ஆப்கானிஸ்தானில் நடக்கும் சம்பவங்கள் இந்தியாவை வர்த்தக ரீதியாக அசைத்துப் பார்க்குமா, அல்லது வேறு சில வழிகளில் சர்வதேச பிரச்னைகளைக் கிளப்புமா என்பது குறித்து பல்வேறு கருத்துகள் தொடர்ந்து வெளிப்பட்ட வண்ணமிருக்கின்றன. ஆனால், இப்படியான பிரச்னைகளை எல்லாம் தாண்டி, ஆப்கன் சர்ச்சையால் சமூக வலைதளங்களிலும் புதுப்புது பூகம்பங்கள் கிளம்பிவருகின்றன.
பிரபலங்கள் தொடங்கி சாமானியர்கள் வரை பலரும் ஆப்கன் குறித்தும் தாலிபன்கள் குறித்தும் தங்களின் கருத்துகளை சமூக வலைதளங்களில் தெரிவித்து வருகின்றனர். வெவ்வேறு சித்தாந்தங்கள் மற்றும் கருத்துகள் கொண்ட நபர்கள் இடம்பெற்றிருக்கும் மாய உலகம் இந்த இன்டர்நெட் என்பதால் இது குறித்த வார்த்தைப் போருக்கும், அவதூறு பேச்சுக்கும், தனிப்பட்ட தாக்குதல்களுக்கும் பஞ்சமில்லை. ஆப்கானிஸ்தானை விட்டு அமெரிக்கா வெளியேறியதைக் கொண்டாடுபவர்கள்; தாலிபன்கள் இனி கொடுமைப்படுத்துவார்கள், முக்கியமாகப் பெண்கள் அதிகமாக பாதிக்கப்படுவர், சினிமா உள்ளிட்ட கலைகள் பாதிக்கப்படும் என்று அஞ்சுபவர்கள்; தாலிபன்களுக்கு ஆதரவான கருத்தைத் தெரிவிக்கும் சிலர் எனப் பல கோணங்களில் இந்தப் பிரச்னை கன்டென்ட் ஆக்கப்படுகிறது.
இப்படி ஆப்கன் பிரச்னைக் குறித்து ட்வீட் செய்து சர்ச்சையில் சிக்கியவர்கள் வரிசையில் தற்போது பாலிவுட் நடிகையான ஸ்வரா பாஸ்கரும் சேர்ந்திருக்கிறார். இவர் தனுஷ் நடித்த 'ராஞ்சனா', கங்கனா ரணாவத், மாதவன் நடித்த 'தனு வெட்ஸ் மனு' உள்ளிட்ட படங்களில் நடித்தவர். கடந்த இரண்டு நாள்களாக #ArrestSwaraBhasker என்ற ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது. எதற்காக இந்த அடிதடி?
கடந்த ஆகஸ்ட் 17-ம் தேதி ஸ்வரா பாஸ்கர் இந்த ட்வீட்டை பதிவிட்டவுடன் பெரும்பாலும் அவரைத் திட்டியும் தாக்கிப் பேசியும் விமர்சனங்கள் வரத் தொடங்கின. 'இந்துத்துவா' என்பதுடன் தீவிரவாதத்தை அவர் இணைத்துப் பேசியிருப்பதும், ஆப்கானிஸ்தானில் நடப்பதுதான் இந்தியாவிலும் நடக்கிறது என்று ஒப்புமைப்படுத்திப் பேசியிருப்பதும் பெரும் சர்ச்சையாகி வெடித்திருக்கிறது. அந்த ட்வீட் 18,000-க்கும் அதிகமான லைக்குகள் பெற்றிருந்தாலும், அதை 'Quote' செய்து ட்வீட் செய்திருக்கும் 6,000-திற்கும் அதிகமான பேரில் பலர் அவரை வசைபாடியிருக்கின்றனர். ஸ்வரா பாஸ்கர் இரண்டு நாடுகளையும் ஒப்பிட்டுப் பேசியிருப்பது பாரபட்சமான ஒரு சார்பு மனநிலை என்றும் கண்டனங்கள் குவிந்த வண்ணம் உள்ளன. பலரும் ஸ்வரா மன்னிப்பு கோரவேண்டும் என்று தெரிவித்து வருகின்றனர். ஒரு சிலர், ஸ்வராவின் ட்வீட் குறித்து காவல்துறைக்குக் கடிதம் எழுதியிருப்பதாக அந்தக் கடிதத்தையும் ட்விட்டரில் போஸ்ட் செய்திருக்கின்றனர். வழக்கம்போல, பலர் அவரின் கருத்தைக் கேள்வி கேட்காமல் தனிமனித தாக்குதலிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
இதற்கு முன்னர், தாலிபன்கள் காபூலில் நுழைந்தபோதும் ஸ்வரா பாஸ்கர் பதிவிட்ட ட்வீட் வைரலானது. ஆப்கானிஸ்தானில் சுவர் விளம்பரங்களில் இடம்பெற்றிருக்கும் மாடல்களின் படங்கள் அழிக்கப்படும் படத்தை ஷேர் செய்து "It begins again" என்று தன் கருத்தைப் பதிவிட்டிருந்தார். அதற்கு ஒரு தரப்பினர், ஆர்.எஸ்.எஸ், பா.ஜ.க போன்ற பெயர்களைச் சாதாரணமாகப் பதிவிட்டு விமர்சிக்கும் ஸ்வரா, தாலிபன்களின் பெயர்களையோ, மதத்தையோ குறிப்பிட்டு ஏன் விமர்சிக்கவில்லை என்று கேள்வி எழுப்பினர்.
அதே சமயம், ஸ்வராவுக்கு ஆதரவாகவும் பலர் கருத்துகளைப் பதிவு செய்துள்ளனர். "அவரின் தனிப்பட்ட கணக்கில் அவர் எப்படி வேண்டுமானாலும் பதிவு செய்யலாம். நீங்கள் ஸ்வராவுக்கு வாக்களித்து பிரதமர் ஆக்கவில்லை. முடிந்தால் நீங்கள் வாக்களித்த பிரதமரை தாலிபன்களின் போக்குக்குக் கண்டனம் தெரிவிக்கச் சொல்லுங்கள்" எனப் பலரும் காட்டமாகப் பதிலடி கொடுத்திருக்கின்றனர்.
ஸ்வரா பாஸ்கர் இப்படியான சர்ச்சைகளிலும் இக்கட்டிலும் சிக்கிக்கொள்வது இது முதன்முறையல்ல. இதற்கு முன்னர், அவர் தன் 'Veere di Wedding' படத்தில் புரோமோஷனின்போது பாகிஸ்தானைச் செயலிழந்துவரும் நாடு (Failed State) என்று விமர்சித்தது சர்ச்சையானது. இதே ஸ்வராதான் 2015-ம் ஆண்டில், தான் பயணம் செய்த நாடுகளிலேயே பாகிஸ்தானே சிறந்த நாடு என்றும் கூறியிருந்தார். ஒரு சில வருடங்களில் தன் கருத்தை அவர் மாற்றிப் பேசியது இருதரப்பிலும் விமர்சனங்களைக் கிளப்பியது.
அதேபோல், பாலிவுட்டின் முக்கிய இயக்குநரான சஞ்சய் லீலா பன்சாலியின் 'பத்மாவத்' படத்தையும் கடுமையாகத் தாக்கிப் பேசியிருந்தார். இயக்குநருக்கும், அதில் நடித்த தீபிகா படுகோனுக்கும் கடிதம் ஒன்றை எழுதியவர், 'பத்மாவத்' படம் தன்னை ஒரு பெண்ணாக உணரவிடாமல் வெறும் பிறப்புறுப்பாக மட்டுமே எண்ண வைத்துவிட்டது என அதன் பிற்போக்கான விஷயங்களைச் சாடியிருந்தார்.
Also Read: Modern Love 2: கிட்டார் கம்பி மேலெல்லாம் நிற்கவில்லை... ஆனாலும் வசீகரிக்கின்றன இந்தக் காதல் கதைகள்!
பாலிவுட்டின் மூத்த நடிகர் பரேஷ் ராவல், பிரபல எழுத்தாளரான அருந்ததி ராயைத் தனிப்பட்ட முறையில் தாக்கிப் பேசியபோதும் பரேஷைக் கண்டித்துப் பேசியிருந்தார் ஸ்வரா. அதேபோல், கத்துவா மற்றும் உன்னாவ் பாலியல் வன்கொடுமை வழக்கில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாகக் குரல்கொடுத்த ஒருசில பாலிவுட் பிரபலங்களில் ஸ்வரா பாஸ்கரும் ஒருவர்.
இப்படி மனதில் பட்டதை வெளிப்படையாகப் பேசிவிடும் நபராக அறியப்படும் அவருக்கும் கங்கனா ரணாவத்துக்கும்தான் அடிக்கடி ட்விட்டரில் வார்த்தைப் போர் நடக்கும். கொடுக்கும் பேட்டிகளிலும் ஒருவரையொருவர் தாக்கிப் பேசிக்கொள்வர்.
சுஷாந்த சிங் மரணத்துக்குப் பிறகு 'நெப்போட்டிசம்' குறித்துத் தொடர்ந்து பேசிவந்த கங்கனா, ஒரு பேட்டியில், "எந்தவித பின்புலமும் இன்று திரைத்துறைக்கு வந்த டாப்ஸி, ஸ்வரா பாஸ்கர் போன்றோர்தான் நெப்போட்டிசம் குறித்த என் கருத்துக்கு எதிராகப் பேசுவார்கள். ஏன் என்றால் நெப்போட்டிசத்தை வளர்க்கும் கரண் ஜோஹர் போன்றோரின் ஆதரவு அவர்களுக்குத் தேவையாக இருக்கிறது" என்று அவர்களின் பெயர்களைக் குறிப்பிட்டு நேரடியாகப் பேசிவிட, அது ட்விட்டரில் மூவருக்கும் இடையேயான வார்த்தைப் போராக வெடித்தது.
இந்துத்துவ தீவிரவாதம் என ஸ்வரா பாஸ்கர் பதிவிட்டது சர்ச்சையானதை அடுத்து அதற்கு மறைமுகமாகப் பதிலளிக்கும் விதமாக 2016-ம் ஆண்டு ஒருவர் பதிவிட்ட பழைய ட்வீட் ஒன்றை ரீட்வீட் செய்திருந்தார் ஸ்வரா. அந்த ட்வீட் சொல்வது இதுதான்...
"ஒரு கட்டுரையோ, கவிதையோ, படமோ, நாடகமோ, புத்தகமோ அசைத்துப் பார்க்கும் அளவுக்கு உங்களின் மத நம்பிக்கைகள் பலவீனமானவையாக இருப்பின், அதைவிட்டுவிட்டு வேறு புதிய நம்பிக்கைகளை வளர்த்துக்கொள்ளுங்கள்."
source https://cinema.vikatan.com/bollywood/swara-bhasker-lands-into-trouble-after-her-tweet-comparing-taliban-and-hindutva
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக