Ad

ஞாயிறு, 11 ஜூலை, 2021

மகாராஷ்டிராவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 21 பேருக்கு ஒரே நேரத்தில் கொரோனா; மீண்டது இப்படித்தான்!

மகாராஷ்டிராவில் கொரோனா தொற்று தற்போது ஓரளவுக்குக் கட்டுக்குள் இருக்கிறது. ஆனாலும் தொடர்ந்து கட்டுப்பாடுகளும் அமலில் இருந்து கொண்டுதான் இருக்கின்றன. இந்நிலையில், புனே மாவட்டம் மந்தேவ்கன் என்ற கிராமத்தில் ஒரே நேரத்தில் ஒரே குடும்பத்தில் 21 பேருக்குக் கொரோனா தொற்று ஏற்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

மகாராஷ்டிராவில் அண்ணன், தம்பிகள் பலர் திருமணமான பிறகும் கூட்டுக் குடும்பமாகவே வாழ்கின்றனர். அப்படிக் கூட்டுக் குடும்பமாக வாழ்ந்த அண்ணன், தம்பி குடும்பத்தில் 21 பேருக்குக் கொரோனா தொற்று ஏற்பட்டது. முதலில், இக்குடும்பத்தில் விளைபொருள்களை அடிக்கடி மார்க்கெட்டுக்கு எடுத்துச் செல்லும் அசோக் ரோஹிதாஸ் என்பவருக்குக் காய்ச்சலும், உடல் வலியும் ஏற்பட்டது. ஆரம்பத்தில் இதை அசோக் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.

COVID -19 OUT BREAK

ஆனால், வலி அதிகமானதால் அசோக் உள்ளூர் டாக்டரிடம் சிகிச்சைக்காகச் சென்றார். அவர் கொரோனா பரிசோதனை செய்துகொள்ளும்படி கேட்டுக்கொண்டார். உடனே சோதனை செய்து கொண்டதில் அவருக்குக் கொரோனா தொற்று இருந்தது தெரிய வந்தது. உடனே அவரை தனியார் மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்றுக்கொள்ளும்படி டாக்டர் கேட்டுக்கொண்டார்.

அசோக்கின் கூட்டுக்குடும்பத்தில் மொத்தம் 24 பேர் இருக்கின்றனர். அசோக்குக்கு கொரோனா வந்ததால் அவரின் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்ய கிராம பஞ்சாயத்தில் முடிவு செய்யப்பட்டு பரிசோதனையும் செய்யப்பட்டது.

இதில், குடும்பத்தில் மேலும் 20 பேருக்குத் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அவர்களில் 5 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். 3 பேர் மட்டுமே கொரோனா தொற்று ஏற்படாமல் தப்பினர். மற்றவர்கள் அனைவரும் வீட்டில் தங்களை தனிமைப்படுத்திக்கொண்டனர்.

குடும்பத்தில் ஆகாஷ் என்ற ஓர் ஆண் மட்டுமே கொரோனா பாதிப்பில்லாமல் இருந்தார். இவர்தான் கடையில் இருந்து அனைத்துப் பொருள்களையும் வாங்கி வருவது, விவசாய விளைபொருள்களை மார்க்கெடன்டுக்குக் கொண்டு செல்வது வரை அனைத்து வேலைகளையும் செய்தார். அதிகமான விவசாயப் பணியாளர்கள் கொரோனாவுக்கு பயந்து இவர்களிடம் வேலைக்கு வர மறுத்தனர்.

அசோக் மகன் சூரஜ் இது குறித்து கூறுகையில், ``என் மனைவி பூஜா மற்றும் என் சகோதரர் மனைவி அதிகா ஆகியோர்தான் ஒட்டுமொத்த குடும்பத்தையும் பார்த்துக்கொண்டனர். எங்கள் ஒரு வயது மகன்கூட கொரோனாவால் பாதிக்கப்பட்டான். எங்கள் பாட்டியும் தாத்தாவும், `எல்லோருக்கும் சரியாகிவிடும், மீண்டு விடுவோம்' என்று எங்களுக்கு நேர்மறை வார்த்தைகள் தந்தபடி இருந்தனர்" என்று தெரிவித்தார்.

Covid-19 - Representational Image

Also Read: மகாராஷ்டிரா: 'ரமணா' பட பாணி; இறந்த பெண்ணுக்குச் சிகிச்சை; சிக்கிய மருத்துவர்!

அசோக்கின் அம்மா காந்தாபாய் இது குறித்துக் கூறுகையில், ``முதலில் பயந்துவிட்டோம். பின்னர், ஒருவருக்கு ஒருவர் உதவி செய்துகொண்டோம். மருமகள்கள், மகள்கள், மருமகன்கள் மற்றும் உறவினர்கள் மிகவும் உதவியாக இருந்தனர். கடினமான நேரத்தில் அனைவரின் அன்பு மற்றும் ஆதரவு காரணமாக இந்த நோய்த்தொற்றில் இருந்து விடுபட்டோம்" என்று தெரிவித்தார்.

8 பெண்கள், 7 ஆண்கள் மற்றும் 9 குழந்தைகள் கொண்ட குடும்பத்தில் ஒரு வயது குழந்தை முதல் 75 வயது முதியவர் வரை இக்குடும்பத்தில் கொரோனா தொற்று ஏற்பட்டது. அனைவரும் கொரோனாவில் இருந்து மீண்டது குறித்து அசோக் குடும்பத்தினர் மகிழ்ச்சியடைந்துள்ளனர். தொடர்ந்து, தடுப்பூசி போட்டுக்கொள்ளவும் முடிவு செய்துள்ளனர்.



source https://www.vikatan.com/news/india/21-persons-from-same-family-affected-by-covid-and-successfully-recovered-in-maharashtra

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக