Ad

வெள்ளி, 9 ஜூலை, 2021

நீலகிரி: துரியன் பழ ஏலம்; நடுரோட்டில் உருண்டு வணிகர்கள் அடிதடி! - காரணம் என்ன?

தமிழ்நாடு அரசின் தோட்டக்கலைத்துறை கட்டுப்பாட்டின் கீழ் குன்னுார், பர்லியார், கல்லாறு ஆகிய பகுதிகளில் பழப் பண்ணைகள் உள்ளன. இந்த பண்ணைகளில் அரிய வகை பழங்களான பெர்சிமன், துரியன், மங்குஸ்தான் போன்ற பழ மரங்களை பராமரித்து வருகின்றனர். மருத்துவ குணம் நிறைந்த துரியன் மற்றும் மங்குஸ்தான் பழ‌ சீசன்களில் பழ மரங்களை குறிப்பிட்ட காலத்திற்கு குத்தகைக்கு விடுவது வழக்கம். இந்த இரண்டு பழங்களுக்கு கிராக்கி அதிகம் என்பதால் இந்த மரங்களை ஏலம் எடுக்க கடுமையான போட்டி நிலவும்.

துரியன்

இந்த ஆண்டு சீசனுக்கான ஏலம் குன்னூரில் நடைபெற்றது. நீலகிரி தோட்டக்கலைத்துறையின் உதவி இயக்குநர் முன்னிலையில் தனியாருக்கு ஏலம் விடப்பட்டது. கல்லாறு பண்ணையில் உள்ள பழ மரங்களை ரூ. 6.70 லட்சத்திற்கும், பர்லியார் பண்ணையில் உள்ள பழ மரங்கள் 4 லட்சம் ரூபாய்க்கும் ஏலம் விடப்பட்டது. இந்த ஏலத்தின் மூலம் தோட்டக்கலைத்துறைக்கு10 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைக்கப்பெற்றது.

கடந்த ஆண்டைப் போன்ற ஏல முறையைப் பின்பற்றவில்லை மற்றும் ஆரம்ப விலையை அதிகப்படுத்தியதாக தோட்டக்கலைத்துறை அதிகாரிகளிடம் சிலர் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். இந்த வாக்குவாதம் கைகலப்பாக மாறியது. இரு கோஷ்டியினரும் நடுரோட்டில் இறங்கி உருண்டு அடிதடியில் ஈடுபட்டனர். இதனால் குன்னூரில் போக்குவரத்தே ஸ்தம்பித்தது.

இந்த சர்ச்சை குறித்து பேசிய வணிகர்கள், "அதிக பழ மரங்களைக் கொண்டுள்ள பர்லியார் பழப் பண்ணையை விட குறைந்த பழ‌ மரங்களைக் கொண்ட கல்லார் பண்ணை அதிக விலைக்கு ஏலம் போயுள்ளது. கடந்த ஆட்சியில் ஆளுங்கட்சியினரின் தலையீட்டால் அதிகாரிகள் மற்றும் வணிகர்கள் சிலர் சிண்டிகேட் அமைத்து தங்களுக்குள்ளேயே ஏலம் நடத்தி மோசடி செய்துள்ளது தற்போது தெரியவந்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த வணிகர்கள் ரகளையில் ஈடுபட்டனர். ஒரு தரப்புக்கு மட்டுமே சாதகாமாக செயல்படும் அதிகாரிகள் மீது விசாரணை மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்கின்றனர்.

அடிதடி செய்த வணிகர்கள்

இந்த விவகாரம் குறித்து தோட்டக்கலைத்துறை அதிகாரிகளிடம் பேசினோம், "எல்லா ஏலத்திலும் பின்பற்றப்படும் வழக்கமான முறையே தற்போதும் பின்பற்றப்பட்டது. ஏலம் கிடைக்காத விரக்தியில் சண்டையிட்டுக் கொண்டனர்" என்றனர்.

Also Read: பழங்குடிகளுக்கு 100% தடுப்பூசி; நீலகிரி மாவட்ட ஆட்சியரைப் பாராட்டிய முதல்வர்!



source https://www.vikatan.com/news/tamilnadu/durian-fruit-auction-controversy-in-nilgiris

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக