Ad

வெள்ளி, 16 ஜூலை, 2021

`ஸ்டாலின் கொடுத்த வாக்குறுதி; நிறைவேற உதவுவாரா உதயநிதி?' - காத்திருக்கும் மருத்துவர்கள்!

ஊதிய உயர்வு உள்ளிட்ட நான்கு முக்கியமான கோரிக்கைகளுடன் அரசு மருத்துவர்கள் சென்னை ராஜீவ் காந்தி பொதுமருத்துவமனை முன்பு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் சாகும்வரை உண்ணாவிரதம் இருந்தனர். ஒட்டுமொத்த அரசு மருத்துவர்களும் போராட்டம் நடத்தியும், அவர்களின் கோரிக்கைகளை ஏற்க அன்றைய எடப்பாடி பழனிசாமி அரசு தயாராக இல்லை. அரசு மருத்துவர்களின் போராட்டம் தீவிரமடைந்த நேரத்தில், அப்போது சுகாதாரத் துறை அமைச்சராக இருந்த விஜயபாஸ்கர், மணப்பாறை அருகே ஆழ்குழாய் கிணற்றில் விழுந்த சிறுவனை மீட்கும் பணிக்கு போய்விட்டார்.

உதயநிதியுடன் அரசு மருத்துவர்கள்

மருத்துவர்களின் கோரிக்கைகளை ஏற்க முடியாது என்பதில் உறுதியாக இருந்த அ.தி.மு.க அரசு, 118 மருத்துவர்களை வெவ்வேறு இடங்களுக்கு அதிரடியாக பணியிடமாற்றம் செய்தது. பல அரசியல் தலைவர்கள் நேரில் சென்று சாகும்வரை உண்ணாவிரதமிருந்த அரசு மருத்துவர்களின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தனர். அப்போதைய எதிர்க் கட்சித் தலைவரான ஸ்டாலினும் நேரில் சென்று அரசு மருத்துவர்களுக்கு ஆதரவு தெரிவித்தார். அப்போது, “உங்கள் கோரிக்கைகளை முழுமையாக ஆதரிக்கிறேன். கவலைப்படாதீர்கள். அடுத்து தி.மு.க ஆட்சிதான் வரப்போகிறது. உங்கள் கோரிக்கைகள் நிச்சயம் நிறைவேற்றப்படும்” என்று உறுதியளித்தார். மேலும், “சாகும்வரை உண்ணாவிரதம் இருந்து உங்கள் உடலை சிரமப்படுத்திக்கொள்ள வேண்டாம்” என்று மருத்துவர்களை ஸ்டாலின் கேட்டுக்கொண்டார்.

போராட்டம் தீவிரமடைந்த நிலையில், 'உடனடியாக பணிக்குத் திரும்பாவிட்டால் புதிய மருத்துவர்கள் நியமிக்கப்படுவார்கள்’ என்று அரசு எச்சரித்தது. அதைத்தொடர்ந்து, போராட்டத்தைக் கைவிட்டு மருத்துவர்கள் பணிக்குத் திரும்பினர். தற்போது, ஆட்சி மாற்றம் நிகழ்ந்து தி.மு.க அதிகாரத்துக்கு வந்த பிறகு, போராட்டத்தின்போது தங்களுக்கு அளித்த வாக்குறுதியை முதல்வர் ஸ்டாலின் நிறைவேற்றுவார் என்று அரசு மருத்துவர்கள் காத்துக்கொண்டிருக்கிறார்கள்.

அரசு மருத்துவர்களின் போராட்டத்தை தலைமை தாங்கி நடத்திய டாக்டர் லெட்சுமி நரசிம்மன் கடந்த ஆண்டு மாரடைப்பால் காலமானார். அவரின் மனைவி அனுராதா, அமைச்சர் மா.சுப்பிரமணியனை சந்தித்து அரசு மருத்துவர்களின் கோரிக்கைகள் தொடர்பான மனு அளித்து முறையிட்டார்.

அரசு மருத்துவர் போராட்டத்தில் ஸ்டாலின்

2009-ம் ஆண்டு கருணாநிதி தலைமையிலான தி.மு.க ஆட்சியில் போடப்பட்ட அரசாணை 354-ன் படி, அரசு மருத்துவர்களின் ஊதியக் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என்பது அரசு மருத்துவர்களின் கோரிக்கைகளில் முக்கியமானது. அவற்றை நிறைவேற்ற வேண்டும் என்று மருத்துவர்கள் வலியுறுத்திவருகிறார்கள். அதை நிறைவேற்றுவதாகத்தான் கடந்த ஆண்டு ஸ்டாலின் உறுதிமொழி அளித்திருக்கிறார். ஆனால், அரசாணை 354-ஐ செயல்படுத்தாமல், அரசாணை 293 என்கிற ஒன்றை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இது தங்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்திருப்பதாக அரசு மருத்துவர்கள் கூறுகிறார்கள். மேலும் அவர்கள், ‘தமிழ்நாட்டில் பணியாற்றும் 18,000 அரசு மருத்துவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி’ என அவர்கள் குறிப்பிடுகிறார்கள். 2009-ம் ஆண்டு தி.மு.க ஆட்சியில் போடப்பட்டு, கடந்த 10 ஆண்டுகளாகக் கிடப்பில் இருக்கும் அரசாணை 354-க்கு ஸ்டாலின் அரசு உயிர் கொடுக்க வேண்டும் என்பது அவர்களின் கோரிக்கையாக இருந்துவருகிறது.

இந்த நிலையில், மறைந்த மருத்துவர் லட்சுமி நரசிம்மனின் மனைவி அனுராதா மற்றும் அரசு மருத்துவர்கள் சிலர் தி.மு.க இளைஞரணி செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதியை சில தினங்களுக்கு முன் சந்தித்து தங்கள் கோரிக்கைகள் நிறைவேற உதவுமாறு வலியுறுத்தியுள்ளனர். அந்த சந்திப்பு குறித்து தன் ட்விட்டர் பக்கத்தில், ‘அரசு மருத்துவரின் உரிமைக்காக போராடி மறைந்த மருத்துவர் லட்சுமி நரசிம்மன் அவர்களின் மனைவி அனுராதா தன் குடும்பத்துடன் இன்று என்னை சந்தித்தபோது, தங்களுக்கான கோரிக்கைகளை விடுத்து, மருத்துவர்களுக்கான உரிமைகளை வலியுறுத்திப் பேசினார். அவரின் உறுதி, கொள்கைப்பிடிப்பு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது’ என்று குறிப்பட்டுள்ளார்.

ட்விட்டரில் உதயநிதி கருத்து

அந்த சந்திப்பு குறித்து நம்மிடம் பேசிய அரசு மருத்துவர்கள், “உதயநிதியுடனான சந்திப்பு எங்களுக்கு மகிழ்ச்சியையும் மனநிறைவையும் அளிக்கிறது. மற்ற மாநிலங்களில் உள்ள எம்.பி.பி.எஸ் மருத்துவர்களுக்கு தரப்படும் ஊதியத்தைவிட, தமிழகத்தில் பணிபுரியும் எம்.பி.பி.எஸ் மருத்துவர்கள், சிறப்பு மருத்துவர்கள் மற்றும் உயர் சிறப்பு மருத்துவர்களுக்கு குறைவான ஊதியமே தரப்படுகிறது என்பதை அவரிடம் தெரிவித்தோம். மற்ற மாநிலங்களில் உள்ள அரசு மருத்துவர்களுக்கு தரப்படும் ஊதியத்தை விட ரூ.40,000 குறைவாக தமிழ்நாடு அரசு மருத்துவர்களுக்கு தரப்படுவதாகவும் தெரிவித்தோம். மேலும், அரசாணை 354-ன் படி ஊதியக் கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி 17 ஆயிரம் மருத்துவர்கள் போராடினோம். ஆனால் கடந்த ஆட்சியில் போடப்பட்ட, மருத்துவர்களால் ஏற்றுக்கொள்ள முடியாத, ஊதியப்படிகள் மட்டும் தருவதற்கான அரசாணை 293 என்ற ஒன்றை தற்போது கொண்டு வந்துள்ளதை யாருமே எதிர்பார்க்கவில்லை என தெரிவித்தோம். அரசாணை 354 என்பது இளைய மருத்துவர்களுக்காக, கிராமப்புறங்களில் பணிபுரியும் மருத்துவர்களுக்காக கொண்டுவரப்பட்டது. கிராமப்புற சுகாதார கட்டமைப்பை வலுப்படுத்துவதற்கு உதவும் அரசாணைதான் இது என தெரிவித்தோம்.

Also Read: தென்னாப்பிரிக்கா கலவரம்: `ஜூமா கைது', `பெருந்தொற்று', `வறுமை' - உண்மை பின்னணி என்ன?!

கொரோனா பெருந்தொற்று பரவியதிலிருந்து கடந்த ஒன்றரை ஆண்டுகளாக அரசு மருத்துவர்கள் ஓய்வின்றி பணியாற்றி வருகிறார்கள். ஏராளமான உயிர்களைக் காப்பாற்றிவரும் அரசு மருத்துவர்கள் திடீரென இறந்துவிட்டால், அவர்களின் குடும்பத்தினருக்கு உதவுவதற்காக, மருத்துவர்களின் பங்களிப்பில் கார்ப்பஸ் பண்டு திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்பது எங்களின் பல ஆண்டு கால கோரிக்கை. அது பற்றியும் உதயநிதியுடன் எடுத்துரைத்தோம்.

அரசு மருத்துவர் போராட்டத்தின்போது ஸ்டாலின்

அவசரமாக வெளியூர் புறப்படத் தயாராக இருந்த அந்த நேரத்திலும், எங்கள் கோரிக்கைகளை பொறுமையாகக் கேட்டார். பின்னர், உங்கள் கோரிக்கைகளை முதல்வரின் கவனத்திற்கு உடனடியாக கொண்டு செல்கிறேன் என்று உறுதியளித்தார்” என்று உதயநிதியை சந்தித்த அரசு மருத்துவர்கள் நம்மிடம் தெரிவித்தனர்

அரசு மருத்துவர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்று கடந்த ஆண்டு அளித்த உறுதிமொழியை ஸ்டாலின் நிறைவேற்றுவரா.. ஸ்டாலினின் உறுதிமொழியை நிறைவேற்ற உதயநிதி உதவுவாரா என்று காத்திருக்கிறார்கள் அரசு மருத்துவர்கள்.



source https://www.vikatan.com/government-and-politics/politics/will-udhayanidhi-help-to-accomplish-the-assurance-given-by-stalin

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக