தெலங்கானா மாநிலம், நல்கொண்டா மண்டலம், ரங்காரெட்டி நகரைச் சேர்ந்த 30 வயது இளைஞர் குடதலா முரளி, தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்துவருகிறார். இவர், அடிக்கடி தன் செல்போனிலிருந்து ஏதாவது நம்பர்களை டயல் செய்து, பெண்கள் எடுத்தால் அவர்களிடம் அசடு வழியப் பேசுவார். எதிர் முனையிலிருந்து, கடுமையானச் சொற்கள் வந்துவிட்டால் போனை உடனே துண்டித்துவிடுவார். இப்படி, மூன்று மாதங்களுக்கு முன் முரளி டயல் செய்த ராங்காலில், அருகிலுள்ள குண்ட்லபள்ளி கிராமத்தைச் சேர்ந்த திருமணமாகி கணவருடன் வசித்துவரும் பெண் ஒருவருடன் நட்பு ஏற்பட்டது.
அந்தப் பெண்ணிடமும் அசடு வழியப் பேசிவந்த முரளி, திடீரென ஒருநாள் அவரைச் சந்திக்க வேண்டுமென அழைத்துள்ளார். அந்தப் பெண் வரமறுக்க, " நான் உன்னைக் காதலிக்கிறேன். கணவரைப் பிரிந்து என்னுடன் வந்துவிடு. சேர்ந்து வாழலாம்" என்று கூறியுள்ளார். அதிர்ந்துப்போன அந்தப் பெண், முரளியிடம் பேசுவதைக் குறைத்துக்கொண்டார். இந்த நிலையில், அந்தப் பெண்ணை எப்படியாவது தன் பேச்சைக் கேட்க வைக்க வேண்டும் என்று முடிவு செய்த முரளி, யூ-டியூப்பைப் பார்த்து வசியம், சூனியம் செய்வதைத் தெரிந்துகொண்டார்.
இதையடுத்து, கடந்த ஜூன் மாதம் 18-ஆம் தேதியன்று நள்ளிரவில், அந்தப் பெண்ணின் வீட்டு முன் மஞ்சள், குங்குமம் உள்ளிட்ட பொருட்களைப் பரப்பி விட்டுள்ளார். தூங்கிக்கொண்டிருந்தப் பெண்ணின் கணவரைப் போனில் அழைத்தும் வெளியே வந்துப் பார்க்குமாறும்கூறி அச்சுறுத்த முயன்றுள்ளார். அப்போதும், மனைவியின் நட்பு விவகாரம் அவருக்குத் தெரியவில்லை. இந்த நிலையில், ஜூலை 6-ஆம் தேதி நள்ளிரவிலும் சுடுகாட்டிலிருந்து எடுத்துவரப்பட்ட மனித எலும்புகள், ஜாக்கெட், அரிசி, வளையல், தலைமுடி, எலுமிச்சைப் பழம் போன்றவற்றை சூனியம் செய்வதாக வீட்டுமுன் மீண்டும் வைத்துள்ளார் முரளி.
மறுநாள் தூங்கி எழுந்த பெண்ணின் கணவர், அதைப் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார். ஏதோ விபரீதம் நடப்பதை உணர்ந்த அவர், உள்ளூர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீஸார், அந்தப் பகுதியிலிருந்த சி.சி.டி.வி கேமராவில் பதிவாகியிருந்த காட்சிகளையும், நள்ளிரவில் பெண்ணின் கணவருக்கு வந்த செல் நம்பரையும் ஆய்வு செய்தபோது, முரளி சிக்கினார். அதன்பின்னரே, அந்த நபர் மனைவியிடம் ராங்கால் மூலம் பேசிய நபர் என கணவருக்குத் தெரியவந்தது. இதையடுத்து, முரளியைக் கைது செய்த போலீஸார், விசாரணைக்குப் பின் அவரை சிறையிலடைத்தனர்.
source https://www.vikatan.com/news/crime/telegana-youth-arrested-for-disturbing-a-married-woman
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக