இந்திய அணிக்காக ஆடிய தமிழக கிரிக்கெட் வீரர்களில் தினேஷ் கார்த்திக் மிக முக்கியமானவர். 2004-ல் இருந்து இப்போது வரை இந்திய அணிக்காக பல தொடர்களில் ஆடி வருகிறார். தமிழக அணிக்குமே கேப்டனாக இருந்து இளம் வீரர்களை சிறப்பாக வழிநடத்தி வருகிறார். இவருடைய தலைமையில் தமிழக அணி சமீபத்தில் சையத் முஷ்டாக் அலி கோப்பையையும் வென்றிருந்தது. ஒரு பேட்ஸ்மேனாக....கேப்டனாக நீண்ட நெடிய தூரம் பயணித்திருக்கும் தினேஷ் கார்த்திக் இப்போது கமென்ட்ரி பாக்ஸிலும் அறிமுகமாகியிருக்கிறார்.
வேர்ல்டு டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் வர்ணனை வேலையை ஆரம்பித்த சில நாட்களிலேயே தினேஷ் கார்த்திக்கிற்கு பயங்கர வரவேற்பு கிடைத்தது. ஆனால், கடைசியாக சர்ச்சையில் சிக்கிவிட்டார். ஒட்டுமொத்தமாக அவருடைய வர்ணனை எப்படியிருந்தது?
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதிய உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில்தான் தினேஷ் கார்த்திக்கின் கமென்ட்ரி கவனம் பெற்றது. இதற்கு முன்னர் ஸ்கை ஸ்போர்ட்ஸுக்காக ஒன்றிரண்டு இங்கிலாந்து போட்டிகளுக்கு வீடியோ மூலம் கமென்ட்ரி செய்திருந்தாலும், மிகப்பெரிய அளவில் கவனம் பெறும் இந்திய அணியின் போட்டி ஒன்றில் நேரில் கமென்ட்ரி பாக்ஸிலிருந்து இந்த முறை தான் முதல் முறையாக கமென்ட்ரி செய்திருந்தார்.
முதல் நாளின் முதல் செஷன் முடியும் போதே தினேஷ் கார்த்திக்கின் கமென்ட்ரிக்கு பாராட்டுகள் குவியத் தொடங்கி விட்டது. நீண்ட அனுபவம் இருந்தும் இன்றும் அவருடைய பேட்டிங்கில் ஒரு பரபரப்பும் பதற்றமும் இருப்பதை பார்க்க முடியும். ஆனால், கமென்ட்ரி பாக்ஸில் அப்படி எந்த பதற்றத்தையும் அவர் வெளிக்காட்டவில்லை. இத்தனைக்கும் அவருடன் சக கமன்டேட்டர்களாக இருந்தவர்கள் நாசிர் ஹுசைன், சைமன் டல், சங்ககரா, கவாஸ்கர், இயான் பிஷப் போன்ற அதீத அனுபவசாலிகள். அவர்கள் மத்தியில் டென்ஷன் ஆகாமல் செம கூலாக பேசினார்.
இங்கிலாந்தில் அவர் ஆடிய அனுபவங்கள், 2019 உலகக்கோப்பை அனுபவம், டெஸ்ட் அறிமுகத்தின் போது மென்ட்டராக இருந்த கவாஸ்கருடனான அனுபவங்கள் என சுவாரஸ்யமாக கமென்ட்ரியை கொண்டு சென்றார். தினேஷ் கார்த்திக்கிடம் வியந்த ஒரு விஷயம் என்னவென்றால், புதிதாக கமென்ட்ரி பாக்ஸுக்கு வருபவர்கள் டெஸ்ட் மேட்ச் ஓப்பனர்போல செட் ஆவதற்கு கொஞ்சம் டைம் எடுப்பார்கள். அது ஒரு போட்டியாகவோ அல்லது ஒரு சீரிஸாகவே இருக்கலாம். செட் ஆவதற்கு எடுத்துக்கொள்ளும் நேரத்தில் எதோ நேர்காணலுக்கு வந்தது போல சக கமென்ட்டேட்டரிடமிருந்து கேள்வி வந்தால் மட்டுமே பதில் சொல்வார்கள். மற்ற நேரங்களில் அமைதியாக இருந்துவிடுவார்கள். புதிய விஷயம் என்கிற ஒரு தயக்கம் இதற்கு காரணமாக இருக்கலாம். ஆனால், தினேஷ் கார்த்திக்கிடம் இந்த தயக்கம் இல்லவே இல்லை. நாசிர் ஹுசைன், சங்ககரா, சைமன் டல் போன்றவர்களிடம் தினேஷ் கார்த்திக்கே கேள்வி கேட்டு பதில் வாங்கிக் கொண்டிருந்தார்.
இத்தனை நாட்கள் கிரிக்கெட் களத்தில் ஒரு வீரராக இருந்தவர், மைக் பிடித்து தன்னுடைய அனுபவங்களோடு சேர்த்து கிரிக்கெட்டின் நுணுக்கங்களையும் பேசியது ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இடையிடையே சில நகைச்சுவை துணுக்குகள் சக கமென்டேட்டர்களிடம் கிண்டலான சீண்டல்கள் என மிகவும் ஜனரஞ்சகமாக தனது வர்ணனை பாணியை முன்னெடுத்தார். இந்தியாவின் பிரபல கமென்டேட்டரான ஹர்ஷா போக்ளேவே தினேஷ் கார்த்திக்கின் கமென்ட்ரியை பாராட்டி ட்வீட் செய்திருந்தார்.
மைதானத்தில் சில ரசிகர்கள் தினேஷ் கார்த்திக்கின் கமென்ட்ரி குறித்து பாராட்டி எழுதிய போர்டுகளையும் கொண்டு வந்து அவரை உற்சாகமூட்டினர்.
கமென்ட்ரிக்கு கிடைத்த எதிர்பாராத வரவேற்பை கண்டு தினேஷ் கார்த்திக்கே இன்ப அதிர்ச்சியானார். இந்த கமென்ட்ரிக்கு நல்ல வரவேற்பும் கிடைத்ததால் சீக்கிரமே ஓய்வு அறிவிப்பை வெளியிட்டு முழுநேர கமென்ட்டேட்டராக ஆவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தினேஷ் கார்த்திக் இதற்கு மறுப்பு தெரிவித்தார். '’பேஸ்கெட் பாலில் பல வீரர்களும் கமென்ட்ரியில் ஈடுபடுகின்றனர். இங்கிலாந்தில் கூட டெஸ்ட் கிரிக்கெட் ஆடும் ஸ்டூவர் பிராட் ஒயிட் பால் கிரிக்கெட்டுக்கு வர்ணனை செய்கிறார். இந்தியாவில் மட்டும்தான் ஓய்வுபெற்ற வீரர்களே வர்ணனைக்கு வர வேண்டும் என்கிற எழுதப்படாத விதி இருக்கிறது. அதை உடைக்க விரும்புகிறேன்'’ என கூறி இன்னமும் இந்திய அணிக்கு கம்பேக் கொடுக்கும் வாய்ப்பிற்கு காத்திருப்பதை உறுதி செய்திருக்கிறார்.
ஒரு ஜனரஞ்சகமான கமென்டேட்டராக எல்லோருடைய மனதையும் ஒரே போட்டியில் கவர்ந்திருந்தார். ஆனால், பாராட்டுகளோடு சேர்ந்து சில சர்ச்சைகளையும் அவருடைய வர்ணனை உருவாக்கிவிட்டது. இந்திய போட்டியை தொடர்ந்து இங்கிலாந்து ஆடும் போட்டிகளுக்கும் கமென்ட்ரி செய்து வருகிறார் தினேஷ் கார்த்திக். இங்கிலாந்துக்கும் இலங்கைக்குமான போட்டியினிடையே பேட்டை பற்றி பேசும்போது ரசிக்க முடியாத வகையில் ஒரு கமென்ட் அடித்தார். இது பெண்களை இழிவுபடுத்துவதாகவும், பாலியல்ரீதியாக இருப்பதாகவும் கடுமையான எதிர்வினைகள் வரத்தொடங்கியது.
முந்தைய போட்டியில் தினேஷ் கார்த்திக்கின் கமென்ட்ரி ரசித்தவர்களுமே அவரின் இந்த கமென்ட்டால் முகம் சுளித்தனர். சீக்கிரமே சுதாரித்துக் கொண்ட தினேஷ் கார்த்திக், தான் பேசியதற்கு தேவையற்ற விளக்கம் எதுவும் கொடுக்காமல் மன்னிப்புக் கேட்டு சர்ச்சையை முடிவுக்குக் கொண்டு வந்திருக்கிறார்.
இப்போதுதான் வர்ணனை செய்ய தொடங்கியிருப்பதால் ரசிகர்களும் அந்த மன்னிப்பை மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்டனர். கிரிக்கெட் ஆடுவது எப்படியொரு திறமையோ அதேமாதிரி வர்ணனை செய்வதும் ஒரு தனித்திறமையே. அதுவும் ஒரு கலையே. பிரபலமான கிரிக்கெட் வீரர்களாக இருந்த பலராலும் கமென்ட்ரி பாக்ஸில் ஜொலிக்க முடியாமல் போயிருக்கிறது. கிரிக்கெட்டே ஆடிடாத ஹர்ஷா போக்ளே 'இந்தியாவின் கிரிக்கெட் குரல்' என கொண்டாடப்படுகிறார். இதுதான் நிதர்சனம். இதை புரிந்துக் கொண்டு கிரிக்கெட் வர்ணனையையும் முழுமையான ஈடுபாட்டோடும் பொறுப்போடும் ஏற்றுக்கொள்பவர்களே இங்கே தடம் பதிக்க முடியும்.
வர்ணனை செய்யத் தொடங்கிய குறுகிய காலத்திலேயே மிகப்பெரிய பாராட்டுகளையும், சர்ச்சைகளையும் எதிர்கொண்டிருக்கிறார் தினேஷ் கார்த்திக். அவருடைய கிரிக்கெட் கரியரை போன்றே ஏற்ற இறக்கமாக தொடங்கியிருக்கும் கமென்ட்ரி கரியரில் சீக்கிரமே வித்தையை கற்றுக் கொண்டு, அவர் ஒரு உயர்தரமான நிலையை எட்ட வேண்டும் என்பதே ரசிகர்களின் விருப்பம்.
source https://sports.vikatan.com/cricket/review-on-dinesh-karthiks-commentary-career
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக