும் இடம் நாடாளுமன்ற அவைகள். அதற்காகத்தான் மக்கள் இவர்களைத் தேர்ந்தெடுத்து டெல்லி வரை அனுப்பி வைத்திருக்கிறார்கள். மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் வெங்கடேசனுக்கு எய்ம்ஸ் குறித்து கேள்வி எழுப்பி விளக்க வேண்டிய அவசியம் இருக்கிறது. இதுபோல தமிழ்நாட்டின் ஒவ்வொரு பகுதிக்குமான தேவைகளை மத்திய அரசிடம் எடுத்துக் கூறி அதற்கு விளக்கம் பெறுவதுதான் தமிழ்நாட்டிலிருந்து சென்ற நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஜனநாயகக் கடமை. ஆனால், அந்தக் கடமையை மறந்து மாநிலங்களவை தலைவர் வெங்கைய நாயுடு கண்ணீர் விடும் அளவுக்கு நடந்து கொள்ளும் அளவு நடந்துகொண்டது ஹீரோயிஸமாகத் தெரியலாம். நாடாளுமன்றம் செயல்படாமல் செய்ததால் வெற்றி பெற்றோம் என்றுகூட நினைக்கலாம். ஆனால், உண்மையில் மக்கள் மத்தியில் அது அவர்களுக்குக் கிடைத்த மிகப்பெரிய தோல்வி என்பதை உணர வேண்டும். மக்கள், மாநிலப் பிரச்னையை எழுப்பி விவாதிக்க வேண்டிய இடத்தில் பெகாசஸ் என்ற கற்பனையை விவாதிக்கக் கோரிய மிகப்பெரிய வேதனையை ஏற்படுத்தியிருக்கிறது.
பாரத பிரதமர் மோடியின் அமைச்சரவையில் எப்போதும் இல்லாத அளவு பட்டியல், பழங்குடியின அமைச்சர்கள், பெண்கள் அமைச்சர்கள் இடம்பெற்றிருக்கிறார்கள். அவர்களை அறிமுகம் செய்யக் கூட இவர்கள் வாய்ப்பளிக்கவில்லை என்பது கண்டனத்துக்குரியது. முடக்கியது பெருமையல்ல. சிறுமைதான்” என எதிர்க்கட்சியின் நடவடிக்கையைக் கடுமையாக விமர்சித்துப் பேசினார்.
source https://www.vikatan.com/government-and-politics/politics/bjp-government-or-opposition-parties-who-wins-in-the-parliamentary-monsoon-session
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக