Ad

வியாழன், 26 ஆகஸ்ட், 2021

காபூல்: முன்னரே எச்சரித்த அமெரிக்கா; தொடர் குண்டுவெடிப்பு; சிதறிய உடல்கள்!’ -பொறுப்பேற்ற ஐஎஸ்ஐஎஸ்

ஆப்கானிஸ்தானை தாலிபன்கள் கைபற்றியதில் இருந்து அங்கு அசாதாரணமான சூழலே நிலவுகிறது. ஆப்கனை விட்டு வெளியேற மக்கள் காபூல் விமான நிலையத்தில் குவிந்து வருகிறார்கள். கிடைத்த விமானத்தில் கிளம்பி, ஆப்கனை விட்டு வெளியேறினால் போதும் என மக்கள் குவிந்து வருகிறார்கள். இந்தநிலையில் நேற்று காபூல் விமான நிலையத்தில் திடீரென அடுத்தடுத்து இரண்டு குண்டுகள் வெடித்தது.

காபூல்

அதிபயங்கர சத்ததுடன் வெடித்த இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் தற்போது வரை 73 பேர் பலியானதாக தகவல் வெளியாகி உள்ளது. இதில் அமெரிக்க வீரர்கள், மருத்துவர்கள் அடங்கிய குழுவைச் சேர்ந்த 13 பேரும் அடங்குவர். தாலிபன் அமைப்பைச் சேர்ந்த சிலரும் இந்த குண்டுவெடிப்பில் பலியாகியுள்ளனர். அப்பாவி மக்கள் சுமார் 60 பேர் வரை கொல்லப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கிறது.

காபூல் விமானநிலையத்தில் குண்டுவெடிப்பு நடந்துள்ளதை அமெரிக்காவின் ராணுவ தளமான பென்டகன் உறுதி செய்துள்ளது. எனினும் மக்களை வெளியேற்றும் தங்களது பணி தொடரும் என அமெரிக்கா தெரிவித்துள்ளது. இந்த கோர சம்பவத்துக்கு ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்றிருக்கிறது. ஐஎஸ்ஐஎஸ் ஆப்கன், பாகிஸ்தான் பிரிவு இதற்கு முன்னதாக ஆப்கானிஸ்தானில் பல்வேறு கோர தாக்குதல்களை நடத்தியுள்ளது. மசூதிகள், புனிதத் தலங்கள், பொது இடங்கள், மருத்துவமனைகளிலும் கூட தாக்குதல்களை நடத்தியுள்ளது.

காபூல் குண்டுவெடிப்பு

குண்டுவெடிப்பு சம்பவம் நடைபெறுவதற்கு முன்னதாகவே காபூல் விமானநிலையத்துக்கு மிகப்பெரிய பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்கா எச்சரித்திருந்தது. இந்த அச்சுறுத்தல் காரணமாக அப்பகுதியில் இருந்து மக்கள் வெளியேற வேண்டும் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டது. அமெரிக்க எச்சரித்தது போலவே தற்போது தாக்குதல் நடைபெற்றுள்ளது.

காபூல் விமான நிலையத்தில் இருந்து வெளியாகும் புகைப்படங்கள் அதிர்ச்சி அளிப்பதாக இருக்கிறது. பல மனித உடல்கள் விமான நிலையத்துக்கு அருகே இருக்கும் ஓடையில் சிதறி கிடக்கிறது. இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் 143 பேர் வரை காயமடைந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள். தொடர்ந்து பலி எண்ணிக்கை உயர்ந்து வருவது ஒருபுறம் கவலை அளிக்கிறது. அதே நேரம், விமான நிலைய இரட்டை குண்டுவெடிப்பு தாக்குதலைத் தொடர்ந்து ஆப்கானிஸ்தானின் இன்ன பிற பகுதிகளிலும் குண்டு வெடிப்பு சம்பவங்கள் நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது வரை 5 குண்டு வெடிப்பு சம்பவங்கள் நடைபெற்றுள்ளதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

காபூல் குண்டுவெடிப்பு

இந்த கோர சம்பவத்துக்கு இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

இந்தியா தனது கண்டனத்தில், ``காபூலில் நடந்த குண்டுவெடிப்பை இந்தியா வன்மையாக கண்டிக்கிறது. இந்த பயங்கரவாத தாக்குதலில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு எங்கள் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம். எங்கள் எண்ணங்களும் பிரார்த்தனைகளும் காயமடைந்தவர்களுடன் இருக்கும். இன்றைய தாக்குதல்கள் பயங்கரவாதத்திற்கு எதிராகவும் பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் வழங்கும் அனைவருக்கும் எதிராகவும் உலக நாடுகள் ஒற்றுமையாக நிற்க வேண்டியதன் அவசியத்தை வலுப்படுத்துகின்றன” எனக் குறிப்பிட்டுள்ளது.

Also Read: ஆப்கானிஸ்தான்: தாலிபன்களை எதிர்த்து நிற்கும் `பஞ்ச்ஷிர்' மக்கள்; யார் இவர்கள், பின்னணி என்ன?



source https://www.vikatan.com/government-and-politics/international/kabul-airport-bomb-blast-killed-many-afghanistan-in-high-alert

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக