'உங்களுக்கு 10 லட்சம் அமெரிக்க டாலர்கள் பரிசாக கிடைத்திருக்கிறது. அதனை பெறுவதற்கு ரூ. 9.20 லட்சம் வரி செலுத்த வேண்டும்' என்று குறுஞ்செய்தி மூலம் வலை விரித்து, கரூர் விவசாயியை ஏமாற்றிய மூன்று டெல்லி இளைஞர்களை கரூர் போலீஸ் கைது செய்திருப்பது, பொதுமக்களின் பாராட்டுகளை பெற்றிருக்கிறது.
Also Read: `நான் அதை கண்டுக்கிறதே இல்லை’ -வங்கியின் சொத்து விற்பனை அறிவிப்புக்கு கே.சி.பழனிசாமியின் ரியாக்ஷன்
கரூர் மாவட்டம், வெங்கமேடு அருகில் உள்ள சின்னகுளத்துப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் கண்ணையன் (வயது: 54). விவசாயியான இவருக்கு கடந்த 2014 - ஆம் ஆண்டு ஆன்லைன் வழியே 10 லட்சம் அமெரிக்க டாலர் பரிசுத்தொகை விழுந்ததாக, போன் மூலம் குறுஞ்செய்தி வந்துள்ளது. அதோடு, கண்ணையனிடம் போனில் பேசிய நபர், 'பரிசுத் தொகையை பெறுவதற்கு முன்பாக வருமான வரித்துறைக்கு வரி செலுத்த வேண்டும்' என்று கூறி, 9.20 லட்சம் ரூபாயை எஸ்.பி.ஐ மற்றும் ஐ.சி,ஐ,சி.ஐ ஆகிய வங்கிகளில் உள்ள சேமிப்பு கணக்கிற்கு செலுத்தும்படி கூறியுள்ளார். அதை உண்மை என்று நம்பிய கண்ணையன், மர்ம நபர் போனில் சொன்னபடி, வெங்கமேடு லட்சுமி விலாஸ் வங்கி கிளை மூலமாக டெல்லியைச் சேர்ந்த முன்வர் நஜார் (வயது: 26) என்பவரது வங்கிக் கணக்கில் செலுத்தியுள்ளார். ஆனால், சில நாட்களில் பணத்தை பெற்றுக்கொண்ட அந்த நபர்கள், கண்ணையனிடமிருந்து தொடர்பைத் துண்டித்துக்கொண்டனர்.
இதனால், சந்தேகமடைந்த கண்ணையன் இதுதொடர்பாக கரூர் மாவட்ட குற்றப் பிரிவில் கடந்த 2014 - ஆம் ஆண்டு புகார் அளித்தார். கடந்த 6 வருடங்களாக இந்த வழக்கில் போதிய முன்னேற்றம் இல்லாமல் இருந்துள்ளது. இந்த நிலையில், சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடுத்தார். அந்த வழக்கை விசாரணை செய்த நீதிமன்றம், உடனடியாக குற்றவாளிகளை கைது செய்ய சி.பி.சி.ஐ.டி போலீஸாருக்கு ஆணை பிறப்பித்தது.
சென்னை காவல்துறை சி.பி.சி.ஐ.டி இயக்குநர் உத்தரவின்பேரில், இதுதொடர்பாக கரூர் சி.பி.சி.ஐ.டி காவல் ஆய்வாளர் திலகாதேவி தலைமையிலான தனிப்படை போலீஸார், கடந்த சில தினங்களுக்கு முன்பாக டெல்லி சென்று, பல்வேறு கோணங்களில் விசாரணை செய்துள்ளனர். அவர்களின் விசாரணையின் முடிவில், விவசாயி கண்ணையன் பணம் செலுத்திய வங்கி கணக்குகளை கொண்டு ஆய்வு செய்ததில், டெல்லி ரயில்வே ரோடு, ஆசாத்புர், பப்பு பால் கடை தெருவைச் சேர்ந்த முன்வர் நஜார் (26), சொகில் அன்சாரி (24), மகேஷ் (29) ஆகிய மூன்று நபர்களையும், கடந்த ஜூலை 30 - ஆம் தேதி குற்றவாளிகள் என்று உறுதி செய்து, கைது செய்தனர். பின்னர், டெல்லி நீதிமன்றத்தில் அவர்களை ஆஜர்படுத்திய போலீஸார், விமானம் மூலம் 3 நபர்களையும் திருச்சி அழைத்து வந்தனர். தொடர்ந்து, ஆய்வாளர் திலகாதேவி தலைமையிலான போலீஸார், மேற்படி 3 நபர்களையும் ஆகஸ்ட் 2 - ஆம் தேதி மாலை கரூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் எண் - 2 ல், நீதிபதி ஆர்.சுஜதா முன்னிலையில் ஆஜர்படுத்தினர்.
Also Read: தஞ்சாவூர்: கலெக்டர் பெயரில் புது டெக்னிக்; நோ ரிஸ்க்! -பணம் பறிக்கும் மோசடி தம்பதி சிக்கியது எப்படி?
வழக்கை விசாரித்த நீதிபதி, மூவரையும் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். நீதிமன்ற உத்தரவை அடுத்து குற்றவாளிகள் மூவரும் குளித்தலை கிளை சிறையில் அடைக்கப்பட்டனர். கரூர் விவசாயி ஒருவரிடம் லட்சக்கணக்கில் பணத்தை நூதனமாக ஏமாற்றிய மூன்று இளைஞர்களை 7 வருடங்கள் கழித்து கரூர் போலீஸார் டெல்லி வரை சென்று பிடித்திருப்பது, பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
source https://www.vikatan.com/news/crime/3-delhi-youths-arrested-in-cyber-case-related-to-karur-farmer
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக