புதுச்சேரியில் கொரோனா தொற்றை முற்றிலுமாகக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக புதுச்சேரி சுகாதாரத்துறை சார்பில் மூன்றாவது தடுப்பூசி திருவிழா நேற்று ஜூலை 10-ஆம் தேதி முதல் 12-ஆம் தேதி வரை நடத்தப்படுகிறது. அதனடிப்படையில் வீராம்பட்டினம் துணை ஆரம்ப சுகாதார நிலையத்தில் கொரோனா தடுப்பூசி திருவிழா நேற்று தொடங்கியது. அதனைத் தொடக்கி வைத்துப் பேசிய துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், ‘‘கொரோனாவுக்கான தடுப்பூசி செலுத்திக் கொள்வதில் ஆரம்பத்தில் அனைவருக்கும் மிகப்பெரிய தயக்கம் இருந்தது. தற்போது அந்த நிலை மாறி மக்கள் அனைவரும் தயக்கமின்றி தடுப்பூசி செலுத்திக்கொள்ள ஆரம்பித்திருக்கின்றனர்.
அதற்காக சுகாதாரத்துறை உள்ளிட்ட அனைத்து துறைகளுக்கும் பாராட்டுகளையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன். கர்ப்பிணி பெண்கள் தற்போதைய சூழலில் ஆபத்தான நிலையில் இருக்கிறார்கள். அதனால் அவர்கள் எந்தவித பாதிப்புமின்றி குழந்தைகளை பெற்றெடுப்பதற்காக அவர்களும் தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவித்தது. அதன்படி, புதுச்சேரியில் நேற்று முன்தினம் முதல் கர்ப்பணிகளுக்கும் தடுப்பூசி செலுத்தப்படுகிறது.
புதுச்சேரியில் பள்ளிகள் எப்போது வேண்டுமானாலும் திறக்கப்படலாம். அதனால் ஆசிரியர்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும். இதே வேகத்தில் தடுப்பூசி எடுத்துக் கொண்டால் ஆகஸ்ட் 15-ம் தேதிக்குள் முழுவதுமாக தடுப்பூசி செலுத்திய மாநிலமாக புதுச்சேரி இருக்கும். முழுமையாக தடுப்பூசிகளை செலுத்திக்கொண்ட நாடுகள் முகக்கவசத்தை முழுமையாக அகற்றிவிட்டன. அப்படிப்பட்ட சூழ்நிலை நமக்கும் வர வேண்டும். கொரோனா மூன்றாவது அலை வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக உலக சுகாதார அமைப்பு கூறுகிறது. ஆனால் தடுப்பூசி செலுத்திக் கொண்டால் அதனை நினைத்து கவலைப்பட வேண்டாம். புதுச்சேரியை எப்படியெல்லாம் முன்னேற்றலாம் என்று குடியரசுத் தலைவர் ஆட்சி நடக்கும் போது ஒரு செயல் திட்டத்தை ஏற்படுத்தி வைத்துள்ளோம். அதையும் முதல்வருடன் கலந்தாலோசித்து ஒவ்வொரு திட்டமாக செயல்படுத்தும்போது புதுச்சேரிக்கு அதிகமான வேலைவாய்ப்பு கிடைக்கும்.
Also Read: புதுச்சேரி: `தடுப்புகள் இனி இருக்காது; என் பாணியே தனி!’ - ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்
முதல்வருடன் இணைந்து ஆளுநர் அலுவலகமும் பல வளர்ச்சி திட்டங்களுக்கான முயற்சிகளை முன்னெடுத்து செல்லும். வெளிநாடுகளில் இருந்து முதலீட்டை கொண்டுவருவதற்கும், வேலைவாய்ப்பை ஏற்படுத்தவதற்கும் முதல்வர் கூட்டங்களை நடத்தியும், பல வல்லுநர்களை சந்தித்தும் இருக்கிறார். அமைச்சர்களுக்கு பதவியேற்று வைப்பது மட்டும்தான் என்னுடைய பணி. கூட்டணி கட்சிக்குள் நடக்கும் பேச்சு வார்த்தைக்குள் நான் தலையிட முடியாது. விரைவில் அமைச்சர்களுக்கு இலாகா ஒதுக்கப்படும். அதன்பிறகு அவர்கள் பணியை தொடர்வதற்கான ஆரோக்கியமான சூழல் ஏற்படுவதற்கு நான் ஆலோசனைகளை கூறலாம். அதுதொடர்பான என்னுடைய விருப்பத்தை முதல்வரிடம் கூறுவேன்” என்றார்.
source https://www.vikatan.com/news/politics/puducherry-governor-speech-in-vaccine-festival-at-primary-health-cenrtre-puducherry
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக