Ad

ஞாயிறு, 25 ஜூலை, 2021

200 ஆண்டுகளாக உலகை உலுக்கிய ஜஸ்டினியன் பிளேக்! - கொள்ளை நோய்களின் வரலாறு - பகுதி 3

முதல் இரண்டு அத்தியாயங்கள்

1. சிர்கா முதல் கோவிட் வரை; உலகை உலுக்கிய கொள்ளை நோய்களின் வரலாறு! - பகுதி

2. ரோமப் பேரரசையே புரட்டிப்போட்ட பிளேக்; உலகை உலுக்கிய கொள்ளை நோய்களின் வரலாறு - பகுதி 2

பிளேக் ஆஃப் ஜஸ்டினியன் (ஆட்டுவித்த காலம் கி.பி. 541 - 750)

ஒன்றுபட்ட ரோமப் பேரரசின் வீழ்ச்சிக்குப் பிறகு, மேற்கு மற்றும் கிழக்கு என இரண்டாகப் பிரிந்தது ரோமப் பேரரசு. இந்தக் கிழக்கு ரோமப் பேரரசை `பைசான்டைன்' பேரரசாக மறுமலர்ச்சி பெற வைத்தார் மன்னர் ஜஸ்டினியன். மேலும், முந்தைய நூற்றாண்டுகளில் ரோமப் பேரரசர் கான்ஸ்டன்டைன் தனது பெயராலேயே, கான்ஸ்டான்டிநோபில் எனும் தலைநகரை உருவாக்கினார். தற்போதைய துருக்கி நாட்டின் செல்வந்த நகரமான இஸ்தான்புல்தான் அப்போதைய கான்ஸ்டான்டிநோபில்.

ரோமப் பேரரசின் நீட்சியாகக் கருதப்படும் பைசான்டைன் பேரரசுக்கும் கான்ஸ்டான்டிநோபிலையே தலைநகராகத் தேர்ந்தெடுத்தார் பேரரசர் ஜஸ்டினியன். ரோமப் பேரரசின் மறுமலர்ச்சிக்குப் பாடுபட்டுக் கொண்டிருந்த மன்னர் ஜஸ்டினியன் கனவில், மண்ணை அள்ளிப்போடும் விதமாக கப்பலில் வந்திறங்கியது ஒரு மாபெரும் ஆபத்து. மத்திய தரைக்கடல் பகுதியின் கடலோர துறைமுகங்கள்தான் பைசான்டியப் பேரரசின் மிகப்பெரிய வணிகக் கேந்திரம். இங்குதான் ஆசிய-ஆப்பிரிக்க நாடுகளிலிருந்து பெரிய அளவிலான உணவு, தானியங்கள் வணிகக் கப்பல்களின் வாயிலாக வந்திறங்கும்.

Plague of Justinian

ஆனால், உணவைக் கொடுக்க தானிய மூட்டைகள் வந்திறங்கியதைப்போல, உயிரை எடுக்க எலிகள் ரூபத்தில் எமனும் உடன் வந்திருப்பதை, அப்போது பைசான்டிய பெருமக்கள் அறிந்திருக்கவில்லை. ஆம், அவை சாதாரண எலிகளாக வரவில்லை, எர்சினியா பெஸ்டிஸ் என்ற பாக்டீரியா கிருமிகள் தாங்கிய ஒரு வைரஸ் நோயாகவே வந்திருந்தன.

விளைவு, எலிகளால் பரவிய இப்பெருந்தொற்றால், பைசான்டியப் பேரரசில் பத்தாயிரம் பேர் நாள்தோறும் உயிரிழந்தனர். குறிப்பாக, ஆரம்பத்தில் நோய்த்தொற்றிய தலைநகர் கான்ஸ்டான்டிநோபிலில் மட்டும், அவதிக்குள்ளான மக்களில் சுமார் 5,000 பேர் அனுதினமும் தங்களின் உயிர்களைப் பறிகொடுத்தனர்.

Representational Image

இக்கொடிய நிகழ்வை, பைசான்டிய அறிஞர் புரோகோபியஸ் தனது வரலாற்றுக் குறிப்பில், பிளேக் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் மிரட்சி, கொடிய கனவுகள் என உளவியல் ரீதியாகவும், காய்ச்சல் மற்றும் இடுப்பு, அக்குள், காதுகளில் கொப்பளங்கள், வீக்கம் என உடல்ரீதியாகவும் கடும் அவதிக்கு ஆளாகினர்; மேலும், பாதிக்கப்பட்டவர்களில் சிலர் கோமாவுக்கு சென்றனர், மற்றவர்கள் மயக்கமடைந்தனர் என்றும் தெரிவித்தவர், பெரும்பாலானோர் அறிகுறிகள் தோன்றிய உடனேயே இறந்துவிட்டனர் எனவும் கனத்த இதயத்தோடு விவரிக்கிறார்.

கடைசியில், பைசான்டியப் பேரரசர் ஜஸ்டினியனும் இக்கொடும் நோயிடம் சரணடைந்தார். ஆகவேதான், இந்த நோய் `ஜஸ்டினியன் பிளேக்' என்று அந்நாட்டுப் பேரரசனின் பெயராலேயே அழைக்கப்பட்டது.

கி.பி. 541-ம் ஆண்டு தனது வேட்டையைத் தொடங்கிய ஜஸ்டினியன் பிளேக், ஏறக்குறைய 3 கோடியிலிருந்து 5 கோடிக்கும் அதிகமான மக்களைக் கொன்று தின்றது. குறிப்பாக ரோமானிய சாம்ராஜ்ஜியத்தின் சரிபாதி மக்களைப் புயலாக வீசிச் சாய்த்தது. இந்த உயிரிழப்பை, அப்போதைய உலக மக்கள்தொகையின் 10 சதவிகித பேரிழப்பு என கணக்கிடுகின்றனர் வரலாற்று ஆய்வாளர்கள்.

Rome

Also Read: சிர்கா முதல் கோவிட் வரை; உலகை உலுக்கிய கொள்ளை நோய்களின் வரலாறு! - பகுதி 1

ஆறாம் நூற்றாண்டில் அடியெடுத்து வைத்த இந்த நோயானது, பைசான்டியப் பேரரசு மட்டுமல்லாமல், சசானியப் பேரரசான இரான், இராக், எகிப்து, சிரியா, மெசபடோமியா எனச் சுற்றியிருக்கும் அனைத்து நாட்டு மக்களின் உயிர்களையும் இருநூற்றாண்டுகளாகச் சூறையாடியது. அதாவது, கி.பி. 541 முதல் கி.பி. 750 வரையிலான ஒவ்வொரு காலகட்டத்திலும் சுமார் 200 ஆண்டுகளுக்கும் மேலாக வாட்டிவதைத்தது. இவற்றை முழுமையாகக் கணக்கிட்டால் மொத்த உயிரிழப்புகளின் எண்ணிக்கை 10 கோடியைத் தாண்டும் என்கிறார்கள் ஆய்வாளர்கள். மேலும், உலக அளவில் 25 சதவிகிதத்துக்கும் அதிகமான இழப்பாக இருக்கலாம் என ஐயம் தெரிவிக்கின்றனர்.

என்னதான், உலக அளவில் முறையாக ஆவணப்படுத்தப்பட்ட முதல் நோய் ஜஸ்டினியன் பிளேக் என்றாலும்கூட எத்தனை பேர் இறந்திருப்பார்கள் என்ற விவரம், இன்றுவரையிலும் விவாதத்துக்கு உட்பட்டதாவே இருக்கிறது.

இவ்வளவு பெரிய இழப்பை ஏற்படுத்திய இந்த நோய் எலியிலிருந்து பரவியது என்பதை முன்னரே தெரிவித்தோம். ஆனால், எங்கிருந்து வந்தது என்று கூறினால் சிலருக்கு வியப்பாக இருக்கும். ஆம், தற்போதைய கொரோனா வைரஸ் வந்ததாகக் கூறப்படும் அதே சீன நாட்டிலிருந்தே ஜஸ்டினியன் பிளேக்கும் பரவியது என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

Plague

Also Read: ரோமப் பேரரசையே புரட்டிப்போட்ட பிளேக்; உலகை உலுக்கிய கொள்ளை நோய்களின் வரலாறு - பகுதி 2

இதை, வரலாற்றாசிரியர் புரோகோபியஸ், ``பிளேக் முதலில் சீனாவில் தோன்றி, இந்தியாவுக்குப் பயணம் செய்தது. பின்னர் எகிப்துக்குள் நுழைவதற்கு முன்பாக அருகிலுள்ள மத்திய கிழக்கு வழியாகச் சென்று, பைசான்டைன் பேரரசின் தலைநகரான கான்ஸ்டான்டிநோபிலுக்கு வந்தது" என தனது ஹிஸ்டரி ஆஃப் வார்ஸ் என்ற நூலில் கூறியுள்ளார்.”

ரோமப் பேரரசு, பைசான்டைன் பேரரசுகளை விழுங்கிய இந்த ஜஸ்டினியன் நோய்தான் புபோனிக் பிளேக்கின் முதல் அலை என்கிறார்கள் இன்றைய மருத்துவ ஆராய்ச்சியாளர்கள். முதல் அலையே இவ்வளவு மூர்க்கத்தனமாக இருந்திருக்கிறது என்றால், அப்போ இரண்டாம் அலை எவ்வளவு மோசமானதாக இருந்திருக்கும்..?

தி பிளாக் டெத்- கறுப்பு மரணம் எனப்படும் அந்தக் கொடிய நோயைப் பற்றி அறிந்துகொள்ள அடுத்த பகுதி வரும்வரை காத்திருங்கள்!

- தொடரும்



source https://www.vikatan.com/news/healthy/story-of-how-plague-of-justinian-shattered-the-world-for-centuries

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக