கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சரான ராணிப்பேட்டை ஆர்.காந்திக்கு வினோத், சந்தோஷ் என்று இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். இருவரும் நேரடி அரசியலுக்குள் இன்னும் வரவில்லை. அரசு பதவிகளிலும் இல்லை. என்றாலும், தந்தையின் செல்வாக்கைப் பயன்படுத்திக்கொண்டு, ராணிபேட்டை மாவட்டத்தில் நடைபெறும் அரசு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதால், அவர்கள் மீது அதிகாரிகள் மட்டத்தில் கடும் அதிருப்தி நிலவுவதாகக் கூறப்படுகிறது
சமீபத்தில், வாலாஜாபேட்டையில் நடைபெற்ற ஜமாபந்தி நிகழ்ச்சியிலும், அரசு அதிகாரிகள் முன்னிலை வகிக்க அமைச்சர் காந்தியின் இளைய மகன் சந்தோஷ் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கியதும் சர்ச்சையானது. அமைச்சர் மகன்களின் இந்தச் செயலுக்கு ராணிப்பேட்டை மாவட்ட அ.தி.மு.க கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறது. இந்த நிலையில், ஜமாபந்தி நிகழ்ச்சியில் தன் மகன் சந்தோஷ் கலந்துகொண்டது தொடர்பாக, அமைச்சர் காந்தி அறிக்கை மூலம் விளக்கம் அளித்துள்ளார்.
Also Read: ராணிப்பேட்டை: அரசு, கட்சி நிகழ்ச்சிகளில் அமைச்சர் காந்தியின் மகன்கள்! - சர்ச்சையைக் கிளப்பும் அதிமுக
அதில், ``வீட்டு மனை இல்லாத இருளர் இனத்தவர்களுக்கு இடம் வழங்கிடும் நோக்கத்தில், வாலாஜாபேட்டை ஆயிலம் ஊராட்சியிலுள்ள எனக்குச் சொந்தமான 50.5 சென்ட் நிலத்தை மாவட்ட ஆட்சியரின் பெயரில் அரசுக்குத் தானமாக வழங்கியிருந்தோம். 20-க்கும் மேற்பட்டோர் வீட்டு மனை பெறுவதற்கானப் பயனாளிகளாக தேர்வு செய்யப்பட்டனர். இதனால், இடம் வழங்கியவரை ஜமாபந்தி விழாவில் கௌரவிக்க வேண்டும் என பயனாளிகள், பகுதி வாழ் மக்கள் கருதியதால் எனக்கு அழைப்பு விடுத்தனர்.
அன்றைய தினம், நான் சென்னையில் இருந்த காரணத்தினால், என் குடும்பம் சார்ந்த ஒருவராவது பங்கேற்க வேண்டும் என பயனாளிகள் வலியுறுத்தினர். இதனால், எனது இளைய மகன் அந்த விழாவில் பங்கேற்றார். அவர் அமைச்சர் மகனாக கலந்து கொள்ளவில்லை. இடம் வழங்கிய குடும்பம் சார்ந்தவர் என்கிற முறையில் பங்கேற்றார். இதில், உள்நோக்கம் இல்லை. எங்களால் யாரும் அடக்கப்படவுமில்லை. அச்சுறுத்தப்படவுமில்லை’’ என்று கூறியுள்ளார் அமைச்சர் காந்தி.
source https://www.vikatan.com/government-and-politics/politics/explanation-of-the-controversy-in-which-minister-gandhis-sons-attended-government-functions
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக