Ad

செவ்வாய், 24 ஆகஸ்ட், 2021

மகாராஷ்டிரா: `அதிரடி கைது.. ஜாமீன்’ - நீதிமன்ற உத்தரவால் நள்ளிரவில் விடுவிக்கப்பட்ட மத்திய அமைச்சர்

மத்திய அமைச்சர் நாராயண் ராணே, `மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே-வை அடிப்பேன்’ என்று சொன்னதால் அவதூறு வழக்கில் செவ்வாய்கிழமை கைது செய்யப்பட்டார். நாசிக், புனே, தானே உட்பட 4 இடங்களில் ராணேவிற்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டது. ராணே தெரிவித்த கருத்தால் அவரது மும்பை வீட்டிற்கு முன்பாக 500 சிவசேனா தொண்டர்கள் கூடினர். அவர்கள் பாஜக தொண்டர்களுடன் மோதலில் ஈடுபட்டதால் போலீஸார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். இதில் 10 போலீஸாரும் காயம் அடைந்தனர்.

நாராயண் ராணே

ராணே கைது செய்யப்பட்டதால் கொங்கன் பகுதியில் மிகவும் பதட்டமான சூழ்நிலை நிலவியது. ராணே கொங்கன் பகுதியை சேர்ந்தவர் ஆவார். கைதை தொடர்ந்து மஹாட் நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு ராணே மனுத்தாக்கல் செய்தார். இம்மனு மீதான விசாரணை இரவு 9 மணிக்குத்தான் தொடங்கியது. அரசு தரப்பு வழக்கறிஞர் புஷன் சால்வி ஆஜராகி ஜாமீன் வழங்க கடும் எதிர்ப்பு தெரிவித்தார். அதோடு, ``முதல்வரின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தவேண்டும் என்ற நோக்கில் இது போன்று தெரிவித்துள்ளார். இது குறித்து விரிவாக விசாரிக்க 7 நாள் போலீஸ் காவல் வழங்கவேண்டும்” என்று அரசு வழக்கறிஞர் கேட்டுக்கொண்டார்.

விவாதம் நள்ளிரவு வரை சென்றது. ராணே தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ராஜேந்திர ஷிரோத்கர், இவ்வழக்கில் போலீஸ் காவல் அவசியமற்றது என்றும், அரசியல் நோக்கத்தோடு கைது செய்யப்பட்டு இருப்பதாகவும் வாதிட்டார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, ராணேவுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். இவ்வழக்கில் காவலில் வைத்து விசாரிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று தெரிவித்த நீதிபதி, ரூ.15 ஆயிரம் ரொக்க ஜாமீனில் விடுவித்தார்.

Also Read: `மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரேவை அடிப்பேன்!' - என்ற மத்திய அமைச்சர் கைது!

இதையடுத்து நள்ளிரவில் ராணே விடுவிக்கப்பட்டார். முன்னதாக நீதிமன்றத்துக்கு வெளியில் ஏராளமானோர் கூடியிருந்தனர். அவர்கள் மத்தியில் பேசிய ராணே, தன் மீது தொடரப்பட்டுள்ள வழக்கை ரத்துசெய்யக்கோரி மும்பை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்வேன் என்று தெரிவித்தார். ராணே கைது செய்யப்பட்டு இருப்பதன் மூலம் சிவசேனா மற்றும் பாஜக இடையிலான கருத்து வேறுபாடு மேலும் அதிகரித்துள்ளது குறிப்பிடதக்கது.



source https://www.vikatan.com/news/politics/court-grants-bail-to-union-minister-narayan-rane-at-midnight

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக