Ad

ஞாயிறு, 22 ஆகஸ்ட், 2021

தாலிபன்களின் கதை - 7 | பின்லேடனை கொன்ற அமெரிக்காவால் ஏன் முல்லா ஒமரை பிடிக்க முடியவில்லை?

தாலிபன் அரசை வீழ்த்த அமெரிக்காவுக்கு இரண்டு மாதங்களே போதுமானதாக இருந்தது. ஆனால், முல்லா முகமது ஒமரை அவர்களால் பிடிக்கவே முடியவில்லை. நான்கு முறை அமெரிக்கத் தாக்குதல்களிலிருந்து நூலிழையில் அவர் உயிர் தப்பினார். 'அதன்பின் அவர் மரணமடையும் வரை அமெரிக்க ராணுவ முகாம்களுக்கு அருகிலேயேதான் பதுங்கியிருந்தார்' என்கிறார்கள் தாலிபன்கள்.


2001 அக்டோபர் 7-ம் தேதி இரவு காந்தஹாரில் இருந்த ஒமரின் வீட்டை அமெரிக்கப் போர் விமானங்கள் குண்டு வீசி தாக்கின. அதற்கு சில நிமிடங்களுக்கு முன்புதான் ஒமர் வெளியில் கிளம்பிப் போயிருந்தார். குண்டுவீச்சில் மாளிகையின் முன்பகுதி சேதமடைய, ஒமரின் 10 வயது மகன் உயிரிழந்தார்.


அதே இரவில் காந்தஹாரின் இன்னொரு பகுதியில் மூன்று வாகனங்கள் ஒரு பெரிய வளாகத்தில் நுழைந்ததை அமெரிக்க விமானப் படையினர் பார்த்தனர். அதில் ஒமரின் காரும் இருந்தது. காரிலிருந்து பலரும் இறங்கி கட்டடத்துக்குள் நுழைந்தனர். அந்த வளாகத்தை ஒட்டுமொத்தமாகத் தகர்த்தால் ஒமர் இறந்துவிடுவார் என்று தயாரானார்கள். ஆனால், அந்த வளாகத்தில் மசூதி ஒன்றும் இருந்ததைப் பார்த்ததும் தயங்கினர். 'வெளியில் இருக்கும் வாகனங்களை ஏவுகணையால் தகர்த்தால் எல்லோரும் வாசலுக்கு வருவார்கள். அப்போது தாக்கலாம்' என்று கணக்குப் போட்டார்கள்.

உலகிலேயே போர் ஒன்றில் ஆளில்லாத டிரோன்கள் மூலம் ஏவுகணைத் தாக்குதல் நடந்தது அந்த நாளில்தான். டிரோன்கள் குறித்த சட்டங்கள் எதுவும் அப்போது இல்லை. என்றாலும், அமெரிக்கா சட்டவிரோதமாக டிரோன்களைப் போரில் பயன்படுத்தி வந்தது. அப்படி ஒரு டிரோன் மூலம் ஹெல்ஃபயர் ஏவுகணை வீசப்பட்டது. ஒரு வாகனம் எரிந்து நொறுங்க, உள்ளேயிருந்து வந்த கூட்டம் நிமிட நேரத்தில் எப்படியோ கலைந்துவிட்டது.

தாலிபன்

மூன்றாவது முறை, ஒமரின் நெருங்கிய தளபதி ஒருவரின் சாட்டிலைட் போனை வைத்து அவரைக் கண்காணித்தனர். ஒமரை அந்தத் தளபதி சந்திக்கப் போனபோது குண்டு வீசித் தாக்கினர். அதிலும் ஒமர் காயமின்றி தப்பித்தார்.


2001 நவம்பர் 28 அன்று நான்காவது தாக்குதல் நடந்தது. காந்தஹாரைச் சூழ்ந்திருந்த அமெரிக்கப் படைகளை தாலிபன்கள் ராக்கெட் லாஞ்சர்கள் மூலம் கடுமையாகத் தாக்கிக்கொண்டிருந்தனர். அந்த நேரத்தில் ஒமரின் கறுப்பு நிற செவர்லே கார், ஒரு டஜன் கார்கள் மற்றும் ட்ரக்குகள் சூழ நெடுஞ்சாலை ஒன்றில் விரைந்து போனது. அமெரிக்கப் போர் விமானங்கள் எல்லா வாகனங்களையும் தாக்கி அழித்தன. அதிசயமாக அதிலும் ஒமர் உயிர் தப்பினார்.


நவம்பர் இறுதியிலேயே தனக்கு நம்பகமான ஒரு உதவியாளரின் மோட்டார் சைக்கிளில் அமர்ந்து ஒமர் காந்தஹாரிலிருந்து வெளியேறியதை சில தாலிபன் வீரர்கள் பார்த்தனர். அதுதான் அவர் கடைசியாக பொதுவெளியில் நடமாடியது.
'ஒமர் ஓடி ஒளிந்துவிட்டார்' என்ற பிரசாரத்தை அமெரிக்கா ஆரம்பித்தது. தாலிபன் வெளியுறவு அமைச்சர் வக்கீல் அகமது முத்தா, ''அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்ஷும், பிரிட்டிஷ் பிரதமர் டோனி பிளேரும் ஆளுக்கு ஒரு துப்பாக்கி எடுத்துக்கொண்டு ஆப்கன் வரட்டும். அங்கு முல்லா ஒமர் வருவார். அப்போது யார் ஓடுகிறார்கள் என்று பார்ப்போம்'' என சவால் விட்டார்.


கிட்டத்தட்ட 12 ஆண்டுகள் முல்லா ஒமர் தலைமறைவாக இருந்தார். ஆப்கன் முழுக்க அமெரிக்க ராணுவம் தேடிப் பார்த்தும் அவர் பிடிபடவில்லை. அவரைப் பற்றித் தகவல் தருபவருக்கு ஒரு கோடி டாலர் பரிசு என அறிவித்தும் எந்தத் தகவலும் வரவில்லை. இடையில் சிலமுறை போனிலும் இ-மெயிலிலும் அவர் சில பேட்டிகள் கொடுத்திருக்கிறார். அவரது பெயரால் சில அறிக்கைகள், உத்தரவுகள் வெளியாகின. ஆனாலும், அவரின் மறைவிடம் தெரியவில்லை.

''ஆப்கன் தாலிபன் அரசு வீழ்ந்ததும் அவர் ரகசியமாக பாகிஸ்தான் தப்பிச் சென்றுவிட்டார். குவெட்டா நகரில் பாகிஸ்தான் உளவுத்துறை பாதுகாப்பில்தான் இருந்தார். கடைசியில் அவருக்கு உடல்நலமில்லாமல் போனபோது கராச்சியில் ஒரு மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை தந்தார்கள். சிகிச்சை பலனின்றி அவர் இறந்துவிட்டார்'' என அமெரிக்கா சொன்னது.


ஆனால், இதை தாலிபன்கள் மறுத்தனர். ''முல்லா ஒமர் ஆப்கனை விட்டு வெளியேறவே இல்லை'' என்றார்கள் அவர்கள்.
ஹாலந்தைச் சேர்ந்த பெட்டி டேம் என்ற பெண் பத்திரிகையாளர், ஆப்கனில் ஐந்து ஆண்டுகள் அலைந்து 'Searching for an Enemy' என்ற புத்தகத்தை எழுதினார். முல்லா ஒமருக்கு மிக நெருக்கமான பலரைச் சந்தித்து அவர் எழுதிய அந்தப் புத்தகம், அதிர்ச்சி தரும் பல உண்மைகளை அம்பலப்படுத்தியது. மரண நிமிடம் வரை முல்லா ஒமரைப் பாதுகாத்த ஒருவர், எல்லா உண்மைகளையும் பெட்டி டேமிடம் சொல்லியிருந்தார்.
அவர் பெயர் அப்துல் ஜப்பார் ஒமரி.

bette dam

தாலிபன்களின் ஆட்சியில் பக்லான் மாகாண கவர்னராக இருந்தவர் அப்துல் ஜப்பார் ஒமரி. ஆட்சி வீழ்ந்ததும் அவர், முல்லா ஒமரின் பாதுகாவலராக மாறினார். காந்தஹாருக்கு மிக அருகே இருக்கும் ஜாபுல் மாகாணத்தின் தலைநகர் க்யாலத். இங்கே கவர்னர் மாளிகைக்குக் கூப்பிடு தூரத்தில் இருக்கும் ஒரு வீட்டில்தான் முல்லா ஒமரை நான்கு ஆண்டுகள் தங்க வைத்திருந்தார் அப்துல் ஜப்பார்.


அது, ஜப்பாரின் முன்னாள் டிரைவர் வீடு. உயரமான காம்பவுண்ட் சுவர் கொண்ட அந்த வீட்டின் பின்பகுதியில் இருக்கும் அறை ஒன்றைத் தடுத்து, ஒரு ஆள் மட்டுமே இருக்க முடிகிற ரகசிய அறை ஏற்படுத்தினார்கள். சுவர் போலவே வண்ணத்தில் அதற்கு ஒரு சிறிய கதவு. அந்தக் கதவுக்கு வெளியே அலமாரி ஒன்றை வைத்துவிட்டனர். கனமான சுவர்களுடன் இருந்த பழங்கால வீடு என்பதால், அப்படி ஓர் அறை இருப்பதே பார்த்தால் தெரியாது. யாராவது வரும்போது முல்லா ஒமர் அந்த அறைக்குள் போய்விட்டால், கண்டுபிடிக்கவே முடியாது.


வீட்டில் இருப்பவர்களின் உதவி இல்லாமல் ஒமர் வெளியில் வரவும் முடியாது; உள்ளே போகவும் முடியாது. அந்த வீட்டில் இருந்தவர்களுக்கு அவர் முல்லா ஒமர் என்பது தெரியாது. யாரோ தாலிபன் முக்கிய புள்ளி என்று மட்டுமே சொல்லியிருந்தார்கள். ''விஷயம் வெளியில் தெரிந்தால் குடும்பத்தோடு நம்மைக் கொன்றுவிடுவார்கள்'' என்று டிரைவர் தன் குடும்பத்தை மிரட்டி வைத்திருந்தார். அதனால், பக்கத்து வீட்டில் இருந்தவர்களுக்குக்கூட இது தெரியாது.

க்யாலத் நகரிலிருந்து 20 மைல் தூரத்தில் இருக்கும் ஒரு குக்கிராமத்தில் அவருக்கான மறைவிடத்தைத் தேர்வு செய்தார் ஜப்பார். சில வீடுகளே இருக்கும் அந்த கிராமத்தின் ஒரு வீட்டின் பின்பக்கமாக ஒரு சின்ன கதவு வைத்து குடிசை ஒன்றை உருவாக்கினார். பின்பக்கம் இப்படி ஒரு வீடு இருப்பதே பார்த்தால் தெரியாது. முன்புறம் இரண்டு சகோதரர்கள் குடியிருந்தனர். அவர்கள் தீவிர தாலிபன் விசுவாசிகள். அவர்களுக்கு மட்டும் முல்லா ஒமரை அடையாளம் தெரியும். அவர்களின் குடும்பத்தினருக்கோ, ஊரில் மற்ற யாருக்குமோ விஷயம் தெரியாது. யாரோ சீனியர் தாலிபன் தலைவர் அங்கு மறைந்திருக்கிறார் என்று மட்டுமே தெரியும். ஊரே தாலிபன் ஆதரவாளர்கள் என்பதால், விஷயம் வெளியில் போகவில்லை.

ஆப்கானிஸ்தானில் பெட்டி டேம்

அமெரிக்கப் படைகள் இரண்டு முறை அப்போது முல்லா ஒமரை நெருங்கின. ஒருமுறை ஒமரும் ஜப்பாரும் அந்த வீட்டுத் தோட்டத்தில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தபோது, அமெரிக்கப் படையினர் தெருவில் வந்தார்கள். காலடிச் சத்தம் கேட்டதும் இருவரும் உஷாரானார்கள். வீட்டுக்குள் சென்று ரகசிய அறையில் பதுங்க நேரம் இல்லை. அதனால், தோட்டத்தில் குவித்து வைத்திருந்த விறகுக்கட்டைகளுக்குப் பின்னால் ஒளிந்துகொண்டனர். அமெரிக்க வீரர்கள் வீட்டுக்குள் வரவே இல்லை. இருவருக்கும் நிம்மதி.


இரண்டாவது முறை அமெரிக்க வீரர்கள் தெரு முழுக்க இருக்கும் வீடுகளில் தேடுதல் வேட்டை நடத்தினர். இந்த வீட்டிலும் வந்து எல்லா அறைகளையும் பார்த்தனர். அப்போது முல்லா ஒமர் ரகசிய அறையில்தான் இருந்தார். ஆனால், அந்த ரகசிய அறையை அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை.
முல்லா ஒமர் காந்தஹாரை விட்டு வெளியேறும் முன்பாகவே அவரின் மனைவிகளும் மகன்களும் பாகிஸ்தான் சென்றுவிட்டனர். தன்னை சந்திக்க அவர்கள் வரக்கூடாது என்று கட்டளை போட்டுவிட்டார். தாலிபன் தலைவர்கள் பலரும் அப்போது பாகிஸ்தானின் குவெட்டா நகரில் இருந்தனர்.

அங்கிருந்து சில மாதங்களுக்கு ஒருமுறை ஒரு தூதர் வருவார். முல்லா தன் கட்டளைகளை ஒரு கேசட்டில் பேசி பதிவு செய்து அவரிடம் தருவார். அதன்படி தாலிபன்கள் இயங்கிவந்தனர்.
இந்நிலையில் ஜாபுல் கவர்னர் மாளிகையை அமெரிக்க ராணுவம் தனது முகாமாக மாற்றியது. எப்போதும் ராணுவத்தினர் அந்த வீடு வழியே வருவதும் போவதுமாக இருக்க, முல்லா ஒமர் இடத்தை மாற்ற முடிவெடுத்தார்.

முல்லா ஓமர் பதுங்கியிருந்த வீடு

இந்த வீட்டில் இன்னொரு வசதியும் இருந்தது. பக்கத்திலேயே நதி ஒன்று ஓடுகிறது. வருடத்தின் பல நாட்கள் தண்ணீர் ஓடாது. அதிலிருந்து பாசன வசதிக்காக பெரிய குழாய்களை நீண்ட தூரத்துக்குப் புதைத்து வைத்திருந்தார்கள். திடீரென அமெரிக்கப் படைகள் வந்தால், வேகமாகப் போய் அதற்குள் ஒளிந்துகொள்ளலாம். குழாய் வழியாகவே பயணம் செய்து, அருகில் இருந்த மலைப்பகுதிக்கும் போய்விட முடியும்.


எட்டு ஆண்டுகள் அந்த சிறிய குடிசையில்தான் ஒமர் வாழ்ந்தார். ஒரு பாதுகாவலர் அவருக்கு உணவு சமைத்துக் கொடுத்து கூடவே இருந்தார். சாப்பிடும் நேரத்தில் மட்டும் இருவரும் பேசிக்கொள்வார்கள். குளிர் நாட்களில் எப்போதாவது வெளியில் வந்து குளிர் காய்வார். மற்றபடி வீட்டுக்குள்தான் இருப்பார்.
அவரிடம் பழைய நோக்கியா போன் ஒன்று இருந்தது. ஆனால், இடத்தைக் கண்டுபிடித்து விடுவார்கள் என்பதால் சிம் கார்டு போடவில்லை. பிரார்த்தனை வாசகங்களைப் பதிவு செய்து கேட்பதற்கு மட்டும் அதைப் பயன்படுத்தினார். சின்ன ரேடியோ ஒன்று வைத்திருந்தார். பிபிசி பாஷ்து மொழி சேவையை ஆப்கனில் வழங்குகிறது. அந்த செய்திகளை மட்டும் கேட்பார். அதைத் தவிர முல்லா ஒமருக்கு எந்த வெளியுலகத் தொடர்பும் இல்லை. 2011 மே மாதம் பாகிஸ்தானில் வைத்து பின் லேடன் கொல்லப்பட்டதை ரேடியோ செய்தி மூலமே ஒமர் தெரிந்துகொண்டார்.

முல்லா ஒமர் இந்த கிராமத்துக்கு வந்த சில நாட்களில், இங்கிருந்து மூன்று மைல் தொலைவில் அமெரிக்க ராணுவம் ஒரு முகாம் அமைத்தது. ஒல்வரின் என்று பெயரிடப்பட்ட அந்த முகாமில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட அமெரிக்கக் கூட்டுப்படை வீரர்கள் இருந்தார்கள். ஒமருக்கு இது கவலை தந்தாலும், அவர் இங்கிருந்து வேறு இடத்துக்கு மாறத் தயங்கினார். வெளியில் போனால் சிக்கிக்கொள்வோம் என்று பயந்தார். அமெரிக்க விமானங்கள் பறக்கும்போதும், வீரர்கள் வாகனங்களில் வரும்போதும், அந்தத் தண்ணீர்க்குழாயில் போய் பதுங்கிக் கொள்வாராம். சில முறை ஒமர் அந்தக் குழாயில் பதுங்கியிருக்கும்போது, குழாயின்மீது அமெரிக்க வீரர்கள் நடந்து போயிருக்கிறார்கள். ஆபத்தான இந்த ஆட்டத்தில் அவர் சிக்கவே இல்லை.


2013-ம் ஆண்டு காசநோயால் ஒமரின் உடல்நிலை மோசமானது. டாக்டரை அழைத்து வருகிறேன் என்றார் ஜப்பார். பாகிஸ்தானுக்குப் போய் சிகிச்சை எடுக்கலாம் என்றார். ஒமர் சம்மதிக்கவில்லை. அவர் மரணத்தை வரவேற்கத் தயாரானார். ஏப்ரல் 23-ம் தேதி ஒமர் இறந்தார். நதிக்கரையில் ஒரு மறைவான இடத்தில் அவர் உடலைப் புதைத்துவிட்டு வீடியோ எடுத்த ஜப்பார், அதை ஒமரின் மகன் முல்லா முகமது யாஹுப்பிற்கு அனுப்பி வைத்தார்.


சில நாட்கள் கழித்து யாஹுப் பாகிஸ்தானிலிருந்து அங்கு வந்தார். புதைத்த இடத்தைத் தோண்டிப் பார்த்து தன் தந்தை இறந்ததை உறுதி செய்துகொண்டார்.
ஆனால், முல்லா ஒமர் இறந்ததை இரண்டு ஆண்டுகள் கழித்தே தாலிபன்கள் வெளிப்படையாக அறிவித்தனர். இடைப்பட்ட காலத்தில் அந்த அமைப்புக்குள் மோசமான மோதல்கள் ஏற்பட்டன.



source https://www.vikatan.com/social-affairs/international/why-american-army-was-not-able-to-capture-mullah-mohammad-omar

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக