Ad

திங்கள், 23 ஆகஸ்ட், 2021

சிவகங்கை: 16-ம் நூற்றாண்டைச் சேர்ந்த நவகண்ட சிற்பம்... தொல் நடைக்குழுவால் கண்டெடுப்பு!

சிவகங்கையை அடுத்த முத்துப்பட்டியில் தனியார் இடத்தில் சிலை ஒன்று இருப்பதாகச் சிவகங்கை தொல்நடைக் குழுவைச் சேர்ந்த முருகன் என்பவர் தகவல் கொடுக்க, குழுவின் நிறுவனர் புலவர் காளிராஜா, தலைவர் சுந்தரராஜன் ஆகியோர் கள ஆய்வு செய்தனர். கள ஆய்வில் அங்கு பதினாறாம் நூற்றாண்டைச் சேர்ந்த நவகண்ட சிற்பம் அடையாளம் காணப்பட்டுள்ளது.

இதுபற்றி சிவகங்கை தொல்நடைக்குழு நிறுவனர் புலவர் காளிராஜா கூறியதாவது, "சங்க காலத்தில் போரிட்டு மறைந்த வீரர்களுக்கு நடுகல் வைப்பது தமிழர்களின் மரபாகப் போற்றப்பட்டுள்ளது. பழைமையான இலக்கண நூலான தொல்காப்பியத்திலும் நடுகல் அமைக்கும் முறை பற்றிக் கூறப்பெற்றுள்ளது.

நவகண்ட சிற்பம்

அதைப்போல தலைவனின் வெற்றிக்காகக் கொற்றவையின் முன்பு தன் தலையைக் கொடுக்கும் வீரர்கள் பற்றிய குறிப்புகளைத் தொல்காப்பியம், சிலப்பதிகாரம், கலிங்கத்துப்பரணி, புறப்பொருள் வெண்பாமாலை ஆகிய இலக்கண இலக்கியங்களில் காணமுடிகின்றன. நவகண்டம் என்பது உடலில் ஒன்பது இடங்களில் வெட்டிக்கொண்டு உயிரை விடுவதாகவும், அவிப்பலி, அரிகண்டம் தூங்குதலை போன்றவற்றை இன்ன பிற வகைகளாகவும் அறியமுடிகிறது.

Also Read: பொற்பனைக்கோட்டை அகழாய்வு: வெளிப்பட்ட சங்க கால செங்கல் கட்டுமானம்!

அரசர் போரில் வெற்றிபெற வேண்டும் என்று வேண்டிக்கொண்டு கொற்றவையின் முன்பு தன் தலையை வீரர் பலி கொடுத்தல் என்பதே இதன் உட்பொருளாகும். குறிப்பாக, 9-ம் நூற்றாண்டு முதல் 13-ம் நூற்றாண்டு வரை இம்மரபு உச்சம் தொட்டது எனக் கொள்ளலாம். தற்போது கண்டெடுக்கப்பெற்றுள்ள இந்தச் சிலையானது மூன்றடி உயரத்தில் ஒன்றரை அடி அகலத்தில், வடிவமைக்கப்பட்டுள்ளது, தலைமுடி கொண்டையாகவும், சிதறிய மூன்று கற்றைகளாகவும் காட்டப்பெற்றுள்ளது. முகத்தில் மீசை காட்டப்பெற்றுள்ளது, கழுத்தில் வேலைப்பாட்டோடு தொங்குகின்ற ஆபரணம் உள்ளது.

நவகண்ட சிற்பம்

கையில் கழல் போன்ற ஆபரணம் காட்டப்பெற்றுள்ளது. வேலைப்பாட்டுடன் கூடிய ஆடை காணப்படுகிறது. மேலாடை தொங்குவதைப் போலக் காட்டப்பட்டுள்ளது, இடுப்பில் உறையுடன் கூடிய குத்துவாள் ஒன்றும் உள்ளது. கால்களில் காலணிகள் உள்ளன. ஒரு கை வில்லுடனும் மற்றொரு கை சிதைவுபட்டும் காணப்படுகின்றன. கழுத்தின் வலப்பக்கத்திலிருந்து இடப்பக்கமாகக் கத்தி குத்தியபடி இந்த நவகண்ட சிற்பம் வடிவமைக்கப்பெற்றுள்ளது. இந்த நவகண்ட சிற்பத்தின் வடிவமைப்பைக் கொண்டு 16-ம் நூற்றாண்டு எனக் கருதலாம்" என்றார்.



source https://www.vikatan.com/government-and-politics/archaeology/sivagangai-16th-century-navakanda-sculpture-found-by-archaeologist

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக