Ad

சனி, 17 ஜூலை, 2021

டெனிஸ் லில்லி... ஈவு இரக்கமின்றி பேட்ஸ்மேன்களை வேட்டையாடிய அதிவேக வேட்டைக்காரன்!

அதன் அரை இறுதிப் போட்டி பெர்த் மைதானத்தில் தொடங்க இருக்க, ரசிகர்களின் கூட்டம் மைதானமே தாங்காத அளவிற்கு பெருக்கெடுத்தது. டிக்கெட்டுகள் கண் இமைக்கும் நேரத்தில் விற்றுத் தீர்ந்தன. குயின்ஸ்லாந்து அணி கேப்டன் கிரெக் சேப்பல், டாஸ் வென்று வெஸ்ட் ஆஸ்திரேலிய அணியை பேட்டிங் செய்ய அழைக்கிறார்.

வேகப்பந்து வீச்சுக்கு என பெரிய மரியாதை இருந்த காலம் அது. ஒரு பந்து வீச்சாளர் அரை மைல் தூரம் ஓடி வந்து புயல் வேகத்தில் பந்து வீசுவதை ரசிக்க ஒரு கூட்டமே காத்திருக்கும். ஆட்டம் நடந்ததோ பெர்த் மைதானம். உலகின் அதிவேகமான மைதானம் என்று வர்ணிக்கப்படும் பெர்த் மைதானத்தில் ஆட்டம் என்பதைக் கடந்து இத்தனை ரசிகர் கூட்டம் ஆர்ப்பரிக்க வேறொரு காரணமும் இருந்தது. அன்றைய கிரிக்கெட் உலகமே கொண்டாடிய ஒரு பேட்ஸ்மேனும், அத்தனை பேட்ஸ்மேன்களும் மிரண்டு போய் பார்த்த ஒரு வேகப்பந்து வீச்சாளரும் எதிர் எதிர் அணியில் இருந்தனர்.

ஆட்டம் ஆரம்பித்தது. குயின்ஸ்லாந்து வீரர்களின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல், மேற்கு ஆஸ்திரேலிய அணி 77 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. ரசிகர்கள் சற்று சோர்ந்து போயினர். 300 பந்துகளில் 78 ரன்கள் என்பது எந்தக் காலத்திலும் எளிதான டார்கெட்தான். அதுவும் போக, உலகத்தின் சிறந்த பேட்ஸ்மேன் பேட்டிங் செய்யப்போகும் அணியில் இருக்கிறார். ஆட்டத்தின் முடிவு அப்போதே பலருக்குத் தெரிந்துவிட்டது. பந்து வீச்சுக்கு தயாராகிக் கொண்டிருந்த ஒருவரிடமும் நம்பிக்கை இல்லை... ஒரே ஒருவரைத் தவிர. "ராட்... நாம் இந்த ஆட்டத்தை வெல்லப் போகிறோம்" என்று சொல்லிவிட்டு சடசடவென மைதானத்துக்குள் ஓடுகிறார் அந்த ஒருவர். மொத்த அணியும் அவரைப் பின் தொடர்ந்தது.

சீப்பையே பார்த்திராத தலைமுடி, மடித்து விடப்பட்ட டி-ஷர்ட் ஸ்லீவ், கட்டையான மீசை. பந்தை கையில் வாங்கிக் கொண்டு உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேனை நோக்கி ஓடி வருகிறார். அந்த பேட்ஸ்மேன் யார் என்றால் ஒரே ஆண்டில் அதிக ரன்களை எடுத்த வீரர் என்ற சாதனையை டெஸ்ட் அரங்கில் படைத்து விட்டு ஃப்ரெஷ்ஷாக வந்திருக்கும் விவியன் ரிச்சர்ட்ஸ். வல்லவனுக்கெல்லாம் வல்லவனாகக் கருதப்பட்ட மாவீரன்... கிரிக்கெட் உலகின் முதல் ரன் மெஷின்.

அப்படிப்பட்ட வீரருக்கு முதல் பந்து லெக் சைட் லைனில் தலைக்கு மேல் வீசப்படுகிறது. அவர் இருந்த ஃபார்முக்கு வேறு எந்த பெளலராக இருந்தாலும் பந்து ஹூக் ஷாட் மூலம் சிக்சருக்குப் பறந்திருக்கும். ஆனால், இந்த பந்து வீச்சாளரின் வேகம் ஒளியின் வேகத்தைப் போல் இருந்தது. அடுத்து வரிசையாக மூன்று பவுன்சர்கள். விவியன் ரிச்சர்ட்ஸால் ஒன்றுமே செய்ய முடியவில்லை. அடுத்த பந்து நேராக கால்களுக்கு வருகிறது. எப்படியோ அதைத் தடுத்துவிட்டு சற்று பதற்றத்தோடு அடுத்த பந்தை எதிர்கொண்டார் விவ். ஒரு பேட்ஸ்மேனின் கண்களில் பதற்றத்தைப் பார்த்து விட்டாலே, பிடி நம் கையில் என்பது பெளலருக்குப் புரிந்துவிடும். அடுத்த பந்தை வீசுகிறார். க்ளீன் போல்டாகி பெவிலியன் செல்கிறார் ரிச்சர்ட்ஸ். 6 பந்துஜளை சந்தித்து டக் அவுட் ஆகிறார் விவியன் ரிச்சர்ட்ஸ். கோலியாத்தை வீழ்த்திய பின்பு மற்றவர்களை வீழ்த்துவது என்ன கடினமா? 62 ரன்களுக்கு குயின்ஸ்லாந்து அணி ஆல் அவுட் ஆனது. வெஸ்ட் ஆஸ்திரேலியா வென்றது.

ரிச்சர்ட்ஸை ஒரு பந்து வீச்சாளர் நடுங்க வைத்தார் என்றால் அவர் டெனிஸ் லில்லியைத் தவிர வேறு யாராக இருக்கமுடியும். டெனிஸ் கெய்த் லில்லி - மனித உருவில் பூமிக்கு வந்த ஒரு ராட்சத வேகப்பந்துவீச்சாளர். எந்த பேட்ஸ்மேனின் கால்களையும் கதகளி ஆட வைக்கும் வித்தை தெரிந்த வித்வான். இவரின் ஆள் உயர பவுன்சர்களாலும், மின்னல் வேக அவுட் ஸ்விங்கர்களாலும் தங்களது விக்கெட்டை இழந்த பேட்ஸ்மேன்கள் ஏராளம். தலை மற்றும் கை கால்களை இழப்பதற்கு விக்கெட்டை இழப்பது எவ்வளவோ மேல் என்று களத்தை விட்டு ஓடினால் போதும் என்று ஓடியவர்கள் பலர். மொத்தத்தில் லில்லி ஈவு இரக்கமின்றி பேட்ஸ்மேன்களை வேட்டையாடிய வேட்டைக்காரன்!

Dennis Lillee

எப்படி இந்தக் காலத்து ஸ்டார் பேட்ஸ்மேன்களான கோலி, ஸ்மித் , வில்லியம்சன் என பலரும் சச்சின் டெண்டுல்கரை பார்த்து வியந்து போய் பேட்டிங்கிற்குள் வந்தார்களோ அதே போல் தான் அந்தக் காலத்து பெளலிங்கிற்கு லில்லி. பந்துவீச்சை கரியராக எடுக்கும் அனைவருக்கும் லில்லி ஒரு பீஷ்மர், பிதாமகன். காரணம் எந்த ஒரு பேட்ஸ்மேனும் லில்லியை எதிர்த்து நின்று வீராப்பு காட்டியது கிடையாது. அப்படி காட்டினால் அடுத்த நாள் ஆட்டத்திற்கு வர முடியாது. ஆஸ்பத்திரியில் தான் இருக்க முடியும்.

கார்த் மெக்கன்சி, நைல் ஹாவ்க் என்று லில்லிக்கு முன்பு ஆஸ்திரேலிய அணிக்கு பந்து வீசிய எந்த பௌலரும் லில்லியை அவரது இளமைக் காலத்தில் வசீகரிக்கவில்லை. காரணம் அவர்களிடத்தில் எல்லாம் பெரிதான வேகம் ஒன்றும் இல்லை. லில்லிக்கு தேவைப்பட்டது எல்லாம் வேகம் தான்... யாரையும் கண் இமைக்கும் நேரத்தில் வீழ்த்திவிடும் வெறித்தனமான வேகம். மேற்கிந்தியத் தீவுகள் அணியின் வேகப்பந்து வீச்சாளர் வெஸ் ஹாலை தனது ரோல் மாடலாக எடுத்துக் கொண்டு சர்வதேசக் கிரிக்கெட்டிற்குள் காலடி எடுத்து வைத்தார். அதன் பின்பு பேட்ஸ்மேன்கள் களத்திற்குள் காலடி எடுத்து வைக்க பயந்தது எல்லாம் வரலாறு.

Dennis Lillee

உலகமே அஞ்சிய மேற்கிந்திய வீர்ரகளையே பதற்றப்பட்ட வைத்த வீரர் லில்லி. இவரின் வேகத்தில் வீழ்ந்த பிறகுதான் கிளைவ் வாய்டுக்கு நாமும் லில்லி போன்ற வேகத்தில் பந்து வீசும் வீரர்கள் கொண்ட அணியை அமைக்க வேண்டும் என்ற எண்ணம் வந்துள்ளது. ஒரு தலைமுறையையே அலற வைத்த மேற்கிந்திய தீவுகள் அணிக்கே ரோல் மாடல் டெனிஸ் லில்லி தான்.

லில்லியின் வேகத்தை விட அவரிடம் அதிகம் கவர்ந்தது அவரது தன் முனைப்பு & மனோபலம். 1973-ம் ஆண்டு ஏற்பட்ட காயத்தால் முதுகெலும்பில் மூன்று இடத்தில் எலும்பு முறிவு ஏற்பட அவரது கரியர் முடிவுற்றதாகவே பலரும் நினைத்தனர். ஆனால் தோனி சொன்னதுபோல ''முற்றுப் புள்ளி வைக்காத வரை அந்த வாக்கியம் முடிவு பெறாது'' என்பதற்கேற்ப ஃபீனிக்ஸ் பறவையாக எழுந்து வந்தார். ஆஸ்திரேலியாவின் மானப்பிரச்சனையாக கருதப்படும் ஆஷஸ் தொடரில் மட்டுமே 29 ஆட்டங்களில் 167 விக்கெட்டுகளை வீழ்த்தி இங்கிலாந்தை சாய்த்துள்ளார் வில்லி. இங்கிலாந்தின் மிகப்பெரிய ஆட்டக்காரரான காலின் கவுட்ரி தனது கடைசி தொடரில் லில்லியிடம் பல முறை அவுட் ஆகி இவன்தான் ஆஸ்திரேலியாவின் வருங்காலம் என்று சொல்லித் சென்றது அப்படியே பலித்தது.

MRF pace foundation

தான் ஆடியதுடன் போதும் என்று நிறுத்தாது, சென்னை MRF pace foundation அமைப்பில் நீண்ட காலம் பணியாற்றினார் லில்லி. அகார்கர், ஸ்ரீநாத் போன்ற எத்தனையோ இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் லில்லியின் பயிற்சியால் உருவானவர்கள். தான் கற்றுக்கொண்ட வித்தைகளை எல்லாம் அடுத்த தலைமுறைக்கும் ஊட்டியுள்ளார்.

நியூசிலாந்து அணியின் ஜாம்பவான் ரிச்சர்ட் ஹாட்லி எப்போது எல்லாம் சோர்வடைகிறாரோ அப்போது எல்லாம் தனக்குத்தானே இந்தக் கேள்வியை கேட்டுக் கொள்வாராம். "What would Lille do?". இந்த இடத்தில் லில்லி என்ன செய்திருப்பார். அதற்கு ஹாட்லியே பதிலும் சொல்லிக் கொள்வாராம். அவர் என்ன வேண்டுமானாலும் செய்திருப்பார். ஆனால் நிச்சயமாக விட்டுக் கொடுத்திருக்க மாட்டார். கிரிக்கெட்டில் பேட்ஸ்மேன்களுக்கு என்று சிறிதும் இடம் விட்டுக் கொடுக்காத வீராப்பு வீரனின் பிறந்தநாள் இன்று.

Happy Birthday Dennis Lillee



source https://sports.vikatan.com/cricket/dennis-lillee-birthday-special-article

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக