Ad

வெள்ளி, 13 ஆகஸ்ட், 2021

``இனி குழாய் மூலம் சுத்தமான குடிநீர்!" - நாட்டிலேயே முதல்முறையாக ஒடிசா சாதித்தது எப்படி?

1990-கள் வரையிலான வாழ்க்கைச் சூழலில் வளர்ந்தவர்களுக்கு நினைவிருக்கும். விடுமுறை நாள்களில் வேர்க்க, விறுவிறுக்க விளையாடி முடித்துவிட்டு, கண்ணில் படும் தண்ணீர் குழாயிலோ அடிபம்புகளிலோ, தண்ணீரைக் குடித்து, ஆசுவாசப்படுத்திக் கொண்டு, சில நேரம் நண்பர்களோடு பேசிவிட்டு வீட்டுக்குச் செல்வோம். அப்போதெல்லாம், குழாய் தண்ணீரைக் குடித்தால் உடல்நலத்துக்குக் கேடு, சுகாதாரமற்றது என்ற சூழல் இருக்கவில்லை.

நீர் மாசுபாடு (Representational Image)

அந்த நிலை அப்படியே 21-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் மாறத் தொடங்கியது. எங்கு வேண்டுமானாலும் அப்படி கண்ணில் படுகிற குழாய்களில் தண்ணீர் குடிப்பது ஆரோக்கியமானதல்ல என்ற மனநிலை நம்மிடையே உருவாகத் தொடங்கியது. காலப்போக்கில், குழாய்களில் நேரடியாகத் தண்ணீர் குடிக்கும் பழக்கமே அற்றுப்போய்விட்டது. நீர் மாசுபாடு குழாய் நீரின் தரத்தையே குறைத்துவிட்டது. இன்றைய சூழலில் குழாய் நீரைக் குடிக்கும் அளவுக்கு நமக்குக் கிடைக்கும் நீர் தரமானதாக இருக்கும் என்பதே கனவாகிப்போனது.

பொதுவாக, இந்தியாவில் குழாய் நீரைக் குடிப்பது பாதுகாப்பானது இல்லை என்ற நிலை உருவாகிப் பல ஆண்டுகள் கடந்துவிட்டன. மும்பை, டெல்லி, சென்னை போன்ற பெருநகரங்களில் மாநகராட்சி குழாய் வழியாகக் கிடைக்கும் நீர், சுத்திகரிப்பு மையங்களில் சுத்திகரிக்கப்பட்ட பின்னரே விநியோகிக்கப்படுகின்றன என்றாலும், அது பொதுமக்கள் சமையலுக்கு, குடிப்பதற்கு என்று தங்களுடைய அன்றாடப் பயன்பாட்டில் ஆரோக்கியமாகப் பயன்படுத்தும் சூழல் இல்லை. பழைய சேதமடைந்த குழாய்கள், சுகாதாரமற்ற விநியோகக் கட்டமைப்புகள் என்று நீர் நம் குழாயை வந்தடைவதற்குள் பல மாசுபாடுகளை எதிர்கொள்கிறது. அதன்பிறகு நமக்கு கிடைக்கும் நீர் குடிக்கும் அளவுக்குத் தரமாக இருப்பதில்லை. ஆகவே, சுத்தமான குடிநீர் ஆதாரமாக அதைப் பார்க்க முடியாது.

குழாய் குடிநீர் (Representational Image)

ஒவ்வோர் ஆண்டும், இந்தியாவில் 3.77 கோடி மக்கள், பாக்டீரியா, வைரஸ் போன்றவற்றால் பரவும் பல வகை நீர்சார் நோய்களால் பாதிக்கப்படுகிறார்கள். இந்தியாவில் இந்த நோய்களுக்குச் சிகிச்சையளிக்கும் அளவுக்கு சுகாதாரத்துறை முன்னேறி இருந்தாலும்கூட, அந்த வசதிகள் நாட்டின் அனைத்து மூலைக்கும் சென்றடைவதில்லை. பொது விநியோகக் குழாய் நீரில், ஆர்சனிக், கேட்மியம், துத்தநாகம், பாதரசம் போன்ற பல ஆபத்தான உலோகங்கள் காணப்படுகின்றன. இவை கலந்திருக்கும் நீரைக் குடிக்கும் மக்களிடையே நரம்பு மண்டலப் பிரச்னைகள், சிறுநீரகக் கோளாறுகளை உண்டாக்குகின்றன. மேற்கு வங்கம், பீகார், உத்தரப் பிரதேசம், ஜார்க்கண்ட், சத்தீஸ்கர் போன்ற பல மாநிலங்களில், குழாய் நீரில் கலந்திருக்க வேண்டிய ஆர்சனிக் அளவு, உலக சுகாதார நிறுவனம் விதித்துள்ள அளவைவிட (0.01mg/litre) பல மடங்கு அதிகமாக இருப்பதாகப் பலகட்ட ஆராய்ச்சி முடிவுகள் கூறுகின்றன. இவைபோக, தற்போது மைக்ரோ பிளாஸ்டிக் மாசுபாடும் நீரில் அதிகரித்து வருகிறது.

இந்தியாவில் குழாய் நீரின் தரம் இப்படியிருக்கும் நிலையில், தற்போது ஒடிசா மாநிலம் புதிய சாதனையை நோக்கிய பயணத்தைத் தொடங்கியுள்ளது. ஒடிசாவிலுள்ள பூரி நகரத்தில் இந்தக் கனவு நனவாகிக்கொண்டிருக்கிறது. இந்தியாவிலேயே 24 மணிநேரமும் நேரடியாக மாநகராட்சி குழாயிலிருந்தே குடிநீர் குடித்துக்கொள்வதற்கான வசதிகளைத் தற்போது அம்மாநில அரசு கொண்டுவந்துள்ளது. அமெரிக்காவின் நோய்த் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு (Centre for Disease Control and Prevention) அமைப்பின்படி, உலக அளவில் கனடா, அமெரிக்கா, கிரீன்லாந்து, ஐஸ்லாந்து, ஸ்பெயின், ஃபின்லாந்து, இத்தாலி, சவுதி அரேபியா, ஜப்பான், போலந்து, ஆஸ்திரேலியா, சிலி ஆகிய நாடுகளில்தான் குழாய் நீரைக் குடிப்பது பாதுகாப்பானது. மேலும், உக்ரைன், அர்ஜென்டினா, தென்னாப்பிரிக்கா, இந்தியா, சீனா, இந்தோனேசியா, மொராக்கோ, துருக்கி ஆகிய நாடுகளில் குழாய் நீரைக் குடிப்பது ஆரோக்கியமற்றது என்றும் அந்த அமைப்பு அறிவித்துள்ளது.

பூரி நகரத்தில் தொடங்கி வைக்கப்பட்ட சுஜால் திட்டம்

குழாய் நீரை நேரடியாகக் குடிப்பதில் ஆரோக்கியமற்றதாக அறிவிக்கப்பட்டிருக்கும் நாடுகளில் இந்தியாவும் இருக்கும் நிலையில், இங்குள்ள பூரி நகரத்தில் நேரடியாகக் குழாய் நீரைக் குடிக்கும் நிலையை அம்மாநில அரசு உருவாக்கியுள்ளது.

ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்னாயக் சமீபத்தில் சுஜால் திட்டத்தைத் தொடங்கி வைத்தார். அந்தத் திட்டத்தின்படி, பூரி நகரத்தில் இனி மக்கள், சமையல், குடிநீர் என்று அனைத்து பயன்பாட்டுக்கும் குழாய் நீரை நேரடியாகப் பயன்படுத்தலாம் என்று ஒடிசா மாநில அரசு அறிவித்தது. எந்தவித வடிகட்டுதல் முறையும் இன்றி நேரடியாக அரசாங்கக் குழாயிலிருந்து வரும் நீரைப் பயன்படுத்தும் நிலையை பூரி நகரம் அடைந்துள்ளது. அதுகுறித்து முதலமைச்சர் அலுவலகத்திலிருந்து வெளியிடப்பட்ட அறிக்கையில், ``லண்டன், நியூயார்க் போன்ற சர்வதேச நகரங்களின் பட்டியலில் பூரி நகரமும் தற்போது தரமான குடிநீரை மாநகராட்சி குழாயிலேயே விநியோகிக்கும். இனி மக்களுக்கு 24 மணிநேரமும் தரமான தண்ணீர் இதன்மூலம் கிடைக்கும்" என்று குறிப்பிட்டுள்ளது.

இந்தத் திட்டத்தைத் தொடங்கிவைத்து, பத்திரிகையாளர்களிடம் பேசிய முதல்வர் நவீன் பட்னாயக், ``பூரி நகரத்தின் வரலாற்றில் புதிய அத்தியாயம் தொடங்கியுள்ளது. இது இந்த ஒரு நகரத்துக்கு மட்டுமானதல்ல. மொத்த மாநிலத்துக்கும் இது விரைவில் கொண்டுசெல்லப்படும். சுஜால் திட்டத்தின் கீழ், இனி ஒவ்வொரு குடும்பத்துக்கும் சுகாதாரமான, தரமான நீரைக் கொண்டுசேர்க்க முடியும்" என்று கூறினார்.

ஒடிசா

மேற்கொண்டு பேசியவர், ``ஒடிசா மாநில நகர்ப்புற வளர்ச்சித் துறை கடந்த ஒன்பது மாதங்களில் 2.5 லட்சம் மக்களுக்கு சுஜால் திட்டத்தின்கீழ் இந்த வசதி கிடைக்க ஏற்பாடு செய்துள்ளனர். இதன்மூலம், ஒவ்வோர் ஆண்டும் பூரி நகரத்துக்கு வருகை தரும் இரண்டு கோடி சுற்றுலாப் பயணிகளும் பயனடைவார்கள். அவர்கள் இனி, கையில் தண்ணீர் பாட்டில்களைச் சுமக்க வேண்டியதில்லை. தரமான குடிநீரை எங்கு வேண்டுமானாலும் எந்தக் குழாயில் வேண்டுமானாலும் குடிக்கலாம்" என்றும் கூறியுள்ளார்.

இதுபோக, 400 இடங்களில் நீரூற்றுகள் அமைக்கப்படும். இதன்மூலம் மக்கள் பாட்டில்களைப் பயன்படுத்துவது குறையும் என்பதால், பிளாஸ்டிக் கழிவுகள் சேரும் அளவும் இதன்மூலம் குறையும் என்று மாநில அரசுத் தரப்பிலிருந்து தெரிவிக்கப் பட்டுள்ளது. ஆரோக்கியம், வாழ்க்கைத் தரம், பொருளாதாரம் என்று அனைத்து விதங்களிலும், மக்களுக்கு தரமான குடிநீரை இந்தவகையில் இலவசமாக வழங்குவது வளர்ச்சிக்கு வித்திடும் என்று குறிப்பிட்ட முதல்வர் பட்னாயக், நீர் இவ்வளவு எளிதாகக் கிடைப்பதால், அதன் முக்கியத்துவத்தை மறந்து வீணடிப்பது, மாசுபடுத்துவது ஆகியவற்றில் ஈடுபட்டுவிடக் கூடாது என்றும் கேட்டுக்கொண்டார்.

Tap water (Representational Image)

கடந்த ஐந்து ஆண்டுகளில், குடிநீர் திட்டங்களுக்காக ஒடிசா மாநிலம் ஒதுக்கும் நிதி இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. முன்னர், நீருக்காக ஒதுக்கப்படும் நிதி சராசரியாக 200 கோடியாக இருந்தது. ஆனால், தற்போது 4,000 கோடி ரூபாய் நிதி நீர்சார்ந்த திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

சுஜால் திட்டம் குறித்துப் பேசிய ஒடிசா மாநில நகர்ப்புற வளர்ச்சித் துறையின் தலைவர், துர்காசங்கர் மிஷ்ரா, ``நாட்டிலேயே குழாய் குடிநீர் திட்டத்தை முதல்முறையாக பூரி நகரத்தில் முன்னெடுத்துள்ளது பெருமையளிக்கிறது" என்று குறிப்பிட்டுள்ளார். மேற்கொண்டு பேசியவர், ``தொழில்நுட்பப் பயன்பாடு, நீர்வளப் பயன்பாடு, ஆற்றல் பாதுகாப்பு, நீர்சார் நோய்கள் என்று அனைத்து சவால்களையும் இந்தத் திட்டத்தின்கீழ் எதிர்கொண்டு, மிகப்பெரிய மாற்றத்தைக் கொண்டு வர முடியும்" என்றும் தெரிவித்துள்ளார்.

பூரி மட்டுமன்றி, மேலும் 15 நகரங்களில் வாழும் 15 லட்சம் மக்கள், 1,300 கோடி ரூபாய் செலவில் அமையப்போகும் இந்தத் திட்டத்தின்கீழ் பயனடைவதற்கான பணிகள் நடந்துகொண்டிருப்பதாகவும் ஒடிசா மாநில நகர்ப்புற வளர்ச்சித் துறை தெரிவித்துள்ளது.



source https://www.vikatan.com/government-and-politics/environment/now-puri-city-provides-safe-drinking-water-through-tap-how-odisha-govt-achieved-this

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக