தமிழ்நாட்டின் முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்று நூறு நாள்கள் ஆகின்றன. இந்த நூறு நாள்களில், ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசின் செயல்பாடுகள் குறித்து பல்வேறு கட்சிப் பிரநிதிகளிடம் பேசினோம்.
கோபண்ணா, ஊடகப் பிரிவுத் தலைவர், காங்கிரஸ் கட்சி
'' கடந்த சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க கூட்டணிக்கு வாக்களிக்காதவர்களும் கூட மெச்சத்தகுந்த வகையில்தான் ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி இருக்கிறது. மிக வெளிப்படைத்தன்மையோடு மக்கள் நலன் சார்ந்து இந்த ஆட்சி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. தமிழ்நாடு மீண்டும் வளர்ச்சிப்பாதையில் செல்கிறது என்பதற்கான அறிகுறியாக இந்த நூறு நாள் ஆட்சி இருக்கிறது. கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் மிகுந்த முனைப்போடு முதல்வர் செயல்பட்டு வருகிறார். அவர் மட்டுமல்ல, ஒவ்வொரு அமைச்சர்களும் போட்டிபோட்டுக்கொண்டு மிகச் சிறப்பாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றனர். கடந்த ஆட்சிக்காலத்தில் இத்தகய சூழல் இல்லை''
நாராயணன் திருப்பதி, செய்தித் தொடர்பாளர், பா.ஜ.க
'' சொன்னதைச் செய்வோம் என்றவர்கள் சொன்னது எதையுமே செய்யவில்லை. மகளிருக்கு மாதம் ஆயிரம் ரூபாய் கொடுப்போம் என்றார்கள் கொடுக்கவில்லை, பெட்ரோல் விலையை ஐந்து ரூபாய் குறைப்போம் என்றால் மூன்று ரூபாய் மட்டுமே குறைத்திருக்கிறார்கள். டீசல் விலையைக் குறைக்கவில்லை. கல்விக்கடனை அரசே ஏற்றுக்கொள்ளும் என்றார்கள், அதையும் செய்யவில்லை. இதுதான், இந்த அரசின் 100 நாள் சாதனை. நிதிநிலை அறிக்கையிலும்கூட, மத்திய அரசின் திட்டங்களின் அடிப்படையில்தான் பல்வேறு திட்டங்களை அறிவித்திருக்கிறார்கள். ஆகவே, தொடர்ந்து மத்திய அரசைச் சார்ந்தே தமிழக அரசு இயங்கிக்கொண்டிருக்கிறது என்பது இதிலிருந்து தெரிகிறது. ஆனால்,. மத்திய அரசு குறித்து விமர்சனங்களை மட்டுமே எப்போதும் முன்வைக்கிறார்கள். இது முற்றிலும் தவறு''
Also Read: ஸ்டாலின் நூறு நாள்... ப்ளஸ் மைனஸ்!
வைகைச்செல்வன், செய்தித் தொடர்பாளர், அ.தி.மு.க.
'' தி.மு.கவின் இந்த நூறு நாள் ஆட்சி வேதனையோடும் விசும்பலோடும் தான் இருந்தது. தடுமாற்றத்தோடும் தடம் மாறுதல்களோடும் தான் தி.மு.கவின் பயணம் இருக்கிறது. குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய், கேஸ் சிலிண்டருக்கு 100 ரூபாய் மானியம் தேர்தலின்போது சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாமல் திணறிக்கொண்டிருக்கிறது தி.மு.க அரசாங்கம். கொரோனா நிவாரண நிதியாக 4 ஆயிரம் ரூபாய் தருவதாகச் சொன்னார்கள். ஆனால், அது இன்னும் அனைவருக்கும் முழுமையாக போய்ச்சேரவில்லை என நிதியமைச்சரே சொல்லியிருக்கிறார்.
வெள்ளை அறிக்கையின் மூலமாக, பேருந்துக் கட்டணம், மின்சாரக் கட்டணம், சொத்து வரி, பால்விலை ஆகியவற்றை உயர்த்துவதற்கு தி.மு.க அரசு திட்டமிடுகிறதோ என்கிற அச்சம் மக்கள் மத்தியில் நிலவுகிறது. நீட் தேர்வை ரத்து செய்வதற்கான ரகசியம் எங்களிடம்தான் இருக்கிறது என்று சொன்ன தி.மு.கவினர், தற்போது நீட் தேர்வு நல்லது என்ற நிலைக்கு வந்துவிட்டனர். அதுமட்டுமல்லாது, அ.தி.மு.க முன்னாள் அமைச்சர்களின் மீது அரசியல் பழிவாங்கல் நடவடிக்கைகளையும் கட்டவிழ்த்து விட்டிருக்கிறது இந்த அரசாங்கம். ஆக மொத்தம், கடந்த நூறு நாள்கள் கசப்பான அனுபவங்களையே தமிழக மக்களுக்குத் தந்திருக்கிறது. திசை தெரியாத பயணத்தில் தமிழகம் தத்தளிக்கிறது''
ராஜீவ்காந்தி, செய்தித் தொடர்பு இணைச் செயலாளர், தி.மு.க
'' ஒருநாள் முதல்வர்போல எங்கள் தலைவர் ஒவ்வொரு நாளும் செயல்பட்டு வருகிறார். அரசின் மீது முன்வைக்கப்படும் விமர்சனங்களுக்குக் காதுகொடுத்து உரிய நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது இந்த அரசு. துறை ரீதியாக அனைவரையும் எளிதாக அணுக முடிகிறது. நிதிப்பற்றாக்குறை இருந்தாலும் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றி வருகிறோம். தேர்தல் அறிக்கையில் சொல்லாத பல விஷயங்களையும் கூடச் செய்து வருகிறோம். மானியங்கள் உரியவர்களுக்கு மட்டுமே போய்ச்சேரவேண்டும் என்று முன்வைக்கப்பட்ட கோரிக்கையை ஏற்று அதுகுறித்த ஆய்வு நடத்தவும் இந்த அரசு தயாராக இருக்கிறது. கடந்த ஆட்சியில் நிகழ்ந்த குறைகளை எல்லாம் நிவர்த்தி செய்து வெளிப்படையான நிர்வாகத்தைக் கொடுத்து வருகிறோம். கட்சியினர் யாரும் அரசு நிர்வாகத்தில் தலையிடக் கூடாது என்பதில் முதல்வர் மிகத் தீர்க்கமான இருக்கிறார்.
Also Read: ஒரு வருட காலமாக முடங்கிக் கிடக்கும் `அம்மா குடிநீர்' ஆலை; புத்துயிர் கொடுப்பாரா ஸ்டாலின்?
அதேபோல, காவல்துறை உங்கள் நண்பன் என்கிற வாசகத்தை மட்டுமே இதுவரை பார்த்து வந்திருக்கிறோம். ஆனால், இந்த ஆட்சியில் அது நடைமுறையில் இருக்கிறது. சமூக ஊடகங்களில் யாராவது தங்களின் குறைகளை முன்வைத்தால்கூட உடனடியாக அது சரிசெய்யப்படுகிறது. அதேபோல, உங்கள் தொகுதியில் ஸ்டாலின் திட்டத்தின் வாயிலாக ஏராளமான பிரச்னைகளுக்குத் தீர்வு காணப்பட்டிருக்கிறது. கொரோனா பேரிடரை மற்ற மாநிலங்களைவிட தமிழ்நாடு மிகச்சிறப்பாக எதிர்கொண்டிருக்கிறது. விளையாட்டுத்துறை உள்ளிட்ட எந்தத் துறையில் யார் சாதனை செய்தாலும் அவர்களை உடனடியாக அழைத்துப் பாராட்டுகிறார் முதல்வர். ஆட்சியாளர்களை யார் வேண்டுமானாலும் எப்போதும் எட்ட முடியும் என்கிற நம்பிக்கையை விதைத்திருக்கிறது இந்த நூறு நாள் ஆட்சி''
ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சியின் 100 நாள் செயல்பாடுகள் எப்படி இருந்தது என்ற உங்கள் கருத்தை கமெண்டில் பதிவிடுங்கள்..!
source https://www.vikatan.com/government-and-politics/politics/the-100-day-rule-of-stalins-government-growth-path-or-bitter-experience
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக