Ad

வியாழன், 12 ஆகஸ்ட், 2021

ரோஹித் - ராகுல் கூட்டணி : லார்ட்ஸில், செம க்ளாஸில்... இந்தியாவின் ஓப்பனிங் பிரச்னை தீர்ந்ததா?

இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் நடந்து முடிந்திருக்கிறது. இந்த முதல் நாளே இந்தியாவுக்கு செம பாசிட்டிவாக அமைந்திருக்கிறது. குறிப்பாக, இந்தியாவின் நீண்ட கால பிரச்னையாக இருந்த ஓப்பனிங் கூட்டணிக்கு ஒரு தீர்வு கிடைத்துள்ளது. ஓப்பனர்களாக களமிறங்கிய ரோஹித் ஷர்மா + கே.எல்.ராகுல் கூட்டணி மிகச்சிறப்பாக ஆடி முதல் விக்கெட்டுக்கு 126 ரன்களை சேர்த்திருந்தனர்.

SENA நாடுகளில் 2010-க்கு பிறகு இந்திய ஓப்பனர்கள் சென்சுரி பார்ட்னர்ஷிப்பே போட்டதில்லை. இந்தியாவின் பல வெளிநாட்டு தோல்விகளுக்கும் இந்த ஓப்பனிங் கூட்டணியின் சொதப்பலே மிக முக்கிய காரணமாக இருந்தது. இப்போது ரோஹித் மற்றும் ராகுல் மூலம் ஒரு தசாப்த பிரச்னைக்கு தீர்வு கிடைத்துள்ளது.
கே.எல்.ராகுல்

ரோஹித் ஷர்மாவும் கே.எல்.ராகுலுமே இந்த தொடரில் ஓப்பனிங் இறங்கி வருகின்றனர். இது திட்டமிடப்படாமல் தானாக அமைந்த கூட்டணி. சமீபமாக, ரோஹித்துடன் ஷுப்மன் கில்லே ஓப்பனிங் இறங்கி வந்தார். அவர் இந்த இங்கிலாந்து தொடருக்கு முன்பாகவே காயம் காரணமாக விலகிவிட்டார். இந்நிலையில், முதல் டெஸ்ட் போட்டிக்கு ஒன்றிரண்டு நாட்களுக்கு முன்பு வரை ரோஹித்தும், மயாங்க் அகர்வாலுமே ஓப்பனிங் இறங்குவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், திடீரென மயாங்க் அகர்வால் காயமடைய புதிய கூட்டணியாக ரோஹித் + ராகுல் கூட்டணி உருவாகியிருந்தது.

இருவரின் கரியரிலுமே இந்த இங்கிலாந்து தொடர் ரொம்பவே முக்கியமானது. கே.எல்.ராகுல் கடைசியாக டெஸ்ட் கிரிக்கெட் ஆடி கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டது. ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி எல்லாவற்றிலுமே பென்ச்சிலோ அல்லது ரிசர்வ் லிஸ்ட்டிலோ மட்டுமே இருந்தார். ரோஹித் ஷர்மா இன்னமும் தன்னை ஒரு முழுமையான டெஸ்ட் பேட்ஸ்மேனாக தகவமைத்து கொள்வதில் திணறிக்கொண்டிருந்தார். இந்தியாவில் எப்படியோ சமாளித்துவிடும் அவர் வெளிநாடுகளில் பயங்கரமாக திணறினார். இந்தியாவில் 80+ ஆவரேஜ் வைத்திருக்கும் ரோஹித் வெளிநாடுகளில் 30-க்கும் குறைவாக ஆவரேஜ் வைத்திருந்தார். இந்த இங்கிலாந்து தொடரில் அவர் தன்னை நிரூபிக்காவிடில் அவருடைய இடம் இளம் வீரர்களுக்கு தாரை வார்க்கப்படும் சூழலே இருந்தது.

ரோஹித் ஷர்மா

இப்படியான நெருக்கடிமிக்க சூழலில் களமிறங்கிய இருவருமே இந்த தொடரை மிகச்சிறப்பாக தொடங்கியிருக்கின்றனர். முதல் டெஸ்ட்டின் முதல் இன்னிங்ஸிலேயே 97 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் போட்டிருந்தனர். முதல் டெஸ்டில் மிஸ் ஆன சென்சுரி பார்ட்னர்ஷிப்பை லார்ட்ஸ் டெஸ்ட்டில் அரங்கேற்றிவிட்டனர்.

இருவருமே ஒரு துறவிக்கு ஒப்பான மனநிலையுடனே நேற்று களமிறங்கியிருந்தனர். ஒரு நொடியில் கூட அவசரேமோ பதற்றமோ அடையவில்லை. ரோஹித்தின் ஆட்டத்தில் அவருடைய ஒயிட் பால் கிரிக்கெட்டின் ஹேங் ஓவர் எப்போதும் அப்பட்டமாக தெரியும். 6-வது ஸ்டம்ப் லைனில் செல்லும் பந்தையெல்லாம் அடிக்க ஆசைப்பட்டு பேட்டை விட்டு எட்ஜ் வாங்குவார். ஆனால், நேற்று அப்படியெல்லாம் அவர் யோசிக்கக்கூட இல்லை. முதல் 10 ஓவர்களில் கையில் கயிறு கட்டப்பட்டதை போல ரொம்பவே அடக்க ஒடுக்கமாக ஆடினார். ஸ்டம்ப் லைனில் உடம்புக்குள் வரும் பந்தை மட்டுமே தொட்டுவிட்டார். மற்ற பந்துகளை அற்புதமாக லீவ் செய்து கொண்டிருந்தார்.

ரோஹித் & ராகுல் இருவரின் பந்தை விடும் திறனுமே அபார வளர்ச்சியை அடைந்திருக்கிறது. பொத்தாம் பொதுவாக பேட்டை அப்படியே தூக்கி லீவ் செய்யாமல், கொஞ்சம் ஸ்ட்ரோக்கிற்கு கமிட் ஆகி பந்தின் போக்கை கடைசி நொடி வரை கூர்மையாக பார்த்து லேட்டாக லீவ் செய்கின்றனர்.
கே.எல்.ராகுல்

இதை கமென்டேட்டர் தினேஷ் கார்த்திக் Positive leave என வகைமைப்படுத்தியிருக்கிறார். லீவ் தான் செய்கிறார்கள். ஆனால், முழுக்க பௌலருக்கு இடத்தை கொடுத்து அவருடைய ஆதிக்கம் தலைதூக்கிவிடாமல், நாங்கள் எப்போதும் ஷாட் ஆட தயாராகவே இருக்கிறோம் என்ற வகையிலான லீவ் இது.

இதனால் முதல் 10 ஓவர்களில் ஸ்டம்புக்குள் வந்த பந்துகளில் இருவரின் ஸ்டரைக் ரேட்டும் 86 ஆகவும் ஸ்டம்புக்கு வெளியே சென்ற பந்துகளில் ஸ்ட்ரைக் ரேட் வெறும் 3 ஆகவுமே இருந்தது.

தன்னுடைய வழக்கமான இணையான ஸ்டூவர்ட் பிராட் இல்லாததால் ஆண்டர்சனின் பௌலிங் தாக்கம் ஏற்படுத்துமா என்ற கேள்வி எழுந்திருந்தது. ஆனால், பிராடுக்கும் சேர்த்து வைத்து மிரட்டினார் ஆண்டர்சன். அவே டெலிவரிகளாக வீசி திடீரென சர்ப்ரைஸாக இன்கம்மிங் டெலிவரிக்களை வீசி தடுமாறச் செய்தார். சீமை பிடிக்கும்போது விரல்களுக்கிடையேயான இடைவெளியை அதிகரித்து கொஞ்சம் தளர்வாக பிடித்து வீசும் Wooble Seam-களை தொடர்ந்து வீசி நெருக்கடி கொடுத்தார். காற்றில் அலைந்து வரும் இந்த வகை பந்துகள் உள்ளே திரும்புமா வெளியே திரும்புமா என்பது பெரிய குழப்பமாக இருந்தது. ஆண்டர்சனோடு ராபின்சனும் அட்டகாசமாக பந்தை இரண்டு பக்கமும் திருப்பியிருந்தார்.

கே.எல்.ராகுல்

இத்தனை சிரமங்கள் கொடுத்த போதும் ரோஹித் - ராகுல் கூட்டணி அசரவே இல்லை. டெஸ்ட் கிரிக்கெட்டில் எப்போதும் முதல் செஷனை முடிந்தளவுக்கு பொறுமையாக ஆட வேண்டும். அதை இந்த கூட்டணி மிகச்சிறப்பாக செய்திருந்தது.

'Complementing each other' என்பதே பார்ட்னர்ஷிப்களுக்கான அடிப்படையான விஷயம். இதுவும் ரோஹித் & ராகுல் கூட்டணியிடம் அற்புதமாக வெளிப்பட்டிருந்தது. பொறுப்பாக ஆடுகிறோம் என்ற பெயரில் இருவருமே பந்தை தொடாமலே இருந்தால் ஸ்கோர் போர்ட் அப்படியேத்தான் இருக்கும். இதனால் முதல் 10 ஓவர்களுக்கு பிறகு ரோஹித் கொஞ்சம் ரிஸ்க் எடுக்க தொடங்கினார்.

ராகுல்
அதுவுமே மிகச்சரியாக திட்டமிட்டு அட்டாக் செய்ய வேண்டிய ஆளை அட்டாக் செய்தார். ஆண்டர்சனையும் ராபின்சனையும் அவர் தொடவே இல்லை. நான்காவது பௌலரான சாம் கரணையே ரோஹித் டார்கெட் செய்தார்.

ஓவர் தி விக்கெட்டில் வந்த சாம் கரண் பந்தை இன்ஸ்விங் செய்ய வேண்டும் என விரும்பினார். ஆனால், கடைசி வரை அது கைகூடவில்லை. இடக்கை பௌலர்களுக்கே உரியே ஆங்கிள் அவுட் டெலிவரிக்களையும் இன்ஸ்விங்கிற்கு முயற்சித்து தோல்வியுற்று லெக் ஸ்டம்ப் லைனிலுமே தொடர்ந்து வீசினார். சர்ப்ரைஸ் எதுவும் இல்லாமல் இருந்த சாம் கரனிம் பௌலிங்தான் ரோஹித்தின் டார்கெட் அவரை விட்டு வெளுத்தெடுத்தார். ஒரே ஓவரில் நான்கு பவுண்டரிகளிலெல்லாம் வந்தது.

இதன்பிறகு, மார்க்வுட் அறிமுகப்படுத்தப்பட்டார். 150 கி.மீ க்கு மேல் வீசும் அவர் ரோஹித்துக்கு என்ன லென்த்தை வீசக்கூடாதோ அதையே வீசினார். அது ஷார்ட் லென்த். ராக்கெட் வேகத்தில் மார்க் வுட் வீசிய ஷார்ட் பிட்ச் டெலிவரிக்களை அழகாக லெக் சைடில் பவுண்டரியாக்கினார்.

ரோஹித் இப்படி ஒரு பக்கம் பொளந்து கட்ட, ராகுல் அவருக்கு சிறப்பான ஒத்துழைப்பு கொடுத்தார். புஜாரானந்தா சுவாமிகளின் மனநிலையோடு 20 ஸ்ட்ரைக் ரேட்டிலேயே ஆடிக்கொண்டிருந்தார். அதுதான் இந்திய அணிக்கு தேவையாகவும் இருந்தது. ரோஹித் அட்டாக் செய்து ஸ்கோரை உயர்த்த இவர் தற்காப்பு ஆட்டத்தை ஆடி விக்கெட்டை விடாமல் பார்த்துக் கொண்டார். சரியாக சாம் கரண் ஓவரில் சிங்கிள் தட்டி ரோஹித்துக்கு ஸ்ட்ரைக்கையும் கொடுத்தார். இதற்கு பெயரே Complementing each other.

Lord's honours board

திட்டமிடலோடு தீர்க்கமாக பயணித்த இந்த கூட்டணி இந்த கூட்டணி 100 ரன்களை கடந்தது. 11 ஆண்டுகளுக்கு பிறகு SENA நாடுகளில் இந்திய ஓப்பனர்கள் அமைத்த முதல் சென்சுரி பார்ட்னர்ஷிப்பாக இது அமைந்தது.

ரோஹித் 83 ரன்களை அடித்திருந்தார். வெளிநாடுகளில் அவர் அடித்திருக்கும் அதிகபட்ச ஸ்கோர் இதுதான். சென்சுரி அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஆண்டர்சனின் வியூகத்துக்கு இரையாகி விக்கெட்டைப் பறிகொடுத்தார்.

ரோஹித் - ராகுல் கூட்டணி 126 ரன்களை சேர்த்திருந்தது. ரோஹித் அவுட் ஆன பிறகு ராகுல் கியரை மாற்றி வேகமாக ஆடத் தொடங்கினார். தொடர்ந்து கோலியுடனுமே சிறப்பாக பார்ட்னர்ஷிப் அமைத்திருந்தார். கோலி க்ரீஸுக்குள் வந்தவுடனேயே அவர் ஆண்டர்சனை எதிர்கொள்ள வேண்டாம் என்பதற்காக, சிங்கிள் எடுக்காமல் முழுமையாக ஆண்டர்சனை எதிர்கொண்டு complementing each other என்பதை மீண்டும் செய்திருந்தார். ஆண்டர்சனின் பந்துகளில் ராகுல் அடித்த டிரைவ்கள் அத்தனையும் பிசிறு தட்டாத க்ளாஸ் தாண்டவம். ஒரு அற்புதமான சதத்தோடு நேற்றைய நாளை முடித்திருக்கிறார் ராகுல். 127 ரன்களுக்கு நாட் அவுட்டாக இருக்கும் ராகுல் இரண்டாம் நாளில் இரட்டை சதம் அடிப்பார் என எதிர்பார்ப்போம்.

ரோஹித் மற்றும் ராகுல் இருவரின் ஆட்டத்தையும் மைக்கேல் வாஹன் புகழ்ந்து தள்ளியிருந்தார். இருவருமே தங்களின் டெஸ்ட் கரியரின் எதிர்காலத்தை ஸ்திரப்படுத்துவதற்காக ஆடிய இந்த இன்னிங்ஸ் இந்திய அணியின் ஒரு தசாப்த ஓப்பனிங் பிரச்னைக்கு தீர்வாக அமைந்திருக்கிறது.



source https://sports.vikatan.com/cricket/rohit-rahul-made-a-record-100-run-opening-partnership-with-their-master-class-strokes

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக