Ad

வெள்ளி, 9 ஜூலை, 2021

கேரளா: கொரோனாவை தொடர்ந்து மிரட்டும் ஜிகா வைரஸ்! -தமிழக எல்லையில் கர்ப்பிணி உட்பட 14 பேர் பாதிப்பு

ஆந்திரா, அசாம் உள்ளிட்ட மாநிலங்களைத் தொடர்ந்து கேரள மாநிலத்திலும் ஜிகா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. அதிலும் கேரள- தமிழக எல்லையான பாறசாலை பகுதியில் 24 வயது ஆன ஒரு கர்ப்பிணி பெண்ணுக்கு முதன் முதலில் ஜிகா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டது. தனியார் மருத்துவமனையில் சிகிச்சையில் சேர்க்கப்பட்டுள்ள அந்த பெண்ணுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. இதற்கிடையில் மேலும் 13 சுகாதார பணியாளர்களுக்கு ஜிகா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 17 பேரின் சாம்பிள்கள் ஆய்வுக்கூடத்துக்கு அனுப்பபட்டுள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு மத்தியில் ஜிகா வைரஸ் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. அதிலும் கொசு மூலம் பரவும் வைரஸ் என்பதால் அதுகுறித்த அச்சம் அதிகரித்துள்ளது.

இந்த நிலையில் கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் ஜிகா வைரஸ் குறித்து உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் அவர் கூறுகையில், "ஜிகா வைரஸை தடுப்பதற்காக 'ஆக்‌ஷன் பிளான்' ஏற்படுத்தியிருக்கிறோம். ஜிகா வைரஸ் பரவ வாய்ப்புள்ள பகுதிகளில் உள்ள மருத்துவமனைகளை மையமாகக்கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் விழிப்புணர்வு ஏற்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. நான்கு மாதம் வரை உள்ள கர்ப்பிணிகளுக்கு ஜிகா வைரஸ் பாதிப்பை ஏற்படுத்தும் என கர்ப்பிணிகளுக்கு காய்ச்சல் ஏற்பட்டால் உடனே ஜிகா வைரஸ் உள்ளதா என பரிசோதனை செய்ய வேண்டும் என அனைத்து மாவட்ட மெடிக்கல் அலுவலர்கள் கூட்டத்தில் அறிவுறுத்தியுள்ளேன்.

ஜிகா வைரஸ்

ஜிகா வைரஸை கண்டறிவதற்கான ஆய்வுக்கூடங்கள் அதிகரிக்கப்படும். மெடிகல் காலேஜ் அல்லாமல் பிற மருத்துவமனைகளில் அட்மிட் ஆகும் நோயாளிகளின் மாதிரிகள் பப்ளிக் ஹெல்த் லேபில் பரிசோதிக்கும் வசதி ஏற்படுத்தப்படும். தனியார் மருத்துவமனைகளையும் ஜிகா வைரஸ் தடுப்பு நடவடிக்கைக்கு பயன்படுத்தப்படும். காய்ச்சல், தலைவலி, உடல்வலி, உடலில் சிவப்பான தழும்புகள் தோன்றினால் அது ஜிகா வைரஸின் அறிகுறியா என்பதை உடனடியாக பரிசோதனை செய்ய வேண்டும்.

திருவனந்தபுரத்தில் இருந்து புனே ஆய்வுக்கூடத்துக்கு 19 போரின் சாம்பிள்கள் ஏற்கனவே அனுப்பி வைக்கப்பட்டிருந்தன. அதில் 13 பேருக்கு ஜிகாவைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் தனியார் மருத்துவமனையில் பணிசெய்யும் சுகாதாரப் பணியாளர்கள். இவர்கள் ஆஸ்பத்திரிக்கு அருகில் வசிப்பவர்கள் ஆவர்கள். எனவே அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் மற்றும் அவர்களின் பயண விபரங்கள் சேகரிக்கப்பட்டு, உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே கர்ப்பினி ஒருவருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. அவருடன் சேர்த்து இதுவரை 14 பேருக்கு சிகா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. கர்ப்பிணி வசித்த பாறசாலா பகுதியில் 17 பேரின் சாம்பிள்கள் எடுக்கப்பட்டுள்ளன.

கேரள சுகாதாரத்துறை அமைசர் வீணா ஜார்ஜ்

ஏடிஸ் கொசுக்கள் ஜிகாவைரஸை பரப்புகிறது. சாதரணமாக இந்த வைரஸால் பெரிய பிரச்னை இல்லை. ஆனால் கர்ப்பிணிகளுக்கு அதிகமாக பாதிப்பை ஏற்படுத்தும் அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கும் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. கொசுக்கள் மூலம் இந்த வைரஸ் பரவுகிறது. தாம்பத்ய உறவு மூலமும் ஜிகா வைரஸ் பரவ வாய்ப்பு உள்ளது. கருவுற தயாராகும் தாய்மார்கள் கொசு கடிக்காதவண்ணம் பாதுகாப்பாக இருக்க வேண்டும். குழந்தைகளும், முதியவர்களும் கவனமாக இருக்க வேண்டும்" என்றார்.

Also Read: ஜிகா வைரஸ் - மிரள வேண்டாம்... மீளலாம்!



source https://www.vikatan.com/news/india/zika-virus-trouble-in-kerala-after-corona-virus-spread

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக