நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் 16 தொகுதிகளில் போட்டியிட்ட என்.ஆர்.காங்கிரஸ் 10 இடங்களிலும், 9 தொகுதிகளில் போட்டியிட்ட பா.ஜ.க ஆறு இடங்களிலும் வெற்றிபெற்றது.
அதையடுத்து, தங்கள் கட்சியைச் சேர்ந்த நமச்சிவாயத்துக்கு துணை முதல்வர் பதவியையும், இரண்டு அமைச்சர்கள் மற்றும் சபாநாயகர் பதவியையும் கேட்டு ரங்கசாமிக்கு அழுத்தம் கொடுத்தது பா.ஜ.க. ஆனால், அவர்களின் எம்.எல்.ஏ-க்களின் எண்ணிக்கையைக் காரணம் காட்டி அந்தக் கோரிக்கையை நிராகரித்தார் ரங்கசாமி.
கொரோனா தொற்றால் மருத்துவமனையில் ரங்கசாமி அனுமதிக்கப்பட்டிருந்த நேரத்தில், தங்கள் கட்சியைச் சேர்ந்த மூன்று பேரை நியமன எம்.எல்.ஏ-க்களாக பா.ஜ.க நியமித்ததுடன், மூன்று சுயேச்சைகளையும் வளைத்து தன் எம்.எல்.ஏ-க்கள் பலத்தை 12 ஆக உயர்த்தியது. பா.ஜ.க-வின் இந்த நடவடிக்கைகள் பொதுமக்களிடம் கடும் விமர்சனத்துக்கு உள்ளானது.
அதனையடுத்து சபாநாயகர் மற்றும் மூன்று அமைச்சர் பதவிகளைக் கேட்டு அழுத்தம் கொடுத்த பா.ஜ.கவுக்கு சபாநாயகரையும், இரண்டு அமைச்சர் பதவிகளைக் கொடுத்தார் ரங்கசாமி.
அந்த இரண்டு அமைச்சர் பதவிகள் யாருக்கு என்பதில் பா.ஜ.கவில் ஏற்பட்ட உட்கட்சிப் பூசலால் அக்கட்சி அலுவலகம் சூறையாடப்பட்டது. அதையடுத்து 14.06.2021 அன்று பா.ஜ.க எம்.எல்.ஏவான செல்வம் தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்து, 15.06,2021 அன்று சபாநாயகராகப் பதவியேற்றுக் கொண்டார். புதிய அரசின் அமைச்சரவை பட்டியல் கடந்த 21-ம் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் அன்றைய தினம் வெளியாகாத நிலையில் கடந்த ஜூன் மாதம் 22-ம் தேதி என்.ஆர்.காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த லட்சுமி நாராயணன், தேனீ ஜெயக்குமார், சந்திரா பிரியங்கா மற்றும் பா.ஜ.கவைச் சேர்ந்த நமச்சிவாயம், சாய்.ஜெ.சரவணகுமார் போன்றவர்களுக்கு அமைச்சர் பதவிகளை ஒதுக்கி ஆளுநரிடம் கடிதம் அளித்தார் முதல்வர் ரங்கசாமி.
50 நாட்களுக்குப் பிறகு ஜூன் 27-ம் தேதி அந்த அமைச்சர்கள் பதவியேற்ற நிலையில், அவர்களுக்கான துறைகளை ஒதுக்குவதில் தொடர்ந்து இழுபறி நீடித்து வந்தது. இந்நிலையில் இன்று அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட இலாகாக்கள் பட்டியலை துணைநிலை ஆளுநர் தமிழிசையிடம் வழங்கினார் முதல்வர் ரங்கசாமி.
அதன்படி என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏக்களான லட்சுமி நாராயணனுக்கு பொதுப்பணித்துறையும், தேனீ ஜெயக்குமாருக்கு விவசாயத்துறையும், சந்திராபிரியங்காவுக்கு போக்குவரத்துத் துறையும் ஒதுக்கப்பட்டிருக்கிறது. அதேபோல பா.ஜ.கவைச் சேர்ந்த நமச்சிவாயத்திற்கு உள்துறையும், சாய் ஜெ சரவணக்குமாருக்கு குடிமைப்பொருள் துறையும் வழங்கப்பட்டிருக்கிறது. கூடுதலாக இவர்கள் பார்க்கும் துறைகளின் விபரங்கள்.
முதல்வர் ரங்கசாமி:
வருவாய், கலால், பொது நிர்வாகம், சுகாதாரம் மற்றும் குடும்பநலம், இந்து அறநிலையத்துறை, வஃபு வாரியம், உள்ளாட்சி நிர்வாகம், துறைமுகம், அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் சுற்றுச்சூழல், செய்தி மற்றும் விளம்பரத்துறை.
நமச்சிவாயம்: உள்துறை மற்றும் கல்வித்துறை அமைச்சர்.
மின்சாரம், தொழில்கள் மற்றும் வர்த்தகம், இளைஞர் நலத்துறை.
லட்சுமி நாராயணன்: பொதுப்பணி மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர்.
சுற்றுலா மற்றும் உள்ளூர் விமான போக்குவரத்து, மீன்வளத்துறை, சட்டத்துறை, தகவல் தொழில்நுட்பம், எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறை.
தேனீ சி.ஜெயக்குமார்: வேளான் மற்றும் கால்நடைத்துறை அமைச்சர்.
வனத்துறை சமூக நலன், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, பெண்கள் மற்றும் குழந்தைகள் நலன்.
Also Read: புதுச்சேரி: ’அமைச்சர் பதவி யாருக்கு?’ அடித்துக்கொள்ளும் பா.ஜ.க; அலுவலகத்தை நொறுக்கிய தொண்டர்கள்!
சந்திரா பிரியங்கா: போக்குவரத்து மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர்.
வீட்டு வசதித்துறை, தொழிலாளர் நலன் மற்றும் வேலை வாய்ப்பு, கலை மற்றும் கலாசாரத்துறை.
சாய்.ஜெ.சரவணக்குமார்: குடிமைப்பொருள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை
ஊரக வளர்ச்சித்துறை, தீயணைப்புத்துறை மற்றும் சிறுபான்மையினர் நலன்
source https://www.vikatan.com/government-and-politics/politics/puducherry-new-ministers-and-their-department-list
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக