Ad

திங்கள், 5 ஜூலை, 2021

புதுக்கோட்டை: 'ரூ.2.85 கோடி மோசடி; ஊராட்சித் தலைவர் வீட்டில் ரெய்டு!'

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே ஆண்டிக்குளத்தைச் சேர்ந்தவர் பன்னீர் செல்வம் (54). இவர் பாச்சிக்கோட்டை ஊராட்சி மன்றத் தலைவராக உள்ளார். இவர் மீது பல்வேறு மோசடி புகார்கள் காவல் நிலையங்களிலும், நீதிமன்றங்களில் வழக்குகளும் நிலுவையில் இருக்கிறது. குறிப்பாக, ஆலங்குடி பகுதியில் மோசடி மன்னனாகவே வலம் வந்திருக்கிறார். இந்த நிலையில் தான், கோயம்புத்தூரைச் சேர்ந்த டாக்டர் மாதேஸ்வரன் என்பவர் புதிதாக மல்டி ஸ்பெஷலிட்டி மருத்துவமனை கட்டுவதற்கு 50 கோடி கடன் உதவி தேவைப்படுவதாகத் தன் நண்பர்களிடம் கேட்டிருக்கிறார். அவரது நண்பர் ஒருவர் புதுக்கோட்டை மாவட்டம் பாச்சிக்கோட்டையைச் சேர்ந்த ஊராட்சி மன்றத் தலைவர் பன்னீர் செல்வத்தைக் கை காட்டி விடுகிறார்.

டாக்டர் மாதேஸ்வரன், பன்னீர் செல்வத்திடம் தனது மருத்துவமனைக்கு ரூ.100 கோடி வரையிலும் செலவாகும். இப்போதைக்கு ரூ.50 கோடி வரையிலும் கடனுதவி செய்து கொடுத்தால் போதும் என்று கூறியுள்ளார். ரூ.50 கோடி என்ன, ரூ.100 கோடியே பெற்றுத்தருகிறேன் என்று வாக்குக் கொடுத்த பன்னீர் செல்வம், அதற்கு கமிஷனாக ரூ.2 கோடி, டாக்குமென்ட் செலவு ரூ.85லட்சம், ஆக மொத்தம் ரூ.2.85 கோடி கேட்டுள்ளார். உடனே, ரூ.100 கோடி கடன் உதவி கிடைத்துவிடும் என்ற ஆசையில் ரூ.2.85 கோடி மற்றும் கையெழுத்திட்ட காசோலை, கையெழுத்திட்ட அச்சிட்ட பத்திரம் ஆகியவற்றை டாக்டர் மாதேஸ்வரன் பன்னீர் செல்வத்திடம் கொடுத்துள்ளார். நீண்ட நாட்களாகியும் பன்னீர்செல்வம், கடன் தொகையைப் பெற்றுத்தரவில்லை.

"கடனுதவி தரவில்லை என்றாலும், திருப்பிப் பணத்தைக் கொடுங்கள்!" என்று பன்னீர் செல்வத்திடம் கேட்ட டாக்டருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. கமிஷன் பணத்தை எல்லாம் தரமுடியாது என்று கூறிய பன்னீர் செல்வம் டாக்டருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில்தான் இதுபற்றி மத்திய குற்றப்பிரிவு போலீஸில் டாக்டர் மாதேஸ்வரன் புகார் செய்தார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த கோவை மத்திய குற்றப்பிரிவு போலீஸார், புதுக்கோட்டைக்கு வந்து ஆலங்குடியில் உள்ள பன்னீர் செல்வத்திற்குச் சொந்தமான 2 வீடு, 2 பெட்ரோல் பங்க் உள்ளிட்ட இடங்களில் விடிய, விடியச் சோதனையில் ஈடுபட்டனர். தகவலையறிந்த பன்னீர் செல்வம் தலைமறைவானார். போலீஸார் தலைமறைவான பன்னீர் செல்வத்தைத் தேடி வருகின்றனர். சோதனையில் முக்கிய ஆவணங்கள், பணம் சிக்கியதாக கூறப்படுகிறது. தொடர்ந்து, சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

பன்னீர் செல்வம் குறித்து விபரம் அறிந்தவர்கள் சிலர் நம்மிடம், " வழக்கமாக தனக்கு ஆதரவான ஒருவரை ஊராட்சிமன்றத் தலைவருக்கு நிறுத்தி பணம் செலவு செய்வது தான் வழக்கம். இந்த முறை தான் நேரடியாகக் களமிறங்கி செலவு செய்து ஊராட்சி மன்றத் தலைவராகியிருக்கிறார். பெரிய தொழிலதிபர்களின் பழக்கம் இருப்பாதகக் கூறியும், குறைந்த வட்டிக்குக் கோடிக்கணக்கில் பணம் வாங்கித் தருவதாகக் கூறியும் கமிஷனைப் பெற்றுக்கொண்டு, கடைசியில் கடனும் பெற்றுக் கொடுக்காமல், கமிஷன் பணத்தையும் திருப்பித் தராமல் மிரட்டல் விடுத்து ஏராளமானோரிடம் மோசடி செய்திருக்கிறார். அனைத்தும் தெரிந்தும் பலர் ஏமாறுகின்றனர். சில காவல்துறை அதிகாரிகளைக் கையில் வைத்திருக்கிறார். கடந்த 15 வருடங்களுக்கு முன்பு இதுபோன்ற மோசடியில் காவல்துறை அதிகாரிகளை அழைத்துச் சென்றே பாதிக்கப்பட்டவரை மிரட்டியிருக்கின்ற்னர். பாதிக்கப்பட்டவர் தைரியமாக உயர் அதிகாரியைச் சந்தித்து மனு கொடுக்க சம்பந்தப்பட்ட போலீஸார் சஸ்பெண்ட் செய்யப்பட்டு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. பன்னீர் செல்வத்தின் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது. எத்தனையோ மோசடியில் ஈடுபட்டுள்ள பன்னீர் செல்வம் மீது கடும் நடவடிக்கை எடுக்கணும்" என்றனர்.



source https://www.vikatan.com/news/common/rs-285-crore-cheating-case-panchayat-leaders-house-raided-by-officials-in-pudukottai

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக