Ad

செவ்வாய், 3 ஆகஸ்ட், 2021

“மோடிக்கு எதிராக மம்தா..!” - கிஷோரின் கில்லாடி அரசியல் எடுபடுமா?

“பா.ஜ.க ஒன்றும் வீழ்த்த முடியாத கட்சியல்ல. சரியான திட்டமிடுதலும், ஒருங்கிணைப்பும் இருந்தால் பா.ஜ.க-வை வீழத்தி விடலாம்” என்கிற கூற்றை எதிர்கட்சிகளிடம் முன்வைத்துள்ளார் தேர்தல் வியூக நிபுணரான பிரசாந்த் கிஷோர். கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக பா.ஜ.க-வுக்கு எதிராக உள்ள கட்சிகளின் தலைவர்களை அடுத்துதடுத்து சந்தித்து, எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சியில் கிஷோர் இறங்கியிருப்பது மத்தியில் ஆளுங்கட்சியாக பா.ஜ.க-வுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராகுல் காந்தியுடன் பிரசாந்த் கிஷோர் ஆலோசனை!

2021-ம் ஆண்டு மே மாதம் ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் வெளியானது. இதில் பிரசாந்த் கிஷோரின் ஐ-பேக் நிறுவனம் பணியாற்றிய தி.மு.க மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிகள் அந்தந்த மாநிலங்களில் ஆட்சியைப் பிடித்தது. இந்த வெற்றிக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த கிஷோர், “அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆலோசனை கூறும் பணியை இனி செய்யப் போவதில்லை” என்று அறிவித்தார். ஆனால் அடுத்த சில நாட்களிலேயே தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாரை இரண்டு முறை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். சரத்பவாரை வைத்து மூன்றாவது அணியைக் கட்டமைக்க கிஷோர் முயல்வதாக செய்திகள் வெளியானது.

ஆனால், அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரான ராகுல் காந்தியையும் கிஷோர் சந்தித்தார். அதேபோல் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை சந்தித்து பா.ஜ.க-வுக்கு எதிராக பிற கட்சிகளுடன் அணி சேருவதன் அவசியத்தை உணர்த்தினார். இதன்பிறகு வட இந்தியாவில் மேலும் சில கட்சிகளின் தலைவர்களை அடுத்தடுத்து சந்தித்தார் கிஷோர். இந்தச் சந்திப்புகளின் நோக்கமே “வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க-வை வீழ்த்த எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரள வேண்டும்” என்பதாக இருந்தது. குறிப்பாக காங்கிரஸ் கட்சி தனித்து நின்று மட்டுமே பா.ஜ.க-வை வீழ்த்த முடியாது என்பதால் எதிர்க்கட்சிகளை ஒன்றிணைத்து பா.ஜ.க-வுக்கு எதிரான வாக்குகளை ஒரே அணிக்குள் கொண்டுவரும் திட்டத்தை இப்போது கிஷோர் கையில் எடுத்துள்ளார் என்கிறார்கள் கிஷோருடன் ஏற்கனவே பணிபுரிந்தவர்கள்.

மம்தா - சோனியா சந்திப்பு

இந்தியாவில் மோடி என்கிற வலுவான பிம்பத்திற்கு எதிராக எதிர்க்கட்சிகள் வலுவான ஒரு தலைவரை முன்மொழிய வேண்டும் என்று நினைக்கிறார் பிரசாந்த் கிஷோர். அவரின் சாய்ஸாக இருப்பதே மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியாம். மேற்கு வங்கத்தில் மோடி மற்றும் அமித்ஷாவுக்கு எதிராக மம்தா காட்டிய அதிரடி நாடு முழுவதும் அவருக்கு என்று தனி அடையாளத்தை பெற்றுத்தந்தது. தீதி (DIDI) என்கிற அந்த அடையாளம் இந்தியாவில் உள்ள அனைத்து மக்களிடத்தும் பாஸிடிவாகப் பரவியது. எனவே மோடிக்கு எதிராக அணி சேரும் எதிர்க்கட்சிகள் சாய்ஸாக மம்தா இருப்பது பலமாக இருக்கும் என்பதே பிரசாந்த் கிஷோரின் திட்டம். இந்தத் திட்டத்தை ஏற்கனவே ராகுல் காந்தியிடம் சொல்லியிருக்கிறார் பி.கே.

இதன்பிறகு மம்தாவிடமும் இதுகுறித்து பேசியிருக்கிறார். சரத் பவாருக்கு நீண்ட நாட்களாக பிரதமர் பதவி மீது ஒரு கண் இருந்தாலும், இப்போதைய நிலையில் அவரை முன்னிறுத்துவது பா.ஜ.க-வுக்குத்தான் சாதகமாக அமைந்துவிடும் என்று கிஷோர் தரப்பில் சொல்லப்பட்டுள்ளது. இதன்பிறகு ராகுலிடமிருந்தும் மம்தாவிற்கு பாசிட்டிவான பதில் வந்தபிறகே, மம்தாவை டெல்லிக்கு அழைத்து சோனியாவுடன் சந்திக்க வைத்திருக்கிறார் பிரசாந்த் கிஷோர். எலியும், பூனையுமாக இருந்த காங்கிரஸ் கட்சியையும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியையும் ஒரே அணிக்குள் கொண்டுவருவது சாத்தியமில்லாத விஷயமாக இருந்தது. அதை இப்போது சாத்தியப்படுத்த ஆரம்பித்துள்ளார் கிஷோர்.

மம்தா பானர்ஜி, மோடி

மற்றொருபுறம் பா.ஜ.க-வின் பலம் பலவீனம் உள்ளிட்டவற்றையும் பிரசாந்த் கிஷோர் ஆராய்ந்து வருகிறார். கடந்த 2019-ம் ஆண்டு பா.ஜ.க வென்ற வாக்கு சதவீதம் 38%. அதே நேரம் எதிர்கட்சிகளுக்கும் பா.ஜ.கவுக்கும் இருந்த வாக்கு சதவீத வித்தியாசமே மூன்று சதவீதம் என்பதையும் கிஷோர் எதிர்கட்சிகளிடம் சுட்டிக்காட்டியிருக்கிறார். வடக்கு மற்றும் கிழக்கு மாநிலங்களில் மட்டுமே பா.ஜ.க பெரும் வெற்றியைப் பெற்றுள்ளது. அதே நேரம் தெற்கு மற்றும் மேற்கு பகுதிகளில் அந்தக் கட்சியால் பெரிதாக வாக்குகுளைப் பெற முடியவில்லை. அம் மாநிலங்களை குறி வைத்து வேலை செய்வதோடு, வட மாநிலங்களில் எந்தெந்தத் தொகுதிகளில் பா.ஜ.கவுக்கு செல்வாக்கு இல்லை என்கிற விவரங்களையும் கிஷோர் டீம் ரெடி செய்துள்ளது.

Also Read: நாடாளுமன்ற தேர்தலில் மோடிக்கு எதிராக மம்தா?! காங்கிரஸ், கம்யூனிஸ்ட் ஆதரிக்குமா?

அதேபோல் அடுத்த ஆண்டு உத்தரபிரேதசத்தில் தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலிலும் பா.ஜ.க-வுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒன்றிணைய வைக்கும் திட்டத்தையும் கையில் எடுத்துள்ளார் கிஷோர். அவரின் இந்தத் தொடர் முயற்சியினாலே ஆகஸ்ட் 2-ம் தேதி அன்று 17 எதிர்க்கட்சி தலைவர்களுடன் ராகுல் காந்தி கலந்துரையாடல் நடத்த முடிந்தது. குறிப்பாக இந்தக் கூட்டத்தில் திரிணாமுல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், தி.மு.க, ராஷ்ட்ரிய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் பங்கேற்றுள்ளது. அதாவது பா.ஜ.க-வுக்கு எதிராக உள்ள கட்சிகளை இப்போது ஒன்றிணைக்கும் பிராசாந்தின் திட்டத்தில் இதுவும் ஒன்று என்கிறார்கள்.

ராகுலுடன் எதிர்கட்சி தலைவர்கள்

“கிஷோரின் வியூகம் அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் கைகொடுத்தால் பா.ஜ.க-வுக்கு அது கடும் நெருக்கடியை ஏற்படுத்தும். ஏற்கெனவே பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக தேர்தல் பணியாற்ற உள்ளார் பிரசாந்த் கிஷோர். அத்துடன் காங்கிரஸ் கட்சிக்கு அகில இந்திய அளவில் சில வியூகங்களையும் கிஷோர் வடிவமைக்க இருக்கிறார். அப்படி நடந்தால் பா.ஜ.க உஷாராக வேண்டிய நேரம்” என்று பா.ஜ,க தரப்பினரே கூறுகிறார்கள்.

கிஷோரின் இந்தத் திட்டத்தை வழிமொழியும் விதமாகவே நேற்று காலை 17 கட்சிகளின் தலைவர்களுடன் நடத்திய கூட்டத்தில் பேசிய ராகுல், “நாம் அனைவரும் ஒருங்கிணைந்து வலிமையான இயக்கமாக மாறவேண்டும். நமது குரல் சக்தி வாய்ந்த குரலாக இருக்க வேண்டும்” என்று குறிப்பிட்டார்.

நாடாளுமன்றத் தேர்தலுக்கான நேரம் நெருங்கிக் கொண்டே இருப்பதால், இதுபோல பல காய் நகர்த்தல்களைக் காணலாம்!



source https://www.vikatan.com/government-and-politics/politics/mamata-against-modi-will-kishors-politics-work

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக