28 ஆண்டுகளுக்குப் பிறகு கோபா அமெரிக்கா கோப்பையை கையில் ஏந்தியிருக்கிறது அர்ஜென்டினா. அதுவும் ‘கிளப் அணிகளுக்காக மட்டுமே கோப்பையை பெற்றுத்தருவார், நாட்டுக்காக எதுவும் செய்யமாட்டார்’ என விமர்சிக்கப்பட்ட லயோனல் மெஸ்ஸி கோப்பையை கையில் ஏந்தியிருக்கிறார்.
கோபா அமெரிக்கா கோப்பையின் இறுதிப்போட்டி இந்திய நேரப்படி இன்று அதிகாலை பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் நடைபெற்றது. இதில் அமெரிக்க கண்டத்தின் முக்கிய கால்பந்து தேசங்களான அர்ஜென்டினாவும், பிரேசிலும் மோதின. கோபா அமெரிக்காவின் நடப்பு சாம்பியனான பிரேசில், 1993-க்குப்பிறகு கோபா அமெரிக்கா கோப்பையையே வெல்லாத அர்ஜென்டினாவை தங்கள் சொந்த மண்ணில் சந்தித்தது. இதனால் பிரேசிலின் பக்கமே வெற்றிக்கான சாத்தியங்கள் அதிகம் இருப்பதாக கணிக்கப்பட்டிருந்தது.
ஆனால், மெஸ்ஸி தலைமையில் களமிறங்கிய அர்ஜென்டினா ஆரம்பம் முதலே அதிரடியாக ஆடியது. கேப்டன் மெஸ்ஸி, ஏஞ்சல் டி மரியா இருவருமே அட்டாக்கிங் ஆட்டம் ஆடினார்கள். இன்னொருபக்கம் பிரேசிலின் நெய்மரின் கால்களுக்கு பந்து போனபோதெல்லாம் அது கோலாகிவிடுமோ என்கிற அச்சம் அர்ஜென்டினா கேம்ப்புக்குள் எழுந்தது.
இரண்டு அணி வீரர்களுமே களத்தில் கடுமையாக மோதிக்கொண்டார்கள். தொடர்ந்து வீரர்கள் கீழே விழுவதும், வலியால் கதறித்துடிப்பதுமான காட்சிகள் அரங்கேறிக்கொண்டே இருந்தன.
ஆட்டத்தின் 15வது நிமிடத்தில் நெய்மருக்கு கோல் அடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால், அர்ஜென்டினாவின் டிஃபெண்டர் அதை அற்புதமாகத் தடுத்தார். இதற்கு அடுத்த 8-வது நிமிடத்தில் ஏஞ்சல் டி மரியா அர்ஜென்டினாவுக்கான கோலை அடித்தார். மிட் ஃபீல்டில் இருந்து லாங் பாஸில் வந்த பந்தை அழகாக கோல் கீப்பரின் தலைக்கு மேல் அடித்து கோல் போஸ்ட்டுக்குள் நுழைத்து அர்ஜென்டினா வெற்றிபெற காரணமானார் ஏஞ்சல் டி மரியா. இதன்பிறகு பிரேசில் கோல் அடிக்க பலமுறை முயன்றது. ஆனால், அர்ஜென்டினாவின் டிஃபென்ஸ் மிகவும் வலுவாக இருந்ததால் நெய்மர் கூட்டணியால் கோல் அடிக்கமுடியவில்லை.
இரண்டாவது பாதியில் பிரேசிலின் ரிச்சர்லிசன் கோல் அடித்தார். ஆனால், இது ஆஃப் சைடாக அறிவிக்கப்பட்டது. இதன்பிறகு மெஸ்ஸிக்கு கோல் அடிக்கும் அற்புதமான வாய்ப்பு கிடைத்தது. ஆனால், அவர் அதைத்தவறவிட்டார். எனினும் இறுதிவரை பிரேசிலின் கோல் முயற்சிகளை அர்ஜென்டினா தடுத்ததால் 1-0 என வெற்றிபெற்றது.
28 ஆண்டுகளுக்குப்பிறகு கோபா அமெரிக்கா கோப்பையை வென்றிருக்கிறது அர்ஜென்டினா. 2014 உலகக்கோப்பையை இறுதிப்போட்டியில் தவறவிட்ட கேப்டன் லயோனல் மெஸ்ஸி முதல்முறையாக அர்ஜென்டினாவுக்கு ஒரு கோப்பையைப் பெற்றுத்தந்திருக்கிறார்.
2021 கோபா அமெரிக்கா தொடரில் மெஸ்ஸி 6 போட்டிகளில் விளையாடிய 4 கோல்கள் அடித்து, 5 கோல் அசிஸ்ட்கள் செய்திருந்தார். அதேப்போல பிரேசிலின் நெய்மர் இரண்டு கோல்கள், மூன்று கோல் அசிஸ்ட்கள் செய்திருந்தார். இருவருமே இந்த ஆண்டு கோபா அமெரிக்காவின் சிறந்த வீரர்களாக அறிவிக்கப்பட்டார்கள்.
source https://sports.vikatan.com/football/messis-argentina-beats-brazil-in-copa-america-final
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக