Ad

வியாழன், 26 ஆகஸ்ட், 2021

ஆனந்த விகடன்: அச்சிலிருந்து ஆன்லைன், ஓடிடி வரை... தலைமுறைகள் தாண்டி நிற்கும் தமிழர்களின் அடையாளம்!

1926, பிப்ரவரி 1 அன்று பூதலூர் வைத்தியநாத ஐயரால் தொடங்கப்பட்டது ஆனந்த விகடன். 1928ல் அவரிடமிருந்து 'ஆனந்த விகடன்' இதழை வாங்கி எஸ்.எஸ்.வாசன் நடத்தத் தொடங்கினார். நூற்றாண்டை நெருங்கும் ஆனந்த விகடன் தமிழர்களின் நம்பர் 1 பத்திரிகையாகத் திகழ்கிறது. கலை, இலக்கியம், அரசியல், பொழுதுபோக்கு, அறிவியல், மருத்துவம் என பலதுறைகளைச் சேர்ந்த செய்திகளையும் வெளியிட்டு தமிழர்களின் ரசனையை மேம்படுத்திவருகிறது ஆனந்த விகடன்.

செய்திகளில் தரம், நடுநிலைமை, அழகியல் மொழிநடை, காலத்துக்கு ஏற்ற மாற்றங்களைப் பிரதிபலித்தல் ஆகியவை ஆனந்த விகடனின் தனித்தன்மைகள். 3டி தொழில்நுட்பத்தை முதன்முதலாகப் பத்திரிகையில் கொண்டுவந்தது ஆனந்த விகடனே.
ஆனந்த விகடன்

ஆனந்த விகடன் அட்டைப்படத்தில் வெளியான ஒரு நகைச்சுவைத் துணுக்கு சட்டசபை உறுப்பினர்களின் மாண்பைக் குலைப்பதாக எம்.ஜி.ஆர் அரசு, 1987ல் ஆனந்த விகடன் ஆசிரியர் எஸ்.பாலசுப்ரமணியனைக் கைது செய்து சிறையில் அடைத்தது. 'இது கருத்துச்சுதந்திரத்துக்கு எதிரான முயற்சி' என்று தமிழகமெங்கும் கண்டனக்குரல்கள் எழுந்தன. நீதிமன்றமும் பாலசுப்ரமணியனை விடுவித்ததுடன் தமிழக அரசுக்கு அபராதமும் விதித்தது. இது ஆனந்த விகடன் வரலாற்றிலும் இந்திய இதழியல் வரலாற்றிலும் ஒரு மைல்கல்.

காலத்துக்கு ஏற்றவாறு தன்னைப் புதுப்பித்துக்கொள்வதே ஆனந்த விகடனின் வெற்றிக்கு முக்கிய காரணம். 1983 ஜனவரி 12ல் 'ஜூனியர் விகடன்' இதழ் ஆரம்பிக்கப்பட்டது. இந்தியாவில் புலனாய்வு இதழியலை அறிமுகம் செய்த முன்னோடி இந்த இதழ். உள்ளடங்கிய கிராமங்களில் நடக்கும் நிகழ்வுகளைக்கூட வெளிக்கொண்டு வந்த பெருமையும் ஜூனியர் விகடனுக்கு உண்டு.

அரசியல் புலனாய்வு இதழாக வாரமிருமுறை வெளியாகும் ஜூனியர் விகடன் சமூக அவலங்களையும் அரசியல் முறைகேடுகளையும் தோலுரித்துக்காட்டுகிறது. 1998 அக்டோபரில் தொடங்கப்பட்ட 'அவள் விகடன்' இதழ் பெண்களின் நலனில் அக்கறை செலுத்துகிறது. அதற்குப்பிறகு பசுமை விகடன், மோட்டார் விகடன், நாணயம் விகடன், சக்தி விகடன் என்று ஏராளமான இதழ்களைத் தொடங்கி கிளை விரித்தது விகடன் குழுமம். 2008ல் அளவில் மாற்றமடைந்து சிறிய அளவு ஆனந்த விகடன், பெரியளவு ஆனந்த விகடனாக மாறியது.

ஆனந்த விகடன்

அச்சு இதழியலைத் தாண்டி தொழில்நுட்பத்தைத் தனதாக்கி 1996ல் ஆனந்த விகடனின் இணையதளம் தொடங்கப்பட்டது. லட்சக்கணக்கான வாசகர்கள் தினந்தோறும் படிக்கும் தளமாக விகடன் இணையதளம் விளங்குகிறது. சாட்டிலைட் சேனலுக்கென ‘மெகா சீரியல்’ தயாரிப்பில் களமிறங்கிய விகடன், அங்கும் தனிமுத்திரை பதித்தது. இன்றும் டிரெண்டிங் சீரியல்கள் பட்டியலில் விகடன் டெலிவிஸ்டாஸின் சீரியல்களுக்கு முதன்மையான இடமுண்டு.

விகடனின் சமூகப் பங்களிப்பின் அடுத்த படியாக, மாபெரும் விருதுகளை வழங்கி கௌரவிக்கும் பாரம்பர்யம் இன்றுவரை தொடர்கிறது.

ஆனந்த விகடன் விருதுகள் - திறமைக்கு மரியாதை

திறமைக்கு மரியாதை அளிக்கும் வகையில் ஒவ்வொரு வருடமும் தமிழ் சினிமாவை அலசி ஆராய்ந்து அளிக்கப்படும் 'ஆனந்த விகடன் சினிமா விருதுகள்', தன்னலம் விடுத்து மக்களுக்கான அறச் செயல்பாடுகளில் ஈடுபடும் நிஜ நாயகர்களின் மீது வெளிச்சம் பாய்ச்சி, இலக்கியத்துக்கும் சமூகப்பணிக்கும் ஊடகத்துக்கும் விருதுகள் வழங்கும் 'ஆனந்த விகடன் நம்பிக்கை விருதுகள்', தமிழகத்தின் தலைசிறந்த தொழில்முனைவோர்களைக் கௌரவிக்கும் 'நாணயம் விகடன் பிசினஸ் ஸ்டார் அவார்ட்ஸ்', சாதனைப் பெண்களின் சங்கமமாக இருக்கும் 'அவள் விருதுகள்', சிறந்த கார், பைக், ஸ்கூட்டர், கேட்ஜெட்ஸ் ஆகியவற்றை அங்கீகரிக்கும் 'மோட்டார் விகடன் விருதுகள்', உணவுத்துறை நிபுணர்களையும், உணவகங்களையும் கௌரவிக்கும் 'அவள் கிச்சன் யம்மி விருதுகள்' என அனைத்து துறை சாதனையாளர்களையும் தொடர்ந்து பெருமைப்படுத்தி வருகிறது விகடன்!

2011 முதல் சமூகவலைத்தளங்களில் ஆனந்த விகடனுக்கு என்று பல பிரத்யேகப் பக்கங்கள் உண்டு. அதேபோல் காணொலிக்காட்சிகளைத் தினந்தோறும் தான் நடத்தும் பல யூடியூப் சேனல்களில் வெளியிட்டுவருகிறது விகடன் குழுமம்.

அச்சு, இணையம், வீடியோக்கள், தொலைக்காட்சி இப்போது யூடியூப் தளங்களில் நெடுந்தொடர், ஓடிடி தளங்களில் வெப்சீரிஸ் என்று பல ஊடகங்களில் வேர்களைப் பரப்பி விழுதுகளை ஊன்றிவருகிறது விகடன் குழுமம்.

விகடன் குறித்து உங்களுக்கு எவ்வளவு தெரியும்? சின்ன quiz...

விகடன் நிறுவனர் தினம்: Quizல் கலந்து கொள்ள க்ளிக் செய்க... https://bit.ly/3DjBBxi



source https://www.vikatan.com/news/announcements/recapping-the-remarkable-journey-of-ananda-vikatan

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக