Ad

புதன், 18 ஆகஸ்ட், 2021

ரூ.100 லட்சம் கோடியில் `கதி சக்தி’ திட்டம்: `வெற்று அறிவிப்பு’ - எதிர்த்தரப்பு விமர்சனம் சரியா?

இந்தியாவின் 75-வது சுதந்திர தினத்தையொட்டி, ஆகஸ்ட் 15-ம் தேதி டெல்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். அப்போது, ``நாட்டின் நவீன உள்கட்டமைப்புகளுடன், உள்கட்டமைப்புத்துறையில் ஒரு முழுமையான, ஒருங்கிணைந்த அணுகுமுறையைப் பின்பற்ற வேண்டியது அவசியமானதாக இருக்கிறது. இதற்காக வெகு விரைவில் பிரதமர் கதி சக்தியின் தேசிய மாஸ்டர் பிளானைத் தொடங்கவிருக்கிறோம். இது ஒரு மிகப்பெரிய திட்டமாக இருக்கும். அத்துடன் கோடிக்கணக்கான மக்களின் கனவு நிறைவேறும். ரூ.100 லட்சம் கோடிக்கும் அதிகமாக இந்தத் திட்டம் லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு புதிய வேலைவாய்ப்பை உருவாக்கும்” என்று மோடி குறிப்பிட்டார்.

மோடி

மேலும், ``தேசிய மெகா திட்டமாக இருக்கும் இந்த கதி சக்தித் திட்டம் நாட்டின் ஒட்டுமொத்த கட்டமைப்புக்குமான அடித்தளத்தை அமைக்கும். அத்துடன் பொருளாதாரத்துக்கு ஓர் ஒருங்கிணைந்த, முழுமையான பாதையை வழங்கும். நாட்டின் போக்குவரத்து முறைகளில் ஓர் இணக்கம் இல்லை. இதிலுள்ள சிக்கல்கள், தடைகளை கதி சக்தி உடைக்கும். இது பயண நேரத்தைக் குறைப்பதுடன் தொழில் உற்பத்தியை மேலும் அதிகரிக்கும். அத்துடன் உள்ளூர் உற்பத்தியாளர்களும் உலக அளவில் போட்டியிடும் நிலையை ஏற்படுத்தும். எதிர்கால பொருளாதார மண்டலங்களின் வளர்ச்சிக்கு இந்த முயற்சி வழிவகுக்கும்” என்றார் மோடி.

Also Read: சுதந்திர தினம்: `சர்ஜிக்கல் ஸ்டிரைக் முதல் விரைவில் மிகப்பெரிய திட்டம் வரை..!’ பிரதமர் மோடி உரையின் ஹைலைட்ஸ்

இது தவிர, பல்வேறு அறிவிப்புகளும் கருத்துகளும் பிரதமரின் சுதந்திர தின உரையில் இடம்பெற்றுள்ளன. அவற்றை வெற்று அறிவிப்புகள் என்று எதிர்க்கட்சியினர் விமர்சித்திருக்கிறார்கள். இது குறித்து பத்திரிகையாளர் ஆர்.கே.ராதாகிருஷ்ணனிடம் பேசினோம். ``ரூ.100 லட்சம் கோடியில் உள்கட்டமைப்பை மேம்படுத்தப்போவதாகவும், வேலைவாய்ப்புகளைப் பெருக்கப்போவதாகவும் சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி குறிப்பிட்டிருக்கிறார். அவரது உரையின் ஹைலைட்-ஆக இந்த அறிவிப்புதான் ஊடகங்களில் பிரதானமாக வெளியிடப்பட்டிருக்கிறது. செங்கோட்டையில் நின்றுகொண்டு நினைத்ததையெல்லாம் பிரதமர் பேசியிருக்கிறார்.

ஆர்.கே.ராதாகிருஷ்ணன்

2019-ம் ஆண்டு சுதந்திர தின உரையில், `இந்தக் காலகட்டத்தில் நவீன கட்டமைப்புகளை உருவாக்குவதற்கு ரூ.100 லட்சம் கோடி செலவிடத் திட்டமிட்டிருக்கிறோம்’ என்று சொன்னார். அதன் மூலம் வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும் என்றும், புதிய அமைப்புகள் உருவாகும் என்றும் சொன்னார். அதன் பிறகு, அந்த ரூ.100 லட்சம் கோடித் திட்டம் என்ன ஆனது என்பது பற்றிய செய்தியையே காணோம். அதன் பிறகு, 2020-ம் ஆண்டு சுதந்திர தின உரையிலும் அதே போன்ற ஓர் அறிவிப்பை வெளியிட்டார். இதற்காக, பல்வேறு துறைகளில் 7,000 திட்டங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன என்று சொன்னார். இந்தத் திட்டத்தின் மூலமாக, நாட்டின் ஒட்டுமொத்த உள்கட்டமைப்பு வளர்ச்சி உச்சத்தை அடையும் என்றார்.

இப்போது, 75-வது சுதந்திர தின உரையில் ரூ.100 லட்சம் கோடியில் உள்கட்டமைப்பு வளர்ச்சிக்கான திட்டங்கள் செயல்படுத்தப்படும், வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும் என்று சொல்கிறார். தலைப்புச் செய்திகளுக்காக வெற்று அறிவிப்புகளை பிரதமர் வெளியிடுகிறாரே ஒழிய, அவை ஒருபோதும் செயலாக்கம் பெறவில்லை என்பதுதான் யதார்த்தமாக இருக்கிறது. இது மக்களை ஏமாற்றும் செயல் இல்லையா... இந்தக் காரியத்தை பிரதமராக இருக்கும் ஒருவர் செய்யலாமா?” என்று கேள்வி எழுப்பினார் ஆர்.கே.ராதாகிருஷ்ணன்.

மேலும், ``ஏழு ஆண்டுகளுக்கு முன்பு பீகாருக்குப் போய், `ஒரு லட்சம் கோடியில் திட்டம் நிறைவேற்றுவேன்’ என்று பிரதமர் மோடி சொன்னார். தற்போது அது பற்றிய விவரங்களைக் கேட்டால் எந்த பதிலும் இல்லை. அதேபோல, காஷ்மீருக்குப் போய் பல அறிவிப்புகளை பிரதமர் வெளியிட்டார். ஆனால், அவை எதுவும் நடைமுறைக்கு வரவில்லை என்பது மட்டுமல்ல, அங்கு ஏற்கெனவே இருந்த பல நல்ல விஷயங்களும் காலியானதுதான் மிச்சம். இப்போது, ரூ.100 லட்சம் கோடித் திட்டம் என்று மீண்டும் அறிவித்திருக்கிறார். தமிழ்நாட்டுக்கு ஜி.எஸ்.டி நிலுவைத்தொகையைக் கொடுப்பதற்கே மத்திய அரசால் முடியவில்லை.

விவசாயிகள்

சிறு விவசாயிகளின் நலன்கள் பற்றியெல்லாம் இந்த உரையில் மோடி கவலைப்பட்டிருக்கிறார். சிறு விவசாயிகளை நாட்டின் பெருமையாக மாற்ற வேண்டும் என்றெல்லாம் கூறியிருக்கிறார். விவசாயிகளுக்கு 2014-ம் ஆண்டு மோடி என்ன வாக்குறுதி அளித்தார் என்பதை நினைத்துப் பார்க்க வேண்டும். `விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாக்கப்படும்’ என்று அவர் அளித்த வாக்குறுதி இன்றைக்கு எந்த நிலையில் இருக்கிறது... விவசாயிகளைப் பற்றிக் கவலைப்படும் பிரதமர், டெல்லியில் போராடும் விவசாயிகளின் கோரிக்கைகளை ஏன் இன்னும் நிறைவேற்றவில்லை?” என்றார் ஆர்.கே.ராதாகிருஷ்ணன்.

இது குறித்து பா.ஜ.க-வின் மாநில செய்தித் தொடர்பாளரான நாராயணன் திருப்பதியிடம் பேசினோம்.

``நாட்டின் 75-வது சுதந்திர தின உரையில் தேச முக்கியத்துவம் வாய்ந்த பல அம்சங்களை பிரதமர் மோடி குறிப்பிட்டிருக்கிறார். நாட்டையே இணைக்கக்கூடிய அளவில் ரூ.100 லட்சம் மதிப்புள்ள `கதி திட்டம்’ என்ற மாபெரும் திட்டம் கொண்டுவரப்படும் என்று கூறியிருக்கிறார். இதன் மூலம் மிகப்பெரிய அளவில் உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படும், தொழில் வளம் பெருகும், வேலைவாய்ப்பு அதிகரிக்கும். சிறு, குறு தொழில்களை வளர்த்தெடுப்பதற்காக இந்தத் திட்டத்தின் விவரம் விரைவில் வெளியிடப்படும் என்று பிரதமர் கூறியிருக்கிறார்.

குறிப்பாக, 2 ஏக்கருக்கும் குறைவான விவசாய நிலம் வைத்திருப்பவர்களுக்கு பல திட்டங்களை உருவாக்கிவருவதாகக் கூறியிருக்கிறார். விவசாயிகளுக்கு வங்கிகளில் கடன் மற்றும் தானியக் கிடங்குகள், குளிப்பதனக் கிடங்குகள் போன்றவை விவசாயத்துறைக்காக உருவாக்குவதற்கான முயற்சியில் ஈடுபடுவோம் என்று கூறியிருக்கிறார். பட்டியலின, பிற்படுத்தப்பட்ட, பழங்குடியின மக்களுக்கு இட ஒதுக்கீடு அளிப்பதன் மூலமாக சமூகநீதி கடைப்பிடிக்கப்பட்ட நாட்டின் அனைத்துத் தரப்பினரும் முன்னேறுவதற்கு வழிவகை செய்யப்பட்டிருப்பதை பிரதமர் குறிப்பிட்டிருக்கிறார்.

நாராயணன்

ஏழு ஆண்டுகளுக்கு முன்பு 51,000 கோடி செல்போன்களை இறக்குமதி செய்துகொண்டிருந்தோம். இன்றைக்கு 22,000 கோடி ஏற்றுமதி செய்கிற அளவுக்கு வளர்ந்திருக்கிறோம். பெண்களுக்கு பிரத்யேகமான ராணுவப் பள்ளிகள் உருவாக்கப்படும் என்று சொல்லியிருக்கிறார். மின் உற்பத்தியில் தன்னிறைவு பெற்றுவருகிறோம் என்பதையும் கூறியிருக்கிறார். கொரோனா காலத்தில்கூட அந்நியச் செலாவணி உயர்ந்திருக்கிறது. வெளிநாட்டு முதலீடுகள் அதிக அளவில் வந்துகொண்டிருக்கின்றன. இவையெல்லாம் பிரதமர் உரையின் முக்கிய அம்சங்கள்” என்றார் நாராயணன் திருப்பதி.

Also Read: தொடரும் தீண்டாமைக் கொடுமைகள்; என்ன செய்கிறார் ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ்?

2019-ம் ஆண்டு சுதந்திர தின உரையில் ரூ.100 லட்சம் கோடி, 2020-ம் ஆண்டு சுதந்திர தின உரையில் ரூ.110 லட்சம் கோடி, 2021-ம் ஆண்டு சுதந்திர தின உரையில் ரூ.100 லட்சம் என்று கடந்த மூன்று ஆண்டுகளாக ஒரே மாதிரியான அறிவிப்பை பிரதமர் மோடி அறிவித்துவருகிறார். இவற்றுக்கான திட்டங்கள் பற்றிய அறிவிப்புகள் எதுவும் இல்லை என்றும், இவை வெற்று அறிவிப்புகள் என்றும் எதிர்க்கட்சிகள் விமர்சனங்களை முன்வைக்கின்றன. இது தொடர்பாக நாராயணன் திருப்பதியிடம் கேட்டோம்.

நெடுஞ்சாலை

அதற்கு, ``ரூ.100 லட்சம் கோடிக்கான திட்டங்கள் முன்னெடுக்கப்படும் என்று பிரதமர் கூறியிருக்கிறார். அவை எந்தத் துறைகளில், என்ன மாதிரியான திட்டம் என்பதெல்லாம் பின்னர் விரிவாக மத்திய அரசு அறிவிக்கும். 2019-ம் ஆண்டு ரூ.100 லட்சம் கோடி மதிப்பிலான திட்டம் பற்றி பிரதமர் குறிப்பிட்டார். அப்போது, பாதுகாப்புத்துறையில் நிறைய முதலீடுகள் செய்யப்பட்டன. அதுபோல ஒவ்வோர் அறிவிப்புக்கும் பல திட்டங்கள் உருவாக்கப்படுகின்றன. இவை தொலைநோக்குப் பார்வைகொண்ட திட்டங்கள். ஒரே நாளில் ஒரு லட்சம் கி.மீ தூரத்துக்கு சாலை அமைத்துவிட முடியாது. இது ஒரு தொடர் செயல்பாடு என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்” என்றார் நாராயணன் திருப்பதி.



source https://www.vikatan.com/government-and-politics/politics/opposition-parties-criticize-modi-speech-on-independence-day-as-empty-slogan

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக