தமிழக சட்டப்பேரவையின் நூற்றாண்டு விழா மற்றும் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் முழு உருவப்படத் திறப்பு விழா இன்று நடைபெற உள்ளது. விழாவில் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் கலந்து கொண்டு கருணாநிதியின் முழு உருவப் படத்தைத் திறந்து வைக்க உள்ளார். விழாவில், அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் சிறப்பு அழைப்பாளர்களாகக் கலந்துகொள்கின்றனர். சட்டப்பேரவையின் நூற்றாண்டு விழா என தி.மு.க அரசு வரலாற்றைத் திரித்துக் கூறுகிறது என்றும், மக்கள் முன்னிலையில் இல்லாமலும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், அரசியல் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்காமலும் தி.மு.க விழாவாக நடத்தப்படுகிறது என கருணாநிதி படத்திறப்பு தொடர்பாக எதிர்க்கட்சிகள் தரப்பில் பல்வேறு சர்ச்சைகள் எழுப்பப்பட்டன. மேலும் அதிமுக இந்த விழாவில் பங்கேற்காமல் புறக்கணிப்பதாகவும் அறிவித்தது.
தமிழகச் சட்டப்பேரவையில் தலைவர்கள், முதல்வர்களின் படங்களைத் திறக்கும் மரபு எப்போது தொடங்கியது. கருணாநிதியின் படத் திறப்பு ஏன் இவ்வளவு முக்கியத்துவம் பெறுகிறது என்பது குறித்த ஒரு பார்வை...
Also Read: ”ஜெயலலிதா படத்திறப்பு: சட்ட மன்றமா சட்ட மீறல் மன்றமா” - கேள்வி எழுப்பும் இயக்கங்கள்
சென்னை மாகாண மன்றத்துக்காக 1920 நவம்பர் 30-இல் நடந்த பொதுத்தேர்தலில் நீதிக்கட்சி பெரும்பான்மை இடங்களைக் கைப்பற்றி, சுப்பராயலு ரெட்டியார் தலைமையில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் அமைச்சரவை பொறுப்பேற்றிருக்கிறது. 1921-ம் ஆண்டு ஜனவரி 12-ம் நாள் கன்னாட் கோமகனால் முதல் மாகாண சுயாட்சி சட்டப்பேரவை தொடங்கி வைக்கப்பட்டிருக்கிறது. பனகல் ராஜா, பி.சுப்பராயன், முனுசாமி நாயுடு, பொப்பிலி ராஜா, பி.டி. ராசன், குர்மா வெங்கடரெட்டி நாயுடு என நீதிக்கட்சியின் முதல்வர்கள் 17 ஆண்டுக் காலம் பதவி வகித்திருக்கிறார்கள்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதன் முதலில் பி.சுப்பராயனின் படம்தான் திறக்கப்பட்டிருக்கிறது. இட ஒதுக்கீடு சுப்புராயன் ஆட்சியில்தான் அமல்படுத்தப்பட்டது என்பதால் அவரது உருவப்படம் திறந்து வைக்கப்பட்டிருக்கிறது. அதன்பின் நாடு சுதந்திரம் அடைந்தபோது ஆட்சியிலிருந்தவர் என்ற காரணத்திற்காக ஓ.பி.ராமசாமி ரெட்டியாரின் திருவுருவப் படமும் பேரவையில் திறந்து வைக்கப்பட்டிருக்கிறது.
Also Read: தமிழ்நாடு சட்டப்பேரவை நூற்றாண்டு விழா: 1921 முதல் 2021 வரை..! - ஒரு நூற்றாண்டு வரலாறு
1948 ஜூலை 24-இல் மகாத்மா காந்தியின் படம் திறக்கப்பட்டிருக்கிறது. அடுத்த ஒரே மாதத்தில், இந்தியாவின் அப்போதைய பிரதமர் ஜவஹர்லால் நேருவால் ராஜாஜியின் உருவப்படம் திறந்து வைக்கப்பட்டிருக்கிறது. உயிரோடு இருந்த போதே தமிழக சட்டப்பேரவையில் படம் திறக்கப்பட்டது ராஜாஜிக்கு மட்டுமே. கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்குப்பின் அதாவது 1964 மார்ச் 22-இல் திருவள்ளுவரின் படத்தை அப்போதைய துணை குடியரசுத் தலைவர் ஜாகீா் ஹுசேன் திறந்து வைத்திருக்கிறார். 1969 பிப்.10-இல் தமிழ்நாடு முதல்வராக இருந்த சி.என்.அண்ணாதுரையின் உருவப்படத்தை அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி திறந்து வைத்திருக்கிறார். எம்.ஜி.ஆா்., முதல்வராக இருந்தபோது முன்னாள் முதல்வர் காமராஜரின் உருவப்படத்தை 1977 ஆகஸ்ட் 18-ஆம் தேதி அப்போதைய குடியரசுத் தலைவர் நீலம் சஞ்சீவ் ரெட்டி திறந்து வைத்திருக்கிறார். இதைத் தொடர்ந்து, தந்தை பெரியார், அம்பேத்கர், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர், காயிதே மில்லத், முகமது இஸ்மாயில் ஆகியோரின் உருவப்படங்களை கேரள ஆளுநர் ஜோதி வெங்கடாசலம் 1980 ஆக.9-இல் திறந்து வைத்தார். ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் உருவப் படத்தை 1992 ஜன.31-இல் அவரே திறந்து வைத்திருக்கிறார். எடப்பாடி பழனிசாமி முதல்வராகப் பொறுப்பேற்றதும், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் படம் கடந்த 2018 பிப்.11-இல் திறந்து வைக்கப்பட்டது.
2019 ஜூலை 19-இல் முதல்வர் பழனிசாமி ராமசாமி படையாட்சியாரின் முழு உருவப் படமும் திறந்து வைத்தார். ஆகஸ்ட் 23-இல் வ.உ.சி, ப.சுப்புராயன், ஓமந்தூரார் ராமசாமி ரெட்டியார் உள்ளிட்டோரின் திருவுருவப் படங்களும் திறந்து வைக்கப்பட்டன. இவற்றையெல்லாம் சேர்த்து சட்டப்பேரவையில் தலைவர்கள், முன்னாள் முதல்வர்கள் என மொத்தம் 15 பேரின் முழு உருவப் படங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தற்போது 16-வது படமாக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் முழு உருவப்படத்தைக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் திறந்து வைக்கிறார்.
“தேசிய தலைவர்கள் மற்றும் தமிழ்நாட்டின் வளர்ச்சியில் பங்காற்றிய தலைவர்களின் படங்களைப் பேரவையில் வைப்பது மரபு. அதன் அடிப்படையில்தான் தற்போது வரை சட்டப்பேரவையில் உருவப் படங்கள் வைக்கப்படுகின்றன. ஜெயலலிதா மறைந்த உடன் அவரது உருவப்படத்தைத் திறந்த அ.தி.மு.க அரசு கருணாநிதி மறைந்த உடன் அவரது உருவப்படத்தையும் திறந்திருக்க வேண்டும். ஆனால், அரசியல் காரணங்களால் அதை அவர்கள் செய்யவில்லை. தமிழ்நாட்டின் முதல்வராக 5 முறை இருந்தவர் என்பது மட்டுமல்ல கருணாநிதி மறைவின்போது மட்டும்தான் மாநிலங்களவை, மக்களவை என இரண்டு அவைகளும் ஒத்தி வைக்கப்பட்டது. இந்திய அரசியலில் கருணாநிதியின் பங்கு மிக முக்கியமானது. கருணாநிதிக்கு இந்த மரியாதை எப்போதோ கிடைத்திருக்க வேண்டும். அதனால்தான் தற்போது நூற்றாண்டு விழா நிகழ்ச்சியோடு சேர்த்து அவரது முழு உருவப்படம் திறக்கப்படும் என்ற பெருமையும் கிடைத்திருக்கிறது” என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.
ஜெயலலிதா படத்திறப்பின் போது மறைந்த தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் ஜே.அன்பழகன் குற்றவாளியின் புகைப்படத்தைச் சட்டப்பேரவையில் திறக்கக் கூடாது என வழக்குத் தொடர்ந்தார். ஆனால், கருணாநிதியின் படத்திறப்பிற்கு தற்போது வரை எதிர்ப்பு கிளம்பவில்லை. எழுந்துள்ள எதிர்ப்புகளும் நூற்றாண்டு விழாவை ஒட்டியும் மக்கள் முன்னிலையில் இல்லாமல் குறிப்பிட்ட சிலரை மட்டும் அழைத்துப் படத்தைத் திறக்கக் கூடாது என்றும்தான் இருக்கிறது. அந்தவகையில் கருணாநிதி படத்திறப்பு முக்கியத்துவம் பெறுகிறது.
source https://www.vikatan.com/government-and-politics/politics/article-on-karunanidhis-picture-opening-ceremony-at-tamil-nadu-assembly
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக