Ad

சனி, 10 ஜூலை, 2021

`அருவானாலே திருப்பாச்சி மட்டும்தானா? நாங்களும் ஃபேமஸ்தான்!' - 200 வருட பாரம்பர்ய `மணப்பள்ளி அரிவாள்'

நடிகர் விஜய் ஒரு படத்தில் `அரிவாளை தேங்காய் வெட்ட, மரம் வெட்ட...' என்று பல்வேறு விஷயங்களுக்கு பயன்படுத்துவதை வில்லனிடம் அடுக்கிக்கொண்டே போவார். அதேபோல் நாமக்கல் மாவட்டம், மோகனூர் அருகில் உள்ள மணப்பள்ளியைச் சேர்ந்தவர்களோ, `நாங்க தயாரிக்கிற அரிவாள்களை இளநீர் சீவலாம், புல் அறுக்கலாம், வேலி முள் வெட்டலாம், கோரை அறுக்கலாம், கறி வெட்டலாம்' என்று எந்தெந்த விவசாய தேவைகளுக்கு பயன்படுத்தலாம் என்று விவரிக்கிறார்கள். இந்தக் கிராமத்தில் திரும்பிய பக்கமெல்லாம் அரிவாள் தயாரிக்கும் பட்டறைகள்தான் காணக் கிடைக்கின்றன.

அரிவாள் தயாரிக்கும் பணி

இங்கே 15 அரிவாள் தயாரிக்கும் பட்டறைகள் உள்ளன. 10-க்கும் மேற்பட்ட மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் இங்கே வந்து தங்கள் விவசாயத் தேவைகளுக்குத் தேவையான அரிவாள்களை செய்துகொண்டு போகிறார்கள். திருப்பாச்சேத்தி அரிவாள்கள் பற்றிதான் அதிகம் வெளியில் தெரியும். விவசாய வேலைகளுக்கு பயன்படுத்த செய்யப்படும் மணப்பள்ளி அரிவாள்களின் மகத்துவம் குறித்து தெரிந்துகொள்ள, அங்கே சென்றோம்.

மோகனூர் டு பரமத்தி வேலூர் பிரதான சாலையில் இருந்து விலகி இடதுபுறம் செல்லும் சாலையில் வரிசையாக இருமங்கிலும் அரிவாள்கள் செய்யும் பட்டறைகள் இருக்கின்றன. அவற்றில் இரும்பைக் கொண்டு விதவிதமான அரிவாள்கள் செய்யும் பணி மும்முரமாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இங்கே, கடந்த 38 வருடமாக அரிவாள் அடிக்கும் கொல்லுப்பட்டறை வைத்திருக்கும் மாரியப்பனிடம் பேசினோம்.

மாரியப்பன்

``நீள அருவாளுக்கு திருப்பாச்சேத்தி பேமஸ்னா, விவசாயம் சம்பந்தப்பட்ட அருவா உற்பத்திக்கு தமிழ்நாடு அளவுல எங்க ஊருதான் பிரசித்திபெற்றது. விவசாய வேலைகளுக்கு தோதாக அரிவாள்கள் செய்யுறதுல எங்க ஊரு ஆள்கள் திறமைவாய்ந்தவங்க. இந்தக் கிராமத்தில் விவசாயம் அதிகம் நடந்தாலும், 15 கொல்லுப்பட்டறைகளும் இயங்கி வருது. அருவா செய்யுறதுல எங்க ஊருக்கு 200 வருஷ பாரம்பர்யம் இருக்கு. ஆரம்ப காலத்தில், ஓரிரண்டு பட்டறைகள்தான் இயங்கி வந்திருக்கு. காலப்போக்குல பட்டறைகள் அதிகமாகி, இப்போ 15 பட்டறைகள் இயங்கி வருது. இப்போது இங்கே இயங்கி வரும் 15 பட்டறைகளில் என் பட்டறைதான் பெரிய பட்டறை. எங்க குடும்பத்துல மூணு தலைமுறையா இந்த தொழிலில் ஈடுப்பட்டுக்கிட்டு இருக்கிறோம். எனக்கு இப்போ 48 வயசு. என்னோட 10-வது வயசுலேயே இந்தத் தொழிலுக்கு வந்துட்டேன். இங்கே, விவசாய வேலைகளுக்குத் தேவைப்படுற அத்தனை அரிவாள்களையும் செய்யுறோம். வேலி முள், சீமை கருவேல முள் வெட்டுற கொடுவா, இளநீர் சீவுற, தேங்காய் குலைகளை வெட்டுகிற ஆமரக்கத்தி, கோரை அறுக்கிற கருக்கருவா என்கிற கோரை அருவா, வாழை வெட்டுற வாழை அருவா, மாட்டுக்கு தட்டு வெட்டுற கத்தரினு பலவகை அரிவாள்களை செய்யுறோம்.

அதேபோல், குச்சிக்கிழங்கு கரணை கட் பண்ண பயன்படும் கத்தரி, மாட்டுக்கு தட்டு வெட்டுற அருவா, புல் அறுக்கிற அருவா, தீவனப் புல் வெட்டுற இயந்திரத்தின் பிளேடு, பனை மரத்துல பதநீர் இறக்க தோதாக பாலை சீவுற அருவா, கறி வெட்டுற அருவா, மீன் வெட்டுற அருவா, வெத்தலை கொடிக்கால் பயிர் செஞ்ச விவசாயிகள் கொடி கட் பண்ண பயன்படுத்தும் கொடிக்கால் அருவானு பலவகை அரிவாள்களை செய்யுறோம். தகுந்த இரும்பைக் கொண்டு பதமா செய்யுறதால, நாங்க செய்யுற அரிவாள்கள் உறுதியா இருக்கும். அதோடு, விவசாய வேலைகளை சுளுவாக்கிடும். சுத்தியுள்ள நாமக்கல், சேலம், ஈரோடு, திருப்பூர், கோயமுத்தூர், கரூர், திருச்சி, திண்டுக்கல்னு பலமாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள், எங்ககிட்டதான் அருவா செய்ய கேட்டு வருவாங்க.

தங்க முனியப்பசாமி கோயில்

ஈரோடு, திருப்பூர், காங்கேயம், கரூர், சென்னை, பெங்களூர் பகுதிகளுக்கு நாங்க செய்யுற கறி வெட்டுற கத்தி போகுது. அதேபோல், ஆத்தூர், ராசிபுரம், ஈரோடு, சிவகிரி, திண்டுக்கல் கோவிலூர் உள்ளிட்டப் பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள், எங்ககிட்ட வாழை வெட்டுற அருவா செஞ்சு வாங்கிட்டுப் போறதுக்காக ஆர்வமா வர்றாங்க. எங்கப் பட்டறையில், என்னையும் சேர்த்து ஆறு பேர் வேலை பார்க்குறோம். தினமும் குறைஞ்சது பத்து அரிவாள்களைச் செய்யுவோம். அதிகப்பட்சமாக, 12 அரிவாள்கள் வரை செய்வோம். இந்த தொழிலில் எல்லா செலவுகளும் போக, மாசம் எனக்கு ரூ. 40,000 வருமானம் வருது" என்கிறார்.

இப்படி, இந்தப் பட்டறைத் தொழில் தங்கள் ஊரில் தங்குதடையில்லாமல் நடப்பதற்கு, ஊர் எல்லையில் உள்ள தங்க முனியப்பசாமிதான் காரணம் என்பது இந்தத் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களின் நம்பிக்கை. அதனால், அந்த சாமிக்கு அனைவரும் சேர்ந்து சிறப்பு செய்திருக்கிறார்கள். அதுகுறித்து, தொடர்ந்து பேசிய மாரியப்பன்,

``இந்த இரும்புத் தொழிலை வஞ்சனையில்லாமல் செழிக்க வச்சு, எங்களை வாழவைப்பது, எங்க ஊர்ல உள்ள தங்க முனியப்ப சாமிதான். அதனால், அந்த சாமிக்கு, இங்குள்ள 15 பட்டறைக்காரங்களும் சேர்ந்து, கோயிலுக்கு முன்னாடி ஒரு பிரமாண்ட வேலையும், இரண்டு பிரமாண்ட அரிவாள்களையும் செஞ்சு நட்டிருக்கோம். வேல் மட்டும் 23 அடி உயரம் கொண்டது. அந்த வேலின் சாத்துப் பகுதியை இரும்பாலும், அதுல இருக்கிற மணியை பித்தளையிலும், மணிகளைக் கோக்குற கம்பியை செம்பிலும், வேல் உச்சியில் உள்ள பட்டையை வெள்ளித் தகட்டிலும், அந்தப் பட்டையில் உள்ள பொட்டை ஒன்றரை பவுன் தங்கத்திலும் செஞ்சோம்.

அரிவாள் தயாரிக்கும் பணி
அரிவாள் தயாரிக்கும் பணி
அரிவாள் தயாரிக்கும் பணி
வேல்
அரிவாள் தயாரிக்கும் பணி
அரிவாள் தயாரிக்கும் பணி
பிரமாண்ட அரிவாள்கள் மற்றும் வேல்
அரிவாள் தயாரிக்கும் பணி
பிரமாண்ட அரிவாள்கள் மற்றும் வேல்

இதனோட மொத்த எடை ஒண்ணேமுக்கால் டன். இதைத் தவிர, தலா 18 அடிகள் உயரம் கொண்ட இரும்பில் செய்யப்பட்ட இரண்டு அரிவாள்களையும், செஞ்சு கோயிலுக்கு முன்னாடி நட்டிருக்கோம். இதுக்கு மூன்றரை லட்சம் வரை செலவாணுச்சு. 2015-ம் ஆண்டுதான் இதைச் செஞ்சு, கோயில் முன்பு நட்டோம். தங்க முனியப்பன் சாமி அருளால எங்க தொழில் பழுதில்லாம நடக்குது. எல்லோருக்கும் சோறு போடும் விவசாயிகளுக்கு தேவையான இரும்பு சாமான்களை செஞ்சு தர்றோம்ங்கிற மகிழ்ச்சி மனசு முழுக்க நிறைஞ்சு கிடக்குது" என்றார்.

அடுத்து பேசிய செல்வராஜ், ``நான் 43 வருஷமா பட்டறை நடத்திக்கிட்டு இருக்கேன். எங்க குடும்பத்தின் குலத்தொழிலும் இதுதான். இரும்பு தொழில்ங்கிறதால கவனமா செய்யணும். சம்மட்டி, சுத்தியல், கொரடு, சாணம் புடிக்கிற மோட்டாரு, புடி கடையிற மோட்டாரு, அரம், குரடு, ஆரக்கால், இரும்பு தகடுனு பட்டறையில் உள்ள ஒவ்வொரு பொருளையும் லாவகமா கையாண்டு, அருவாளை அடிக்கணும். சம்மடியால இரும்பை அடிக்கும்போது சூதானமாக அடிக்கணும். இல்லைன்னா, நம்மை பதம் பார்த்துரும். எங்கப் பட்டறையிலும் எல்லா அருவாளையும் சிறப்பா செய்யுவோம். நெல் அறுக்கிற அருவா, பனை பாலை அறுக்குற அருவாவை நல்லா செய்வோம். இதைத்தவிர, கோயில்களுக்கு வேண்டுதலா கொடுக்குற சாமி அருவா, வேலையும் கூட செய்யுறோம். தினமும் காலை ஒன்பதரை தொடங்கி மாலை ஆறு மணி வரை பட்டறைகள் இயங்கும். விவசாயிகள் காலையில் அருவா அடிக்க வந்தாங்கன்னா, அன்னைக்கு சாயந்திரமே அவங்க கேட்குற அருவாள்களை கச்சிதமா செஞ்ச் கொடுத்து, அவங்களை பஸ் ஏத்தி விட்டுருவோம்.

செல்வராஜ்

அருவா, வேல் அடிக்க தேவைப்படும் இரும்புகளை பரமத்தி வேலூர், நாமக்கல், திருச்செங்கோடு, கரூர்னு போய் வாங்கிட்டு வருவோம். அருவா செய்ய நாங்க பயன்படுத்துறது, பழைய 407, அம்பாசிடர், டாடா ஏஸ் உள்ளிட்ட வாகனங்களில் உள்ள ஸ்ப்ரிங் பட்டையைதான். குறைஞ்சபட்சம் கொடிக்கால் அருவா ரூ.250-க்கும், அதிகப்பட்சமா வேலி முள் வெட்டுற அருவாளை ரூ.1,200-க்கும் அடிச்சு தர்றோம். `எங்க அருவா அடிச்சாலும், வாங்கினாலும் மணப்பள்ளி அருவா போல வரலை'னு விவசாயிகள் சொல்றப்ப, எங்களுக்கு ஒரே பூரிப்பா இருக்கும். நாங்க இந்த தொழிலை கைவிட்டா, தங்க முனியப்பசாமி எங்களை கைவிட்டுரும். அதனால, விவசாயமும், விவசாயிகளும் நாட்டுல இருக்கிற வரைக்கும் எங்க ஊர்ல இந்த தொழில் நிக்காம நடக்கும்" என்றார் உறுதி மேலிட!



source https://www.vikatan.com/news/agriculture/story-of-famous-manappalli-village-billhooks-and-its-workers

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக