Ad

திங்கள், 26 ஜூலை, 2021

ஜெமீமா ரோட்ரிக்ஸ்: தடைகளைத் தகர்த்தவர்! The Hundred-ல் அப்படியொரு இன்னிங்க்ஸ் எப்படிச் சாத்தியமானது?

'The Hundred' இந்த வெப் சீரிஸைப் பார்த்தவர்களுக்கு நன்றாகவே தெரியும், அது எந்தளவுக்கு, நொடிக்கு நொடி, சுவாரஸ்யங்கள், ஆச்சர்யங்கள், திருப்பு முனைகளைக் கொண்டது என்று. அதே த்ரில்லர் அனுபவத்தைத் தரக் கூடியதாக, "உங்கள் உள்ளக் கிளர்ச்சிக்கு நாங்கள் உத்தரவாதம்" எனும் வகையில் நடந்து வருகிறது, 'The Hundred'-ன் முதல் சீசனும்.
புது ஃபார்மட், புதுப்புது விதிகள் என மாற்றம் ஒன்றே மாறாததெனும் தத்துவத்தை உண்மையாக்கும் வகையில் தொடங்கப்பட்ட இத்தொடரில், பெண்கள் பிரிவில், 92 ரன்களை விளாசி, இந்தியாவின் ஜெமிமா ரோட்ரிக்ஸ், கிரிக்கெட் உலகத்தை, ஓரிரு மணிநேரம் ஸ்தம்பிக்க வைத்துவிட்டார்.

ஓவர்கள் என்ற பிரிவினை எல்லாம் எங்களுக்குப் பிடிக்காது என, ஒட்டுமொத்தமாக 100 பந்துகள் வீசப்படும் இந்த ஃபார்மட்டில் ஆட முதல் முதலாகக் களமிறங்குகிறார் ரோட்ரிக்ஸ். அதுவும் எப்படி ஒரு சூழ்நிலையில் எனில், தனது தேசிய அணியிலிருந்தே மோசமான ஃபார்ம் காரணமாக விலக்கி வைக்கப்பட்டிருந்த சமயத்தில்! சமீபத்தில் நடந்து முடிந்த இங்கிலாந்துக்கு எதிரான தொடரில், இரண்டு ஒருநாள் போட்டிகளில் வாய்ப்பளிக்கப்பட்ட போதும் வெறும் 8 மற்றும் 4 ரன்களால் அவர் ஏமாற்றம் அளிக்க, அதற்கடுத்த டி20 தொடரில் அவருக்கான வாய்ப்பு மறுக்கப்பட்டது. அந்தத் தொடரை இந்தியா இழந்திருந்தாலும், அணியில் ரோட்ரிக்ஸின் இடமும், கேள்விக்குறியானது. மனதளவில் இது அவரைக் காயப்படுத்த, அவர் தன்னை நிரூபிக்க வேண்டிய அவசியமும் வந்தது.

ஜெமீமா ரோட்ரிக்ஸ்

சவால்கள்தானே சாமான்யனைக் கூட சாம்பியன்களாக மாற்றும் சோதனைக் கூடங்கள். அதுதான் நடந்தது இந்தக் குறிப்பிட்ட போட்டியிலும்!

நிரூபிக்கக் கிடைத்த தளம், அவருக்கு முற்றிலும் புதுமையானது. அதுவும், மிக இக்கட்டான நிலையில்தான், அவருடைய வருகை இருந்தது. அவரது அணிக்கு எதிராக ஆடிய வேல்ஸ் ஃபயர் உமன் அணி, 131 ரன்களை இலக்காக நிர்ணயிக்க, அதைத் துரத்திக் களமிறங்கியது, ரோட்ரிக்ஸின் நார்தர்ன் உமன் சார்ஜர்ஸ் அணி. இங்கிலாந்தின் மிகச்சிறந்த வீராங்கனைகளில் ஒருவரான வின்ஃபீல்டுடன்தான் ரோட்ரிக்ஸ் ஓப்பனிங்கில் இறங்கினார்.

இரண்டு பந்துகளை மட்டுமே சந்தித்து டக் அவுட்டாகி வெளியேறினார் வின்ஃபீல்ட். அடுத்து ஒன்டவுனில் இறங்கிய உல்வர்டும் ஒரு ரன்னோடு வெளியேற, அழுத்தம் அதிகரிக்க ஆரம்பித்தது நார்தர்ன் உமன்சார்ஜர்ஸின் பக்கம். அது ரோட்ரிக்ஸின் பொறுப்பையும் அழுத்தத்தையும் இரட்டிப்பாக்கியிருக்க வேண்டும். காரணம், உல்வர்டின் ரன்அவுட்டில் ரோட்ரிக்ஸின் பங்கும் இருந்தது.

இரண்டு விக்கெட்டுகள் விழுந்த நிலையில், தன் மீது படிந்திருந்த பதற்றத்தை, மேத்யூஸின் பந்தை பவுண்டரிக்கு அனுப்பி வைத்துத் தணித்தார் ரோட்ரிக்ஸ். இதன் பிறகு, அர்மிடேஜின் விக்கெட்டை வீழ்த்திய வேல்ஸ், ஹாட்ரிக் பவுண்டரி அடித்த பெஸ்ஸையும் வெளியேற்றி மும்மடங்காக அழுத்தத்தை அதிகரிக்க, 18 பந்துகளில் 19 ரன்களோடு நான்கு விக்கெட்டுகள் என்று வந்து நின்றது நார்தர்ன் உமன்சார்ஜர்ஸின் ஸ்கோர்.

எஞ்சியிருப்பது 82 பந்துகள்தான், எடுக்க வேண்டியதோ 112 ரன்கள்! நான்கு டாப் ஆர்டர் பேட்டர்கள் விடைபெற்று விட்ட நிலையில், மொத்த பாரமும் ரோட்ரிக்ஸின் தோளில் சுமத்தப்பட்டது. சங்கடமும் சஞ்சலமும் நிறைந்த நிலைதான்; எனினும், ஆகச்சிறந்த நெருக்கடிகள்தானே, தங்களுக்குள், ஆசிர்வாதங்களையும் ஒளித்து வைத்துள்ளன?! ரோட்ரிக்ஸ் அதனை அப்படித்தான் பார்த்தார். கையறு நிலையில், முழுமையாக தன் திறமையை மட்டுமே நம்பி ஆடத் தொடங்கினார். 3 பந்துகளில், 5 ரன்களை மட்டுமே எடுத்திருந்த அவர், மேத்யூஸின் பந்தை பவுண்டரிக்கு விரட்டி தனது அதிரடி ஆட்டத்துக்கான அடிக்கல்லை நாட்டினார்.

ஜெமீமா ரோட்ரிக்ஸ்

பவர்பிளே, 25 பந்துகளோடு முடிவுக்கு வர வெறும் 24/4 என தள்ளாடியது நார்தர்ன் உமன்சார்ஜர்ஸ். பில்டப் ஆன பிரஷரை, எதிரணியின் மேல் எதிரொளிக்கச் செய்ய, பிரையோனி ஸ்மித்தின் பந்தை இறங்கி வந்து ஓவர் த மிட் ஆஃபில் சிக்ஸருக்கு அனுப்பினார் ரோட்ரிக்ஸ். அதற்கடுத்த பந்தே ஸ்கொயர் லெக்கில் பவுண்டரியாக, இரண்டே பந்தில் எல்லாம் மாறத் தொடங்கியது.

பதறிய வேல்ஸ் அணி ஜாரிஜியாவைக் கொண்டு வர, அவரது பந்துகளும் பலத்த சேதத்துக்குள்ளாகின. மறுபுறம் இருந்த ஆலிஸ் ரிச்சர்ட்ஸும், நன்றாகவே ஒத்துழைக்க, பந்துகளை வீணடிக்காது, ரன்களாக மாற்றிக் கொண்டே இருந்து, கிடைத்த இடைவெளியில் எல்லாம், பவுண்டரிகளை அடிக்கத் தொடங்கினார்.

விக்கெட்டை விட்டு விடக் கூடாது என்பதில் அதீத கவனம் செலுத்தினார் ரோட்ரிக்ஸ். அவரது மொத்த இன்னிங்க்ஸுக்கும் ஒரு சிக்ஸர்தான் வந்திருந்தது. நார்தர்ன் உமன்சார்ஜர்ஸின் ஒட்டுமொத்த சிக்ஸர்களின் எண்ணிக்கையே அவ்வளவுதான். பெரும்பாலும், ஏரியல் ஷாட்டுகளைத் தவிர்த்து, மிக கவனமாக கிரவுண்டட் ஷாட்களையே ரோட்ரிக்ஸ் ஆடிக் கொண்டிருந்தார்.

பதறிய எதிரணியின் கேப்டன் ஷோஃபி, வேகப்பந்து வீச்சுக்கும், சுழல்பந்து வீச்சுக்கும் நடுவில், சுழற்சி முறையில் போய் வந்து கொண்டிருந்தார். ஆனால், ரோட்ரிக்ஸின் திட்டம் தெளிவாக இருந்தது. "எந்த லைனில் வந்தாலும், எந்த லெந்த்தில் வந்தாலும் ரன்களாக மாற்றுவேன், அதன் துல்லியத்துக்கு ஏற்றாற் போல், பௌலரை மதித்து, 1-ல் இருந்து 4-வரை ரன்களை எடுத்துக் கொள்வேன்" என்பதில் மிக உறுதியாக இருந்தார்.

கவர், ஷார்ட் கவர், பாயிண்ட், மிட் ஆஃப், தேர்ட் மேன் என எல்லா ஃபீல்டிங் பொசிஷனில் இருந்த ஃபீல்டர்களுக்கும் வேலை வைத்தார். ஹார்வேயின் பந்துகளைக் கலங்கடித்து, "பவுண்டரி லைனைப் பார்த்து வா!" என்று அனுப்பி வைத்தார், அதுவும் ஹாட்ரிக்காக! அந்த ஹாட்ரிக்கின் இரண்டாவது பந்திலேயே, எக்ஸ்ட்ரா கவர் டிரைவ் பவுண்டரியோடு, ரோட்ரிக்ஸின் அரை சதமும் வந்து சேர்ந்தது. வெறும் 26 பந்துகளில், அரை சதத்தை எட்டினார் ரோட்ரிக்ஸ்!

ஜெமீமா ரோட்ரிக்ஸ்
அந்தக் கட்டத்திலேயே, 40 ரன்களில் 47 மட்டுமே தேவை என மிக அருகில் இலக்கு வந்து விட்டது. அதுவரை கை ராட்டினத்தில் அமரவைத்து பௌலர்களையும், ஃபீல்டர்களையும் சுற்ற வைத்தவர், அதன்பிறகு, "ரோலர் கோஸ்டரில் சென்று வாருங்களேன்!" என திகில் சுற்றுலா அனுப்பி வைத்தார். அவர் அடித்த 17 பவுண்டரிகளில், 9 பவுண்டரிகள் அவர் அரைசதம் அடித்த பின்பு விளையாடிய அடுத்த 17 பந்துகளில் வந்தவைதான்.

கேப்டன் சோஃபியும் கதிகலங்கி, இந்த விக்கெட் விழுந்து விட்டால் எல்லாம் முடிந்து விடும் என்பதால், கிளையரி, பிரையோனி, ஆலிஸ் மேக்லியோட், அலெக்ஸ் கிரிஃப்த்ஸ் என ஒவ்வொருவராகச் சோதித்துப் பார்த்தார். ஒலிம்பிக் தீப ஓட்டம் போல, ஒவ்வொரு கையிலும் மாறி மாறிச் சென்று கொண்டிருந்தது பந்து. ஆனால் பலனில்லை, விக்கெட்டும் விழவில்லை, இலக்கும் எட்டப்பட்டது! இன்னமும் 30 ரன்கள் தேவைப்பட்டிருந்தால் கூட, அதையும் அடித்து தனது சதத்தையும் தொட்டிருப்பார் ரோட்ரிக்ஸ், அந்த உத்வேகத்தோடுதான், கடைசி வரை அவர் ஆடிக் கொண்டிருந்தார்.

Also Read: ஐபிஎல் கிரிக்கெட்டுக்குப் போட்டி... புதிய ஃபார்மேட், புதிய விதிகள்! எப்படியிருக்கும் `The Hundred'?

ஒருகட்டத்தில், 'கடைசிப் பந்தைச் சந்திக்க பேட்டர்கள் மீதமிருப்பார்களா, அப்படியே இருந்தாலும், இலக்கை நெருங்க முடியுமா?!' எனத் தத்தளித்த அணியை, 15 பந்துகள் மீதமிருந்த நிலையிலேயே வெல்ல வைத்துவிட்டார் ரோட்ரிக்ஸ். அரைசதத்தை, 26 பந்துகளில் கடந்த ரோட்ரிக்ஸ், அதற்பிறகு, வெறும் 17 பந்துகளில், 40 ரன்களைக் குவித்திருந்தார்.

மொத்தமாக, 43 பந்துகளைச் சந்தித்த, ரோட்ரிக்ஸ், 92 ரன்களை வாரிக் குவித்து விட்டார். அவரைத் தவிர்த்து மற்ற வீராங்கனைகள் இணைந்து எடுத்த ரன்கள், 43 பந்துகளில், வெறும் 37 மட்டுமே (இரண்டு உதிரிகள் தவிர்த்து) என்பதுதான் சிறப்பே. அதாவது, அணியின் ஸ்கோரில் ஏறத்தாழ, 70 சதவிகிதம், ரோட்ரிக்ஸின் பேட்டில் இருந்து வந்ததுதான். இந்த சீசனில், இதுவரை ஒரு வீராங்கனை அடித்துள்ள ரன்களில் இதுதான் அதிகம் என்பதுதான் கூடுதல் சிறப்பு. ஆறு விக்கெட்டுகள் வித்தியாசத்தில், அபார வெற்றி பெற்றது நார்தர்ன் உமன்சார்ஜர்ஸ்! இந்த வெற்றி மூலம் புள்ளிப் பட்டியலில் இரண்டாம் இடத்துக்கு முன்னேறிய அணி, தற்போதைய நிலவரப்படி, மூன்றாம் இடத்தில் இருக்கிறது.

தினேஷ் கார்த்திக் முதல், கெவின் பீட்டர்சன் வரை, இந்த இருபது வயது இளம்புயலின் மாஸ்டர் கிளாஸைப் பாராட்டி ட்வீட்களை வெளியிட்டுள்ளனர். ரோட்ரிக்ஸோ, "இது தனிப்பட்ட வகையில், எனக்கு முக்கியமான இன்னிங்க்ஸ்" என்று குறிப்பிட்டுள்ளார்.

அடித்து வீழ்த்தி கீழே தள்ளப்படும் போது, உடைந்த சிறகுகள் கூட தானாக விரியும்தானே!? வாழ்க்கை நமக்குள் கடத்தும் வலிகளுக்கான நமது பதில், "முடிந்தால் முடித்துப் பார்" என்பதாகவே இருக்க வேண்டும். அதையே செய்து காட்டி உள்ளார், ரோட்ரிக்ஸ்!


source https://sports.vikatan.com/cricket/20-year-old-jemimah-rodrigues-incredible-innings-in-the-hundred-series

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக