Ad

வெள்ளி, 16 ஜூலை, 2021

பா.ஜ.க-வின் கொங்கு ஸ்கெட்ச் - பாதிப்பு யாருக்கு? சமாளிக்குமா தி.மு.க!

தமிழ்நாடு அரசியலில் கடந்த சில நாள்களாக அனலைக் கிளப்பிக் கொண்டிருக்கும் வார்த்தை, ‘கொங்குநாடு’ சட்டசபைத் தேர்தலில் அ.தி.மு.க-வுக்கு அதிக தொகுதிகளை வழங்கியது கொங்கு மண்டலம். இதனால், அப்போது முதலே கொங்கு மண்டல அரசியல் தமிழ்நாடு முழுவதும் விவாதமாக மாறியது. ஒன்றிய அரசா..? மத்திய அரசா..? என்ற வாதம் பரவலாகி வந்த நிலையில்,

எல். முருகன்

Also Read: இந்தியா: ஒன்றியம் முதல் கொங்குநாடு வரை! -தனிமாநில கோரிக்கைகளும், மாநிலங்கள் உருவான வரலாறும்|பாகம் 1

தற்போது கொங்கு நாடா..? தமிழ்நாடா.? என்ற விவாததம் கிளம்பியிருக்கிறது. மத்திய இணை அமைச்சராகப் பதவியேற்ற முருகன், தன்னை, ‘கொங்கு நாடு’ என அடையாளப்படுத்திக் கொண்டார்.

கொங்குநாடு கோரிக்கை இப்போது தொடங்கியது இல்லை. 2009-ம் ஆண்டு கொங்குநாடு முன்னேற்ற கழகத்தின் மாணவரணி முதல் மாநாடு கோவையில் நடந்தது. அப்போது, “கொங்கு நாட்டினர் அரசியல் ரீதியாகவும், அதிகார ரீதியாகவும் புறக்கணிக்கப்படுகின்றனர். எனவே, கொங்குநாட்டை தனிமாநிலமாக பிரிக்க வேண்டும்” என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தமிழ்நாடு

"தமிழ்நாட்டுக்கு அதிக வருவாய் கொடுப்பது கொங்கு மண்டலம். ஆனால், கொங்கு மாவட்டங்களுக்கு போதிய முக்கியத்துவம் கொடுக்கப்படுவதில்லை. இனி நமக்கு நாமே” என்று கொ.மு.க புறப்பட்டது. பிறகு பெஸ்ட் ராமசாமி ஒரு ரூட்டிலும், ஈஸ்வரன் ஒரு ரூட்டிலும் பயணித்தனர்.

இதனால், அரசியல்ரீதியாக அ.தி.மு.க-வின் கோட்டையாகத் தொடர்ந்தது கொங்கு மண்டலம். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகும், அ.தி.மு.க வலுவான எதிர்க்கட்சியாக அமர கொங்கு மண்டலத்தில் அவர்களுக்கு இருக்கும் செல்வாக்குதான் காரணம். அதேநேரத்தில், சட்டசபைத் தேர்தலில் கொங்கு மண்டல தோல்வியால், முன் எப்போதும் இல்லாத அளவுக்கு தி.மு.க, கொங்கு மண்டலத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறது.

ஸ்டாலின் மகேந்திரன்

பதவியேற்ற ஒரு மாதத்துக்குள் இரண்டு முறை கோவை வந்த மு.க. ஸ்டாலின், பி.பி.இ கிட்டுடன் கொரோனா வார்டுக்குள் நுழைந்து மக்களைச் சந்தித்தார். அ.தி.மு.க, ம.நீ.ம என கொங்கு மண்டலத்தில் இருந்து தி.மு.க-வுக்கு யார் வந்தாலும், அவர்களுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு கொடுக்கப்படுகிறது.

அதேபோல, கொங்கு மண்டலம் மீது பா.ஜ க-வுக்கு முன்பிருந்தே மிகுந்த நம்பிக்கை இருக்கிறது. தமிழக பா.ஜ.க-வின் 4 எம்.எல்.ஏ-க்களில் இருவர் கொங்கு மண்டலத்தைச் சேர்ந்தவர்கள்தான். முருகன், வானதி, அண்ணாமலை என்று அந்தக் கட்சியின் தற்போதைய முக்கிய முகங்கள் எல்லோருமே கொங்கு மண்டலம்தான்.

அண்ணாமலை

கொங்கு மண்டலத்தின் அவசியத்தைப் புரிந்துகொண்டுதான் முருகன், அண்ணாமலை ஆகியோரை பா.ஜ.க-வின் மாநில தலைவர்களாக நியமித்துள்ளனர். கொங்கு மண்டலத்தில் இரண்டு சமூக மக்கள்தான் பிரதானம். இவர்களின் வாக்கு சிந்தாமல் சிதறாமல் வந்தால் வெற்றி பெற்றுவிடலாம் என்பது கடந்த கால வரலாறு.

முருகன், மாநில தலைவர் ஆவதற்கு முன்பே, தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய துணைத் தலைவராக இருந்தபோது முருகன் தான் சார்ந்த சமூக மக்களிடம் மேலும் நெருக்கமாகிவிட்டார். 2019 நாடாளுமன்றத் தேர்தலில் முருகன் நீலகிரி தொகுதியில் போட்டியிட பேச்சுவார்த்தை நடந்தது. அதன் பிறகு அவரை மாநில தலைவராக்கி, இப்போது மத்திய அமைச்சரும் ஆக்கிவிட்டனர்.

பா.ஜ.க

முருகன் மூலம் அவர் சாரந்த சமுதாய மக்களை ஈர்க்கலாம் என்பது அவர்களின் நம்பிக்கை. அண்ணாமலையை மாநிலத் தலைவராக நியமித்துள்ளனதன் மூலம் அண்ணாமலை சார்ந்த சமுதாய மக்களிடமும் செல்வாக்கைப் பெறலாம்.

இதன் மூலம் அ.தி.மு.க-வின் கோட்டையான கொங்கு மண்டலத்தைப் பிடித்து, தி.மு.க-வுக்கு எதிராக அசுரபலத்துடன் வளர்ந்து நிற்பதே பா.ஜ.க-வின் அஜென்டா என்கின்றனர் இதை உற்று கவனித்து வரும் விபரம் அறிந்தவர்கள். இதுகுறித்து கோவை மூத்த வழக்கறிஞர் லோகநாதன், “கொங்கு நாடு கோரிக்கை நீண்ட காலமாக இருக்கும் ஓர் பிரச்னை. இதை இந்த நேரத்தில் பா.ஜ.க எதற்காக முன்வைக்கிறது? என்பதைத்தான் யோசிக்க வேண்டும்.

வழக்கறிஞர் லோகநாதன்

பா.ஜ.க-வைப் பொறுத்தவரை எல்லாவற்றையும் அசைன்மென்டாகத் தான் செய்யவார்கள். இதற்கு முன்பு முருகன் பலமுறை தேர்தல்களில் போட்டியிட்டபோது, அவர் கொங்குநாடு என்ற வார்த்தையை பயன்படுத்தவில்லை. அப்படி இருக்கும்போது இதை எளிதில் புறக்கணித்துவிட முடியாது.

அ.தி.மு.க தான் பா.ஜ.க-வுக்கு எதிர்காலம். அ.தி.மு.க-வில் இருந்து பவரில்லாத மற்றும் ஊழல் கறை படிந்த முன்னாள் மந்திரிகளை இழுப்பது பா.ஜ.க-வின் டார்கெட்டாக இருக்கும். கொங்கு மண்டலத்தில் கவுண்டர், அருந்ததியர் மக்கள் 40 சதவிகிதம் வாக்குகளை வைத்துள்ளனர். முருகனுக்கு மந்திரி பதவி கொடுத்ததால், அருந்ததியர் மக்கள் வாழ்வில் விடியல் ஏற்பட்டுவிடாது.

கருணாநிதி

கருணாநிதி முதல்வராக இருந்தபோது, அருந்ததியர் சமுதாய மக்களுக்கு 3 சதவிகிதம் உள் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது. அது அந்த மக்களுக்கு பயனளித்தது. கொங்கு வேளாளர்களை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இணைத்ததும் தி.மு.க காலகட்டத்தில் தான்.

ஆனால், கொங்கு மண்டலத்துக்காக பா.ஜ.க ஒரு துரும்பைக் கூட கிள்ளிப் போடவில்லை. தேவேந்திர குல வேளாளர் பிரச்னையில், அவர்களின் வாக்குகளைப் பெறுவதற்காக பா.ஜ.க கடந்த 10 ஆண்டுகளாக வேலை செய்து வருகிறது. இந்தப் பிரச்னையில் கொங்கு வேளாளருக்கு எதிராகதான் பா.ஜ.க இருந்து வருகிறது. இதுகுறித்து நீதிமன்றத்திலும் வழக்கு நடந்து வருகிறது.

பா.ஜ.க

இதற்கு நடுவே பா.ஜ.க-வின் திடீர் கொங்குநாடு பாசம் அரசியல் உள்நோக்கம் இல்லாமல் இருக்காது. உத்தரப்பிரதேசத்தைப் பிரித்தது, மேற்கு வங்காளத்தை மண்டல வாரியாக பிரித்து மத்திய மந்திரி பதவி வழங்கியது என்று அனைத்தையும் நாம் கவனிக்க வேண்டும்.” என்றார்.

2019 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பு சேலத்தில் நடந்த, ஆதித்தமிழர் பேரவை மாநாட்டில் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டதுடன், கொங்கு ஈஸ்வரனையும் கலந்து கொள்ள வைத்தார். அப்போதே தி.மு.க-வின் கொங்கு மண்டல கவனம் தொடங்கிவிட்டது. நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் தோல்வியை சந்தித்தாலும் தி.மு.க கொங்கு மண்டலத்துக்கு தொடர்ந்து முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. அமைச்சரவையிலும் கணிசமான அளவு பிரதிநிதித்துவம் வழங்கப்பட்டுள்ளது.

ஆதித்தமிழர் பேரவை மாநாடு

Also Read: கொங்குநாடு சர்ச்சை: ``தமிழ்நாட்டைப் பிரிக்க நினைக்கவில்லை; ஆனால்..!" - வானதி சீனிவாசன்

சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலில்கூட, அதியமானுக்கு அவிநாசி தொகுதியில் வாய்ப்பளித்தனர். தேர்தல் பிரசாரத்தில் உதயநிதி ஸ்டாலின், "என் வெற்றியைவிட அதியமானின் வெற்றி மிக முக்கியமானது" என்று கூறினார். இவையெல்லாமே தி.மு.க-வின் கொங்குப் பாசத்துக்கு உதாரணங்கள்.

“மேற்கு வங்காளத்தில் இருந்து கூர்காலந்து பகுதியைத் தனி மாநிலமாக பிரிக்க வேண்டும் என்று அந்தப் பகுதியை சேர்ந்த மக்கள் வலியுறுத்தி வருகின்றனர். அவர்களின் எண்ணம்தான், என்னுடைய எண்ணம்” என்று 2014-ம் ஆண்டு தேர்தல் பிரசாரத்தில் மோடி பேசியிருந்தார். மேற்கு வங்காளத்தைப் பிரிக்க வேண்டும் என்ற வலுவான கோரிக்கையை பா.ஜ.க தங்களது அரசியலுக்காகப் பயன்படுத்தி வருகின்றனர் என்பதே அங்கிருந்து வரும் குற்றச்சாட்டாக உள்ளது.

மேற்கு வங்க பா.ஜ.க

கர்நாடகத்தில் அதிக இடங்களைப் பிடித்தும், பா.ஜ.க-வால் ஆட்சியைப் பிடிக்க முடியவில்லை. அப்போது பா.ஜ.க கையில் எடுத்த அஸ்திரங்களில் தனி மாநில கோரிக்கையும் ஒன்று.

குமாரசாமி முதல்வராக இருந்தபோது கர்நாடகாவில் தனி மாநில போராட்டங்கள் வலுத்தன. அதன் பிறகு பா.ஜ.க கர்நாடகத்தில் ஆட்சியைப் பிடித்தபோது, இதுவரை இல்லாத அளவுக்கு 3 பேருக்குத் துணை முதல்வர் பதவி கொடுக்கப்பட்டது. இதிலும், மண்டல வாரியாக பார்த்துதான் பா.ஜ.க காய் நகர்த்தியது. அதே அஜென்டாவை அச்சு பிசகாமல் தமிழ்நாட்டில் நிறைவேற்றுவது அவர்களின் திட்டமாக இருக்கலாம்.

கோவை

கோவையில் உலகத்தர பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும், எய்ம்ஸ் போன்ற சிறப்பு மருத்துவமனை அமைக்க வேண்டும், உயர் நீதிமன்ற மதுரை கிளையைப் போல கோவையிலும் உயர் நீதிமன்றத்துக்குக் கிளை அமைக்க வேண்டும் என்று கொங்கு மண்டலத்தின் நீண்ட நாள் பிரச்னைகளை அடுக்கிக் கொண்டே போகலாம்.

தற்போதைய சூழலில் பா.ஜ.க முக்கிய நிர்வாகிகள் கொங்குநாடு பிரச்னை குறித்து வாய்திறக்க வேண்டாம் என்று முடிவெடுத்துள்ளனர். ஆனால், ``கொங்கு மண்டலத்தில் தி.மு.க எப்படி அரசியல் செய்யப் போகிறதோ..? அதைப் பொறுத்தான் எங்கள் முடிவு இருக்கும். அதுவரை இறுதியான முடிவை எடுக்க மாட்டோம்” என்று பா.ஜ.க மூத்த தலைவர்கள் சஸ்பென்ஸ் வைத்து வருகின்றனர்.

பா.ஜ.க

முக்கிய நிர்வாகிகளை வேறு பக்கம் திருப்பிவிட்டு, கீழ் மட்டத்தில் இருந்து இந்த கொங்கு அஜென்டாவை வலுவாக்குவோம் என்பது பா.ஜ.க-வின் அடுத்தகட்ட நகர்வுகளாக இருக்கும்.



source https://www.vikatan.com/news/tamilnadu/tamilnadu-bjp-plan-to-build-strong-political-basement-in-kongu-area

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக