"நீ ஏன் இப்படி எப்பவும்,தொண தொணன்னு பேசிட்டே இருக்க?" என்று அவளிடம் கேட்டதற்கு, "அது என் தப்பில்ல.. மேனுஃபேக்ச்சரிங் டிஃபெக்ட்... குடும்பமே அப்படித்தான்!" என்றாள் அவள்.
புரியாமல் அவளை அவன் நிமிர்ந்து பார்க்க, "என்னோட தாத்தா கூத்துக்கலைஞர். அப்பா மேடைப் பேச்சாளர். அண்ணன் வக்கீல்... அதனாலதான்!" என்றாள்.
யோசித்தவாறே, "அப்ப உங்க அம்மா?" என்ற அவனது கேள்விக்கு, ”பெண்’’ என்றாள் அவள்.
இது சிரிப்பு கதையா, சீரியஸ் கதையா என்ற விவாதத்திற்குள் போகும்முன், ஆணும் பெண்ணும் காலம்காலமாக நேரெதிராக இயங்கும் இந்த ‘Men are from Mars, Women are from Venus’ என்பதற்கு அறிவியல் என்ன சொல்கிறது என்பதைப் பார்ப்போம்.
பெண்ணின் இரண்டு XX குரோமோசோம்களும், அவற்றின் மரபணுக்களும், ஆணின் XY குரோமோசோம்கள் போலில்லாமல் மாறுபட்டு இருப்பதுதான், இப்படி மொழித்திறன், ஞாபகத்திறன், கணிப்புத்திறன், தொழில்திறன், சிந்தனை மற்றும் செயலாக்கம் என எல்லாவற்றிலும் ஆணுக்கும், பெண்ணுக்கும் இடையே வேற்றுமைகள் நிலவி வரக் காரணம் என்கிறது அறிவியல்.
தாயின் கருவில் இருக்கும்போதே இந்த ஆண் பெண் வித்தியாசங்கள் தொடங்கிவிடுகிறது. முதல் மூன்று மாதங்களில் பாலின உறுப்புகளின் மூலம் உருவத்தில் வித்தியாசங்களை உணர்த்தினாலும், உணர்வுகளால் ஆண் பெண் வேறுபடுவதை ஆறு மாதங்கள் வரை ஆகலாம் என்கிறது அறிவியல். ஆனால், பார்க்க ஒரே உறுப்பு போலத் தோன்றும் நமது மூளையின் இடது மற்றும் வலது பிரிவுகளை இணைக்கும் தசையான கார்பஸ் கெலோஸம் (Corpus callosum) கருவிலேயே ஆண்குழந்தைக்கு உயரம் சற்றுக் கூடுதலாகவும், பெண்குழந்தைக்கு அதன் தடிமன் சற்றுக் கூடுதலாகவும் உருவாகிறது. உண்மையில் இந்த வித்தியாசம்தான் பெண்களை ஆண்களை விட மொழித்திறன் மிக்கவர்களாகவும், பேசிக்கொண்டே இருப்பவர்களாகவும் இருக்கக் காரணம் என்கிறது சில ஆய்வுகள்.
இப்படி பேச்சில் மட்டுமில்லாமல், செயல்பாடுகளிலும் சில வேடிக்கையான வேற்றுமைகளைப் பார்ப்போம் வாருங்கள்.
முதலாவது, மூளையின் அளவு.
நார்மலாகவே பெண்ணின் மூளையை விட ஆணின் மூளை 11% அளவு அதிகம். எடை போட்டுப் பார்த்தால் பெண்ணின் மூளை ஒன்றேகால் கிலோ எடை கூட வராது. ஆனால், ஆணின் மூளை ஒன்றறை கிலோ வரை வரும். அதேபோல் Grey matter எனும் மூளையின் வெளிப்பக்க நரம்புகளும், Neuronal network எனும் நரம்புப் பாதைகளும் பெண்ணைக் காட்டிலும் ஆணுக்குத்தான் நீளம் அதிகம். "ஆனால், இதனால் ஆணுக்கு பெரிய அட்வான்டேஜ் இல்லை. வெறும் ஹெட் வெயிட் மட்டும்தான் அதிகம்" என்று சிரிக்கிறார் ஒரு பெண் நியூரோ டாக்டர்.
உதாரணமாக, மொழித்திறன் மற்றும் கற்கும் திறனை (Language, Memory and Learning skills) எடுத்துக் கொள்வோமே.
"நாளைக்கு இன்ஷூரன்ஸ் லாஸ்ட் டேட்!”, ”பீரோ சாவி, புக் ஷெல்ஃப்ல 'ஹோமோ ட்யூஸ்' புக்குக்கு பின்னாடி இருக்கு”, ”பேங்க் பாஸ்புக் பீரோ லாக்கர்ல புளூ ஃபைல்ல இருக்கு" என்று சிறுசிறு விஷயங்களை சரியாக ஞாபகம் வைத்துக் கொள்வதில் பெண்கள்தான் கில்லி. கூடவே, பல மொழிகளைக் கற்றுக் கொள்வதிலும் பெண்கள்தான் முந்துகிறார்கள். இந்த மொழி மற்றும் ஞாபகத்திறனில் ஆண்களுக்கு எப்போதுமே இரண்டாம் இடம்தான் என்பதை எந்த உதாரணமும் தராமலே ஆண்கள் அவரவர் வீட்டில் ஒப்பிட்டுப் பார்த்தே ஒப்புக்கொள்வார்கள் தானே?!
அடுத்து வருவது Multitasking...
ஆம்... பெண்களின் மூளை ஒரே நேரத்தில் பல பணிகளை செய்யக்கூடிய வகையில் இயற்கை எப்படி வடிவமைத்திருக்கிறதோ, அதற்கு நேரெதிராக ஆண்களின் மூளையை ஒரு நேரத்தில் ஏதாவது ஒரு வேலையை மட்டும் செய்யும் அளவில் மட்டுமே வடிவமைத்து இயற்கையே ஆண்களை வஞ்சித்திருக்கிறது.
ஆனால், இந்தக் குறைகளை எல்லாம் சரிசெய்யும் விதத்தில் ஆண்களுக்கு Analytical skills அதாவது பகுத்தாயும் திறனைக் கொடுத்திருக்கிறது.
எந்த பிரச்னைக்கும் சட்டென்று ஒரு தீர்க்கமான முடிவை ஆண்களால் எடுக்க முடியும். ஆனால், பெண்களோ பிரச்னைகளின் போது உள்ளுணர்வின்படி நடப்பவர்கள் என்பதால் இங்கே கொஞ்சம் சறுக்கிவிடுகிறார்கள் என்பதுதான் உண்மை. மெமரி, மல்ட்டி டாஸ்க்கிங், மொழித்திறனில் முன்னிற்கும் பெண்களால் உண்மையில் பிரச்னைகள், தீர்க்க சிந்தனைகள், பகுப்பாய்வு, கணிப்புத்திறன் ஆகியவற்றில் ஆண்களைப் போல தீர்மானமான முடிவுகளை எடுக்க முடிவதில்லை என்பதால்தான் பெரும்பாலும் வியாபார நுணுக்கங்கள், பொருளாதார முன்னெடுப்புகள், முதலீடு பிரச்னைகளின் போது, “என்னங்க... இதைக் கொஞ்சம் என்னான்னு பாருங்க!” என்று ஆண்கள் தலையில் கட்டிவிட்டு விலகிவிடுகிறார்கள்.
அடுத்து இன்னுமொரு முக்கியமான Spatial ability எனும் இடம்சார்ந்த கணிப்புத்திறன். பொதுவாக ஆண்கள் ஒரு வாகனத்தை ஓட்டும்போது தூரத்தில் வரும் வாகனத்தின் வேகம், பயணிக்கும் திசை ஆகியவற்றை கணக்கிட்டு, அடுத்து என்ன நடக்கும் என்பதை அவர்கள் முன்கூட்டியே கணித்து தனது வாகனத்தை அதற்குத் தகுந்தவாறு அட்ஜஸ்ட் செய்துவிடுகிறார்கள். ஆனால் பெண்கள் இந்த விஷயத்தில் சற்று குறைவுதான் என்பதால்தான் பெண்கள் ஸ்கூட்டி ஓட்டுவதைப் பற்றி ஆண்கள் எப்போதும் கிண்டல் அடித்துக் கொண்டிருக்கிறார்கள்.
தொடர்வது Stress எனும் மன அழுத்தம்.
இதிலும் வித்தியாசம் இருக்கிறது. ஒரு பெண்ணுக்கு தனது காதல் அல்லது உறவுகளிடையே பிரச்னை இருந்தால் வேலையில் கவனம் செலுத்தமுடியாமல் போகிறது. ஆனால், இதற்கு நேரெதிராக ஒரு ஆணுக்கு அவனது வேலையில் பிரச்னையென்றால் அவனால் தனது காதல் அல்லது உறவுகளில் கவனம் செலுத்தமுடியாமல் போகிறது. ஏனென்றால் மதிப்பு, வெற்றி, தீர்வுகள், பெரிய செயலாக்கங்கள் போன்றவை ஆண்களின் குறிக்கோள்கள்.
இதுவே உறவுகள், நட்பு, குடும்பம் ஆகியவற்றை இணைக்கும் செயலாக்கங்கள் பெண்களுக்கானவையாக இருக்கிறது. அதனால்தான் தனது அழுத்தங்களை எல்லாம் ஒரு பெண் அழுதும், கத்தியும் தீர்க்கும்போது, தனது அழுத்தங்களை சலனமே வெளிக்காட்டாமல் கடக்கிறான் ஆண்.
இப்படி ஆணுக்கும் பெண்ணுக்கும் இருக்கும் ஆயிரம் பேதங்களுக்கு மூளையின் அளவு தொடங்கி, அமீக்டலா, ஹிப்போகேம்பஸ், சிறுமூளையின் நரம்புப் பாதைகள், அதில் சுரக்கும் NAA (N Acetyl Aspartate), ACH (Acetyl Choline) போன்ற நரம்பூக்கிகள், செரடோனின், டோப்பமைன், ஆக்சிடோசின் போன்ற ஹார்மோன்களின் அளவு வித்தியாசம் என ஆயிரம் காரணங்களையும் சொல்கிறது அறிவியல்.
ஆணுக்கும் பெண்ணுக்குமான இந்த அறிவியல்பூர்வ வித்தியாசங்களை முதன்முதலாக எடுத்துரைத்தது கிரேக்க அறிஞர்கள் அரிஸ்டாட்டில் மற்றும் பிளாட்டோதான்.
'Polis'... அதாவது அரசியல் எனும் களம் ஒரு ஆணை உருவாக்கி, வளர்த்து, கூர்மையாக்குகிறது என்றும், இதில் பெண் எனும் சிக்கலான படைப்பு, உண்மையில் ஆணின் அபூரணப் படைப்பு (imperfect creation) என்றும் அன்று அரிஸ்டாட்டில் கூறியவை இன்றளவிலும் பேச்சுப் பொருளாகவும், விவாதப்பொருளாகவும் இருக்கிறது.
ஆனால், இந்த ஆண்-பெண் பேதங்கள் தோன்றியதற்கு அறிவியல் தாண்டிய காரணங்களும் உண்டு. குகைகளிலும் காடுகளிலும் வசித்த ஆதிமனிதனில், வலிமையாக இருந்த ஆண், தேடி உணவு கொண்டுவருவதை தன் பொறுப்பில் எடுத்துக் கொண்டான்.
தனது இருப்பிடத்தை விட்டு வெளியே சென்ற அவனுக்கு வேகமும் கணிப்புத்திறனும் மட்டுமன்றி இலக்கு மாறாமல் இருக்க உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தவும் வேண்டியிருந்தது.
கூடவே எண்ணிக்கையில் குறைவாய் இருந்த பெண்களைப் பாதுகாப்பதும் முக்கியமாய் இருந்தது. அதேசமயம் குகைக்குள் வசித்துவந்த பெண், ஆண் வேட்டையாடி வந்த உணவைப் பாதுகாத்து அதை அனைவருக்கும் பகிர்ந்தளிப்பதையும், மற்ற சமயங்களில் அடுத்த சந்ததியினரை பேணிப் பாதுகாப்பதையும், அவர்களுடன் உரையாடி மேம்படுத்துவதையும் தன் பொறுப்பில் எடுத்துக் கொண்டாள். அதற்கு பல சமயங்களில் அவள் தனது உணர்ச்சிகளை வெளிப்படுத்தவும் வேண்டியிருந்தது.
ஆக, ஆண் பெண் பேதங்கள் அனைத்தும் மனிதனின் வாழ்க்கை முறை சார்ந்தும் பரிமாணம் அடைந்திருக்கலாம் என்பதும் புரிகிறது. ஆனால், காலம் மாற மாற, மனிதனும் வளர வளர, அவனது வாழ்க்கைமுறைகளும் மாறி, ஆணும் பெண்ணும் சேர்ந்தே வேட்டையாடும் இன்றைய காலகட்டத்தில்,
"எட்டும் அறிவினில் ஆணுக்கிங்கே பெண் இளைப்பில்லை காண்" என்று நிலை மாறியுள்ளது. அதற்கேற்ப, இந்த ஆண்-பெண் பிரிவினைகள் எப்போதுமே ஏற்புடையதல்ல என்றும் உண்மையில் இரண்டின் கலவையாகவே (mosaic pattern) இருபாலினரும் வளரும் சூழல்களே அதிகம் என்று வாழ்க்கையும் இப்போது மாறியிருக்கிறது.
ஆம்... ஆண், பெண் இருவருமே பூமியின் படைப்புகளே.
"என்னைப் போலவே நீ...
ஆயினும்
முற்றிலும் வேறாக நீ!’’
என்று சொல்லும் அதேவேளையில், ஆணைப் பெண்ணிடமும், பெண்ணை ஆணிடமும் ஈர்ப்பதே அவர்களின் இந்த வேற்றுமைதான் என்பது புரிகிறது!
source https://www.vikatan.com/news/healthy/difference-between-male-and-female-brains-and-its-impact
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக