Ad

திங்கள், 2 ஆகஸ்ட், 2021

மதுரை: ``நாங்க மட்டும்தான் ஆக்கிரமிப்பாளர்களா?" -கேள்வி எழுப்பும் பீபிகுளம் மக்கள்

"மூணு தலைமுறையா இங்க வாழுறோம், நாங்க கம்மாயை ஆக்கிரமிப்பு செய்யல, ஆனா, இப்ப திடுதிப்புன்னு வந்து எங்களை காலி பண்ணச் சொல்றாக. நெதமும் பொழப்பத் தேடி ஓடுற நாங்க, ஒண்ட இடமில்லாத நெலையில புள்ள குட்டிகள கூட்டிக்கிட்டு எங்கப் போவோம்?'' என்று கதறுகிறார்கள், மதுரை பீபி குளம்-முல்லை நகரில் வசிக்கும் மக்கள்.

ஆக்கிரமிப்பு அகற்றம்

மதுரை மாநகரின் முக்கியப் பகுதியாக உள்ள பீபிகுளத்தை ஒட்டியுள்ள முல்லை நகரில், சுமார் 5,000 குடும்பங்கள் வசித்து வருகின்றன. வணிக நோக்கில் சிலர் கடைகளையும், வீடுகளையும் கட்டி வாடகைக்கும்விடத் தொடங்கியதால் ஏற்பட்ட தனிப்பட்ட பிரச்னை... வழக்காக மாற... அதன் விளைவாக, அரசு சேவைகள் அனைத்தும் பெற்றுவந்த இங்கு வசிக்கும் ஏழை மக்களின் அனைத்து குடியிருப்புகளையும் அப்புறப்படுத்த உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டது.

பீபிகுளம் நீர்நிலை புறம்போக்கு அக்கிரமிப்பை அகற்ற உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டதும், மாவட்ட நிர்வாகத்தினர் ஜே.சி.பி-யுடன் உடனே களத்தில் இறங்கினார்கள். முதலில் வீடுகளுக்கு வழங்கப்பட்ட மின் இணைப்பைத் துண்டித்தார்கள். அதைத் தொடர்ந்து முல்லை நகர் பிரதான சாலைக்கு இருபுறமும் அமைந்திருந்த வணிகக் கட்டடங்கள், வீடுகளை இடித்தனர்.

ஒட்டுமொத்த வீடுகளையும் இடிக்கவிருந்த நிலையில், மக்கள் எல்லோரும் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டதால், மற்ற வீடுகளை இடிக்க கெடு விதித்துச் சென்றனர். இந்த அதிரடி நடவடிக்கையால், பீபிகுளம்- முல்லைநகர் பகுதி மக்கள் பதற்றம் அடைந்துள்ளனர்.

ஆக்கிரமிப்பு அகற்றம்

மதுரை மாநகரமெங்கும் நீராதாரமாக விளங்கிய பல கண்மாய்கள், குளங்கள் தூர்க்கப்பட்டு அங்கு அரசுக் கட்டடங்களும், குடியிருப்புகளும், வணிக வளாகங்களும் கட்டப்பட்டுள்ளன. அதன் மீது நடவடிக்கை எடுக்காமல், ஏழைகளான நாங்கள் 60 ஆண்டுகளுக்கு மேலாக இங்கு வசித்து வரும் நிலையில், மாற்று ஏற்பாடு செய்யாமல் காலி செய்ய அதிகாரிகள் ஆர்வம் காட்டுவது ஏன்?" என்று கேள்வி எழுப்புகிறார்கள். தங்களுக்கு நியாயம் வழங்கும்படி குடியிருப்பு நலச்சங்கம் சார்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், பீபிகுளம்- முல்லைநகர் பகுதி மக்களிடம் பேசினோம்.

நம்மிடம் பேசிய குடியிருப்போர் நலச்சங்க செயலாளர் பாண்டியராஜா, "மதுரை மாநகராட்சியில் முக்கிய பகுதியான பீபி குளம், ஒரு காலத்தில் கிராமமாக இருந்தது. மன்னராட்சி காலத்தில் யானைகளை குளிப்பாட்டுவதற்காக இந்தப் பகுதியில் குளங்கள் இருந்துள்ளன. 1958-ல் ராணுவத்தில் பணியாற்றியவர்களின் 38 குடும்பங்கள், முதன்முதலாக இங்கு வீடுகளை அமைத்து வாழத் தொடங்கியுள்ளனர். 1977-ல்தான் தங்களது வீடுகளுக்கு பட்டா வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். அவர்களைத் தொடர்ந்து கொஞ்சம் கொஞ்சமாக எளிய மக்கள் குடிசை போட்டார்கள்.

பாண்டியராஜா

எதிர்காலத்தில் இந்த மக்கள் பிரச்னை இல்லாமல் வாழ, ஒப்படைப்பு மனை பட்டா வழங்க வேண்டும் என்று அப்போதிருந்தத நல்ல மனம் கொண்ட தாசில்தார், மதுரை மாநகராட்சி ஆணையருக்கு கடிதம் அனுப்பியுள்ளார். அதற்குப் பதில் வராத நிலையில், 1978-ல் நினைவூட்டல் கடிதம் அனுபியுள்ளார். இப்படி தொடர்ந்து அவர் முயற்சி எடுத்துக்கொண்டிருந்த நிலையில் 1979-ல் அவர் மாற்றப்பட்டார். 1980-களில் இங்கு குடிசைகள் அதிகரிக்க ஆரம்பித்தன. 1987-88 காலகட்டத்தில் இங்கு ஏற்பட்ட தீ விபத்துக்குப் பின்பு, குடிசைகளை ஓட்டு வீடுகளாக மாற்ற குடிசை மாற்று வாரியம் அனுமதி அளித்ததன் அடிப்படையில், பல வீடுகள் ஓட்டு வீடுகளாக மாற்றப்பட்டன.

நான்கரை ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த இடம் குடியிருப்பு பகுதியாக விரிவடைந்தது. ராணுவ வீரர் குடியிருப்பு, முல்லை நகர், நேரு வீதி, சேக்கிழார் வீதிகளில் அமைந்த மனைகளுக்கு, குடிசை மாற்று வாரியம் பட்டா வழங்க தீர்மானித்தது. அந்த திட்டத்தின் கீழ் மனைகளுக்கு விலை நிர்ணையம் செய்து, அதை தவணை முறையில் செலுத்தவும் ஏற்பாடு செய்தது. சிலர் வீட்டு மனைகளுக்கு முழு தொகையும் செலுத்தி, அதற்கான தடையில்லா சான்றும் அரசிடம் பெற்றார்கள்.

இந்த நிலையில், இங்கு தனிப்பட்ட சிலரின் பிரச்னையால் நடந்துவந்த வழக்கில், இப்பகுதியிலுள்ள அனைத்து ஆக்கிரமிப்புகளையும் அகற்றக்கோரி உயர் நீதிமன்றம் கடந்த ஆண்டு உத்தரவிட்டது. இங்கு வசிக்கும் அனைவருமே கூலி வேலை செய்யும் அன்றாடம்காச்சிகள். ஏழ்மை நிலையில் உள்ள எங்களை இங்கிருந்து காலி செய்ய சொன்னால் எங்கே போவோம்? நீதிமன்றமும், அரசும் எங்களது நிலையைப் பரிவுடன் பார்க்க வேண்டும்" என்றார்.

ஜெயபால்

“'நாங்களும் எங்க வூட்டை காப்பாத்திக்க கலெக்டரு ஆபிசு, கோர்ட்டு கேசுனு ஒண்ணுவிடாம அலையுறோம். முப்பது வருசமா நிம்மதி இல்லாமப் போச்சு. ஒரு வழியும் எங்களுக்கு தொறக்கலயே” என்றார் விரக்தியாகப் பேசுகிறார் கூலித் தொழிலாளியான பார்வதி.

“எங்கள இங்க வந்து பாத்துட்டு ரிப்போர்ட் பண்ற அதிகாரிங்க எல்லோரும் நாங்க வசதியா இருக்கோம்னு சொல்றாங்க. கடன்பட்டு மனைக்கு காசைக் கூடக் கொடுத்துறோம். எங்களுக்கு வாழ ஒரு வழி காட்டுங்க. பிள்ள குட்டிகள வெச்சுக்கிட்டு என்ன பண்றது? பொம்பள புள்ளைங்கள கட்டிக் கொடுக்கணும், இப்படி நடுதெருவுல விட்டா என்ன செய்றதுன்னு ஒண்ணும் புரியல. அரசாங்கம்தான் ஏதாவது பண்ணனும்” என்றார் குடியிருப்போர் நலச் சங்க நிர்வாாகி ஜெயபால்

ஒருபக்கம் ஏழை மக்கள் வசித்து வந்தாலும், வசதியானவர்களும் அம்மக்களுடன் கலந்து வீடுகள், கடைகள் கட்டி வாடகைக்கு விட்டு வருமானம் பார்த்து வருவதாகவும் அதிகாரிகள் தரப்பில் சொல்கிறார்கள். அரசு நினைத்தால், நீண்டகாலமாக வசிக்கும் ஏழை மக்களை அடையாளம் கண்டு, சிறப்பு உத்தரவு மூலம் பட்டா வழங்கி, அவர்களுக்கு நிம்மதியையும் இனிமேல் அப்பகுதியில் ஆக்கிரமிப்பு ஏற்படாத வகையில் நடவடிக்கையும் எடுக்கலாம். மதுரையில் அமைந்துள்ள உயர் நீதிமன்ற கிளை, மாவட்ட நீதிமன்றம், சட்டக் கல்லூரி, அரசு அலுவலகங்கள், அரசு குடியிருப்புகள், வீட்டு வசதி வாரிய குடியிருப்புகள், தனியார் கட்டடங்கள், தனியார் மருத்துவமனைகள் மட்டுமில்லாமல், சில வருடங்களுக்கு முன் திறக்கப்பட்ட உலக தமிழ்ச் சங்க கட்டடம் உட்பட அனைத்தும் நீர்நிலைகளில் கட்டப்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர்கள் கூறுகிறார்கள்.

வழக்கறிஞர் லஜபதிராய்

பீபிகுளம் குடியிருப்போர் நலச் சங்கம் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் லஜபதிராயிடம் கேட்டபோது, "பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கியவர்களும், தினக்கூலிகளுமே இப்பகுதியில் அதிகம் வசிக்கிறார்கள். மின் இணைப்பு, ஆதார், குடும்ப அட்டை என அரசின் அனைத்துவிதமான சேவைகளும் இந்த முகவரியில் வழங்கப்பட்டுள்ளன. பட்டா வழங்க பலமுறை இவர்கள் மனு அளித்தும் நடவடிக்கை இல்லை.

Also Read: தி.மலை: நீர்பிடிப்புப் பகுதியில் ஆக்கிரமிப்பு! - அகற்றச் சென்ற அரசு அதிகாரிகள்மீது தாக்குதல்

1990-ல் இப்பகுதியில் நடந்த பெரும் தீ விபத்தில் பல குடிசைகள் எரிந்து நாசமாகின. அதன் பின்னர், குடிசை மாற்று வாரியத்தின் மூலம் ஓட்டு வீடுகள் கட்ட நிதி உதவி செய்துள்ளனர். 2009-ல் தேசிய நகர்ப்புற புனரமைப்பு திட்டத்தின் கீழ், இங்கு 20 வீடுகள் கட்டப்பட்டது. பெரியாறு-வைகை பாசன துணைக்கோட்ட அதிகாரிகள், 2018-ல் கண்மாய் பகுதியை ஆக்கிரமித்துள்ளதாகக் கூறி, 21 நாட்களில் வீடுகளை காலி செய்ய நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். அதன் பிறகு எந்தச் சத்தமும் இல்லை.இந்த நிலையில்தான் கடந்த12-ம் தேதி, எந்தவொரு முன் அறிவிப்பும் இல்லாமல் மின் இணைப்புகளைத் துண்டித்துவிட்டு, வீடுகளை அகற்ற வந்துள்ளனர்.

அவசர கதியில் நடந்த இந்த நடவடிக்கைக்கு தடை விதிக்கவும், உரிய வழிகாட்டுதலோடு நடவடிக்கை எடுக்க உயர் நீதிமன்றத்தில் முறையிட்டிருந்தோம். ஆக்கிரமிப்பை அகற்றும்போது டாஸ்மாக் கட்டடம், வி.ஏ.ஓ அலுவலகம், கட்சி அலுவலகங்கள் இடிக்கப்படவில்லை என்பதைக் குறிப்பிட்டோம். விசாரித்த நீதிபதிகள், குடியிருப்போரில் வறுமைக்கோட்டுக்குக் கீழே உள்ளவர்களை ஆய்வு செய்ய உத்தரவிட்டுள்ளனர். மீண்டும் வழக்கு விசாரணைக்கு வரும்போதுதான், அடுத்த நடவடிக்கைப் பற்றி தெரியவரும். அனைத்து மக்களுக்கும் வசிப்பிடம் வழங்க வேண்டும் என்பதை அடிப்படை உரிமையாக அரசு அறிவிக்க வேண்டும்" என்றார்.

கலெக்டர் அனீஷ் சேகர்

பீபிகுளம்- முல்லை நகர் மக்களின் பிரச்னை குறித்து, மதுரை கலெக்டர் அனீஷ் சேகரிடம் கேட்டபோது, "நீர் நிலை ஆக்கிரமிப்பை அகற்றச் சொல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதை நிறைவேற்றுவதுதான் எங்கள் பணி. ஆரம்பத்திலயே இதை ஏன் தடுக்கவில்லை என்று கேட்பது, ஆக்கிரமிப்பை ஆதரிப்பது போலாகும். அப்போது இதை தடுக்காத அலுவலர்கள் மீது இப்போது நடவடிக்கை எடுக்க சாத்தியம் இல்லை. அவர்களை தேடிக் கண்டுபிடிக்கவும் முடியாது. அதே நேரம், அங்கு நீண்ட காலமாக குடியிருக்கும் மக்கள் பாதிக்கப்படக் கூடாது என்பதால், அவகாசம் கொடுத்துள்ளோம். மேலும், அவர்களுக்கு மாற்று இடம் கொடுப்பது பற்றி ஆலோசித்து வருகிறோம்" என்றார்.



source https://www.vikatan.com/news/tamilnadu/madurai-mullai-nagar-encroachment-removed-people-on-shock

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக