Ad

புதன், 14 ஜூலை, 2021

``லாட்டரி விற்பனையைத் தடை செய்க"; திடீர் தர்ணாவில் திமுக பிரமுகர்; புதுக்கோட்டையில் பரபரப்பு!

தமிழகத்தில் அரசு நடத்திய லாட்டரி சீட்டுகளால் பல குடும்பங்கள் பாதிப்படைய அரசே சில ஆண்டுகளுக்குமுன் லாட்டரி சீட்டு விற்பனைக்குத் தடை விதித்தது. இதையடுத்து லாட்டரிகள் ஒழிக்கப்பட்டது. தமிழகத்தில் லாட்டரி சீட்டுகளுக்குத் தடை நீடித்து வந்தாலும் கள்ள மார்க்கெட்டில் லாட்டரி விற்பனை படு ஜோராகவே நடந்து வருகிறது. குறிப்பாகக் கேரளா, மணிப்பூர் என வெளி மாநில லாட்டரி சீட்டு விற்பனை பல இடங்களில் நேரடியாகவும், மறைமுகமாகவும் நடந்துகொண்டு தான் இருக்கிறது. இதனைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறும் அதிகாரிகள் , காவல்துறையினர் எந்த வித நடவடிக்கை எடுப்பதில்லை என்று பொது மக்கள் கூறுகின்றனர். மாறாகப் பல இடங்களில் போலீஸாருக்கு தெரிந்தே தான் லாட்டரி சீட்டு விற்பனை நடக்கிறது என்றும் சொல்லப்படுகிறது. இதனால், அன்றாடம் உழைத்து வேலை செய்யும் தினக்கூலித் தொழிலாளர்களின் குடும்பங்கள் இந்த லாட்டரி சீட்டுகளால் பாதிப்புக்கு ஆளாகும் நிலைக்குத் தள்ளப்பட வாய்ப்புள்ளது.

லாட்டரி

இந்த நிலையில்தான், புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியைச் சேர்ந்த திமுக நகர துணைச் செயலாளர் பன்னீர்செல்வம், "தமிழகத்தில் நல்லாட்சி புரியும் தலைவர் தளபதி அவர்களுக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில், தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனையை முற்றிலும் தடைசெய்ய வேண்டும் என்று பொன்னமராவதி நடுக்கல் பகுதியில் திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுப் பரபரப்பை ஏற்படுத்தினார். இதுபற்றி பேசிய பன்னீர் செல்வம், " பொன்னமராவதி பகுதி முழுவதும் தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனை படுஜோராக நடந்து வருகிறது. தற்போது திமுக ஆட்சி தமிழகத்தில் நடைபெற்று வருகிறது. திமுக தலைவர் முதல்வர் மு.க.ஸ்டாலின் நல்லாட்சி புரிந்து வருகிறார். அவருக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் தடைசெய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை படு ஜோராக நடக்கிறது. இதனால், பல குடும்பங்கள் இன்று நடுத்தெருவில் நிற்கின்றன. எனவே, தமிழகம் முழுவதும் ஏற்கெனவே தடைசெய்யப்பட்டிருக்கும் இந்த லாட்டரி சீட்டுகளை முற்றிலும் தடை செய்யவேண்டும் "என்கிறார்.



source https://www.vikatan.com/news/tamilnadu/in-pudukottai-dmk-cadre-started-protest-against-selling-lottery-tickets

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக