Ad

திங்கள், 26 ஜூலை, 2021

சுற்றுச்சூழல் பாதிக்குமென தெரிந்தும் அணை கட்ட துடிப்பது ஏன்? - மேகதாது விவகாரம்

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை, வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

ஒவ்வொரு வருடம் மழைக்காலம் வரும்போதெல்லாம் மாறாமல் காவிரி நீர் பிரச்சனையும் சேர்ந்தே வரும். நடந்தாய் வாழி காவேரி என்பது போய் தீர்ப்பாய் வாழி காவேரி என மாறி தமிழகத்திற்கு போராடாமல் தண்ணீர் கிடைத்ததில்லை. சில ஆண்டுகளாக இப்பிரச்சனை மேகதாது வடிவில் வருகிறது. மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்டும் பிரச்சனை தமிழக மக்களுக்கு பெரும் தலைவலியாய் வந்துவிட்டது.

கர்நாடக மாநிலம் ராம்நகர் மாவட்டம் கனகபுரா பகுதியில் உள்ளது மேகதாது. ஒகேனக்கல்லில் இருந்து 15 கிலோ மீட்டர் தொலைவிலும் பெங்களூருவில் இருந்து 110 கிலோ மீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது. இங்கு தான் கர்நாடக அரசு ரூ.6000 கோடி மதிப்பில் புதிய அணை கட்ட முயற்சித்து வருகிறது.
ஆடு தாண்டுதல் எனப் பொருள் கொண்ட மேக்கேதாட்டு.. முன்பு ஒரு காலத்தில் காவிரி ஆற்றை ஆடுதாண்டும் அளவிற்கு குறுகியதாய் இருந்ததால் இப்பெயர் காரணப்பெயராய் வந்தது. குடிநீர்த் தேவைக்காகவும், மின் தேவைக்காகவும் மேகதாது அணை கட்டுவதாக கர்நாடக அரசு கூறினாலும்.. நதி நீர் உற்பத்தியாகும் மாநிலம்.. அந்நதிநீர் பங்கீட்டு உரிமையுள்ள மாநிலங்களின் அனுமதி பெறாமல் கட்ட கூடாது என்ற விதிமுறையையும் மீறி அணை கட்ட கர்நாடகம் உறுதியாய் இருக்கிறது. ஆரம்ப கட்ட திட்ட அறிக்கைக்கு மத்திய நீர்வளத்துறை ஆணையத்திடம் அனுமதி பெற்றுவிட்டதால்..இறுதி அறிக்கையின் ஒப்புதலை பெற காத்திருக்கிறது கர்நாடகம்

River Cauvery

#காவிரி விவகாரம்

அகத்தியர் வைத்திருந்த கமண்டலத்தைக் காகம் தட்டிவிட்டதால் காவிரி வந்ததாய் உருவகப்படுத்துகிறது புராணம். குடகு மலையில் உற்பத்தியாகும் காவிரி கர்நாடகத்தில் 320கிலோ மீட்டரும், தமிழக எல்லையில் 64 கிலோமீட்டரும், தமிழகத்தில் 416 கிலோமீட்டரும் என 800கிலோமீட்டர் பயணித்து பூம்புகாரில் கலக்கிறது.

இயற்கையாய் பயணித்த காவிரி இன்று சட்டப் போராட்டம் நடத்தி உச்சநீதி மன்ற தீர்ப்பு வந்ததால் காவிரி தமிழகத்துக்கு வந்திருப்பது நினைவில் கொள்ள வேண்டிய செய்தி.

நூறாண்டுகளாக இருக்கும் காவிரி நதிநீர்ப் பங்கீட்டு பிரச்சனை, சட்டப் போராட்டத்தின் விளைவாய் 1991ல் உச்சநீதிமன்றம் வழங்கிய இடைக்காலத் தீர்ப்பில் 205 T.M C வழங்க உத்தரவிட்டு பின் இறுதித்தீர்ப்பில்(05-02-2007) 192 T.M.C தமிழகத்துக்கு வழங்க உத்தரவிட்டது.

ஆனால் மேல்முறையீட்டு வழக்கில் கர்நாடகாவுக்கு 270 டிஎம்சி நீரும், தமிழகத்துக்கு 177.25 T.M.C வழங்கும் படி இறுதித்தீர்ப்பு வந்தது.

(ஒரு கன அடி நீர் 28.3லிட்டர். ஒரு T.M.C என்பது 2830 கோடி லிட்டர்)

ஒரு ஏக்கர் நீரில் பத்தாயிரம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும். தமிழகத்தில் 24 லட்சம் ஏக்கர் பரப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நீராவது கிடைக்கும் என எதிர்பார்ப்பில் இருந்த மக்களுக்குத் தான் இடி வந்து விழுந்தது மேகதாது விவகாரத்தில். இத்தனை லட்சம் ஏக்கர் பாசன வசதியும் நம்பியுள்ளது காவிரியை மட்டுமே. இந்த விவகாரத்தில் ஓட்டு வங்கியை நினைவில் வைத்து கர்நாடகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் அணை கட்டுவதில் முனைப்பு காட்டுகிறது. ஆனால் இந்த அணையினால் சுற்றுச்சூழல் பாதிக்குமென அறிக்கை அளித்துள்ளனர் சூழலியல் ஆய்வாளர்கள். ஏற்கனவே கிருஷ்ணராஜ சாகர் அணையில் 49TMC சேர்த்து வைக்கும் நிலையில் மேகதாதுவில் 69.16 TMC நீர்த் தேக்கம் செய்தால் தமிழகத்துக்கு நீர் கிடைப்பது கானல் நீராகிவிடும்.

காவிரி ஆறு

#கர்நாடக அணைகள்

சென்னை ராஜதானி-கர்நாடகம் இடையே ஏற்பட்ட ஒப்பந்தப்படி கிருஷ்ணராஜ சாகர் அணை (124.8 அடி) 1911ல் துவங்கப்பட்டு 1933ல் கட்டி முடிக்கப்பட்டது. 48.45 டி எம்.சி தேக்கப்பட்டு திறந்துவிடப்படும் நீர் மேகதாது, ஒகேனேக்கல் வழியே மேட்டூர் வந்து அடையும்.

மேட்டூர் அணையின் மொத்த நீர்மட்டம், 120 அடி. கொள்ளளவு 93.47 டி.எம்.சி., ஆகும்.

1924ம் ஆண்டு ஒப்பந்தப்படி ஐம்பது ஆண்டுகளுக்கு 575 டி.எம்.சி நீர்வழங்கியது. 1974ல் ஒப்பந்தம் புதுப்பிக்காமல் காலாவதியானதாக கூறி காவிரி மற்றும் துணையாறுகளின் இடையே அணைகளை கட்டத் துவங்கியது கர்நாடகம்.

காவிரி ஆற்றின் துணை ஆறுகளான ஹேமாவதி ஆற்றில் 1979ம் ஆண்டு கட்டப்பட்டது. அதேபோல் மற்றொரு துணையாறான கபிலாவின் குறுக்கே கபினி அணை 1974ல் கட்டியது.19.05 டி.எம்.சி கொண்ட இது பெங்களுருவின் குடி நீர்த்தேவையை பூர்த்தி செய்கிறது. ஹேமாவதி, ஹேரங்கி,கபினி மற்றும் கிருஷ்ணராஜ் சாகர் அணைகளை தாண்டி தான் காவிரி தமிழகத்திற்கு வருகிறது.கபினியில் இருந்து திறந்துவிடப்படும் நீர் கபிலா ஆறு வழியாகவும்,கே.ஆர்.எஸ் அணையிலிருந்து திறந்து விடப்படும் நீர் காவிரி வழியாகவும் வந்து மைசூர் மாவட்டம் டி.நரசிப்புரா பகுதியில் உள்ள திருமாகூடலு பகுதியில் ஒன்றிணைந்து அகண்ட காவிரியாய் தமிழகத்திற்கு வருகிறது.

இந்த நான்கு அணைகளைத் தாண்டி ஐந்தாவதாக மேகதாது அணை 2015ல் கட்ட 66 டி.எம்.சி நீரை தேக்க தீர்மானித்தது.

2018ம் ஆண்டு மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. ஆனாலும் தமிழ்நாட்டின் ஒப்புதல் இல்லாமல் கர்நாடகா அரசு மேகதாது அணை கட்ட முடியாது என காவிரி மேலாண்மை வாரியம் விளக்கம் அளித்ததால்.. தற்போது வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. தமிழகத்தின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் செயல் என்று அனைவரும் கருதுகின்றனர்.

ஒவ்வொரு முறையும் பருவ மழை காலத்தில் தமிழகத்தில் மழை பெய்யும் போது.. காவிரியில் ஏற்படும் வெள்ளப் பெருக்கினை பயன்படுத்திக் கொண்டு கர்நாடகம் மழையோடு மழையாக காவிரி நீரை திறந்து விடுகிறது. விவசாயத் தேவைக்கு பயன்படாமல் வெள்ளத்தோடு வெள்ளமாக கடலில் கலக்கிறது. தமிழகத்திற்கு தர வேண்டிய நீரை தந்துவிட்டோம் என கணக்கு காட்டிவிடுகிறது கர்நாடகம் .டெல்டா விவசாயத்திற்கு தேவைப்படும் காலங்களில் நீர் கிடைக்காமல் திண்டாடுவது வாடிக்கையாகிவிட்டது. எனவே தமிழகத்திற்கு தர வேண்டிய நீரினை அன்றாடம் பங்கிட்டு அமல்படுத்தும் படி வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

cauvery river

'ஆனி பிறந்து விட்டால் ஆறு கரை புரளும், ஆறெல்லாம் மீன் புரளும் என்ற முதுமொழிக்கேற்ப ஆடி பிறந்தால் விதை விதைப்பதைத் தான் ஆடிப்பட்டத்தில் தேடி விதை என்பார்கள். உரிய காலத்தில் நீர் வந்தால் தான் உற்பத்திக்கு உதவும். மத்திய அரசு தலையிட்டு உரிய தீர்வு காண வேண்டும். காவிரி மேலாண்மை வாரியத்திற்கு முழு நேரத்தலைவரை நியமிக்க வேண்டும். நடுவர் மன்ற விதிப்படி உரிய ஆய்வு நடத்தி குறிப்பிட்ட கால இடைவெளியில் கூட வேண்டும்.


இத்தனை சட்ட விதிகள் இருந்தும் தமிழகத்திற்கு தண்ணீர் தர இழுத்தடிக்கும் கர்நாடக அரசு.. அணைகட்டினால் மழை இல்லை என்பதை காரணம் காட்டி சுத்தமாய் தண்ணீர் தருவதை நிறுத்திவிடும். தமிழகத்துக்கு நியாயமாக கிடைக்க வேண்டிய நீரை பெறவும்,புதிய அணை கட்டுவதைத் தடுக்கவும் தமிழக அரசு சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
நடுவர் மன்றத்திற்கு உட்பட்ட அணைகளை காவிரி நடுவர் மன்றம் கண்காணிக்க வேண்டும்.இனி எந்த வித அணை கட்டுவதற்கும் அனுமதி பெற்ற பின்னே துவங்க உத்தரவிட வேண்டும்.மேலாண்மை வாரியத்திற்கு முழு அதிகாரம் கொடுத்து..சுதந்திரமாய் செயல்பட அனுமதித்தால் தான் தீர்வு காண முடியும். நடுவர் மன்றத் தீர்ப்பின்படி தங்குதடையின்றி தமிழகத்திற்குநீர் தர வேண்டும். "ஒருத்தரோட பிரச்சனை மத்தவங்களுக்கு எப்பவும் வேடிக்கையாதான் இருக்கும்" என்பார் அசோகமித்திரன்.இந்தப் பிரச்சனையை வேடிக்கை பார்க்காமல் உடனடியாய் பிரச்சனையை களையுமா மத்திய அரசு என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

-மணிகண்டபிரபு

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/



source https://www.vikatan.com/oddities/miscellaneous/controversies-around-mekedatu-dam-issue

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக