Ad

ஞாயிறு, 25 ஜூலை, 2021

புத்தம் புது காலை : கருத்தரித்தல் முறையையே மாற்றிய மிரியம் மென்கின்... சாதித்தவர் சந்தித்த சோதனைகள்!

1901ம் ஆண்டு ஆகஸ்ட் எட்டாம் தேதியன்று ஐரோப்பாவின் லாட்வியா நாட்டின் ரிகா நகரில் மிரியம் ஃப்ரீட்மன் பிறந்தபோது அவர் அம்மாவுக்குத் தெரியாது… தன் மகள் பிற்காலத்தில் பல அம்மாக்களைப் பெற்றுக்கொடுக்கும் மருத்துவர்களுக்கே தாயாவாள் என்று!


மிரியத்தின் இரண்டாவது வயதில் அவரது தந்தை டாக்டர் ஃப்ரீட்மன் தனது பணிநிமித்தமாக குடும்பத்துடன் அமெரிக்காவிற்கு குடிபெயர, மிரியத்தின் குழந்தைப்பருவம் அமெரிக்காவில்தான் ஆரம்பித்தது. சிறுவயதில் தனது தந்தையிடம் கதை கேட்பது மிரியத்தின் பிரியமான பொழுதுபோக்கு. ஆனால், கதைகள் எதுவும் படிக்காத அவரது தந்தை தனது மருத்துவப் பணியில் நிகழ்ந்தவைகளையே கதையாக மாற்றிச் சொல்ல, குழந்தைப் பருவத்திலேயே மருத்துவத்தின் மீது பெருங்காதல் கொண்டாள் மிரியம்.

பள்ளிக்கல்வி முடிந்தவுடன் மருத்துவம் பயில விரும்பிய மிரியத்திற்கு, பெண் என்ற ஒரே காரணத்தால் ஹார்வர்ட்டும் மற்ற பல்கலைக்கழகங்களும் மருத்துவப் படிப்பை நிராகரிக்க, கொஞ்சமும் தளராமல் மருத்துவம் சார்ந்த அனாடமி, ஜெனிடிக்ஸ், ஹிஸ்டாலஜி ஆகியவற்றைத் தேர்ந்தெடுத்து படிக்க ஆரம்பித்தார்.

#IVF

வெறுமனே படிப்பதற்கும் விரும்பிப் படிப்பதற்கும் வித்தியாசம் உண்டல்லவா? தான் படித்தவற்றில் எல்லாம் நன்கு தேர்ச்சி பெற்றதுடன், சில காலம் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராகவும் பணியாற்றி உள்ளார் அவர்.


பிறகு தன்னால் படிக்க முடியாமல் போன அதே ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் மருத்துவம் பயின்றுவந்த 'வேலி மென்கின்' என்ற ஆராய்ச்சி மருத்துவரைத் திருமணம் செய்துகொண்டு அவரது ஆராய்ச்சிப் பணிகளுக்கு உதவியாளராகப் பணிபுரிந்து தனது ஆர்வத்தை எட்டிப்பிடிக்க முனைந்துள்ளார் மிரியம் மென்கின். அத்துடன் கிடைத்த வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொண்டு கரு உயிரியல் (Embryology), நுண்ணுயிரியல் (Microbiology) ஆகியவற்றையும் கற்றுக்கொண்டு கிரெகரி ஃபின்கஸ், ஜான் ராக் ஆகிய மருத்துவ விஞ்ஞானிகளுடன் செயற்கை கருத்தரிப்பு குறித்த ஆராய்ச்சியில் சேர்ந்து பணிபுரிய ஆரம்பித்துள்ளார்.


முதலில் முயல்களின் கருமுட்டைகளையும், விந்தணுக்களையும் சேகரித்து, ஆய்வகத்தில் கருவாக்கி, அந்தக் கருவை கருப்பையில் வைக்கும் டெஸ்ட் ட்யூப் செயற்கை கருத்தரிப்பு முறையை மேற்கொண்ட கிரெகரி ஃபின்கஸ்க்கு உதவிய மிரியம், அந்த சோதனை வெற்றியடைந்ததைத் தொடர்ந்து, அதையே மனிதர்களிலும் முயற்சி செய்து பார்க்க முனைந்த ஜான் ராக் மருத்துவக்குழுவுடனும் தன்னை இணைத்துக் கொண்டு அடுத்த பயணத்தை ஆர்வத்துடன் தொடங்கினார்.

மிருகங்களை ஆய்வு செய்வது போல மனிதர்களிடம் அதை சுலபமாக செய்ய முடியாது என்பதால் இந்த ஆய்விற்காக புதிதாக ஒரு யுக்தியை பயன்படுத்தினார் மிரியம். கருமுட்டைகளை சேகரிக்க... கருப்பையில் கட்டிகளை அகற்றுதல் அல்லது கருப்பை அகற்றுதல் போன்ற வேறு காரணங்களுக்காக அறுவைசிகிச்சை மேற்கொண்ட பெண்களிடமிருந்து, அவர்களது சம்மதத்துடன் முழு சினைப்பையையோ அல்லது சினைப்பையின் ஒருபகுதியையோ மருத்துவர் உதவியுடன் பெற்றுக்கொண்டு, ஒரே பாய்ச்சலாக ஆய்வகத்திற்கு ஓடுவாராம் மிரியம்.

#IVF

ஆய்வகத்தை அடைந்ததும் அந்த சினைப்பையை மிகச்சரியாக கூறுபோட்டு, அதிலிருக்கும் ஒன்று அல்லது இரண்டு முதிர்ந்த சினைமுட்டைகளை சரியாகப் பிரித்தெடுத்து சேகரிக்கும் வேகத்திற்காகவே, 'தி எக் சேஸர்' என்று மருத்துவர்கள் அவருக்குப் பெயரிட்டிருந்தார்களாம்.


ஒவ்வொரு வாரமும், செவ்வாய்கிழமையன்று முட்டை வேட்டை, புதன்கிழமையில் விந்தணுக்களை சேகரித்து அவற்றை கருமுட்டையுடன் கலந்து இன்க்யூபேட்டரில் வைப்பது, வியாழன் முழுவதும் வழிபாடு, வெள்ளிக்கிழமையன்று கரு உருவானதா என்று மைக்ராஸ்கோப்பில் தேடல் என மிரியம் மென்கின் முயன்றதைக் கணக்கிட்டால் கஜினி முகமது போல பன்மடங்கு முறைகள் இருக்கும் என்கிறார்கள்.


ஆறு வருடங்கள், கிட்டத்தட்ட 138 முறைகள், அவர்களது தொடர் ஆராய்ச்சி தோற்றுக் கொண்டேயிருந்தாலும் மிரியம் ஓயவேயில்லை. கடைசியாக, 1944-ம் ஆண்டு அந்த விசேஷ வெள்ளிக்கிழமையன்றும் எப்போதும் போல மைக்ராஸ்கோப்பின் கீழ் இறந்த ஒரு முட்டையும், சில விந்தணுக்களும் தான் இருக்கும் என்று நம்பிக்கையில்லாமல் பார்த்த மிரியம், முதன்முதலாக உயிருடன் ஒரு கரு தெரிந்ததும் மகிழ்ச்சியின் உச்சிக்கே போனார். அந்தக் கரு இரண்டு செல், நான்கு செல் என வளர்ந்ததை மிரியம் கொண்டாடியதை பிற்பாடு ஒரு பேட்டியில் சந்தோஷமாகப் பகிர்ந்துகொண்டார் மருத்துவர் ராக்.


செயற்கையாக ஆய்வகத்தில் மனிதக் கருவை உருவாக்க முடியும் என்பதை முதன்முதலாக நிரூபித்த மிரியம், பின்னர் அதேபோல மூன்று முறை கருவை ஆய்வகத்தில் உருவாக்கி, அவற்றின் வளர்ச்சி நிலைகளை ஸ்லைட்கள் மூலம் பதிவு செய்து உலகிற்கு எடுத்துக்காட்டவும் செய்தார்.


ஆராய்ச்சியின் அடுத்தகட்டமாக இப்படி செயற்கை முறையில் உருவான கருவை, தாயின் கருப்பைக்குள் வைக்கும் தொழில்நுட்பத்தை (Embryo Transfer) உருவாக்கும் முயற்சிகளை மிரியம் அந்த மருத்துவக்குழுவுடன் இணைந்து மேற்கொண்டபோது, மிரியத்தின் வாழ்வில் விதி விளையாட ஆரம்பித்தது.

மிரியம் மென்கின்

மிரியத்தின் ஆராய்ச்சி வெற்றியை அறிந்த நூற்றுக்கணக்கான தம்பதியர், டாக்டர் ராக் மற்றும் உதவியாளர் மிரியத்திற்கு கடிதங்கள் மூலமாகத் தொடர்பு கொண்டு, தங்களுக்கு சிகிச்சை அளிக்குமாறு கேட்டுக் கொள்ள ஆரம்பித்த அதே சமயத்தில், "செயற்கை கரு என்பது மிகப்பெரிய ஊழல்" என்று மருத்துவர்கள் சிலரே எதிர்க்க ஆரம்பித்தனர். அதேசமயம், இது இயற்கைக்கு எதிரானது என்று மத ரீதியாகவும் பிரசாரம் செய்யப்பட பிரச்னை பெரிதானது.

பிற்பாடு, மிரியம் மென்கின் உடனிருந்த மருத்துவர்கள் வேறு நாட்டிற்கும், வேறு துறைக்கும் மாற்றப்பட்ட... அதேசமயம் அவரது கணவர், நார்த் கரோலினாவின் பல்கலைக்கழகத்திற்கு தனது பணியை மாற்றிக்கொள்ள மிரியம் தனியாகிப் போனார். ஆராய்ச்சிக்கும் தடங்கல் ஏற்பட்டது.


சோதனைகள் எப்போதும் தனித்து வருவதில்லையே... மிரியத்தின் மகள் லூசிக்கு வலிப்பு நோய் மற்றும் மன வளர்ச்சி குறைபாடு, கணவரின் போக்கில் திடீர் மாற்றம் என்பதால் விவாகரத்து என வாழ்க்கை அவரை புரட்டிப் போட்டது.
தனியாக நின்று மகளையும், இளைய மகன் கேப்ரியேலையும் வளர்க்க வேண்டிய சூழலில் அவரது கனவுகள் அப்படியே கனவுகளாகவே நின்றுபோனது. என்றாலும், தனது ஆராய்ச்சியைத் தொடர அவர் எடுத்த முயற்சிகளுக்கு, 'Rape in vitro' என்ற அவப்பெயர் கிடைக்க, முற்றிலும் நிலைகுலைந்து போனார் மிரியம்.


காலம் எவ்வளவு கொடூரங்களைச் செய்யும் பாருங்கள். உயிரை உற்பத்தி செய்ய தான் எடுத்த அத்தனை முயற்சிகளையும் மூட்டை கட்டி வைத்துவிட்டு, கடைசியாக அவர் 1950-ம் ஆண்டு கையிலெடுத்தது கருத்தடை முறைகள் பற்றிய ஆராய்ச்சி.
மிரியம் மென்கின் முதன்முதலாக செயற்கை கருவை உருவாக்கிய நாளிலிருந்து, கிட்டத்தட்ட 40 ஆண்டுகளுக்குப் பிறகு, 1978ம் ஆண்டு, ஜூலை 25ம் தேதி, இங்கிலாந்து மருத்துவர்கள் ராபர்ட் எட்வர்ட்ஸ் மற்றும் பாட்ரிக் ஸ்டெப்ட்டோ ஆகியோரின் முயற்சியால் லூயிஸ் பிரவுன் என்ற உலகின் முதல் டெஸ்ட் ட்யூப் குழந்தை பிறந்ததை உலகமே கொண்டாடிக் கொண்டிருந்தது.

தான் உருவாக்கிய அந்த செயற்கை முறையைப் பின்பற்றித்தான், அந்தக் குழந்தை பிறந்தது என்று புன்னகையுடன் தனது மகளை மடியில் வைத்துக்கொண்டு அந்த வெற்றியைப் படித்துக் கொண்டிருந்தார் மிரியம் மென்கின் எனும் தாய்.
இதோ... முதல் டெஸ்ட் ட்யூப் குழந்தை பிறந்து இன்றோடு 43 வருடங்கள் நிறைவடைந்துவிட்டன.


இன்று பல லட்சம் குழந்தைகளும் உலகெங்கும் பிறந்து, அம்மாக்களைப் பெற்றுக் கொடுக்கும் மகப்பேறு மருத்துவர்களுக்கெல்லாம் தாயாக விளங்கும் மிரியம் மென்கினின் அறிவியலை சாத்தியப்படுத்திக் கொண்டிருக்கின்றனர்.


எத்தனையோ தோல்விகளைச் சந்தித்திருந்தாலும் "எங்களது பெருமிதமும், எங்களது மகிழ்ச்சியும்" என்ற மிரியம் மென்கின்னின் குறிப்புடன் கூடிய இரண்டு செல் கரு, இன்றும் ஹார்வர்ட் பல்கலைக்கழக நூலகத்தில் போற்றிப் பாதுகாக்கப்பட்டு வருகிறது.வாழ்க்கை உங்களைப் புரட்டிப் போட்டாலும், வரலாறு உங்களை விடுதலை செய்யும் என்பதற்கு அத்தாட்சியாக!

#IVFDAY



source https://www.vikatan.com/health/healthy/remembering-miriam-menkin-on-world-ivf-day

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக