Ad

வியாழன், 8 ஜூலை, 2021

திருவாரூர்: பணத்தை மிச்சப்படுத்த சாலை அமைக்கும் பணியில் களிமண்! - மிரண்டுப்போன ஊர்மக்கள்

சாலை அமைக்கும் பணியில் பலவிதமான ஊழல்கள் நடைபெறுவது நாம் ஏற்கனவே அறிந்தவைதான். பணத்தை சுருட்டுவதற்காக, ஒப்பந்ததாரர்களும் அரசு அதிகாரிகளும் ஒன்றாக கைகோத்து, முறைகேடுகளில் ஈடுபடுவதால், புதிய சாலை அமைக்கப்பட்ட அடுத்த சில மாதங்களிலேயே அது குண்டும் குழியுமாக சிதிலமடைந்து விடுகிறது. இதனால் அந்த சாலையில் பயணிப்பவர்கள் சிரமத்திற்கு ஆளாக நேரிடும். இதுபோன்ற ஊழல்கள் ஒருபுறமிருக்க, சாலையில் பயணிப்பவர்களின் உயிருக்கே உலை வைக்கக்கூடிய விபரீத ஊழல் தங்களது பகுதியில் நிகழ இருப்பதாக, திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகே வசிக்கும் மக்கள் அதிர்ச்சியுடன் தெரிவிக்கிறார்கள்.

முத்துப்பேட்டை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள கள்ளிக்குடி ஊராட்சியில் வசிக்கும் மக்கள் தான் இந்த புகாரை கிளப்பியிருக்கிறார்கள். இங்கு அமைந்துள்ள ரைஸ்மில் ரோட்டில், ஒரு கிலோமீட்டர் தூரத்திற்கு பிரதம மந்திரி கிராம சாலைகள் திட்டத்தின் கீழ் 96.45 லட்சம் ரூபாய் திட்டமதிப்பீட்டில் புதிய சாலை அமைக்கும் பணி 2019-ம் ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கப்பட்டது. இரண்டாண்டுகள் ஆகியும் இப்பணி நடைபெறாத நிலையில் இப்பகுதி மக்களின் தொடர்ச்சியான வலியுறுத்தல்களால், தற்போது மீண்டும் இப்பணி தொடங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில்தான், சாலையில் பயணிப்பவர்களின் உயிருக்கே உலை வைக்கக்கூடிய விபரீதம் நிகழ இருப்பதாக, இப்பகுதி மக்கள் மிகுந்த ஆதங்கத்தோடு, அரசு உயரதிகாரிகளுக்கு புகார் மனுக்கள் அனுப்ப தொடங்கியுள்ளார்கள். இதுகுறித்து நம்மிடம் பேசிய இப்பகுதி மக்கள், ‘’மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் கீழ்தான் இந்த பணி நடக்குது. ஒரு கிலோமீட்டர் தூரத்திற்கு தார் சாலை அமைக்க, 96.45 லட்சம் ரூபாய்க்கு திட்டமதிப்பீடு போடப்பட்டு ஒப்பந்தம் விட்டாங்க. இரண்டு ஆண்டுகள் ஆகியும் இதுக்கான வேலைகள் நடக்கலை. இப்ப வேலையை தொடங்கியிருக்காங்க.

தார் ரோட்டுக்கு இரண்டு பக்கமும் தலா மூணு அகலத்துக்கு செம்மண் அணைக்கணும்னுங்கறது விதிமுறை. வாகனங்கள் நேருக்கு நேர் வந்தால், சாலை ஓரத்தில் ஒதுங்கி ஆகணும். நான்கு சக்கர வாகனங்கள் வரும்போது, டூ வீலர்ல செல்லக்கூடியவங்க, மண் ரோட்டுல போக வேண்டியதிருக்கும். இதனால் தான் செம்மண் அமைச்சி, இதை தரமாக உருவாக்கணும்னு விதிமுறை உருவாக்கப்பட்டிருக்கு, செம்மண் இறுகி, செட்டாகிடுச்சினா, என்னதான் கனமழை பேஞ்சாலும் கரையாது, வாகனமும் வழுக்காது. ஆனால் வேற எங்கயும் நடக்காத விநோதம் இங்க நடக்குது. தார் ரோட்டுக்கு ரெண்டு பக்கமும் களி மண் போட ஏற்பாடு பண்ணியிருக்காங்க. இதுக்காக களிமண்ணை குவிச்சி வச்சிருக்காங்க, இது வெயில்ல நல்லா காஞ்சி கெட்டியானதுக்கு பிறகு, இதை உடைச்சி, தூளாக்கி பயன்படுத்தப் போறோம்னு பணியாளர்கள் சொல்றாங்க. லேசா மழை பேஞ்சாலே களிமண் கரைஞ்சி, வழுக்க ஆரம்பிச்சிடும், வாகனங்கள்ல போகக்கூடியவங்க விழுக்கி விழுந்து விபத்துகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். மேலோட்டமாக பார்த்தால் இது சாதாரண பிரச்னை மாதிரிதான் தெரியும். ஆனால் இது உயிருக்கே உலை வைக்கக்கூடியது

எக்காரணம் கொண்டு இதுக்கு களிமண்ணை பயன்படுத்தவே கூடாது. நீர்நிலைகள்ல களிமண் சும்மா கிடைக்குதுங்கறதுக்காக, இப்படி செய்றாங்க, பணத்தை மிச்சப்படுத்த இதுவும் ஒரு வழி. இதை நாங்க அனுமதிக்கவே மாட்டோம். திருவாரூர் மாவட்ட ஆட்சியர், ஊரக வளர்ச்சி முகமையின் உயரதிகாரிகளின் கவனத்துக்கு இதை கொண்டு போகும் முயற்சியில் ஊர்மக்கள் இறங்கியிருக்கோம். திருவாரூர் மாவட்ட ஆட்சியரின் கவனத்துக்கு கொண்டு செல்லும் முயற்சியிலும் ஈடுபட்டு வருகிறோம்” என்றார்.

Also Read: திருவாரூர்: `பள்ளி ஆன்லைனின் வகுப்பில் ஆபாசப் படங்கள்! - இளைஞன் சிக்கியது எப்படி?'

இப்பகுதி மக்களின் குற்றச்சாட்டு குறித்து, ஊரக வளர்ச்சி முகமையின் செயற்பொறியாளரான குமாரிடம் கேட்டபோது ‘’இதுல எந்த ஒரு முறைகேடும் நடக்கலை. சாலை அமைக்கும் பணி தாமதமானதுக்காக, ஒப்பந்ததாரருக்கு அபாரம் விதிச்சிருக்கோம். செம்மண் கிடைப்பதில் ஏகப்பட்ட சிரமங்கள் இருக்கு. நிறைய கட்டுப்பாடுகள். இதனால்தான் ஒப்பந்தாரர் களிமண் பயன்படுத்த முயற்சி செஞ்சிருக்காரு. ஆனாலும் உடனடியாக இதை அப்புறப்படுத்திட்டு, செம்மண்தான் இதுக்கு பயன்படுத்தணும்னு உறுதியாக சொல்லிடுறேன். இதுக்கு உடனே நடவடிக்கை எடுக்குறேன்’’ என தெரிவித்தார்.



source https://www.vikatan.com/news/tamilnadu/thiruvarur-people-shocked-after-clay-used-for-road

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக