மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட ஸ்மார்ட் சிட்டி திட்டம், மதுரை உட்பட தமிழகத்தில் முக்கிய மாநகராட்சிகளில் செயல்படுத்தப்பட்டுவருகிறது.
கடந்த ஆட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் பல முறைகேடுகள் நடைபெறுவதாக எதிர்கட்சிகள் புகார் எழுப்பிவந்தன.
குறிப்பாக, மதுரையில் நடந்துவரும் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் பல்வேறு முறைகேடுகள் நடப்பதாக மதுரை எம்.பி சு.வெங்கடேசன், தற்போதைய நிதியமைச்சரான பி.டி.ஆர்.பழனிவேல் தியாகாரஜன் ஆகியோர் அப்போது பகிரங்கமாகப் புகார் கூறினார்கள்.
இந்தநிலையில், மதுரையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் அரவிந்த் பாலாஜி, ``ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் 15 கோடி ரூபாய்க்கு மணல் திருட்டு நடந்துள்ளது. அரசுத் திட்டத்தில் சட்டவிரோதமாக மணல் கடத்தியது குறித்து துறைரீதியான நடவடிக்கை எடுக்க அதிகாரிகளிடம் மனு அளித்தும் இதுவரை தலைமைப் பொறியாளர் மீது நடவடிக்கை எடுக்கவில்லை" என்று மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் மனுத்தாக்கல் செய்திருக்கிறார்.
இந்த வழக்கு பரபரப்பு ஏற்படுத்திவரும் நிலையில் அரவிந்த் பாலாஜியிடம் பேசினேன். ``மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மதுரை தேர்வு செய்யப்பட்டு, மதுரை பெரியார் பேருந்து நிலையத்தில் கட்டுமானப் பணிகள் நடைபெற்றுவருகின்றன.
இந்தத் திட்டத்தை மதுரை மாநகராட்சியின் தலைமைப் பொறியாளராக இருந்த அரசு, தலைமையேற்று நடத்திவந்தார்.
பெரியார் பேருந்து நிலையம், கட்டுமானத்துக்காக 30 அடிக்கு மேல் ஆழமாகத் தோண்டப்பட்டது. அங்கு வளமான மணல் கிடைத்தது. அந்த மணலை முறையாக கனிமவளத் துறையினருக்குத் தகவல் தெரிவித்து ஓரிடத்தில் சேர்த்துவைக்க வேண்டும்.
ஆனால், தலைமைப் பொறியாளராக இருந்த அரசு, கனிமவளத்துறை உட்பட வேறு எந்தத் துறைக்கும் தகவல் தெரிவிக்காமல் 15 கோடி ரூபாய் அளவுக்கு மணல்களை சட்டவிரோதமாகக் கடத்தி, தனியார் நிறுவனங்களுக்கு விற்பனை செய்திருக்கிறார்.
சட்டவிரோதமாக மணலைக் கடத்தியது பற்றி அறிந்து நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு மனு அனுப்பினேன். ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
மாநகராட்சி தலைமைப் பொறியாளராக இருந்த அரசு மீது பல்வேறு புகார்கள் உள்ளன. அவர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின்போது கணக்கில் வராத பணம் மற்றும் பரிசுப் பொருள்கள் பறிமுதல் செய்த புகாரில் அவர் மீது ஏற்கெனவே லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்துள்ளது.
சட்டவிரோதமாக மணல் கடத்தி விற்பனை செய்த முன்னாள் தலைமைப் பொறியாளர் அரசு மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தேன். அதற்கு விளக்கம் கேட்டு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்" என்றவர்,
``இது ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் நடந்த ஊழலில் ஒரு பருக்கைதான், மொத்த வேலைகளையும் முழுமையாக விசாரித்தால் இன்னும் பல உண்மைகள் தெரியவரும். அதிலும் இந்த முன்னாள் பொறியாளர் அரசு நடத்திய கோல்மால்கள் அதிகம்’’ என்றார்.
அரவிந்த் பாலஜியின் மனுவை விசாரித்த நீதிபதிகள், ``இது போன்ற செயல்கள் கடுமையான குற்றமாகப் பார்க்கப்பட வேண்டும். மனு குறித்து நகராட்சி நிர்வாகத்துறை முதன்மைச் செயலாளர், மாநகராட்சி ஆணையாளர், கனிமவளத்துறை இயக்குநர் பதிலளிக்க வேண்டும்" என்று உத்தரவிட்டு வழக்கு விசாரணையை இரண்டு வாரத்துக்குத் தள்ளிவைத்துள்ளனர்.
Also Read: ஸ்மார்ட் சிட்டி ஊழல்... கேரளாவுக்கு மணல் கடத்தல்... சி.இ.ஓ ராஜினாமா!
பொறுப்பு தலைமைப் பொறியாளராக நீண்டகாலம் இருந்து வந்த அரசு, புதிய மாநகராட்சி கமிஷனராக டாக்டர் கார்த்திகேயன் பதவி ஏற்ற பிறகு மீண்டும் அவர் வகித்த பழைய பொறுப்புக்கு அனுப்பப்பட்டு இடமாறுதல் செய்யப்பட்டார்.
கடந்த ஆட்சியில் முன்னாள் அமைச்சர் ஒருவரின் பெயரைச் சொல்லி, இதற்கு முன்பிருந்த மாநகராட்சி கமிஷனர் உட்பட பல உயரதிகாரிகளை, தற்போது குற்றச்சாட்டுக்கு உள்ளாகியிருக்கும் முன்னாள் தலைமைப் பொறியாளர் அரசு, ஆதிக்கம் செலுத்திவந்ததாக மாநகராட்சி ஊழியர்கள் தெரிவிக்கிறார்கள்.
இந்தநிலையில்தன அவர்மீது மணல் கடத்தல் புகாரில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த வழக்கு பரபரப்பை ஏற்படுத்திவருகிறது.
source https://www.vikatan.com/government-and-politics/corruption/smart-city-project-scam-in-madurai-high-court-seeks-explanation
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக